ஒரு கதை. பொய் அதன் பெயர். மரங்கள் சூழ்ந்த வீடுகள் சுதந்திரமாக அமர்ந்திருக்கும் கிராமப்புறத்தில் நடைபெறவில்லை இது. தார்ச் சாலைகளின் இருபுறமும் புல் முளைக்காத காங்க்ரீட் தெருக்களில் அடுக்கடுக்காக முளைத்து வானளாவி வளர்ந்து பெரும்பாலான குடும்பங் களை அந்தரத்தில் தொங்கவிடும் ஒரு மாநகரத்தில் ஒரு வீட்டில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம் அது. வாழ்வும் சூழல்களும் சமூக உறவுகளும் எவ்வளவு தான் மாறிப்போனாலும் மண்ணில் ததும்பி நிற்கும் மானிட மாண்புகள் இளம் இதயங்களில் இன்னும் நெருப்புக் கங்குகளாக ஒளிவீசிக் கொண்டே இருக்கின்றன எனக் காட்டும் ஒரு சிறிய சம்பவம்.

mukilai rasapandianஇலக்கிய மாமேதை ஜீவா சொல்லுவார்.

“நாளை விரிசோதி என மேதினியை மேவத்தகு ஆற்றல் படைத்த இன்றைய உண்மைத் துணுக்குகளை, அனுபவக் கூறுகளை, உணர்ச்சித் துளிகளை, ஆதர்சக் கதிர்களைக் கலை இலக்கியத் துறையிலே ஆட்சிகொண்டு வாழ்வின் மீட்சியிலே மக்கள் வெற்றிபெறப் பணிபுரியுங்கள்.” என்று 1961 கோவை இலக்கியப் பெருமன்ற மாநாட்டிலே நவீன எழுத்தாளர்களுக்கு ஜீவா காட்டிய வழியை அணுபிசகாமல் ஏற்று இலக்கியப் பணி செய்ய வந்திருக்கிறார் முகிலை இராசபாண்டியன். ‘குருவிக் கூடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் அவர் வடிவமைத் திருக்கும் சிறுகதைகள் அத்தனையும் இன்றைய உண்மைத் துணுக்குகள், அனுபவக் கூறுகள், உணர்ச்சித் துளிகள், ஆதர்சக் கதிர்கள், வாழ்வு இருண்டு விடாமல் தொடர்ந்து ஒளியேற்ற வல்ல துணுக்குகள்.

கதை இதுதான். ஒரு நடுத்தர வீடு. படிப்பு, வேலை என்று பலவாறு செல்லும் உறுப்பினர்கள். பசிக்காகவும் நாலு முழம் துணிக்காகவும் பாத்திரம் துலக்குவதிலிருந்து துணி துவைத்தல் வரை எல்லா எடுபிடி வேலைகளுக்கும் வந்து போகும் ஒரு வேலைக்காரி. அவர் துவைத்து உலர வைத்த அந்த வீட்டுச் சிறுமிக்கான உடுப்பு ஒன்று எப்படியோ ஒரு இடத்தில் கிழிந்துவிட்டது. இதைப் பார்த்து விட்ட வேலைக்காரி பதறுகிறார். மாலையில் வீடு திரும்பும் வீட்டு எசமானி அவரைத் தாறுமாறாக வைவாரே, வேலையை விட்டு நீக்கவும் செய்வாரே!

மாலையில் வீடு திரும்பியதும் துணிக் கிழிசலைப் பார்த்து எசமானியம்மா கடுமையாகப் பேசத் தொடங்குகிறார். குற்றமும் தண்டனையும் சந்திக்கும் கணம் தண்டனை கொடியதாக இருக்கும். தலையிட்டு அந்த ஏழைப் பெண்ணைக் காப்பாற்ற ஒரு உணர்ச்சித் துளி, ஒரு ஆதர்சக் கதிர் தேவை.

