தோற்றம் வரலாறு ஓர் ஒப்பீட்டு ஆய்வு

images 450ஒவ்வொரு சாதியச் சமூகமும் தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொள்ளவும், தன் சாதியப் பெருமைகளை தக்க வைத்துக் கொள்ளவும்  காலந்தோறும் புராணங்கள், இதிகாசங்கள் மூலம் தன் சமூகத்தை கட்டமைத்துக் கொள்கிறது. இந்த முறையானது ஒரே சாதி என்று இல்லாமல் எல்லா சமூகத்திற்கும் பொருந்தி வருவதை நம்மால் காணமுடிகிறது. அதாவது உயர் சமூகமான பிராமணர்கள் முதல் அடித்தட்டு சமூகமான சூத்திரர் சமூகம் வரை ஏதோ ஒரு புராணத்தின் வழி தன்னைத் தக்க வைத்துக் கொள்வதோடு அதை காலந்தோறும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கிறது.

இந்தப் புராணங்கள் அனைத்தும் கடவுள் சார்ந்தோ அல்லது மூதாதையர்கள் சார்ந்தோ அமையும். இதை காலந்தோறும் நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு சாதியும் தன் சாதியைச் சேர்ந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் அந்த சாதியின் புராணம் மற்றும் இதிகாசங்களை தொடர்ந்து வாய் மொழி மூலமாக அந்த சமுகத்தைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டு வருவார்கள்.

இதன் முக்கிய நோக்கம் என்னவெனில் அவர்களின் சாதியையும், சாதிப் பெருமையும் அழியாமல் கண்ணும் கருத்துமாய் கட்டிக் காத்து வந்தனர். இக்குடும்பத்தின் வேலை என்னவெனில் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட மாதம் தோறும் அந்த சாதியின் புகழைப் போற்றிப் பாடுதல் இதன் நோக்கம். அந்த வீட்டினர் அவர்களுக்கு முன்பு காலத்தில் நெல் வகைகள், தானியம் கொடுத்தனர். காலப்போக்கில் இன்று பணம், அல்லது வேறு பொருட்கள் வாங்கிக் கொள்கின்றனர். முக்கியமாகக் குடிப் பிள்ளைகள் நாடோடியின மக்களாக வாழும் கலைமரபினர் இவர்கள் தெலுங்கில் ‘சாதிக்கீர்த்தலு’ என்றும் தமிழில் ‘சாதிப் பிள்ளை’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சார்ந்த சாதியும், சாதிப்பிள்ளைகள் பற்றிய விவரங்கள் பற்றி மானிடவியலார் பக்தவத்சலபாரதி வழி காணலாம். இனி ஒவ்வொரு சாதிக்கான குடிப்பிள்ளை என்பதைக் காண்போம்.

சாதி -      சாதிப்பிள்ளை

1.            கொங்கு வேளாளர்    -     வேளாளர் முடவாண்டி

2.            வன்னியர்  -     நோக்கர்

3.            கோமட்டி  -     மைலாரி

4.            பேரிச்செட்டி     -     வீரமுஷ்டி

5.            கைக்கோளர்     -     நட்டுக்கட்டாத நாயன்மார் (பொன்னம்பலத்தார்)

6.            பத்மசாலே -     இசைருக்கு பட்ராசு

7.            பிராமணர் -     பீதாம்பர் ஐயர்

8.            ரெட்டி     -     பட்ராசு

9.            முதலியார் -     சுக்கிலவன்

10.          யாதவர்    -     இடக்கூத்தாடி

11.          சக்கிலி    -     பொம்மநாயுடு

12.          பறையர்   -     பறைத்தொம்பன்

13.          மாதிகர்    -     மாதிகமாஸ்தி (ஜங்கம்)

14.          மாலா     -     மாலமங்கி

15.          இசுலாமியர்     -     பக்கீர்

குறிப்பாக, இங்கு இரண்டு சாதிப்பிள்ளைகளின் தோற்றத் தொன்மங்களை ஒப்பீட்டு ஆய்வு செய்யப் படுகிறது. ஒன்று ‘அருந்ததியர் சாதிப்பிள்ளை’ மற்றொன்று ‘வன்னியர் சாதிப்பிள்ளை’ இவர்களுடைய தோற்றத் தொன்மத்தை ஆய்வு செய்யும் போது இவருடைய தோற்றம் ஒரு சில பெயர் மாற்றங்களோடு மட்டுமே காணப்படுகிறது. மற்றபடி இவ்விரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதை காணமுடிகிறது.

