காஷ்மீர் மாநிலம் முற்றிலும் ஒரு இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் எந்தவித உலகத் தொடர்புகள் அற்றவர்களாகவே மாற்றப்பட்டு வருகின்றனர். காஷ்மீரில் இவ்வருடம் மட்டும் 51 முறை இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு தனி மனிதனின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்று இந்திய அரசுக்கு இண்டர்நெட் ஃப்ரிடம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

freedom of speech in kashmirகாஷ்மீரில் 370, 35ஏ சட்டத்திருத்தங்கள் நீக்கப்பட்ட பிறகு, ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்ளூர் செய்தியாளர்களுக்கான நெருக்கடிகள் அதிகம் என்றே கூறப்படுகிறது. மிகவும் நெருக்கடியான சூழல்களுக்கு ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். புகைப்படங்கள் கூட எடுப்பதற்கு அனுமதிப்பதில்லை. இதனால், காஷ்மீர் குறித்த செய்திகள் பெரிதாக வெளியுலககுக்குத் தெரிவதில்லை. ஜர்னலிஸ்டுகள் சுதந்திரமாகவும், காஷ்மீரிர் மக்களின் நியாயமான கருத்துக்களையும் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பிபிசி உருது செய்தியாளர் ஷபாத் ஃபாரூக் கூறுவதாவது, "காஷ்மீர் குறித்து இந்திய அரசு ஒரேயொரு செய்தியை மட்டுமே சொல்வதற்கு அனுமதி அளிக்கிறது. இராணுவம் செய்யக்கூடிய ஒன்று தான் சரி என்பது. காஷ்மீரில் நடக்கும் உண்மையான விஷயங்கள் குறித்து சொல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதைச் சொல்ல முற்படும் ஊடகங்களுக்கு முற்றிலுமாக அனுமதியும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது” என்பதாகும்.

மேலும், நாங்கள் காஷ்மீர் பகுதிகளில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களெல்லாம் இராணுவத்தால் அழிக்கப்பட்டு விடுகின்றன. தொடர்ச்சியான நெருக்கடிளை ஊடகவியலாளராக நாங்கள் சந்திக்கிறோம் என்கிறார். ஊடகவியலாளர்களுக்கான நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணம் காஷ்மீரில் உள்ள காவல்துறையா? இராணுவமா? அல்லது இந்திய அரசா? என்று தெரியவில்லை என்றும் வேதனைப்படுகிறார்.

காஷ்மீர் மானிடர் என்ற பத்திரிகையின் செய்தியாளர் முஹம்மது தாவூத் கூறும்போது, "காஷ்மீர் குறித்து ஆன்லைன் ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்ட செய்திகளைப் பரப்பி வருகின்றன. அதாவது, காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஈத் கொண்டாட்டங்கள் கூட நன்றாக நடந்தன. ஆனால், கொஞ்சம் போக்குவரத்து நெரிசல்கள் மட்டும் உள்ளன என்றெல்லாம் செய்திகள் தரப்படுகின்றன. இதுவெல்லாம், காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் முற்றிலும் மாற்றமானது என்பது மட்டும் உண்மை" என்கிறார்.

மேலும், "நாங்கள் சுதந்திரமாக எந்த செய்தியையும் சேகரித்து விட முடியாது. ஒருவேளை நாங்கள் ரகசியமாக எதையாவது படம் பிடித்திருந்தால், அதை இராணுவம் எப்படியாவது வலுக்கட்டாயமாக நீக்கிவிடும். இங்கு தப்பித்து சென்றுவிட்டால் கூட, விமான நிலையத்தில் வைத்து செக் செய்து அழித்து விடுவார்கள்.

குறிப்பாக, உள்ளூர் செய்தித்தாள்கள் மூடப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாகி விட்டன. ஏனென்றால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தான் காரணம். அரசுக்கு சாதகமான ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், உள்ளூர் ஊடகங்களுக்கு சுதந்திரமான அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்" என்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைதி திரும்புகிறது என்று தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால், அது உண்மையில்லை என்று ஃப்ரிலேன்சர் பத்திரிகையாளரான ஷனா இர்ஷாத் மாது கூறுகிறார். அதேபோன்று, இயல்பு நிலை திரும்பியிருந்தால், இணைப்புகள் மீட்கப்பட்டிருக்குமே? ஏன் இன்னும் இணைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமையை மறைக்க ஊடகவியலாளர்களை காவல்துறை அனுமதிக்கவில்லை என்று முசம்மில் என்ற பத்திரிகையாளர் கூறுகிறார்.

மேலும், "டெல்லியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் உள்ளூர் ஊடகவியலாளர்கள், மறுபுறம் வெளியூர் ஊடகங்களுக்காக பணியாற்றுபவர்களும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களின் வாழ்க்கை அச்சத்திலேயே நகர்கிறது.

உள்ளூர் பத்திரிகையாளர் அவர்கள் மாநிலத்தில் வசிப்பதால், ஒரு செய்தியை வெளிக்கொண்டு வருவதற்கு முன்பு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால், இங்குள்ள என்ஐஏ மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்" என்கிறார்.

இதுதான், காஷ்மீரில் உள்ளூர் ஊடகங்களுக்கு உள்ள சுதந்திரம். அவர்கள் தரும் தகவல்கள் வெளிவராத வரை, காஷ்மீரின் கதை இருட்டில் உள்ளது. ஆனால், அவர்கள் காத்திருக்கிறார்கள். மீண்டும் இணைய சேவைகளுக்காக. அப்போது காஷ்மீரில் உள்ளூர் ஊடகச் சுதந்திரம் உயிர்ப் பெறும் என்ற நம்பிக்கையில்...

- நெல்லை சலீம்

Pin It