எங்கிருந்து பீறிட்டுக் கிளம்புகிறது அது? விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்புகிறது.

“அந்த உடுப்பை முத்தம்மா கிழிக் கலைம்மா. நேத்து சாயங்காலம் நான் விளையாடிக்கிட்டிருக்கும்போது கிழிஞ்சிருச்சும்மா.”

பிரச்சினை அந்தச் சொற்றொடரில் ஓய்ந்து விட்டது. எவ்வளவு கறாராகச் சொன்னார் வள்ளுவப் பெருந்தகை:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

இப்படித்தான் எழுதுகிறார் முகிலையார். ஜீவா சொன்னது போலச் சின்னஞ்சிறு துணுக்குகள், அனுபவக் கூறுகள், உணர்ச்சித் துளிகள், ஆதர்சக் கதிர்கள் முழு முழுக் கதைகளாகப் பூத்துக் கிடக் கின்றன.

விதிகள் என்னும் கதை. நேர்மையான, தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள புத்தகங்களை நேசிக்கின்ற கல்லூரி நூலகர் பார்வதி. முப்பது புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்காத ஒரு பணி நிறைவு பெற்ற பேராசிரியர், அவரிடம் பாக்கி யின்மைச் சான்று பெறுவதற்காக வருகிறார். நூலகருக்குத் தெரியும், பேராசிரியர் கொண்டு வரும் சான்றிதழில் தான் கையெழுத்திட மறுத் தால் கல்லூரி முதல்வர் அவரே கையெழுத்திட்டுச் சரிசெய்துவிட முடியும் என்பது. இங்கேதான் பார்வதிக்குப் பிரச்சினை. தன் மனசாட்சிப்படி நிற்பதா? அல்லது நடக்கப் போகிற முடிவுக்குத் தானும் இணங்கிவிடுவதா? மனித மாண்பு என்பது எது? மனசாட்சியைப் பேணவா? ஆம்! அந்த மாண்பைக் காப்பாற்றி மூக்கறுபடுகிறார் நூலகர்.

சில சிறுகதைகள் மதங்களைக் கடந்து மனித மாண்புகளின் சிகரத்தைத் தொடுகின்றன.

செல்லத்தாய் தாயாவதற்காகத் தவித்துப் புரண்டு அலறிக் கொண்டிருக்கிறார். ஒன்றாய்க் கிடந்த கடற்புரத்தையும் உள்ளூரையும் மண்டைக் காட்டுக் கலவரம் இரண்டாய்ப் பிளந்து போட்டு விட்ட நேரம். இங்கிருப்பவருக்கு அங்கு மரண நெருப்புக் காத்திருக்கிறது. அங்கிருப்பவருக்கு இங்கு மரண நெருப்புக் காத்திருக்கிறது. யாரும் ஊருக்கு ஊர் ஊடுருவ முடியாது. இந்தச் சூழலில் தான் செல்லத்தாய், பிள்ளைப் பேற்று வலியால் துடித்துத் துவண்டு கொண்டிருக்கிறார்.

பிள்ளைப் பேறு பார்க்கப் பயிற்சி பெற்ற நர்சு மேரி மறுபக்கம் கடற்கரையில் இருக்கிறார். அன்பானவர், அருள் நிறைந்தவர். ஆனால் அவரிடம் செய்தியைச் சொல்லி அழைத்து வரவேண்டுமே! யாராவது போனால் அவர்களை எதிரிகள் கொல் லாமல் விடுவார்களா? நெடுநேர விவாதத்துக்குப் பின் முருகேசன் என்னும் இளைஞன், சைக்கிளில் ஏறி, கடற்புரத்திற்குத் துணிந்து போகிறார். கடற்புர இளைஞர்கள் இவரைச் சந்தேகித்து, சூழ்கிறார்கள். இங்கு சமூக சேவையும் சேவைக் கான தடையும் மோதுகின்றன. தடையை மீறி, சமூகம் முன்னோக்கிப் பாயவேண்டும். தடையை உடைக்கும் ஆற்றலாக இளைஞர் மிக்கேல் அங்கே குரல் எழுப்புகிறார். அந்த மனிதநேயக் குரலுக்கு ஊரே கட்டுப்படுகிறது.

