முன்னுரை

பண்பாட்டு மானிடவியலின் முக்கியமான பிரிவாக இனவரைவியல் அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழும் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியற் கூறுகளை, அவர்களோடு குறிப்பிட்ட நாட்கள் அல்லது ஆண்டுகள் தங்கி வாழ்ந்து, களஆய்வு முறைகளின் மூலம் பெறப்படும் முதன்மையான தரவுகளைக் கொண்டு விளக்கமாக எழுதுவது (வரைதல்) இனவரைவியலாகும். இவ்வகை யான இனவரைவியலை இலக்கியத்துடன் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தல் முக்கியமானதொரு அவசியமாக அமைகின்றது. இனவரைவியலும் இலக்கியமும் என்னும் இவ்வாய்வுக் கட்டுரையானது இனவரைவியல் பற்றிய அறிஞர்களின் கருத்துக்களையும், இனவரைவியல் கூறுகளையும் ஆய்வு செய்வதுடன், இனவரைவியலை இலக்கியத்துடன் ஒப்பிட்டு காணும் வகையில் இலக்கியத் திற்கான முக்கியத்துவத்தையும், இலக்கியம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்தியம்புவதாக அமைகின்றது. மேலும், இலக்கியங்களில் காணப்படும் இனவரைவியல் பதிவுகளையும், இலக்கியமும் இனவரை வியலும் ஒன்றுபடும் இடங்கள் மற்றும் வேறுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி ஆய்வு செய்வதாக இவ்வாய்வுக் கட்டுரையானது அமையப்பெறுகின்றன.

இனவரைவியல்

ஒரு குறிப்பிட்ட மனித இனம் அல்லது சமூகத்தின் பண்பாட்டை அறிவதற்கு, அப்பண்பாட்டையுடைய மக்களோடு குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ வாழ்ந்து, களஆய்வு உத்திமுறைகளைப் பயன்படுத்தி, அவர்களின் எல்லாவிதமான மரபுகள் பற்றியும் அறிந்து, அதனை அப்படியே முறைப்படுத்தி எழுத்துப்பூர்வமாக அளிக்கும் ஆவணமே இனவரைவியல் என்பதாகும்.

இனவரைவியல் சொற்பொருள் விளக்கம்

மானிடவியல் கலைச் சொல்லகராதி ‘‘Ethnography’ எனும் சொல்லுக்கு ‘மனிதவினப் பரப்பு விளக்கவியல்’ (சக்திவேல். 1972: 25) என்றும், பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் ‘குறிப்பிட்ட மானிடச் சமுதாயம் ஒன்றினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி, விவரிப்பு இனவரைவியலாகும்’ (அன்பரசன். 2011: 15) என்றும், ‘இனக்குழுவியல் என்பது பண்பாட்டு மானிடவியலின் அடித்தளமாக அமைவது, இது ஓர் இனக்குழு அல்லது ஒரு சமூகத்தைப் பற்றிய விரிவான, முழுவதுமான அறிவினை எடுத்தியம்புகிறது. பழங்குடிச் சமூகம், கிராமச் சமூகம் முதலான சிறு சிறு சமூகங்களின் இடவியல்பு விளக்கம், மக்களின் உருவத் தோற்றம், வாழிட அமைப்பு, வாழ்க்கை முறை, பேசும் மொழி, சமூக அமைப்பு, பொருளாதாரம், சமயம், சட்ட முறைகள், தொழில்நுட்பம், கலை மற்றும் பண் பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அப்பண்புகளை முறைப்படுத்தி இனக் குழுவியல் விளக்கும் ஒவ்வொரு சமூகத்தின் அக, புறப் பண்பாடுகளை அறிவியல் நோக்கில் இது ஆராயும்’ (வாழ்வியல் களஞ்சியம். தொகுதி - 4. 1991: 561) என்றும் விளக்கம் தருகின்றன.

மேலே குறிப்பிட்ட வரையறைகளின்படி, இன வரைவியல் என்பது குறிப்பிட்ட மனித சமூகத்தின் அல்லது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் கூறு களையும் விரிவாக விளக்குவதே என்னும் பொருளில் அமைகின்றது.

