கடந்த 10-1-2015 அன்று சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடந்த நியூ செஞ்சுரியின் 100 புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நிறுவனத்தின் செயலாளர் சண்முகம் சரவணன் அவர்கள் விழா விற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ncbh book release 600

வாழ்த்துரை வழங்கிய ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் புத்தகங்களின் தேவையையும் வாசிப்புப் பழக்கத்தின் பயன்பாடுகளையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தோழர்.ஆர்.எஸ்.ஜேக்கப் வாழ்க் கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசும்போது ஒரு மனிதரின் வாழ்க்கையில் புத்தகம் எந்த வகையான பாதிப்பையும் தாக்கங் களையும் உண்டாக்குகிறது என்பதை உணர்ச்சி கரமாக விளக்கினார். புத்தகக் கண்காட்சிகளின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசிசுகையில், அதையொட்டி 100 புத்தகங்கள் வெளியிடும் என்.சி.பி.எச். முன்னதாக ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது 50 புத்தகங்கள் வெளியிட்டதையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் முத்துமோகன் அவர்கள் பேசும் போது புத்தகவெளியீட்டில் 100 என்ற எண்ணிக்கை மலைப்பாக இருப்பதாக வியந்து பேசினார். சோவியத் புத்தகங்களின் வெளியீட்டு காலத்திற்குப் பிறகு உண்டான நெருக்கடியிலிருந்து நியூ செஞ்சுரி நிறுவனம் முமுவதுமாக விடுபட்டதன் உரத்த வெளிப்பாட்டு அறிவிப்பாகவே இந்த 100 புத்தகங் களின் வெளியீட்டைக் கருதுவதாகக் குறிப்பிட்டார். சோவியத் யூனியன் காலத்து நாட்காட்காட்டி களைப்போலவே இப்போதும் மிக அழகாக, கவர்ச்சிகரமாக காலண்டர்கள் அமைந்திருப்பதும் சோவியத் காலத்து என்.சி.பி.எச்சை ஞாபகப் படுத்துவதாக உள்ளது. வரலாறு, அரசியல், மார்க் சியம், இலக்கியம், நவீனம், சிறார் படைப்புகள் என பல்வேறு தளங்களில் தாமரை, பாவை வெளியீடு களாக வந்துகொண்டிருப்பது இப்போதைய அரசியல் சூழல் சவால்களை எதிர்கொள்ளும் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. இலங்கையைப் போலவே இங்குமொரு ராஜபக்ஷே. பலவழி களிலும் மக்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிக் கிறார்கள். சீக்கியர்களுக்கு நெருக்கடி நிலவுகிறது. இங்கு திமுக முற்றிலுமாக சிதைவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பாக், இலங்கை என தெற்காசிய நாடுகள் பலவும் அரசியல் நெருக்கடி களில் சிக்கியுள்ளன. இதனை எதிர்க்கும் பொறுப்பும் சுமையும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதற்கு என்.சி.பி.எச்சுக்கு மிகப்பெரும் அரசியல் கடமை இருக்கிறது. அறிவாளிகளுக்கும் இடதுசாரி களுக்கும் வாசிப்பின் மூலமாக மத்திய தர வர்க்கத் தினரை திரட்டும் பெரும்பணி காத்திருக்கிறது.

