தோழர் ஜீவாவின் வாழ்க்கைப் பயணம்

jeeva 350தமிழ் நாட்டு இடதுசாரி இயக்கத்தின் சுமார் ஒரு நூறு ஆண்டுக் கால வரலாற்றில் தோழர் ஜீவா (1907-1963) வகிக்கும் இடம் தனித்துவம் மிக்கது. குறிப் பிட்ட அக்காலத்திய தமிழ் அரசியலின் உயிரோட்ட மான போக்குகளை அடையாளப்படுத்துவதற்கு ஜீவாவின் அரசியல் ஒரு திசைகாட்டியாக அமைய முடியும். ஜீவாவை மையமாகக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் அரசியல் போக்குகளை புதிய அர்த்தங்களோடு அடையாளப்படுத்த முடியும்.

காலனிய ஆட்சி, நாட்டு விடுதலைக்கான போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் தோற்றம், திராவிட இயக்கத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்கள் (நீதிக்கட்சி, பெரியார், பின்னர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் முன்னேற்றக் கழக அரசியல்), திமுக தலைவர்களின் மொழி வழி தேசியம், இலக்கியவழி தேசியம், அயோத்திதாசர் முதலாகத் தமிழில் சாதி அமைப்பு குறித்த விமர்சனம், தலித் எழுச்சிகள் போன்ற பல வகையான அரசியல் பண்பாட்டுப் போக்குகளைத் தமிழ் மண்ணில் காணமுடிகிறது.

மிகச் செழுமையான அரசியல், கருத்தியல் சந்திப்புகளைத் தமிழகம் குறிப்பிட்ட இக்காலத்தில் உற்பத்தி செய்துள்ளது. தோழர் ஜீவா மேற்குறித்த எல்லா இயக்கங்களின் ஊடாகவும் பயணித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் ஜீவா இளமையில் காந்திய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். சிராவயலில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காகப் பள்ளி ஒன்றை நடத்தியுள்ளார். 1930 களில் பெரியாரின் பகுத்தறிவு, நாத்திகம், சாதி எதிர்ப்பு ஆகிய நிலைப்பாடுகளால் கவரப்பட்டு உள்ளார். காந்தியம், பெரியாரியம் ஆகியவற்றின் செல்வாக்கால் பெண் விடுதலை சார்ந்த தனது கருத்துக்களை ஜீவா கவிதைகளாகவும், புதுமைப் பெண்ணுக்கு எழுதிய கடிதங்களாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.  இதனிடையே ரஷ்யப் புரட்சி மற்றும் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சிங்கார வேலர் மற்றும் பெரியார் ஈவேரா ஆகியோருடன் இணைந்து சுயமரியாதைச் சமதர்மம் என்ற ஓர் அரசியல் கட்சியை உருவாக்க முயன்றுள்ளார். அந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டபோது, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து வேலை செய்தார்.

தொழிற் சங்கத் தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் ஜனசக்தி பத்திரிகையின் ஆசிரியராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். தமிழ்ச் சூழல்களில் கட்சியின் கோட்பாட்டு நிலைப் பாடுகள், வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முதன்மையிடத்தை வகித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் மொழி வழி மற்றும் இலக்கிய வழி அரசியலுடன் மிகப் பெரும் உரையாடலை நடத்தியவர் என்று தோழர் ஜீவாவைச் சொல்ல வேண்டும். மொழிவழி மாநிலம் உருவாவதற்கான போராட்டங்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடன் இணைப் பதற்கான போராட்டங்கள், தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, இவற்றோடு மாநில சுயாட்சி ஆகியவற்றுக்கான இயக்கங்களிலும் தோழர் ஜீவா முன்னின்றார்.