பக்தவத்சல பாரதி, ‘இனக்குழுவியல்’ என்னும் பொருளுடைய ‘‘Ethnography’ என்னும் ஆங்கிலச் சொல். ‘‘ethnos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race), இனக்குழு (ethnic group), மக்கள் (people) என்பது பொருள் ‘graphein’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’ (to write) என்பது பொருள். ஆகையால், இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது (பக்தவத்சல பாரதி. 2003: 117) என்று விளக்கமளித்துள்ளார்.

இனவரைவியல் என்னும் சொல் ethnography என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ethnograp என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலவடிவத்தை ஆராயும் மெர்ரியம் வெப்ஸ்டர் அகராதி, பயன்படுத்தப்பட்ட ஆண்டு கி.பி. 1834 ஆகும் (அன்பரசன். 2011: 9).

பால்அட்கின்ஸன் ‘இனவரைவியல் என்பது ஓர் ஆய்வுமுறையைக் குறிப்பிடும் அதே வேளையில், அந்த ஆய்வுச் செயற்பாட்டின் விளைவாக அமையும் எழுத்து வடிவப் படைப்பான தனி ஒரு கலை வடிவத்தை அப்பதம் சுட்டிக் காட்டுகிறது’ (தனஞ்செயன். 2006: 9) என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இனவரைவியல் வரையறை

இனவரைவியல் என்பது குறிப்பிட்ட மக்கட் குழுவின் எல்லா வகையான மரபுகளையும், அவ்வினத் தாரின் உணர்வோடு பதிவு செய்வது இனவரைவியலாகும். அது எந்தக் குழுவைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதப் பண்பாட்டின் விளக்கவியல்; வருணனைக் கலை மற்றும் அறிவியல்; அந்நியமான உலகங்களைப் பற்றி அறிதல்; ஒரு இனத்தைப் பல்வேறு கூறுகளின் வாயிலாக இனங்காணுதல்; குறிப்பிட்ட இனத்தின் கலாச்சார, பழக்கவழக்கங்களை முன்வைப்பது; எழுத்தாளன் மற்றும் ஆய்வுக்குட்பட்ட மக்களின் விளக்கவுரைகள்; துல்லியமான தரவுகளை வெளிக் கொணர்வது; களப்பணியை மையமாகக் கொண்டது என்பது அறியவருகிறது.

இனவரைவியல் பற்றிய அறிஞர்களின் கருத்துக் களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1.தமிழ்நாட்டு அறிஞர்களின் கருத்துகள்.

2. மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துகள்.

தமிழ்நாட்டு அறிஞர்களின் கருத்துகள்

மானிடவியல் அறிஞரான பக்தவத்சல பாரதி, ‘ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானிட வியலாளர்கள் அச்சமூகத்தாரோடு நீண்ட காலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை, எழுத்தில் எழுதி யளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல் எனப்படும். இத்தகு நீண்ட காலக் களப்பணியில் உற்றுநோக்கிப் பண்பாட்டை விவரிக்கும் தனிவரைவுகளை (monographs) எழுதும் மானிடவியலர்கள் இனவரைவியலர் (ethnographer) எனப்படுவர்’ (பக்தவத்சல பாரதி. 2005: 387) என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இனவரைவியல் என்பது களப்பணியை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டமாகும். அதாவது, மானிடவியலர் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது ஏதேனும் ஒரு துணைப் பண்பாட்டைப் பற்றி அப்பண்பாட்டைக் கொண்டிருக்கும் மக்களோடு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கியிருந்து, அவர் களோடு வாழ்ந்து அவர்களுடைய அன்றாட வாழ்க் கையில் பங்கேற்று, ஆராய்ந்து வெளிப்படுத்துவது’ (தனஞ்செயன். 2006: 2) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட மனித சமூகத்தில் மேற்கொள்ளப் படுகின்ற களப்பணி பண்பாட்டு ஆய்வு முறையாகவோ, ஆய்வின் வெளிப்பாடாக அமையக் கூடிய முடிவுகளின் பிரதியாகவோ இருக்கலாம். இதன் மூலம் அம்மக்களின் பண்பாடு, சட்ட நியதிகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், சமயநிலைகள் போன்றவை வெளியுலகிற்குப் புலப்படுத்துகின்றன என தனது ஆய்வேட்டில் அன்பரசன் ( 2011: 18) குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஒரு குறிப்பிட்ட மனித இனம் அல்லது சமூகத்தின் பண்பாட்டை அறிவதற்கு, அப்பண் பாட்டையுடைய மக்களோடு குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ வாழ்ந்து, களஆய்வு முறைகளைப் பயன்படுத்தி, அவர்களின் எல்லாவிதமான மரபுகள் பற்றியும் அறிந்து, அதனை அப்படியே முறைப்படுத்தி எழுத்துப் பூர்வமாக அளிக்கும் ஆவணமே இன வரைவியல் என்பது புலனாகிறது.

மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துகள்

ஹெர்கோவிஸ் (Herkovits) ‘ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பற்றி எழுதப்பட்ட வரைவு அல்லது விளக்கமே இனவரைவியல்’ (தனஞ்செயன். 2006: 3) என்று குறிப்பிட்டுள்ளார்.

புரூன் (Brunvand) ‘ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஆய்வே இனவரைவியல்’ (மேலது.3) என்று மொழிந்துள்ளார்.

ஏகார் (Agar) ‘நமக்கு மிகவும் அந்நியமான உலகங்களோடு போராடி, அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய சமூக ஆய்வு முறையை இனவரைவியல் என்றோ, நாட்டார் பார்வையிலான விவரிப்பு (Folk description) என்றோ அழைக்கின்றனர் (மேலது.3) என்று வரையறைப்படுத்தி யுள்ளார்.

பெடர் மேன் (Feter man) ‘ஒரு குழு அல்லது பண்பாட்டைப் பற்றி விளக்கிக் கூறும் ஒரு வருணனைக் கலை மற்றும் அறிவியல் தான் இனவரைவியல். இந்த விவரிப்பானது, எங்கோ ஒரு நாட்டிலுள்ள சிறிய இனக்குழுவைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு நடுத்தரமான நகரத்திலுள்ள ஒரு பள்ளிக்கூட வகுப்பறை பற்றிய சித்திரிப்பாகவும் கூட இருக்கலாம்’ (மேலது.3) என்று விளக்கமளித்துள்ளார்.

‘ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது இனவரை வியலாகும். இது கடந்த காலம் பற்றியதாக இருக்கலாம். அதாவது, ஒரு குறிப்பிட்ட மக்களை உற்றுநோக்கல் உத்திகள் மூலம் ஆராய்ந்து, அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கூறுகளையும், மேலும் பல தகவல்களையும் எடுத்தியம்புவதே இனவரைவியல்’ என்று பெர்டாஸ், பிளன்மெர் (Pertaux, Plunmer) ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர் (Marthn. 1993: 32).

லன்ச் (Lunch)) ‘குறிப்பிட்ட இனத்தைப் பற்றிய நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்காலத்தையும் சேர்த்து ஆராய்வது, இது கலாச்சார பழக்க வழக்கங்களை முன்வைப்பது இனவரைவியல்’ (மேலது.32) என்று தமது கருத்தை முன்வைத்துள்ளார்.

டென்சின் (Denzin) ‘எழுத்தாளன் மற்றும் அவன் யாரைப் பற்றி எழுதுகிறானோ, அந்த மக்களாகிய அவர் களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிய விளக்க வுரைகள், விவர அறிக்கைகளை உருவாக்கக்கூடிய விசாரணைமுறை மற்றும் எழுத்து வடிவமே இனவரை வியல்’ (தனஞ்செயன். 2006: 3) என்று கூறியுள்ளார்.

‘இனவரைவியலை உள்ளடக்கிய மானுடவியலை ‘ஏகாதிபத்தியத்தின் குழந்தை’ என்று காதரின் காஃப் அறிவித்துள்ளார்’ (சிவசுப்பிரமணியன். 2009: 11).

‘பல்வேறுபட்ட இனக்குழுக்களின் தொலை நோக்குடைய வாழ்வியல் நெறிகளைக் கூடிய வரையிலும் துல்லியமாகப் பதிவு செய்யும் குறிக்கோள் உடையது இனவரைவியல் ஆகும்’ என்று லெவிட்ராசு விளக்கமளித்துள்ளார்.

