சங்க காலத்தில் பூதப்பொருள்கள் தரும் அறிவை அறிவதற்குக் கண்ணின் காட்சி அறிவும், கேள்வி அறிவும் முன்னிலை வகித்தன. தமிழகச் சிந்தனை வரலாற்றில் படைப்புக் கடவுள் தோற்றம் பெற்றது. அனைத்தும் அதனிடம் இருந்து வந்து, இறுதியில் அதனிடமே போய் அணையும் (கலி: 119, 129) என்ற சிந்தனை வலுப்பெற்றது. இதனால், அனுமானம் வலுக் கண்டது. கண்ணால் நேரடியாகக் காணாமல், சிந்தனையிலேயே முடிவு செய்து கொள்வது ஓர் அளவையாக வகுக்கப்பட்டது. கண்ணால் காணாமலே எப்படி முடிவுசெய்ய இயலும் என்னும் கருத்தியல் கொண்ட பெருமக்கள் கோப்பெருஞ் சோழனுக்கு உடனாக வடக்கிருந்தனர் (புறம்: 216). அந்தப் பெருமக்களது கருத்தியலானது உலகாயதம். அன்று நூல்கள் எழுதப்பட்டு விளங்கின. உலகநூல் என நாலடியார் சுட்டியது (140).

உருவம் இல்லாத கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது. உருவம் உள்ள கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது. வினையின் நீங்கியோர், உலகத்து உச்சியில் இன்பம் காண்பர். பூதப் பொருள்களால் ஆனது இந்த உலகம் என்ற கருத்தியல்களைச் சாத்தனாரது மணிமேகலை காவியம் உரைத்தது (21:92-102). மேலும், சாத்தனார் காணப்படும் தோற்றத்தில் பஞ்சவித கற்பனைகள் இருப்பதாலேயே அது பொருள் ஆகின்றது. அவை தேசம், பெயர், சாதி, குணம், தொழில் என்பன எனவும் தமது கருத்தியலைக் கூட்டிக் கொண்டார் (27:23, 29: 49-51).

moon 600இவை ஐந்தும் கி.மு. 600 முதல் கி.பி. 450 வரையான தமிழகச் சிந்தனையின் குவிமையம். அடுத்து வந்த பக்திக் காலத்தின் விரிமையம். அப்போது உருவம் அற்ற கடவுளானது யூதர், கிரேக்கர், அரபுக்கள் அடங்கிய யவனரால் போற்றப்பட்டது. அலெச்சாண்டிரியா நகரத்து பிலோ, கிரேக்கத்துப் பிளாட்டினஸ் உருவம் இல்லாத கடவுளை உணர்ந்த ஞானிகள் வாழ்ந்த காலம் அது. உலகப் பொருள்கள், உயிர்கள் அந்தக் கடவுளிடம் இருந்து வந்து மீண்டும் அதனையே அடைகின்றன என்று உரைத்தனர்  (Philo of Alexandria.(Philo of Alexandria.David Winston. Paulist Press Newyork 1981. TheNeoplatonists Thomas Wittaker Cambridge 1901). இது யவனரது மெய்யியல்.

இந்த உலகமானது பூதப் பொருள்களால் ஆனது என்று உலகாயதம் உரைத்தது. இதனை நீலகேசி விவரித்தது. மண், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் பூதப் பொருள்களால் உடலும், உயிரும் பொருள்களும் ஆகி உள்ளன. உடலின் குணம் உயிர். பிரிக்க இயலாதவை. பொருள், குணம், தொழில் ஒருங்கு இணைந்தவை. குணம் - குணி என்றால் இரண்டும் தனித்தனி என ஆகிவிடும். ஆதலால், இந்தப் பகுப்பை உலகாயதம் ஒப்பவில்லை. பூதப் பொருள்கள் கூடித் தொழில் புரிவதால், குணங்களான உயிர், உணர்வு உண்டாயின.

உலகாயதம் ஆண் - பெண் கலவி இன்பத்தைப் போற்றுவது என்பர் (இரக்ஷணிய சமய நிர்ணயம்: 3.2). இப்படி, சிற்றின்பம் மற்றும் இன்ப நாட்டக் கொள்கைக்குள் உலகாயதத்தை அடக்கி வைப்பது பிசகு. ஏனெனில், இந்த ஆண் பெண் கலவி இன்பமானது சந்ததி இன்பத்திற்கு முகாந்தரம், அச்சாரம். நேர்மையானதும் ஒழுக்கமானதும் கூட. உடலானது இறக்கும்போது உயிரும் இறக்கும். அதோடு அல்லாமல் புதிய உடல் - உயிர்களைச் சந்ததியாகப் புறந்தந்து இறக்கும். கருவறையில் புதியதாக உருவான சிசுவிற்கு உணர்வு, சிந்தனை, நினைவு உண்டு இவை இல்லையெனில் அது வெறும் பிண்டம் ஆகி வெளி வந்துவிடும். இல்லை யெனில் கருவினைச் சுமந்த தாய்க்கு கேடு சூழும்.