1963இல் அவரது அகால மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்நாட்டுக்கெனவே தனித்த வடிவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளார். தோழர் ஜீவாவின் காலத்தில், தமிழ் மண்ணில் பொது உடமை இயக்கம், அதன் கோட்பாட்டு நிலைப்பாடுகள் முழுமையை நோக்கிய வடிவத்தை எட்டின எனக் கூறலாம். தீவிர செயல்பாட்டுப் பண்பு கொண்ட தமிழ்ப் பண்பாட்டுச் சூழல்களுடன் தோழர் ஜீவா “ஒன்றாகி, வேறாகி, உடனாகி” நின்று ஒரு மிகப்பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பதைக் காணுகிறோம். அத்தகைய ஒரு பயணத்தில் ஒரு செழுமையான மார்க்சியக் கோட்பாட்டிற்கான அடித்தளங்களையும் ஜீவா உருவாக்கியுள்ளார். 

தமிழின் தனித்த பண்புகளும் இடதுசாரி இயக்கமும்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி வளர்ந்த வங்காளம், பஞ்சாப், தமிழகம் ஆகிய மூன்று வட்டாரங்களை ஓர் ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்வோமெனில், அவற்றுக்கிடையில் தமிழகம் சில குறிப்பிடத்தக்க தனித்த பண்புகளைக் கொண்டு உள்ளது என்று கூறலாம். வங்காளம் ஆழமான நகர்ப்புறப் பண்புகளையும் நவீனமயமாக்கத்தின் விளைவுகளையும் கொண்டது. மறுபுறம், வைதீக மரபுகளை மையப்படுத்தி இந்தியப் பண்பாட்டைச் சித்திரித்துக் காட்டிய பழமைச் சக்திகளின் ஆதிக்கத் திற்கும் அது இருப்பிடமாக அமைந்திருந்தது. பஞ்சாப் விவசாயப் பண்பு கொண்ட அரசியலுக்குப் பெயர் பெற்றது.

பஞ்சாபிலும் சமயச் சார்பு கொண்ட இயக்கங்கள் வலுவாகத் தொழில்பட்டன. பகத்சிங் போன்றோரை முன்னிறுத்திய தீவிரவாத இயக்கங் களும் அங்கு உண்டு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பண்புகளை முன்னிலைப்படுத்தி அரசியல் இயக்கங்கள் உருவாகின. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், மிகப்பழங்காலம் தொட்டே மொழி சார்ந்த ஒரு பண்பாட்டுக்குச் சொந்தமான பிரதேசமாக இது இருந்து வந்திருக்கிறது. திராவிட மரபுகள் சார்ந்த ஒருவகை அணுகுமுறை தென்னகத்தில் துலக்கமாக வெளிப்படுகிறது. அது மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனது வேர்களைத் தேடும்  (Embeddedness) அரசியலாகவே அமைந்திருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. பண்பாட்டில் பொதிந்த அரசியல் என்றும் இதனைக் கூறலாம். இத்தகைய சூழல்களின் அழுத்தத்தைத் தன்னில் அனுபவித்தவர் தோழர் ஜீவா என்று இந்த இடத்தில் கூறிச் செல்லுவோம். இது குறித்து விரிவான ஓர் ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளுவது கூட பயனுள்ளதாக இருக்கும்.