அருந்ததியர் சாதிகளின் சாதிப்பிள்ளை

தோற்றத் தொன்மம்

‘கத்தளவார்’ என்று  அழைக்கப்படும் ஒரு சாதியே அருந்ததியர்களின் சாதிப்பிள்ளை. இவர்கள் குடும்பமாக அருந்ததியர் வாழும் தெருவுக்கு வந்து அங்குள்ள சத்திரத்திலோ அல்லது மரத்தடியிலோ தங்குகின்றனர். உணவு வேளையில் அருந்ததியர் வீடுகளுக்குச் சென்று உரிமையுடனும், அதிகாரத்துடனும் உணவு கேட்கின்றனர். உணவு இல்லை என்று எந்த அருந்ததியக் குடும்பத் தினரும் சொல்வதில்லை. உணவு கொடுக்கின்றனர். ‘சமைக்கிறோம் சிறிது நேரம் கழித்து வா’ என்று சொன்னால் கூட, ‘சமைக்க ஏன் இவ்வளவு நேரம். நீ வெளியே போ. நான் சமைக்கிறேன்’ என்று அதிகாரத் தோரணையில் கூறுகின்றனர்.

இவர்களின் வாகனம் எருமை மாடு. இதன் மீதே வருவார்கள். ஒரு சில வாரங்கள் அந்தக் கிராமத்தில் தங்கி வித்தை காட்டுவர். பின் அடுத்த ஊருக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்வதற்கு முன்பாக அவ்வூர் நாட்டாண்மை ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திற்கு இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, அதை வசூலித்துக் கத்தளவார்களிடம் கொடுக்க, அவர்கள் அத் தொகையைப் பெற்றுக் கொண்டு அடுத்த அருந்ததியர் கிராமத்திற்குச் செல்கின்றனர்.

கத்தளவார் சாதிப்பிள்ளை தோற்றத் தொன்ம கதைகள்

ஒரு முறை திருமலைநாயக்கர் மதுரையில் ரதத்தில் சென்ற போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீதியின் நடுவில் ரதம் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும்

ரதம் ஓடவில்லை. எனவே சோதிடர்களை அழைத்து ரதம் ஓடாததற்குக் காரணம் கேட்டார். அப்போது சோதிடர்கள் அரசரிடம் அந்த இடத்தில் ஒரு முனி இருப்பதாகவும், அந்த முனிதான் தேர் ஓடுவதைத் தடுப்பதாகவும், அந்த முனியை விரட்ட வேண்டும் என்றால் தலைக்கர்ப்பம் அதுவும் நிறைமாதக் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை நரபலியிட வேண்டும் என்றும், அப்படிப் பலியிட்டால் தேர் ஓடும் என்றும் கூறினார்கள்.

உடனே திருமலை நாயக்கர், தலைக்கர்ப்பமாக இருக்கும் அருந்ததியப் பெண்ணைப் பிடித்து வந்து நரபலி கொடுக்கும்படி காவலர்களுக்குக் கட்டளை யிட்டார். இந்த உத்தரவைக் கேட்ட அருந்ததியர்கள் பயந்து நகரத்தை விட்டே ஓடிவிட்டனர். ஒட முடியாத சிலர் பயத்தில் ஒளிந்து கொண்டனர். காவலர்கள் நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்ணைப் பிடிக்க முடியாமல் திகைத்தனர். அப்போது ஒரு கூத்தாடி தனது நிறைமாதக் கர்ப்பிணி மகளுடன் வந்தார். அவளைத் தேருக்கு முன்பாகப் பலியிட்டு, அவள் ரத்தத்தைத் தேரைச் சுற்றித் தெளித்தார் உடனே தேர் ஓடியது.