மாலினோவ்ஸ்கி ‘குறிப்பிட்ட இனங்களின் உறவு நிலைகள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சிந்தனை உலகம் ஆகியவற்றை அவ்வினத்தாரின் உணர்வோடு வெளிப்படுத்துவது இனவரைவியல் ஆகும்’ என்று அன்புச்செல்வன் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாக அன்பரசன் (2011:16-17) தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

இனவரைவியல் கூறுகள்

ஓர் அயற்பண்பாட்டை விளக்க முற்படும் போது எந்த ஒரு சிறந்த இனவரைவியல் தொகுப்பும், பின்வரும் முதன்மையான கூறுகளைப் பற்றி விளக்குவதாக அமையப் பெறுகின்றன (பக்தவத்சல பாரதி. 2003:118-119). அவை,

1. புவிச்சூழல்

2. சுற்றுச் சூழல்

3. காலநிலை

4. குடியிருப்பு நிலை

5. பொருள்சார் பண்பாடு

6. குடும்ப அமைப்பு

7. திருமண முறை

8. உறைவிட முறை

9. வாழ்வியற் சடங்குகள்

10. குழந்தை வளர்ப்பு முறை

11. பண்பாட்டு வயமாக்கமுறை

12. மக்களின் உளவியற் பாங்குகள்

13. மணக்கொடை

14. மணவிலக்கு முறை

15. வாழ்க்கைப் பொருளாதாரம்

16. தொழிற் பகுப்பு

17. உற்பத்திமுறை

18. நுகர்வு முறை

19. பங்கீட்டு முறை

20. பரிமாற்ற முறை

21. கைவினைத் தொழில்கள்

22. அரசியல் முறை

23. அதிகார உறவுகள்

24. சமூகக் கட்டுப்பாடு

25. மரபுசார் சடங்குகள்

26. சமய நம்பிக்கைகள்

27. சடங்குகள்

28. வழிபாட்டு முறைகள்

29. மந்திரம்

30. சூனியம்

31. விழாக்கள்

32. இசை

33. விளையாட்டுகள்

34. அழகியற் சிந்தனைகள்

35. வழக்காறுகள்

36. ஈமச் சடங்குகள்

37. பிற தொடர்புடைய செய்திகள்

எனும் வகையில் இனவரைவியல் கூறுகள் அமையப் பெறுகின்றன.

இலக்கியம் (Literature)

மனிதன் தன் அனுபவங்களை ஆவணப்படுத்தும் கருவி இலக்கியம். மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலைகளுள் இலக்கியமும் ஒன்றாகும். இலக்கியம் காலந்தோறும் சூழலுக்கேற்ப பாடுபொருள் அமைப்பிலும், வடிவ அமைப்பிலும் மாறி வருகின்றன. இத்தகைய இலக்கியங்கள், அவ்வக்கால மக்களின் பண்பாட்டுக் கருவூலமாகவும், வாழ்க்கை யினைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமைந் துள்ளன.

இலக்கியம் - சொற்பொருள் விளக்கம்

தமிழில் இலக்கியம் என்று வழங்கப்பெறுவது. ஆங்கிலத்தில் Literature என்று குறிப்பிடப்படுகிறது. நிகண்டுகள், வாழ்வியற் களஞ்சியம் ஆகியன இலக்கியம் எனும் சொல் குறித்து என்ன இயம்புகின்றன என்பதை இப்பகுதி விளக்க முற்படுகிறது.

இலக்கியம் என்பதற்கு இலக்கணம் அமைந்தது (Tamil Lexicon, Vol. I, 1982: 339) என்றும், இலக்கணம் அமைந்த நூல்; எடுத்துக்காட்டும் குறி; இலக்கணம் அமையப் பெற்ற பொருள் (கழகத் தமிழகராதி. 2004: 127) என்றும், இலக்கண நூற்படி முன்னோர் தந்த செய்யுள். உதாரணம், குறி (கதிரைவேற்பிள்ளை. தமிழ்மொழி அகராதி. 2005: 243) என்றும், ஆன்றோர் நூல், இலக்கு, கலையியல் வாய்ந்த எழுத்தாண்மை (தமிழ் - தமிழ் அகராதி. 2009: 150) என்றும் அகராதிகள் விளக்கம் தருகின்றன.