தமிழின் பண்பாட்டு அரசியல்

தமிழகத்தின் பண்பாடு சார்ந்த அரசியல் என்பதனை வரலாற்றுரீதியாகவும் அணுக வேண்டி யுள்ளது. தமிழின் பண்பாட்டு அரசியல் மிகப் பழங்காலம் தொட்டே நன்கு பதிவாகியுள்ளது. அது ஒரு மறுக்கமுடியாத தொடர்ச்சியுடனும் பதிவாகி யுள்ளது. தமிழ் மண் முழுவதிலும் பரவிக்கிடந்த பல நூற்றுக்கணக்கான பழம் பாடல்கள் சங்கப் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்ட காலம் தொட்டே தமிழின் பண்பாட்டு அரசியல் தொடங்கி விட்டது எனலாம். பல புலவர்களின் பாடல்களைத் திணை வகுத்து தொகுப்பதில் ஓர் அரசியல் உண்டு என்பதை நினைவுறுத்துவோம். தொல்காப்பிய நூல் பழம் தமிழ்ப் பாடல்களைத் திணை, பால், குடிகள், அவற்றின் வினை, பண்புகள் சார்ந்து பகுத்தும் தொகுத்தும் எடுத்துக்காட்டியும் இலக்கணம் வகுத்த காலங்களில் பண்பாட்டு அரசியல் உறுதியாக நிலை கொண்டது எனலாம். சமண பௌத்த முனிவர்கள் தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் வகைப் படுத்தி இலக்கணம் வகுப்பதில் பங்கேற்றனர் என்ற செய்தி தமிழின் பண்பாடு சார்ந்த அரசியலின் பின் புலத்தை எடுத்துக்காட்டுகிறது. இலக்கணம் என்பதே அதன் சொந்த வரையறையின் படி (By Definition) மொழியையும் இலக்கியத்தையும், சில வேளைகளில் வாழ்வையும் ஒழுங்குபடுத்துவது (Disciplining), ஒரு கட்டமைப்புக்குள் (கட்டுப்பாட்டுக்குள்) கொண்டு வருவது என்று எடுத்துக்கொண்டால், அது எவ்வாறு பண்பாட்டு அரசியலில் பங்கேற்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சமண, பௌத்தப் பின்புலத்தி லிருந்து தமிழின் காப்பியங்கள் இயற்றப்பட்டன என்ற செய்தியும் அவை தமிழ் மரபுகளில் வேர் கொண்ட வடிவத்தையே ஏற்றன என்ற நிகழ்வையும் காணமுடிகிறது. தொடர்ந்து வந்த அற இலக்கியங்களும் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அசைவுகளை சில அரசியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்துள்ளன என்பதையும் காணுகிறோம். இவ்வாறாக, தமிழ் மண்ணின் மொழியும் இலக்கியங்களும் இலக்கணமும் காப்பியங்களும் அறமும் பண்பாடும் சார்ந்த அரசியலை மிக நுட்பமாக வளர்த்தெடுத்துள்ளன என்பதைக் காணுகிறோம். தமிழின் பண்பாட்டு அரசியலுக்கு அவை முதல் எடுத்துக்காட்டாக, மிக விரிவான முதற் களமாக அமைந்துள்ளன என்பதையும் உணர முடிகிறது.

அடுத்துவந்த நூற்றாண்டுகளில், சைவமும் வைணவமும் பக்தி இயக்கங்களின் வழியாக தமிழில் வேர்கொண்டபோது சங்கம், சங்கம் மருவிய காலங்களின் பண்பாட்டு வேலைத்திட்டத்தையே மறு பதிப்பு செய்தன என்பதையும் காணமுடிகிறது. மொழி, இலக்கியம், இலக்கணம், காப்பியம், அறம் ஆகிய பண்பாட்டுப் பரப்புகளைக் கையகப் படுத்துவது என்ற வேலைத்திட்டமே மீட்டுக் கொணரப்பட்டது என்பதைக் காணமுடிகிறது. 19-20 ஆம் நூற்றாண்டுகளிலும் கூட பண்டைத் தமிழகத்தின் மொழி இலக்கிய இலக்கண அரசியலே புதிய சூழல்களில் மீண்டு வந்தது என்று கூற முடிகிறது. மொழி, இலக்கியம், இலக்கணம், அறம், பக்தி எனும் பண்பாட்டு வடிவங்கள் ஒவ்வொன்றுமே இங்கு அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பதைக் காணுகின்றோம். தோழர் ஜீவாவின் அரசியல் கருத்துருவாக்கம் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலின் அழுத்தத்தைத் தன்னில் கொண்டுள்ளது என்று கருத முடிகிறது.  

சர்வதேச அளவிலான சில சூழல்கள்

1950, 60 களில் ஜீவா தனது அரசியல் நிலைப் பாடுகளை உருவாக்கிக் கொண்டபோது நிலவிய சர்வதேசச் சூழல்களையும் இங்குக் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட இக்காலம் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் காலனிய ஆட்சிகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக உச்சக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட காலம் ஆகும். அந்த நாடுகளின் முற்போக்கு சக்திகள் தமது நாடுகளின் சமூகச் சூழல்களில் மார்க்சியம் என்ற கோட்பாட்டைப் பொருத்திப் பார்த்துக் கொண்ட காலமாகவும் அது அமைந்திருந்தது.