மகிழ்ந்த திருமலை நாயக்கர், அந்தக் கூத்தாடியைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் தலைமுறை தலைமுறையாய் அருந்ததியர்கள் தங்களுக்கு உணவுக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதோடு பணமும் கொடுக்க வேண்டும். அப்படியே யாராவது கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்குக் காராமணிப் பசுவின் கழுத்தை அறுத்த பாவமும், தலைப்பிள்ளை சூலியைக் கொன்ற பாவமும் சேரும் என்றார். கூத்தாடியின் விருப்பப்படியே திருமலை நாயக்கர் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டார். எனவே தான் அவர்கள் பரம்பரை பரம்பரையாய் அருந்ததியர் களிடம் வந்து உரிமையுடன் உணவும், பணமும் கேட்டுப் பெறுகின்றனர். இந்தக் கூத்தாடிகள் தான் கத்தளவார்கள்.

ஒரு காலத்தில் கத்தாளவார்கள் பிணம் எரிப்பது, புதைப்பது, செத்த மாட்டைத் தூக்குவது, களம் புடைப்பது போன்ற காணி வேலைகளைச் செய்தனர். இந்தக் காணி உரிமையை அருந்ததியர்கள் கத்தளவார் களிடமிருந்து பெற்றனர். தங்களது காணி உரிமையை விட்டுக் கொடுத்ததற்குப் பிரதிபலனாகக் கத்தளவார்கள் உணவும், பணமும் அருந்ததியர்களிடமிருந்து பெறு கின்றனர் என்ற கதையும் உண்டு.

முற்காலத்தில் அருந்ததியருக்கு மகனாகக் கத்தளவார் பிறந்தார். சிறிது காலம் மகனை வளர்த்து விட்டு, அவனை அனாதையாக அருந்ததியர் தெருவில் விட்டுவிட்டார். எனவே, மகனுக்கு உரிய உரிமையைப் பெறுவதற்காகக் கத்தளவார்கள் வந்து அருந்ததியர் களிடம் உணவும், பணமும் உரிமையுடன் கேட்டுப் பெறுகின்றனர். கொடுக்காவிட்டால் வீட்டில் நுழைந்து தேவைப்படுவதை எடுத்துச் செல்கின்றனர். மேலும் இவர்கள் மகன் என்ற பட்டயத்தைக் கத்தளவார்கள் வைத்திருப்பதாக அருந்ததியர்கள் நம்புகின்றனர்.

கத்தளவார்கள் பற்றி வெவ்வேறு கதைகள் இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை முறை ஒன்று போல இருக்கிறது. கத்தளவார்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட பகுதியைப் பிரித்துக் கொள்கின்றனர். அந்தப் பகுதிக்கு என்று குறிக்கப்பட்டவர்கள் வருடம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று காணி வசூலிக்கின்றனர். இடம் மாறிச் சென்று வசூலிக்கக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்திருந்தனர்.

இவர்கள் அருந்ததியக் குடும்பங்களில் மட்டுமே உண்கின்றனர். பறையர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் போன்ற மற்ற சாதியினரிடம் செல்வதில்லை, உணவும் உட்கொள்வதில்லை. இவர்கள் காலில் செருப்பு அணி வதில்லை. பாயில் அமர்வதோ, படுப்பதோ இல்லை. துணியைத் தான் பயன்படுத்துகின்றனர். அருந்ததியர்கள் வாழும் தெருவில் உள்ள சத்திரம், சாவடி, மரத்தடி போன்ற இடங்களில் தங்குகின்றனர். காணி வாங்க வரும் சமயத்தில் ஏதாவது வேலை செய்யச் சொன்னால் செய்கின்றனர். இவர்களின் தொழில் வித்தை காட்டுவது, அதற்கான பணத்தை அருந்ததியர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அடுத்து சுருக்குப்பையை தைத்து விற்கின்றனர். அருந்ததியர்கள் சம்சாரிகளை ‘சாமி’ என்று அழைக்கின்றனர். அதே போலக் கத்தளவாளர்கள் அருந்ததியர்களைச் ‘சாமி’ என்று அழைக்கின்றனர். இவர்கள் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள்.