பின்பழகிய ஜீயர் தமது வார்த்தாமாலை நூலினில், சம்சாரிகள் தேகமே ஆத்மா, தேகத்தோடு சம்பந்தம் உள்ள செல்வம், உற்றார், உறவினர் என்னுடையது என்று போற்றுவர். இவற்றைச் சரீர சம்பந்திகளாகக் கொண்டாடுவர். அநாதி காலமாகவே, சம்சாரிகள் தேகாத்மம், சுதந்தரம் சூழ்ந்தவர்கள் என்று மதிப்பிட்டார் (வார்த்தைகள்: 18, 25, 30, 412, 414).

நாதமுனிகள் முதல் மணவாள மாமுனிகள் வரையான வைணவ ஆச்சாரியர்கள் அனைவரும் தேகாத்மவாதம், சுதந்தர சிந்தனை, பிற தெய்வ வழிபாடு ஆகியவற்றை மறுத்தே தமது வைணவத்தைப் பேசினர் (ஸ்ரீ வசனபூஷணம் : 23). வியாக்கியானம் பொலிந்த ஆயிரப் படிகளை உரைத்தனர். உலகாயதம் என்பதை லோகோ + ஆயதம் என ஈட்டின் அவதாரிகையில் ஜீயர் பிரித்தார். அதன் பொருள் உலகினில் பரவலாக நடப்பினில் உள்ளவை என்பது. உலகின் / நாட்டின் இயல்பு என ஆச்சாரிய ஹிருதயம் விளக்கியது (93 - 94). இவர்களது வாக்கினால் இருந்து சம்சாரிகளானவர் உலகாயதத்திற்கு பௌதிக சக்திகள் என்பது புலனாகின்றது. மனித சம்சாரிகள் இல்லையெனில் உலகாயதம் இல்லை.

ஆச்சாரியர் காலத்தில், உலகாயத நெறிக்கு, நூல்கள் இருந்ததாகப் பரிமேலழகர் உரைத்தார். நிலம், நீர், தீ, காற்று நான்கு பொருள்களின் சேர்க்கையால் உயிர், அறிவு தோன்றும். மதுவில் களிப்பு, இன்பம் போல. இறந்த உயிரானது மீண்டும் பிறக்காது. பொருளும், இன்பமும் ஒருவரால் செய்யப்படுவன. நேரடியாகக் கண்ணால் கண்டால் மட்டுமே உண்மை. மறுபிறப்பும், இருவினைப் பயனும் இல்லை. கடவுள் இல்லை. இந்தக் கருத்தியல் களை விளக்கும் நூல்கள் இருந்தன (திருக்குறள் உரை : 281, 351). அவற்றின் உட்பொலிவு உலகாயதம்.

ஒரு பொருளில் இருந்து அதே இனப்பொருள் தான் தோன்றும். நெல்லில் இருந்து நெல்தான் முளைக்கும். நெல் கமுகாய் நீளாது என்பது ஞானியான அருள் நந்தி சிவாச்சாரியாரது சைவ வாக்கு. ஒன்றில் இருந்து வேறான புதிய பொருளும் பிறக்கும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலக்கும் போது களிப்பு தரும் சுவையும், சிகப்பு நிறமும் பிறக்கும். இவை இரண்டும் அந்த மூன்றினில் முன்னர் இல்லை. வேறு புதிய பொருள், புதிய குணத்துடன் பிறந்தது. இஃது உலகாயதம். சடப் பொருளில் இருந்து சடப் பொருள்தான் தோன்றும். உயிர்ப் பொருள் பிறக்காது என்பது அருள் நந்தி சிவாச்சாரியார் சித்தாந்தம். மாறாகச், சடப் பொருளில் இருந்து உயிர்ப் பொருள் பிறக்கும். மண், தீ, காற்று, நீர் ஆகியனவற்றின் கலப்பால் உணர்வோடு கூடிய உடல் - உயிர் உண்டாகும். இதற்கு இந்தத் தாம்பூலம் மற்றும் களிப்பு இன்பத்தை உலகாயதம் உரைத்தது. இந்தியப் புகழ் படைத்த கூற்று இது.

ஆற்புமத்துக்கு (ஆத்துமம்) சத்துருக்களாவது மூன்று: பூலோகம், உடல், பேய் எனத் தமிழகச் சுதேசிகளை நோக்கி அன்றீக்கு அன்றீக்கெஸ் கி.பி. 1578இல் தம்பிரான் வணக்கம் நூலில் கிறித்துவத் திற்காக எழுதினார் (13). அநாதி காலமாகவே, சம்சாரிகள் சாரீர சுகம், தனம், வெகுமானம், விருதுகளைப் போற்றுபவர்கள். இது பாவமான வியாதி. இந்த நாஸ்திக மதம் சகல பாவங்களுக்கும் காரணம் எனத் திருச்சபை உபதேசி ராபர்ட் டிநொபிலி உபதேசித்தார் (தூஷண திக்காரம் : 8.6, ஆத்ம நிர்ணயம்: 12,2, 12.10). இவை உலகாயத மறுப்பு. இவர் கி.பி. 1640களில் நேர்க்காட்சி வாதம் மற்றும் பிரயோசன வாதம் (Positivism and pragmatism) பொலிந்த தத்துவங்களில் திகழ்ந்தார். இதற்கு ஆங்கிலேய வணிகர் கம்பெனி ஆசியும் வழங்கியது. அன்று ராபர்ட் டிநொபிலி, சுதேசிகளின் கரங்களில் உலகாயதம் கூறும் கிரந்தங்கள் இருந்ததாகவும் தமது நூலில் காட்டினார் (நித்திய சீவன சல்லாபம்: 5).