1948இல் சீனப் புரட்சி நடந்தேறியது. ஓர் ஆசிய நாட்டில், விவசாயிகளை அறுதிப் பெரும் பான்மையாகக் கொண்ட நாட்டில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது என்பது கிழக்கு நாடுகளுக்குக் கணிசமான ஒரு செய்தியாகும். சீனப் புரட்சி சீன நாட்டின் பிரத்தியேகச் சூழல்களுக்கு ஏற்ற ஒரு சோசலிசத்தைக் கட்டமைக்க முன்வந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். உலகின் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் பண்புகளுக்கு உகந்த சோசலிசத்தைக் கண்டறிய வேண்டும் என்ற அவா அக் காலத்தில் பெருகி வந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பிரான்ஸ் பனோன் என்ற கறுப்பினச் சிந்தனையாளர் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் விடுதலையை முன்னிறுத்தும் சோசலிசம் எமது மக்களுக்கு வேண்டும் என்ற குரலை ஒலித்தார். சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சி யாளர்கள் லத்தீன் அமெரிக்க நிலமைகளுக்கு ஏற்ற புரட்சியின் வடிவத்தைத் தேடினர். அந்தந்த நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளிலிருந்தும் அந்தந்த நாடுகளுக்கே சொந்தமான போராட்ட மரபுகளிலிருந்தும் அந்தந்த நாடுகளின் விடுதலை ஏக்கங்கள் மற்றும் கனவுகளிலிருந்தும், அந்நாடுகளுக்குரிய சோசலிச மாதிரிகளையும், புரட்சியின் வடிவங்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத் தோட்டம் வலுப்பட்டு வந்த காலம் அது. சர்வதேசச் சூழல்களை ஒத்த நிலையிலோ, அல்லது வேறு வகையான கட்சி மற்றும் உள்ளூர்ச் சூழல்களால் உந்தப்பட்டோ தோழர் ஜீவா அவ்வகைப்பட்ட திசையில் பயணப்பட்டார் என்பது தமிழுக்கு வாய்த்த பெரும் பேறு எனக் கருதுகிறேன்.    

தோழர் ஜீவாவின் பண்பாட்டு அரசியல் நிலைப்பாடுகள்

தொழிலாளர் வர்க்கத்தை முதன்மையாகக் கொண்ட உழைக்கும் மக்களின் நலன்களை தோழர் ஜீவாவின் அரசியல் தன்னில் மையப்படுத்தியிருந்தது. கோவையில் ஜீவா அவ்வகைப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளைகளில்தான் “காலுக்குச் செருப்புமில்லை, கால்வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா...” என்ற பாடலையும் “கோடிக்கால் பூதமடா...” என்ற பாடலையும் இயற்றி அவை தமிழகமெங்கும் ஒலித்தன. தொழிலாளர் முதன்மை, வர்க்க அரசியல் ஆகியவை பொதுவான மார்க்சிய நிலைப்பாடுகள். ஆயின் மார்க்சியம் தோற்றம் பெற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல அம்சங்களில் விலகிய சமூகப் பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா என்ற கவனம் ஜீவாவிடம் அமைந்திருந்தது என்பதைக் காண முடியும். குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு, ஆணாதிக்கம் போன்ற குறிப்பான வடிவங்களின் செல்வாக்கு குறித்த கவனம் ஜீவாவிடம் வலுவாகவே உள்ளது. அதனை வரலாற்றுரீதியாகவும் அவர் அணுகுகிறார்.