கத்தளவார்களது இனம் பற்றியும், இவர்களுக்கு அருந்ததியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் மூன்று செப்புப் பட்டயங்களில் பொறிக்கப் பட்டிருப்ப தாகவும், அந்தப் பட்டயங்களில் ஈரோடு பக்கத்தில் உள்ள கவுந்தம்பாடி என்ற ஊரில் வித்தைக்காரன் மகாலிங்கம் வீட்டில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அருந்ததியர்களைப் போன்று தாசரி - ஜான என்ற கிளைகள் இவர்களுக்கு உண்டு. குலத் தெய்வம் சக்கம்மாள், மதுரை வீரன். கத்தளவார்கள் எங்கெங்கு இருந்தாலும் மாசிப்படைப்பிற்கு கவுந்தம்பாடிக்கு வந்து சக்கம்மாளை வழிபடுவர். இந்நிகழ்வில் தான் பெண் பார்ப்பது, நிச்சயம் செய்வது, திருமணம் நடத்துவது போன்ற சமூகச் செயல்களையும் செய்கின்றனர். மதுரை வீரன் நினைவாக மதுரை வீரன் பந்தயம் கட்டி வீர விளையாட்டு விளையாடுகின்றனர்.

வன்னியர் சாதிக் குடிப்பிள்ளை தோற்றமும் வரலாறும்

வன்னியர்களின் சாதிய உயர்வினைச் சொல்லிக் கொண்டும் அவர்களின் வாழ்வியல் சடங்குகளில் பங்கெடுத்துக் கொண்டும் வாழும் நாடோடிகளே வன்னியச் சாதிப்பிள்ளைகள். இவர்கள் ஆண்டு தோறும் வன்னியர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று தங்கள் பிழைப்பிற்குத் தேவையான நெல், தானியங்கள், பணம், பிற பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என எழுதி வைக்கப்பட்ட செப்புப் பட்டயத்தின்படி வன்னியர் வீடுகளுக்கு சென்று வரும்படி பெற்று வாழ்கின்றனர். ‘வன்னிய ஆடவனுக்கும் தெலுங்குச் சாதிப் பெண்ணுக்கும் பிறந்த இவர்களை, வன்னியர்கள் முதலில் சாதி விலக்குச் செய்து சொத்துரிமைகளை மறுத்து, அதன் பின்னர் தேர்த் திருவிழாவின் போது வன்னியரின் மானத்தைக் காப்பாற்றியதால் தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு ‘சாதிப்பிள்ளை’ என அழைத்து வருகின்றனர்.

வன்னியர்களுக்கான சாதிப்பிள்ளைகள் ‘நோக்கர்கள், சாதிப்பிள்ளைகள்’ என அழைக்கப்படுகிறார்கள். கடலூர் வட்டாரப் பகுதியில் வாழும் இவர்கள் திருமணம் போன்ற சடங்குகளின் அழைப்பிதழ்களில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘சாதிப்பிள்ளை’ எனும் பெயரைச் சுருக்கி பிள்ளை என அச்சிட்டிருக்கிறார்கள். வன்னியர்கள் இவர்களைச் சாதிப்பிள்ளை, நோக்கர், குடிப்பிள்ளை, முன்னோடும் பிள்ளை, ஒண்டிப்பிலி (ஒண்டி புலி) என அழைக்கின்றனர். கடலூர், சேலம், தருமபுரி, தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் இவர்கள் சாதிப்பிள்ளை என்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னைப் பகுதிகளில் ‘நோக்கர்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வன்னியச் சாதிப்பிள்ளைகளை பற்றி நான் களப் பணியின் மூலம் சேகரித்த செய்திகள் இன்னும் சில: இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கென்று தனித்தனியே சில கிராமங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன் முலம் வருவாயை ஈட்டிக் கொள்கின்றனர். உதாரணமாக திண்டிவனம் அடுத்த பகுதியில் உள்ள ஏதாநெமிலி எனும் ஊரில் சந்தித்த வன்னியக் குடிப்பிள்ளை கூறிய செய்தி பின்வருமாறு: எங்கள் வீட்டிற்கு என்று 36 ஊர்கள் பிரித்து கொடுத்துள்ளனர். எங்கள் முன்னோர் கூறியபடி, நாங்கள் அறுவடைக் காலங்களில் சாதிப் பிள்ளை வேடம் அணிந்து குதிரையின் மீது பயணம் செய்து எங்களுக்கு பிரித்துக் கொடுத்த பகுதியில் வருடத்திற்கு ஒரு முறை சென்று தானியம், அல்லது பணம் வாங்கி கொண்டும் வித்தை காட்டுவதும் எங்கள் பழக்கம்.  முக்கியமாக வன்னிய சாதியின் புராண இதிகாசங்களை புகழ்ந்து பாடுவது வழக்கம். மேலும் இவர்கள் வன்னியர் வீட்டில் திருமணம் மற்றும் சாவு நிகழ்வுகளில் கூத்தாடிச் செல்வது இவர்களின் முக்கிய தொழிலாகும். கீழே கொடுக்கப்பட்ட கதைகளில் சில மாற்றங்களோடு அப்படியே கூறினார்கள். இவர்கள் இறந்த பின்பு இவர்களின் மகன்கள் தொடர்ந்து இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருவார்கள். மற்ற காலங் களில் துணைத் தொழிலான பித்தளை பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவதை தொழிலாகச் செய்து வருவார்கள். இவர்கள் கூறுகையில் நாங்கள் இல்லையெனில் இன்று வன்னியர் என்ற சாதி கிடையாது. எங்கள் மூதாதையர் களால் தான் வன்னியர் குலம் தழைத்தது என்கின்றனர். அவர்களுக்கும் வன்னியர்களும் திருமண உறவை பற்றி கேட்கையில் சாதிப்பிள்ளையாகிய நாங்கள் ‘இந்த சாதிக்கு உரிய பிள்ளை’ ஆகையால் பங்காளி உறவை கொண்டவர்கள் வன்னியர்கள். பெண் எடுத்து கொடுக்கும் பழக்கம் இல்லை என்றனர் (சுந்தரம்: வயது: 61).