இந்தக் கொடிய மதக்கலவரச் சூழலில் வாழ்ந்தவன் நான். அனைத்தையும் பார்த்தவன் நான். பார்த்து மனம் கசந்து மனித நேயம் மலர வேண்டும் என ‘மறுபக்கம்’ நாவலை எழுதியவன் நான். இந்தக் கதையைப் படித்ததும் நான் மனம் நெகிழ்ந்தேன், நிறைந்தேன். மனிதம் எங்கும் நிறைந்தது. எந்த நெருப்பாலும் புயலாலும் அழிக்க முடியாதது என்பது கதையில் பளிச்செனத் துலங்கு கிறது. குருவிக்கூட்டின் உள்ளே மின்னிக் கொண் டிருக்கும் செய்தி இதுதான்.

மருத்துவம். நம் மண்ணின் மகத்துவம் சொல்லும் கதை. ஆங்கில மருத்துவத்தில் பெரும்படிப்புப் படித்தவர் ஒரு மருத்துவர். அதில் ஏகப்பட்ட காசு சம்பாதிப்பவர். எல்லா ஆங்கில மருத்துவரிடம் இருப்பது போல இவரிடமும் இருக்கிறது மனக் குறளி. என்ன குறளி? மண் சார்ந்த மருத்துவம் அதாவது நம் சித்த மருத்துவம் கீழானது, பயனற்றது என்பதே அது. அவரைக் கழுத்தை நெருக்கித் திணறடிப்பதற்கென்றே நோய் ஒன்று வருகிறது. தீராத தோல் துடிப்பு நோய்.

ஆங்கில மருத்துவத்தில் ஆன வித்தை எல்லாம் செய்து பார்த்த ஆங்கில மருத்துவ நிபுணர், வேறு வழியின்றி ஒரு நாட்டு வைத்தியரிடம் போகிறார். ஆங்கில மருத்தவரைக் கட்டிலில் படுக்கவைத்து ஏதோ ஒரு பச்சிலையைத் தன் வாயில் போட்டு, சவைத்து அதை மருத்துவரின் மூக்கில் ஊதுகிறார் உள்ளூர் வைத்தியர். பறந்தே போய் விட்டது நோய். நூறு ரூபாயை எடுத்து நீட்டுகிறார் ஆங்கில மருத்துவர். மறுத்துவிடுகிறார் நாட்டு வைத்தியர். காசு வாங்கினால் மருந்து பலிக்காது. மண் சார்ந்த, மக்கள் மருத்துவத்துக்கும் ஆங்கில மருத்துவத் துக்கும் உள்ள வேறுபாட்டை, மாறுபாட்டைப் புரிய வைக்கிறது கதை.

சப்பரம் எடுப்பு என்னும் ஒரு மிக நுட்பமான கதை. மதக்கலவரத்துக் காலக் கதை அது. மாதா கோவில் சப்பரத்தை எடுத்து, ஊர்வலம் வந்தால் கலவரம் வந்துவிடுமோ! எல்லோருக்கும் அச்சம்.

காவல் துறை சில வழிகளைச் சொல்கிறது. அதிகார வழிகாட்டுதல் பண்பாட்டுக்கு முரண் படுவதால் பண்பாட்டாளர்களான சாமியார் களால் அது நிராகரிக்கப்படுகிறது. அதிகாரி களுக்குக் கோபம் வராதா? கோபத்தை அவர்கள் எப்படிக் காட்டுவார்கள்? தெளிவு தேடக் கதையை வாசியுங்கள்.