திருச்சபையினர் பேருரைகளை மறுத்து அப்போது, பௌதிக வாதம், சார்வாகம், தேகாத்ம வாதம் தாங்கியோர் வீறு கொள்ளத் தொடங்கினர். இவர் உலகாயத நெறியினர். இவர்கள் இந்து சுயக்கியான சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்திய சுதந்தர சிந்தனையாளர் சங்கம் (Hindu Free Thought Union) என்பது இதன் அர்த்த மாகும். இந்தச் சங்கத்தின் சார்பாக 1878 ஜனவரியில் தத்துவ விசாரிணி என்ற வார இதழ் வெளிவந்தது. தத்துவார்த்த ஆராய்ச்சியாளர் என்பது இதன் அர்த்தம். ஆசிரியர் திரு.சோமையா என்பவர், உலகாயத நெறிக்காகச் சங்கமும், இதழும் கைகோர்த்தன. இவை இன்றும் வெவ்வேறு பெயர்களில் தொடர்கின்றன.

இந்து சுயக்கியானசங்கத்தார் 1882இல் அந்த வார இதழைத் தத்துவ விவேசினி என்ற பெயரில் வெளியிட்டனர். உண்மையை விளங்கச் செய்யும் பத்திரிகை என்று இதற்கு அர்த்தம். இந்த இதழின் ஆசிரியர் தமிழ்ப் பேராசிரியர் பு.முனிசுவாமி நாயக்கர். இவருக்குத் துணையாக அமரம்பேடு முத்துசாமி முதலியார் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் எழுதினர். இவர்களது உலகாயதம் இப்படி விளக்கம் கொண்டு இருந்தது.

1) மனிதன் சிரேஷ்டகன், மனுஷீகத்துவம் உடையவன்.

2) கடவுள்---இது மனிதரால் சிருஷ்டிக்கப் பட்டது. இந்தக் கடவுளுக்கு மனிதரால் குணங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

3) மனிதசெயல்கள் ஆதிபூர்வமாய் அமைந்தவை, இயற்கை அறிவு உடையவை. மனிதசகல செயல்களும் பகுத்தறிவில் இருந்து உண்டாகின்றன என்பது சரி அன்று.

4) பொருள்--- இது நியாய - வைசேடிக தர்க்க சாஸ்திரத்தில் உள்ள பதார்த்தம் என்கிற சொல் அன்று. பதார்த்தம் பொருள் ஆகாது. பதார்த்தத்தில் ஒன்பது திரவியங்கள் அடங்கும். பொருள் அடங்காது.

5) பொருள் முன்னது, அறிவு பின்னது, புற நிலைப் பொருளில் இருந்து அறிவு உண்டாகிறது.

6) தேகமே ஆத்மா. உடலும் ஜீவனும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. விறகு, நெருப்பு வேறுவேறு இல்லை என்று இரசாயன சாஸ்திரம் கொண்டு நிறுவினர். இது தேகாத்ம வாதம்.

7) கண்---பார்ப்பதற்காக உண்டாக்கப்பட்டது, செய்யப்பட்டது அன்று. கண் என்பது இருப்பதாலேயே பார்க்கிறோம். நேரடி பிரத்தியட்சமும், பரிசோதனையுமே உண்மையான அறிவுக்கு வித்து.

8) இயற்கை உலகில் சகலமும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு வாழ்கின்றன.

9) இந்தியத் தொழில் வித்துவர் (தொழிலாளர்) வல்லமை படைத்தவர்.

10) உலகம் முழுவதுவுமே எனது தேசம், நன்மை செய்வதே எனது மதம்.

1925-க்குப் பின்னர், மா.சிங்காரவேலர் ஐரோப்பிய இயக்கவியல், சமூகவியல் பொருள் முதல் வாதங்களைக் கற்றுத் தமிழகத்தில் வலம் வந்தார். பின்னர், கே.பாலதண்டாயுதம், ஆர்.கே. கண்ணன் ஆகியோர் இயக்கவியல், சமூகவியல் பொருள்முதல்வாதங்களைத் தமிழக உலகாயதத்தில் பொலிவு பெறச் செய்தனர். இயற்கையே மனித நிலையில் இருந்தபடி தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுகிறது. அதற்காகத் தனக்குத்தானே சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படுகின்றது. இஃது இன்றைய உலகாயதம்.

Pin It