‘‘சிலர் புகழோடு பிறக்கின்றனர், சிலர் புகழை அடைகின்றனர், சிலர் மீது புகழ் வந்து அழுத்துகிறது" (Some are born great, some achieve greatness, some have greatness thrust upon them) என்பார் ஷேக்ஸ்பியர். கடந்த வாரம், நக்கீரன் கோபால் மீது புகழ் வந்து அழுத்தியது.

கோபாலும் அவர் நண்பர்கள் சிலரும் பூனாவிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனர். கல்லூரி ஆசிரியர் நிர்மலாதேவி வழக்கில், ஆளுநர் குறித்து எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது பிறகு தெரியவந்தது.

nakkheeran gopalஅதற்காக அவர் மீது ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்திருந்தால், அது ஒரு சாதாரணச் செய்தியாக இருந்திருக்கும். ஆனால், 124 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைதும் செய்ததால், அன்று முழுவதும், அத்தனை ஊடகங்களிலும் அவரே தலைப்புச் செய்தியாக இருந்தார். அவருக்கு ஒரு பெரிய புகழை அரசே தேடிக் கொடுத்தது.

கைது நடவடிக்கையை மக்களோ, ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ, சமூக வலைத்தள நண்பர்களோ யாருமே ஆதரிக்கவில்லை. முதல் நாள் இரவு கொடுக்கப்பட்ட ஒரு புகார் அடிப்படையில், மறுநாளே அவர் கைது செய்யப்பட்டார் என்னும் காவல்துறையின் "சுறுசுறுப்பை" எல்லோரும் கண்டிக்கவே செய்தனர். மத்திய ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் என்றால், நீதிமன்றமே சொன்னாலும் கைது செய்யாமலிருப்பதும், மற்றவர்களை உடனடியாகக் கைது செய்வதும், தமிழக அரசின் அச்சத்தையும், அடிமைச் சிறுமதியையும் காட்டுகின்றது.

சட்டத்தின் 124 ஆவது பிரிவை (தேசத்துரோகம்) இப்படி அடிக்கடி பயன்படுத்துவதும், அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதும், அதனைக் கேலிக்கூத்தாக்கிவிடும் என்பதைத்தான் அன்றைய நிகழ்வுகள் உலகிற்குச் சொல்லின. பொதுவாக, அப்பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தால், கீழமை நீதிமன்றம் மட்டுமில்லை, அமர்வு நீதிமன்றம் கூட உடனடியாகப் பிணை (ஜாமீன்) வழங்கிவிடாது. உயர்நீதிமன்றம் சென்றுதான் பெறவேண்டியிருக்கும். அங்கும் எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் கோபால் வழக்கில், நடுவர் மன்றமே, அன்று மாலையே, சொந்தப் பொறுப்பில் பிணை கொடுத்துவிட்டது என்றால், வழக்கின் 'லட்சணம்' என்னவென்று புரிகிறது இல்லையா?

அரசுக்கு இன்னொரு கணக்கும் இருந்திருக்கக்கூடும். இந்தவாரம் முழுவதும் விழாக்களையொட்டி (Pooja Holidays) நீதிமன்றங்களுக்கு விடுமுறை. எனவே பல நாள்கள் கோபாலைச் சிறையில் வைத்துவிடலாம் என்று கருதி இருக்கலாம். எல்லாக் கணக்கும் பொய்த்துப் போனதோடு, அரசுக்கு ஓர் அவப்பெயரும் வந்து சேர்ந்தது.

நக்கீரன் வழக்கில் இன்னொரு நம்பிக்கையும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது. ஒருவருக்கு அநீதி நடக்கும்போது, மற்றவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே அந்த நம்பிக்கை. ஓர் ஊடகவியலாளரைக் கைது செய்தால், அத்துறை சார்ந்த நண்பர்களும், அரசியல் தலைவர்களும் அறிக்கை கொடுப்பதோடு நின்றுவிடுவார்கள் என்று அரசு கருதியிருக்கும். அந்த நினைப்பும் அன்று உடைந்துபோனது. எல்லோரும் களத்திற்கே வந்துவிட்டனர்.

அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். அரசியல் தலைவராகவும், வழக்கறிஞராகவும் காவல் நிலையத்திற்கே அவர் சென்று ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏதோ, பாகிஸ்தான் தீவிரதிவாதியை உள்ளே வைத்திருப்பது போல், கோபாலைக் காண அனுமதி மறுத்து, வைகோவையும் கைது செய்தனர். நிலைமை சூடு பிடித்தது.

கோபாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே திமுக தலைவர் ஸ்டாலினும், கட்சித் தலைவர்களும் சென்றனர். முதலில் உள்ளே விட முடியாது என்று சொல்லிப் பார்த்தனர். அது பயனளிக்கவில்லை. பிறகு உள்ளே போய் அவர் கோபாலைச் சந்தித்தார். நாடு முழுவதும் அது பேசப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் முத்தரசனும் அடுத்துச் சென்றனர். ஊடகவியல் நண்பர்களும் தங்கள் பங்கினைச் சரியாகச் செய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடெங்கும் செய்தியைப் பரப்பினர். நீதிமன்றத்திற்கே வந்து, மூத்த ஊடகவியலாளர் இந்து ராம், 124 விதி இதற்குப் பொருந்தாது என்பதனை எடுத்துச் சொல்லி வாதிட்டார்.

நக்கீரன் கோபால் இப்போது வெளியில் வந்துவிட்டார். அவமானச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றது அரசு!

இனியேனும் இந்த ஆளுநரும், அரசும் பாடம் கற்பார்களா?

Pin It