பழம்தமிழ் சமூகத்தின் இலக்கியச் சான்றுகள் சாதியில்லாத, ஆணாதிக்கம் இல்லாத பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கையை முன்னிலைப்படுத்துவதை ஜீவா கவனப்படுத்துகிறார். இயற்கை சார்ந்த, நிலத்தையும் பொழுதையும் முதல் பொருட்கள் என அறிவிக்கின்ற, நிலமும் பொழுதும் நீரும் உணவும் சார்ந்த தமிழரின் பழங்குடிச் சமூகத்தை தோழர் ஜீவா ஓர் அற்புதம் என வருணிக்கிறார். ஐம்பெரும் பூதங்களும் “கலந்த மயக்கமே” உலகு எனக் கூறும்போது பழந்தமிழருக்கு எவ்விதமான புராணக் கதைத்தலும் அவசியமில்லாத உலகநோக்கு அமைந்திருந்ததைக் காணமுடிகிறது. புராணிய மாந்திரீக கதைத்தல்கள் இல்லாத பழங்குடிச் சித்திரிப்புகளை வடமொழி இலக்கியங்களிலோ ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் போன்ற பிற நாடுகளின் பழம் இலக்கியங்களிலோ காணமுடிவதில்லை. அது தமிழுக்குக் கிடைத்துள்ளது. அந்த அடிப்படைகளி லிருந்தே தமிழரின் பண்பாட்டு வாழ்வு தோற்றம் பெற்று எழுந்தது என்பதைத் தோழர் ஜீவா சுட்டிக்காட்டுகிறார்.

மார்க்சிய வரலாற்றுக் கோட்பாட்டில், வர்க்க சமூகங்களின் வரலாற்றை விமர்சிப்பதற்கும் மறுதலிப் பதற்கும் புராதன இனக்குழு சமூகம் ஓர் ஒப்புமை எதார்த்தமாக, முன்னோடி எதார்த்தமாக (Reference Point) அமைந்தது போல் பழந்தமிழரின் வாழ்க்கை முறையும் உலக நோக்கும் சாதி, ஆணாதிக்கம் ஆகியவை கொண்ட இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தை விமர்சிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் ஒப்புமைச் சான்றாதாரங்களாக அமைகின்றன. எல்லா மொழிகளிலும் இத்தகைய பழம்சமூகச் சான்றுகள் எளிதில் அமையக் கிடைப்பதில்லை. ஆயின் அத்தகையச் சான்றுகளைத் தமிழ் மிக ஏராளமாகக் கொண்டுள்ளது. ஜீவா அவற்றை அமோகமாகப் பயன்படுத்துகிறார்.

பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து தோழர் ஜீவா ஒரு விமர்சன மரபையும் கண்டடைகிறார். “பாடறிந்து ஒழுகும்” சீரூர் மன்னர்களிலிருந்து வேந்தர்கள் எனும் முடிமன்னர்கள் தோன்றும் போது பகுத்துண்டு வாழும் புராதன வாழ்க்கை மறைந்து ஏற்றத்தாழ்வான வாழ்வியல் தோற்றம் பெரும் போது, அதனைப் பதிவு செய்யவும் விமர்சிக்கவும் தமிழ் மரபு தயங்கவில்லை என்பதைத் தோழர் ஜீவா தெளிவாக எடுத்துரைக்கிறார். இன்றைய புதுமைப் பெண் ஒத்துக்கொள்ளாத, பழமை சார்ந்த சில வரையறைகள் தொல்காப்பியத்தில் உள்ளன என்பதையும் ஜீவா சுட்டிக்காட்டுகிறார். பழந்தமிழ் மரபை ஒற்றைப்படையாக, வெறுமனே தமிழ்ப் பெருமிதத்தைக் காட்டுவதற்காக மட்டும் பயன் படுத்துதல் கூடாது என்ற எச்சரிப்பை, ஜீவாவின் எழுத்துக்கள் கொண்டுள்ளன. காப்பியங்களிலும் அற இலக்கியங்களிலும் (குறிப்பாக திருக்குறளில்) தமிழின் விமர்சன மரபு மேலும் கூர்மையடைகிறது என்ற உண்மையையும் ஜீவா எடுத்துக்காட்டுகிறார். ஒரு பழம் மரபை நாம் கொண்டுள்ளோம் என்பது மட்டுமல்ல, அதனுள் ஒரு விமர்சன மரபைக் கண்டறிந்துள்ளோம் என்பது மிகப்பெரும் சாதனையாகும். ஜீவாவுக்கு முன்னதாக அதனை யாரும் முன்னிருத்தியதில்லை. ஆயின் ஜீவா தமிழின் விமர்சன மரபை முறையியல் ரீதியாக வளர்த்தெடுத்தார்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகி யுள்ள ஏழ்மையையும் அது குறித்த துயரங்களையும் ஜீவா கவனிக்காமல் இல்லை. அத்துயரங்களிலிருந்து வெளிவரும் நோக்குடன் அம்மக்கள் உருவாக்கிய மாற்று வடிவங்களைப் பற்றியும் அவர் எழுதி யுள்ளார். கிருதயுகம், ராமனின் அயோத்தி ஆகியவற்றை அம்மக்களுக்கு சுபிட்சமான வாழ்வை வழங்கும் கனவு தேசங்களாக, கற்பனையூர்களாக  (Utopias)  ஜீவா சித்திரிக்கிறார். சமீபகாலங்களில் Utopia Studies, Memory Studies போன்ற ஆய்வு வட்டாரங்கள் பெருகிவருகின்றன. நாமும் கூட அது போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு அவசியங்கள் உள்ளன. பழந்தமிழகமும் இடைக்காலத் தமிழகமும் அம்மாதிரியான ஆய்வுகளுக்கு இடமளிக்கும் இலக்கியங்களை ஏராளமாகக் கொண்டுள்ளன.