வன்னியர்களின் தோற்றத் தொன்மக் கதை வாய் மொழி வழக்காறு இரத்தின புகழேந்தி எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து எழுதிய விஷ்ணு தாசர் எழுத்தில் இருந்து மீண்டும் அப்படியே இங்கு கையாளப் பட்டுள்ளது. வன்னிய சாதிப்பிள்ளைகளின் தோற்றத் தொன்மம் சில மாற்றங்களுடன் காணப்பட்டாலும் பொதுத் தன்மையில் ஒன்றிணைவதாகும். இவர்களின் வரலாறு பற்றி அறியப்படும் கருத்துகள் வருமாறு:

வாதாபி எனும் அசுரன் தேவர்களைச் சிறைபிடித்து துன்புறுத்தியதால் அவனை அழிப்பதற்கு சிவன் ஒரு மகனை உற்பத்தி செய்வதற்காக சம்பு முனிவரை அழைத்து வேள்வியைச் செய்தார். வேள்வியின் வெப்பத்தால் சிவனுக்கு வியர்வை தோன்றியது. அந்த வியர்வையைக் கையால் அள்ளி வேள்வியில் முனிவர் போட்டார். அதிலிருந்து வீரவன்னியன் குதிரையோடு உதித்தான். அவனுக்கும் இந்திரனின் மகள் மந்திர மாலைக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. அவர் களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் தான் அக்னி வன்னியன், கிருஷ்ண வன்னியன், பிரம்ம வன்னியன், சம்பு வன்னியன்.

மேற்குறிப்பிட்ட நான்கு வன்னியர்களில் அக்னி வன்னியன் தெலுங்கு பேசும் நாயக்கப் பெண்ணைச் சேர்த்துக் கொண்டான். சேர்ந்த வயிற்றுப் பிள்ளைகள் (வைப்பாட்டி மக்கள்) என்பதால் இவர்களுக்குச் சொத்தில் பங்கு தரவில்லை. சொத்தில் பங்கு கிடைக்காத இவன் கொச்சி மலையாளம் போய் மாந்திரிகம் கற்றுக்கொண்டு ஊமை ராஜாவிடம் மந்திரியாக இருந்தான். அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கினான். அதன்பின் அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