மேற்கூறிய வரையறைகளின்படி, இலக்கியம் என்பது ஓர் ஒழுங்கு (கட்டமைப்பு அல்லது வடிவம்) முறையோடு, மக்களின் வாழ்வியல் கூறுகளையும், அம்மக்களின் பண்பாட்டு அழியா அடையாளச் சின்ன மாயும் அமைந்து, மொழியை அழகுபடுத்தும் அரிய கலை என்றும், படைப்பாளன் எடுத்தியம்ப நினைக்கும் கருத்தினைக் கலைநயத்தோடு எழுதும் ஆளுமை திறனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம்.

இலக்கியம் எனும் சொல்லிற்கு உதாரணம் காட்டுவது என்று அகராதி நிகண்டு (1983: 18) பொருள் இயம்புகிறது. இக்கருத்தின்படி, எடுத்துக்காட்டுத் தருவதே இலக்கியம் என்பது புலனாகிறது.

இலக்கியம் அல்லது குறிக்கோள் மனித எண்ணங் களில் இலக்கிய வடிவம் பெற்றதால் இலக்கியம் முகிழ்த்தது. இலக்கியத்திற்கு இதுதான் இலக்கணம் என்று வரையறுத்துக் கூறுதல் எளிதன்று. ஆயினும், இலக்கியத்தின் கூறுகளைச் சுட்டிக் காட்டலாம். இலக்கிய வகைகளைப் பகுத்துக்காட்ட இயலும் என்று வாழ்வியல் களஞ்சியம் (1991: 263) பொருள் கூறுகிறது.

இலக்கியத்தின் வரையறை

இலக்கியம் என்பது கலை, கற்பனை, இன்பம் உடையதாகத் திகழ்வது; மொழி எனும் ஊடகத் தினூடே இயங்குவது; மொழி நிலைபெற இன்றி யமையா இடம் வகித்தும், மனித வாழ்வின் உணர்வு களையும் உண்மைகளையும் அனுபவப் பூர்வமாகக் கலை நுட்பத்தோடு எடுத்தியம்புவது; அறச்சிந்தனைகளை வலியுறுத்துவது; மக்களின் வாழ்வியல் விழுமியங்களை மதிப்பிடுவது; நனிநுட்பம் வாய்ந்ததாகவும், இயற்கை அழகைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமைவது; படைப்பாளன், தான் சமூகத்திற்கு எடுத் தியம்ப எண்ணும் இலக்கினை முன்மொழிவதாகவும், வெற்றெனத் தொடுத்தல் இன்றி, வாழ்க்கைப் பிழி வினைச் சொற்செறிவுடன் புலப்படுத்தும் ஆழ்நிலை கருத்துப் பதிவாகவும் விளங்குவது எனும் கருத்துக்கு வர இயலுகிறது.

இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மனித மனத்திற்கு இன்பம் நல்குவதாயும், ஒரு கட்டமைப்பிற்குள் இருப்பதாயும் விளங்குவதாகும் என்பது, மனிதனுடைய மொழியோடு பின்னிப்பிணைந்தது என்பதும் புலனாகிறது.

இலக்கியம் என்பது நுண்பொருள் போன்றது உய்த்துணர மட்டுமே இயலும் என்பது தெளிவாகிறது. உணர்வு சார்ந்து அமைவதால் தான், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

இலக்கியம் என்பது மிகத் துல்லியமாக வரையறை செய்ய இயலாதது; கருத்துப் பெட்டகமாக விளங்குவது; மனித மனத்திற்கு இன்பம் நல்குவதாய், தக்க வடிவத்தில் அமைவது; படைப்பாளன் தன் உணர்ச்சிக்கும் கருத் துக்கும் வடிவம் கொடுத்து முறைப்படுத்தி வழங்குவது; எழுத்துப்பூர்வமான ஆவணமாகத் திகழ்வது; கற்பனை நயத்தோடு குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டுக் கருவூலத்தையும் சுமந்து வருவது; நாட்டின் மரபுவழிச் செல்வமாகக் கருதப்படுவது; மனித உள்ளுணர்வுகளை அழகுபடுத்தி மொழியால் வெளிக்கொணர்வது; சமுதாயத்தின் ஒட்டுமொத்த அனுபவ வெளிப்பாடு; சமுதாயத்தை மதிப்பிடும் ஓர் அளவுகோல் என்பது பெறப்படுகிறது.

