‘தேசிய பத்திரிகையாளர் தினம்’ ஆண்டு தோறும் நவம்பர் 16-அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டு நடப்புகளை நடு நிலையோடு எடுத்துரைத்து உண்மை நிகழ்வுகளை உலகத்துக்கு உணர்த்தும் பத்திரிகையாளர்களைப் பாராட்டும் நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
‘உண்மையே வெல்லும்’ என்ற உணர்வோடு தம் உடல், பொருள், உயிரை அர்ப்பணிக்கும் பத்திரிகையாளர்களை வைத்தே பத்திரிகைகள் மதிக்கப்படுகின்றன. அதனால்தான் அது மக்களாட்சியின் நான்காவது தூணாக மதிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கிறது. பத்திரிகையாளர்கள் ஆளுவோரின் எடுபிடிகளாக இருக்க வேண்டும் என்றே ஆட்சியாளர்கள் நினைக் கின்றனர். அவ்வாறு இல்லாதபோது அவர்களின் உயிருக்கும் உறுதியில்லை.
சவூதி அரேபிய நாட்டுச் செய்தியாளரான ஜமால் கஷோகி சில சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய அளவுக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. அங்கிருந்து வெளியேறி இலண்டன் சென்றார். அமெரிக்காவில் வசித்து வந்த அவர் அங்கு வெளிவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
அவர் சவூதி அரச குடும்பத்துக்கு நெருக்கமாகவே இருந்தாலும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இதனால், அவர் அரச குடும்பத்துக்கு எதிர்ப்பாளராகக் கருதப்பட்டார்.
இந்த நிலையில், அவர் துருக்கி நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அவருக்கு அந்நாட்டுச் சட்டப்படி முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படியான விவாகரத்து பெற்றதற்கான ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக துருக்கியின் தூதரகத்துக்கு 2018 அக்டோபர் 2 அன்று சென்றார். அதற்குப் பிறகு அவர் திரும்பவேயில்லை.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளில் இந்த அநியாயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. என்றாலும் சவூதி மௌனம் காத்தது.
சவூதி அனுப்பிய ஆட்கள் தூதரகத்துக்குள் அவரைக் கொன்று விட்டதாகவும், கருப்பு நிறக் காரில் அவரது உடலை வெளியே எடுத்துப் போன தாகவும் துருக்கி கூறி வருகிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை சவூதி அரேபியா கடுமையாக மறுத்து வந்தது.
செய்தியாளர் ஜமால் கஷோகி சவூதி அரேபியத் தூதரகத்துக்குள்ளேயே கொல்லப்பட்டதை நிரூபிக்கும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் துருக்கி அதிகாரிகளிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட ஆடியோவில் சவூதியிலிருந்து வந்திருந்த ஆள்கள் கஷோகியிடம் விசாரணை நடத்தும் உரையாடல்களும், அவரை அடித்துத் துன்புறுத்தும் சத்தமும் இடம் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. கஷோகியை அந்த இடத்திலேயே படுகொலை செய்த சவூதி ஆள்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த ஆதாரங்களை உடனடியாக வெளியிட்டால் சவூதி அரேபியத் தூதரகத்தில் துருக்கி வேவு பார்த்து வந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் அவற்றை வெளியிடுவதற்குத் துருக்கி தயக்கம் காட்டி வருவதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இது தொடர்பாக நாங்கள் தீர விசாரிப்போம். சவூதி அரேபியா மீதான குற்றச்சாட்டு நிரூபண மானால் அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்” என்று எச்சரித்தார்.
ஆரம்பத்தில் சவூதி அரேபியா இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்து வந்தது. தொடர்ந்து உலகம் முழுவதும் நெருக்கடி அளிக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் 18 நாள்களுக்குப் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சவூதி அரசு 18 பேரைக் கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளது. அந்த 18 பேரையும் விசாரணைக்காகத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கஷோகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் சவூதி அரேபியாவில் தான் விசாரணை நடைபெறும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அடில் அல்-ஜூபேர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தச் சூழலில் இந்த விவகாரம் பற்றி சவூதி அரேபியா மற்றும் துருக்கி தலைமை வழக்கறிஞர்கள் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளனர்.
செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏவின் விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி சிஐஏ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சவூதி அரசின் 15 அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான விமானத்தைப் பயன்படுத்தி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகருக்குச் சென்றதாகவும், பிறகு துணைத் தூதரகத்துக்கு வந்திருந்த கஷோகியை அவர்கள் படுகொலை செய்ததாகவும் சிஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே இந்தப் படுகொலை சவூதி பட்டத்து இளவரசருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்று அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடர்பாக சவூதியில் நடைபெற்று வந்த வழக்கில் 11 பேரைக் குற்றவாளிகளாக அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த நவம்பர் 15 அன்று அறிவித்தது. அவர்களில் 5 பேருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படுகொலையில் பட்டத்து இளவரசருக்குத் தொடர்பு இல்லை என்றும், சவூதி புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் அகமது அல் அசிரியும், குழுவின் தலைவரும்தான் கஷோகியைக் கொலை செய்ய உத்தரவிட்டனர் என்றும் சவூதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கு நேர்மாறாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் விசாரணை முடிவுகள் தெரி விக்கின்றன. இந்தத் தகவல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியா தொடர்ந்து மறுத்து வந்த போதும் பத்திரிகை உலகம் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப் பட்ட நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓர் அரசாங்கமே திட்டமிட்டு இந்தப் படுகொலையை அரங்கேற்றி யுள்ளது. ‘எங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை!’ என்று ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிருக்குப் பயந்து நாட்டை விட்டே வெளி யேறிய ஒரு தனிமனிதனைத் தீர்த்துக் கட்டுவதற்கு ஓர் அரசாங்கம் திட்டமிடுகிறது. ‘எங்குச் சென்றாலும் விடமாட்டோம்’ என்று தொடர்ந்து சென்று துரத்துகிறது. நாடு கடந்து வேற்று நாட்டுக்குள் புகுந்து வேட்டையாடுகிறது. சர்வதேசமும் மதித்துப் போற்றும் சமாதானப் பாசறையான ஒரு தூதரகம் கொலைக்களமாக மாறியுள்ளது.
தூதரகத்துக்குள் வந்த செய்தியாளருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளார். பிறகு அவரது உடல் பாகங்கள் வெட்டப்பட்டன. அந்த உடல் துருக்கியைச் சேர்ந்த ஒருவர் மூலம் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு சவூதி அரேபிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படுகொலை விவகாரம் தொடர்பாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்குத் தடைவிதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வெளியுறவுத் துறையமைச்சர் ஹீக்கோமாஸ், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில் கூறியுள்ளார்.
இந்தப் படுகொலையில் தொடர்புடையவர்கள் எனச் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளை அந்நாடு கண்டறிந்துள்ளது. இன்னும் இந்த விவகாரத்தில் உண்மையைக் கொண்டு வருவதற்கு பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும் அது ஒருநாள் பூமியைப் பிளந்து கொண்டு வெளியே வரத்தான் செய்யும். அப்போது அதன் ஆற்றல் எல்லா எதிர்ப்புகளையும் தூள் தூளாக்கி விடும்” என்றார் அறிஞர் எமிலிஜோலா.
செய்தியாளர் ஜமால் கஷோகியின் படுகொலையும், விசாரணையும் அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் அவர் பின்னால் இருக்கும்வரை உண்மையை யாராலும் ஒளித்து வைக்க முடியாது.