இத்தருணத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு வன்னியர், முதலியார், ஆரிய வைசியர், தேவேந்திரப் பள்ளர் எல்லோரும் சேர்ந்து தேரோட்டம் நடத்தினர். இதில் வன்னியர்கள் தேரோட்டம் நடத்தும் பொழுது அவர்களின் எல்லையான 18 வீதியைத் தாண்டி தேர் சேணியர் வாழும் வீதிக்குச் சென்ற பொழுது சேணியன் சிம்மபுலி அனுமந்தன் தனது மந்திர சக்தியால் தேரை நிறுத்திவிடுகிறான். வன்னியர்கள் எல்லோரும் சேர்ந்து தேரை இழுத்துப் பார்க்க தேர் நகரவே இல்லை. யானைகளைக் கட்டித் தேரை இழுத்தனர். என்ன செய்தும் தேர் நகரவே இல்லை. சேணியர்கள் தேர் தங்கள் தெருவில் நின்று விட்டதால் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறதென்று முறையிட்டனர். அப்போது ஒரு சின்ன பெண்ணுக்குச் சாமி வந்து, ‘ஒங்க இனத்துல ஒருத்தன் கொச்சி மலையாள தேசத்துல இருக்கான்: அவன் மந்திர, தந்திரமெல்லாம் கத்துருக்கான்: அவன அழச்சிக்கிட்டு வந்தீங்கன்னா, அவனாலதான் இந்த தேர ஓட்ட முடியும்”ன்னு சொல்ல, கொச்சி மலையாளம் போயி ஊமராஜாவின் மந்திரியான ஒண்டுபுலி அனுமந்தனை அழைத்து வருகின்றனர்.

அவன் புலியின் வாயைக் கட்டி, அதன் மேல் தன் நிறை மாதமாக இருக்கும் தன் மனைவியை ஏற்றிக் கொண்டு வருகிறான். வந்து பார்த்தால் தேர்ச் சக்கரங்கள் பூதங்களால் கட்டு போட்டிருப்பதை அறிந்தான். இவன் எல்லா வகையாக மந்திரங்களையும் செய்து பார்த்தான். ஒன்றும் முடியவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் படுத்துத் தூங்கி விட்டான். அப்போது காமாட்சியம்மன் கனவில் வந்து பூதங்களை ஓட்ட வேண்டுமானால் நிறைமாத கர்ப்பிணியை (தலைச்சன் பிள்ளைக்காரி) பலியிட்டால் தான் தேரை நகர்த்த முடியும் என்று கூற, இதனை யார் ஒத்துக் கொள்வார்கள் என்று யோசித்தான். பிறகு, தன் மனைவியையே பலி கொடுக்கிறேன் என்று முடிவு செய்து தன் மனைவியிடம் கேட்கிறான். அவளும் ஒத்துக்கொண்டு ஒரு நிபந்தனையைக் கூறுகிறாள். ‘நிறைமாத கர்ப்பிணையைப் பலி கொடுக்க நான் சம்மத்திக்கிறேன். ஆனால் பலி கொடுத்தபின் என்னை நடுவீட்டுத் தெய்வமாக (காமாட்சியம்மனாக) விளக்கேற்றி வைத்து வணங்க வேண்டும் என்று கேட்டாள். எல்லோரும் சரி என்று ஒத்துக் கொண்டனர். வன்னியர்களுக்குக் காமாட்சி அம்மன் விளக்கைக் கொடுத்ததே நாங்கள் தான். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கிறது. பெண்களுக்குக் காமாட்சியம்மன் விளக்கு சீர் வரிசையாகக் கட்டாயம் கொடுப்பார்கள் என்கின்றனர் சாதிப்பிள்ளைகள்.

அதன் பின் அவளைக் காவு (பலி) கொடுத்தான். பலி கொடுத்தவுடன் பூதங்கள் எல்லாம் விலகி ஒடி விட்டன. அந்தத் தேரை அவன் ஒருவனே இழுத்து வந்து சேர்த்தான். வன்னியர்கள் எல்லோருமாக எங்கள் மானத்தைக் காப்பாற்றிய உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள் நாங்கள் தருகிறோம் என்று கூறினார்கள். எனக்கு எதுவும் வேண்டாம். என்னை உங்கள் சாதியில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறினான். அன்றிலிருந்து வன்னியர்கள் இவன் நமது ‘சாதிப்பிள்ளை’ என ஏற்றுக்கொண்டு, வன்னியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று வரும்படி (வசூல்) வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். சாதிப்பிள்ளைகள் வரும்படி அரிசி, 1/4 வராகன் பணம், வேட்டி, துண்டு எல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதன்படியே பட்டயமும் எழுதிக் கொடுத்தார்கள். அன்றிலிருந்து அவர்கள் கொடுத்த 32 விருதுகளுடன் அவர்களுடைய 18 பட்டங்களையும் சேவித்து வருவதாகக் கூறுகிறார்கள்.