சோசலிசக் கருத்தாக்கத்துக்கு ஆதரவான இந்தியப் பண்பு, தமிழ்ப்பண்பை எதிர்பார்க்கிறோம். நம்பு கிறோம். இந்தியாவில் மதமோதல், மதப் பிரச் சினைகள் முன்பே இருந்திருந்தாலும் சமீபமாக வந்த சொல்தான் ‘இந்துத்துவம்’ என்பது. முந்தைய இந்தியாவில் சைவம், வைணவம், நாயன்மார்கள் என்ற செழுமையான சமயப் பண்பு இருந்திருக் கிறது. பெரியார், சிங்காரவேலர் இருந்து உள்ளனர். அதற்கு முன்பு அம்பேத்கர் இருந்து உள்ளார். மாற்றுக்கருத்துகளும் இருந்திருக்கின்றன. மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுமையான அவ மதிப்பு செய்ததும் நடந்திருக்கிறது. பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் இருந்துள்ளன. இப்போது அறிவார்ந்த சில கடமைகள் உடனடியாக நடத்த வேண்டியுள்ளது. அதனை விவாதிக்கும் களமாக அதற்குத் தயார்படுத்தும் பணியை என்.சி.பி.எச். செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் வீ.அரசு அவர்கள், தான் படிக்கும் காலங்களில் படிக்கத் தேவையான புத்தகங்களை வாங்கிய என்.சி.பி.எச்சை நினைவு கூர்ந்து பேசத் தொடங்கினார். ஜீவாவின் 1917 முதல் 1961 வரை எழுத்து வரலாற்றை காலவரிசைப் படி பதிவு செய்ய 7500 பக்கங்கள் நான்கு தொகுதி களாகக் கொண்டுவருவதென முடிவு செய்தோம். இவ்வளவு பெரிய புத்தகம் விற்பனையாகுமா என்ற ஐயம் அப்போது இருந்தது. ஆனால் ஆறே மாதங் களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. மிக முக்கியமான இடதுசாரி வரலாற்று ஆவணமாக அது திகழ் கிறது. ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதினேன். இந்தக் கட்டுரைக்காக ஓவியர் மருது அவர்கள் ஒரு கோட்டோவியத்தை வரைந்து தந்தார். அந்தப் படமே தனிநாயகம் அடிகளின் ‘நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்’ என்ற என்.சி.பி.எச். வெளியிட்ட அப்புத்தகத்துக்கு அட்டைப்படமாக வந்திருக்கிறது. கிரேக்க மரபில் கிரேக்கவியல் ஆய்வுபோல மார்க்சிய சிந்தனையில் சங்க இலக்கிய மரபு பற்றி கைலாசபதியும், நாடக அரங்க மரபு பற்றி சிவத்தம்பியும் ஆய்வு செய்தனர்.

1950களில் தனிநாயகம் அடிகள் எம்ஃபில் பட்ட ஆய்வான இந்நூல் சங்க இலக்கிய அடிப்படை களிலிருந்து ஆய்வு செய்கிறது. ஆண் பெண் உறவு மற்றும் பலவற்றையும் விவரிக்கிறது. உலகம் தழுவிய அரசியலாகவும் இவ்வாய்வில் இதனைக் கட்டி அமைத்தார் என்பதுதான் முக்கியம். தமிழர்களுக்கு உலகளவில் சிக்கல்கள்அதிகரித்து வருகின்றன. இப்போது தொல்மரபின் தேவை இருக்கிறது. பின் காலனிய நாட்டு மக்களின் குரலாக என்.சி.பி.எச் விளங்கியது. ரஷ்ய மொழியில் நேரடியாக மொழி பெயர்த்த இந்திய மொழிகளில் தமிழில் அதிக மான புத்தகங்கள் வெளிவந்தன. அதனால்தான் அதிகமாக நகரம் சாராத கிராமம் சார்ந்த கி.ரா., பூமணி, பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், தி.க.சி போன்ற இடதுசாரி இலக்கிய மரபு ஒன்று உருவாகியது. இது மிகமிக முக்கியமான வரலாறு. சோவியத் மரபு சார்ந்த மரபை காங்கிரஸ் மரபிலிருந்து இடதுசாரிப் பார்வைக்கு மாற்றிய என்.சி.பி.எச்சின் செயல்களைப் பாராட்டுவது என் பணியாகும் என்று நிறைவு செய்தார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குனர் தா.பாண்டியன் அவர்கள் தன் உரையில் பேராசிரியர் வீ.அரசு அவர்களின் பணியை வெகுவாகப் புகழ்ந் தார். தோழர் ஜீவாவோடு பல ஆண்டுகாலம் சேர்ந்து பணியாற்றிய நாங்கள் செய்யத் தவறியதை அரசு அவர்கள் செய்திருக்கிறார். இது மகத்தான பணி. வரலாற்றை அறிந்துகொள்ளவும் நினைவு கூர்வதற்கும் இதுபோன்ற வேலைகள் நிறைய இருக்கின்றன. தனிநாயகம் அடிகளைப் பற்றிய கட்டுரைகளை அவசியம் எழுதுங்கள் என வீ.அரசைக் கேட்டுக்கொண்டார். தோழர் நெடுமாறன் கூறிய படி திருக்குறளை டால்ஸ்டாய் நேரடியாகத் தமிழில் படித்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்பே வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்க வேண்டும். இதுபோல நம் புலனுக்கு எட்டாத பல காரியங்கள் உள்ளன. இதையெல்லாம் வெளிகொணரும் பல கடமைகளையும் என்.சி.பி.எச். செய்யவேண்டும் என கூறினார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் நல்லகண்ணு அவர்கள் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கான வருத்தத்தைப் பதிவு செய்துவிட்டு, வெகுநாட்களுக்குப் பிறகு முத்துமோகன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நட்பான பலரையும் சந்திக்கும் வாய்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். 100 புத்தகங்களை வெளியிட வேண்டு மென தீர்மானித்தபோது அதை செய்ய முடியும் என நினைத்து கூட்டுமுயற்சியில் நிறைவேற்றியிருக் கிறோம். ஒவ்வொரு செயலையும் கூடி முடி வெடுத்தே செய்கிறோம். புத்தகங்களை தேர்வு செய்கிறபோதும் முக்கியமான புத்தகங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறோம். ஜார்ஜ் தாம்ஸனின் புத்தகங்கள் பலமுறை வெளிவந்திருந்தாலும் அவசியம் என்பதால் இப்போது கொண்டு வந்திருக் கிறோம். தமிழகத்தில் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம்.