வரையறைகள் இன்னும் ஒரு நல்ல கதை. இந்தக் கதை எழுதி முகிலையார், சமுத்திரத்தின் பேனாவைப் பயன்படுத்தியிருக்கிறார். இளைஞர் இராஜையன் பின்தூங்கி முன்எழும் இடைக் காலப் பெண்டிர் போல நேரத்தோடு அலு வலகத்துக்கு வருவார். வேலைகளை எல்லாம் முடித்து விட்டுப் பிந்திதான் போவார். ஆனால் இதுவே அவருக்கு வினையாகவும் போய்விட்டது.

ரெங்கசாமி அங்குள்ள அதிகாரி. ஒரு நாள் அவர் நேரத்தோடு அலுவலகம் வந்துவிட்டார். குடிக்கத் தண்ணீர் அவர் அறையில் எடுத்து வைக்கப் படவில்லை. பெல் அடித்தார், கூப்பிட்டார். ஆனால் யாரும் ஏன் என்று கேட்கவில்லை. புயல்போல் பாய்ந்தார் இராஜையனிடம். “என்னய்யா... என் அறையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துவைக்கத் தெரியாதா?”

“பியூன் வரல்லை சார்!”

“ஏன், நீர் எடுத்து வச்சா கால் நோவுமோ? தண்ணீர் எடுத்து வையும்!”

“எனக்கு ஃபைல் பார்க்க வேண்டியிருக்கு சார்.”

“ஃபைல் பாத்து கிழிச்சது போதும். தண்ணீ கொண்டு வா!”

தாறுமாறாக அலுவரைத் திட்டுகிறார் அதிகாரி.

இராஜையன் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் பாடம் கற்றுக் கொள்கிறார். மறுநாளி லிருந்து காலை பத்து மணி என்றால் ஆபீசுக்கு வருவது மாலை ஐந்து மணி என்றால் வீட்டுக்குப் போவது...

எப்படித்தான் ஆசிரியர் கண்டுபிடித்தாரோ இந்தக் கதைக்கருக்களை? இந்த நூலுக்குச் சாகித்திய அகாதெமியின் சென்னைப் பொறுப்பு அலுவலர் முனைவர் அ.சு. இளங்கோவன் அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். மூன்று தடவை வாசித்தேன். ஒவ்வொரு வரியிலும் கருத்து மின்னு கிறது. ஒவ்வொரு சொல்லிலும் ஓசை ரீங்கார மிடுகிறது. இளங்கோ அவர்களின் நினைவுப் பரப்பைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக் கிறது. மிகுந்த மனநிறைவு எனக்கு.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் முகிலன் குடியிருப்பு என்னும் சிற்றூரில் முகிலை இலக்கிய மன்றத்தில் முகிலை இராசபாண்டியனை இளம் பேச்சாளராக, கவிஞராக, சிறுகதையாளராகச் சந்தித்த அனுபவம் எனக்கு. அந்த முகிலை இன்று தமிழுலகம் அறிந்த பேச்சாளராக, கவிஞராக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, விமர்ச கராக பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து, பெரும் பூரிப்படைகிறேன்.

சோர்வில்லாத படைப்பாளியாக நாடு முழுவதும் பயணித்து, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வழிகாட்டியாக மிக அருமையாக வளர்ந்திருக் கிறார் அவர். அவர் இன்னும் வளருவார். இன்று அவர் பெற்றிருக்கும் பரிசுகளையும் விருதுகளையும் தாண்டி ஏராளமான விருதுகளும் பரிசுகளும் பெறுவார். அவரை மனமார வாழ்த்துகிறேன்.

குருவிக் கூடு (சிறுகதைகள்)
ஆசிரியர்: முகிலை இராசபாண்டியன்
வெளியீடு: கோவன் பதிப்பகம்
மனை எண் 11, முப்பத்து மூன்றாம் தெரு,
பாலாஜி நகர் விரிவு - III
புழுதிவாக்கம், சென்னை - 600 091
போன் : 94443 65642
விலை: ரூ.120/-

Pin It