1961இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில் தோழர் ஜீவா நாட்டுப்புற இலக்கியங் களை, வழக்காறுகளைச் சேகரித்தல், அச்சுக்குக் கொண்டு வருதல், ஆய்வு செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுமாறு கலை இலக்கியப் பெருமன்ற அன்பர் களுக்கு அழைப்பு விடுக்கின்றார். இது போன்ற வேலைகளை (பேராசிரியர் நா.வா. முதலான) “நெல்லைத் தோழர்கள்” ஏற்கெனவே செய்து வருகின்றனர் என அவர்களைப் பாராட்டவும் செய்கின்றனர். “தாமரை” பத்திரிகையில் “கிராமீயக் கலை வளர்ப்போம்” எனத் தலைப்பிட்டு தலையங்கம் எழுதுகிறார். 

ஜீவாவின் கலை இலக்கியக் கொள்கையில் நாட்டார் வழக்காறுகள் இடம் பெறுகின்றன என்ற விடயம் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மட்டுமே இலக்கிய அந்தஸ்து வழங்கி வந்த மேட்டுக்குடிச் சூழலிலிருந்து விலகி, அல்லது அவற்றோடு, உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் வழக்காறுகளையும் நோக்கி ஜீவாவின் கவனம் திரும்பும்போது, உழைக்கும் மக்களின் உலகநோக்கு, அறவியல், அழகியல், உளவியல், ஆடல் பாடல், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நீர் பராமரிப்பு, வீடு கட்டுதல், அணை கட்டுதல், படகு கட்டுதல், மண்ணின் சாமிகள், மருத்துவம் என ஏராளமான விடயங்கள் ஆய்வு அரங்கிற்கு வந்து சேரும் வாய்ப்பு ஏற்படுகிறது. நாட்டார் சமயம் மற்றும் இலக்கியங்களில் வலுவான விமர்சன மரபு உண்டு என்பதும் கவனத்திற்கு உரியது. எளிய மக்களின் கேலி, கிண்டல், பகடி ஆகியவற்றி லிருந்தே வெகுமக்கள் அரசியல் உருவாகிறது. நாட்டார் வழக்காற்றியல் என்பது கலை இலக்கியம் பண்பாடு குறித்த அடிப்படையான மாறுதல்களை, அறிவுப் புரட்சிகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட வட்டாரமாகும்.    

தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு நுட்பமான அசைவையும் ஜீவா பதிவு செய்கிறார். அந்த அசைவுகள் தமிழ்ச் சமூகத்தின் ஓய்வில்லாத (Dynamics) இயக்கத்தைக் குறித்து நிற்கின்றன. ஒவ்வொரு நெருக்கடியின் போதும் தமிழ்ச் சமூகம் அதன் வரலாற்றில் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டது? தன்னை எவ்வாறு தற்காத்துக் கொண்டது? அல்லது தன்னை எவ்வாறு புனரமைத்துக் கொண்டது? என்ற பரிமாணங்களை ஆய்வு செய்ய தோழர் ஜீவா தூண்டுகிறார். மரபும் புதுமையும் என்பது தோழர் ஜீவாவின் தத்துவார்த்தரீதியான சேர்க்கை, இணைவாக்கம். தமிழ்ச் சமூகம் மரபுகளில் முழுகி உறைந்து போய் விடவில்லை என்பதை ஜீவா மிக அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். அது என்றென்றும் பழமையிலிருந்து புதுமையாக்கத்தை நோக்கி நகரவேண்டும், நகருகிறது என்பதைத் தோழர் ஜீவா வலியுறுத்துகிறார். தோழர் ஜீவா அவர்களுக்குப் பாரதியார் நவீன யுகத்தில் மரபு களுக்கும் புதுமைக்கும் இடையில் பாலங்களைக் கட்டிய மிகப்பெரிய புரட்சிக் கவி. பாரதியில் மரபும் புதுமையும் சந்திப்பதை தோழர் ஜீவா மிக விரிவாக எழுதியுள்ளார்.

ஜீவாவின் இயங்கியல்

ஜீவா, தமிழ்ச் சூழல்களுடனும் 20 ஆம் நூற்றாண்டின் சமூகப் பண்பாட்டு இயக்கங்களுடனும் மிக உயிர்ப்பான விவாதங்களில், உரையாடல்களில் பங்கேற்றார். தமிழ்ச் சூழல்களில் உருவாகி எழுந்த ஓர் இயங்கியல் பரப்பு அது. தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கத்தின் மிக அற்புதமான, மிகச் செழுமையான சிந்தனைப் பரப்பு என்று அதனைச் சொல்ல வேண்டும். தமிழில் மார்க்சியம், பொது உடமைச் சிந்தனை ஆகியவற்றின் மிக விளைச்சலான ஒரு வட்டாரம் என்று இதனைச் சொல்ல முடியும். நமது சொந்தச் (Indigenous) சூழல்களிலிருந்து உருவான மார்க்சியச் சிந்தனை, பொது உடமைச் சிந்தனை என்று அதனைச் சொல்ல வேண்டும். 

இன்று: தமிழர் சிந்தனை வெகுதூரம் நகர்ந் திருக்கிறது. வெற்றுப் பெருமிதங்களாகத் தமிழர் மரபைச் சித்திரிக்கும் ஒரு காலக்கட்டத்தை அது இன்று கடந்து விட்டது. மாறாக, தமிழ் மக்களின் நிலம், நீர், கனிம வளங்கள், சுற்றுச் சூழல், இயற்கை ஆகியவற்றைக் கார்ப்பரேட்டுகளிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுவது? என்ற மிகப்பெரும் நெருக்கடியை தமிழ்ச் சிந்தனை சந்தித்து வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் இன்றைய கவலைகள் விவசாயிகள், கடற் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள் ஆகியோரின் வாழ்வை நோக்கியனவாக உருவாகி வருகின்றன. இது அடித்தள மக்கள் நோக்கிய நகர்வு. தமிழரின் போர்க்குணம் அதிகரித்து வருகிறது. இப்புதிய நகர்வுகளை அரசியல் படுத்து வதற்கு தோழர் ஜீவா குறித்து நாம் மீண்டும் பேசுவது அவசியமாகிறது.      

(இவ்வுரையின் முன்வரைவு 27. 11. 2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் தோழர் ஜீவா நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக வழங்கப்பட்டது.)

Pin It