முதலில் இரண்டு கதைகளுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் தேர் ஓடாமல் இருப்பது தான். இரண்டாவது ஒற்றுமையை பார்த்தால் கர்ப்பிணி பெண்ணை பலி கொடுத்தல் பிறகு இரத்தத்தை தேர் மீது தெளித்து தேர் நகர்ந்து செல்லுதல், பலி கொடுத்த பின் தன் சாதியோடு மீண்டும் இணைதல், தன் சாதியச் சமுகத்தோடு ஒன்றிணைந்து ஆண்டுதோறும் அந்தந்த சாதியின் புகழைப்பாடி வித்தை காட்டுதல், அவர்களிடமிருந்து மட்டுமே தானியம், உணவை பெற்றுக் கொள்ளுதல் மற்ற சாதியிடமிருந்து நீர், உணவைத் தவிர்த்தல், அவர்களின் உரிமை மற்றும் கடமைகளை பட்டயம் மூலம் எழுதி வாங்குதல் இன்னும் பல ஒற்றுமை இருப்பதை காணமுடிகிறது.

இவற்றை பார்க்கும்பொழுது ஒரு சாதியச் சமூகம் மற்ற சமூகத்தை பார்த்து கற்றுக் கொள்ளல் (போலச் செய்தல்) என்ற நிகழ்வை தெளிவாக்குகிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது கதைகளில் சாதியக் கலப்பு நிகழ்ந்ததால் சாதியக் கலப்பு நிகழ்ந்தவர்களை சாதியை விட்டு வெளியே அனுப்பியும் பிறகு தன் சாதியில் மீண்டும் சேர்த்துக் கொண்டும் அவர்களின் வாயிலாகவே சாதியின் இதிகாசங்களையும் புராணக் கதைகளும் பரப்ப சொல்லுகின்றன. மேலும் தங்கள் சாதியை வலிமையாக்கிக் கொள்ளவும் இவர்களை காலந் தோறும் அந்தந்த சாதி மக்களிடம் மனதில் பதிய வைத்துக் கொள்ள புராணம், இதிகாசங்களை மீண்டும் நிகழ்த்திக் காட்டுகின்றன. இதில் சாதியத் தன்மையை மேலும் மேலும் வலிமை அடையும் நிகழ்ச்சியாக பார்க்க முடிகிறது.

இது ஒருபுறம் சாதியக் கலப்பு செய்தவர்களை தண்டிக்கவும், மறுபுறம் அவர்களால் மீண்டும் தங்கள் சாதிய பெருமையை நிலைநாட்டிக் கொள்ளவும் ஏற்பட்ட நிகழ்வு தான் சாதிப்பிள்ளைகளின் வரலாறாக பார்க்க முடிகிறது. குறிப்பாக கீழ்நிலையில் இருக்கும் சாதிப்பிள்ளைகள் கூட மற்ற உயர் சாதிகளிடமிருந்து தண்ணீர், உணவை வாங்குவது தடை செய்ய பட்டிருக்கிறது. இது சாதிய தூய்மையை தக்க வைத்துக் கொள்ள விழைகிறது. மீண்டும் சாதியக் கலப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறது. இது சாதியத்தை கூர்மையாக்குகிறது என்பது மிகவும் தெளிவாகிறது. சாதிக் கலப்பு செய்தால் நிகழும் தண்டணையாக வெளிப்படையாக உணர்த்துகிறது. இது சாதியில் இருப்பவர்களுக்கு தங்களும் குற்றம் செய்தால் இதே தண்டனை என்பதை வெளிப்படையாக மற்றவர் களுக்கு உதாரணமாக காட்டப்படுகிறது. தற்காலத்தில் சாதிப்பிள்ளைகள் சிலர் தங்கள் குலத் தொழிலை கைவிட்டு காலப்போக்கில் வேறு பல தொழில்களில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறது.

Pin It