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி சங்க இலக்கியம் வந்தது. தனிநாயகம் அடிகள் நூற்றாண்டையொட்டி அவரது நான்கைந்து நூல்கள் வெளி வந்தன. சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள் வந்தன. அரசு தொகுப்பில் ஜீவாவின் 5 தொகுதிகள் வெளியிடப்பட்டன. மூலதனத்தைக் கொண்டு வந்தோம். சங்க இலக்கியம் மொத்தத் தொகுப்புக்காக 15 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தோம். பாடல்கள் பொழிப்புரை எல்லாம் சேர்த்து பெரும்பெரும் புத்தகங்களாக வந்தன. இவையெல்லாம் விற்குமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் 5 பதிப்புகள் வந்தன. அடுத்து 6வது பதிப்பும் வெளிவந்து விற்றுத் தீர்ந்துவிட்டன. தொன்மையான இலக் கியம் மட்டுமின்றி நவீன இலக்கியம், அரசியல், வரலாறு என எல்லா புத்தகங்களுக்கும் பதிப்பு நடந்துகொண்டிருக்கிறது. பாரதி, பாரதிதாசன் புத்தகங்களும் வருகின்றன. செலவுகள் அதிக மானாலும் வாசிப்பை அதிகப்படுத்தவேண்டும் என்பதால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். மூத்த தலைவர்கள் இதனை முறையாக வளர்த் தார்கள். அதேவழியில் என்சிபிஎச் தொடர்கிறது. கேரளாவில் குறைந்தது 3000 பிரதிகள் விற்கின்றன. இங்கு 1000 அல்லது 1500 என்றுதான் விற்பனை யாகிறது. வாசிப்புப் பழக்கத்தை விரிவாக எடுத்துச் செல்லவேண்டும். ஸ்டாலின் குணசேகரன் இதற்கான பெரும் பொறுப்பில் செயல்பட்டு வரு கிறார். தமிழ் மக்களுக்கு முற்போக்கான கருத்து களைக் கொண்டு செல்வதில் தொடர்ந்து வீரிய மாக செயல்படுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.

நிறைவாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொது மேலாளர் தி.இரத்தினசபாபதி அவர்கள் நன்றி கூறினார்.

விழா நிகழ்ச்சிகளை பா.ஆனந்தகுமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

(இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பழ.நெடுமாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் உரைகள் சென்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.)

Pin It