இலக்கியத்தின் முக்கியத்துவம்

தொடக்க காலம் முதல் இன்று வரை தமிழிலக்கிய உலகில் எண்ணிறைந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவ்விலக்கியத்தின் முக்கியத்துவம் காலமாற்றத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மையன. சங்க இலக்கியம் தமிழர்தம் வாழ்வை அகம், புறம் எனும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து, இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த யதார்த்த வாழ்க்கையினை முக்கியத்துவமாகக் கொண்டது. சங்கமருவிய கால இலக்கியங்கள் மனிதன் மனிதனாகப் பண்பட்டு வாழ்வதற்கு அறச்சிந்தனைகளை முன்வைத்தன.

பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்கள் இறைவனின் பேரருளையும், திருவடிகளில் இரண்டறக் கலத்தலுமே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இவ்வாறு ஒவ்வொரு கால இலக்கியங்களும் குறிப்பிட்ட ஒன்றைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இக்கால இலக்கியங்கள் வாழ்வியலில் நேரும் நடைமுறைச் சிக்கல்களை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு திகழ்கின்றன. இவையனைத்திலும் அவ்வக்கால மக்களின் அனுபவங்கள், வாழ்க்கை சூழல்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், இயற்கைக் கூறுகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், பொழுது போக்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளைத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

டேவிட் டெய்ஷஸ் (David Daiches) ‘செய்யுளிலோ, உரைநடையிலோ படைக்கப்படும் எந்த வகையான கலைப் படைப்பையும் ‘இலக்கியம்’ எனப் போற்றலாம். அதனுடைய ‘மெய்ம்மையை’ (Realism) எடுத்துரைப்பது அன்று. ஒரு கதையைச் சொல்லுவதும் புதியதாகப் படைக்க உதவும் கற்பனைத் திறனால், சொற்களின் மூலம் ‘செஞ்சொற் கவியின்பம்’ ஊட்டுவதும் இலக்கி யத்தின் முக்கியத்துவமாகும்’ (ஞானசம்பந்தன். 1981: 15) என்று குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியம் பற்றி தமிழறிஞர்களின் கருத்து

தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ ‘இலக்கியம்’ என்ற சொல் பயின்று வரவில்லை. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் எனும் இலக்கண நூலானது இலக்கியம் என்பதற்கு விளக்கம் அளிக்கிறது. இலக்கணிகள், ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள், ஒப்பியல் அறிஞர்கள் ஆகியோர் இலக்கியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் சில வருமாறு,

தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள ‘எல்லே இலக்கம்’ (தொல்.சொல்.இடை: 21) என்பதைக் கொண்டு, உயர்ந்த குறிக்கோளை உள்ளடக்கி, வாழ்க்கைக்கு விளக்கம் தருவது இலக்கியம் என்று கூற வாய்ப்புள்ளது. தொல் பழங்காலத்தில், பொதுவாக இலக்கியத்தைச் செய்யுள் என்ற சொல்லால் தமிழில் குறித்தனர். நன்னூல் எனும் இலக்கண நூலானது செய்யுளுக்கான விளக்கத்தினை பின்வருமாறு குறிப் பிடுகிறது. பல்வகைத் தாதுக்களினால் அமைந்த உடல் உயிருக்கு இடமாக அமைந்துள்ளது. அதுபோலப் பல்வகைச் சொற்களின் சீரிய பொருளுக்கு இடமாக அமைந்து, உணர்ச்சியோடு இலக்கியப் படைப்பில் வல்லுநர்களாக விளங்குபவர்களால் அணிநலம் அமையப் படைக்கப்படுவது செய்யுளாகும் என்பதனை,

“பல்வகைத் தாதுவினுயிர்க்குடல் போற்பல

சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின்

வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்”

(நன்.சொல்.பெயர்: 11)

எனும் நூற்பா வெளிப்படுத்துகிறது.

ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு வரை யறையை முன்வைப்பினும், அவர்களிடையே இலக்கியம் பற்றிய ஒரு பொதுத்தன்மை நிலவுகிறது. அது மக்களை மையமிட்டது. ஒட்டுமொத்த சமூகத்தின் அனுபவ வெளிப்பாடு என்பதுதான் அது. ஆனால், ஒவ்வொரு வரும் கையாளும் சொல்லாட்சிகளும், சொல்லும் முறையும் மாற்றம் பெற்றுள்ளன.

ஞா.தேவநேயப் பாவாணர் ‘இலக்கு - இலக்கியம், இலக்கு - இலக்கணம், இலக்கு-குறி; குறிக்கோள், சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளார் (ஞானசம்பந்தன்.1981:5).

கா.சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கியம் என்பது மக்களுடைய விழுமிய கருத்துக்களைச் செவ்விய சொற்களால் விளக்கும் கருவியாகும்’ (ஞானசம்பந்தன்.1981: 4) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

‘இலக்கியம் என்பது நுண்கலைகளில் ஒன்று. அறிவும் மனோபாவமும் கலந்து தொழிற்பட்டு மக்களுக்கு இன்பத்தை விளைவிக்கும் சிறந்த கலைகள் நுண்கலைகள் எனப்படும். இலக்கியம் என்பது அழகுணர்ச்சி ததும்ப எழுதியனவற்றையே குறிக்கும்’ (பிச்சமூர்த்தி. 1986: 6) என்று வையாபுரிப்பிள்ளை கூறியுள்ளார்.

தொல்காப்பியரின் ‘எல்லே இலக்கம்’ எனும் நூற்பாவை அடிப்படையாகக் கொண்டு ‘இலக்கு + இயம் எனப் பிரிக்கும் போது இலக்கு என்பதற்கு விளக்கம், நோக்கம், கொள்கை, குறிக்கோள் எனப் பொருள் கொண்டும், இயம் என்பதனை ஒலிப்பது, கூறுவது, இயம்புவது, விளக்குவது இலக்கியம் எனக் கொள்ளலாம்’ (சிவகாமி. 1994: 3). மேலும், தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் ‘இலக்கியம் வாழ்க் கையின் எதிரொலிகள், சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் மைல்கற்கள், மனித இலட்சியத்தின் உயிர்நாடி, இலக்கை உடையது இலக்கியம், இலட்சியத்தை உடையது, உரைப்பது இலக்கியம்’ (சுப்பிரமணியன், ச.வே. 2010: 20) என்று விளக்கம் தந்துள்ளார்.

‘இலக்கியம் மொழியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றது. அதனால் தான் இலக்கி யத்தை மொழிக்கலை என்று வரையறை செய்வர்’ (சம்பத், இரா. 2006: 1) என்று சுட்டியுள்ளார்.

‘இலக்கியம் என்பது ஒவ்வொரு மொழிக்கும் உயிர் போன்றது. உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல், இலக்கியம் இல்லாமல் எந்த மொழியும் வளர்ச்சியடைய முடியாது. இலக்கியம் இல்லா மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. இலக்கியம் மனிதன் அனுபவித்த ஆழ்ந்த உணர்ச்சிகள், உண்மைகளை அழகிய கலைநயத்துடன் தெரிவிப்பதும் மனித வாழ்வோடும் வாழ்க்கையோடும் இணைந்து மனிதப் பண்புடன் தொடர்வதுமாகும்’ (கோவிந்தராஜ், ச. 2009: 1) என்று விளக்கம் அளித்துள்ளார்.

‘மனிதன் தன் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கவும், வேலை செய்யும் பொழுது களைப்புத் தெரியாமல் இருக்கவும் கண்டுபிடித்த அரிய கருவி இலக்கியம் ஆகும்’ என்றும், கலைநயம் உடைய தாயும் அழகியல் தன்மை உடையதாயும்படியும் பொழுது இன்பம் தருவதாயும் அமைக்கப்படும் நூல் இலக்கியம் ஆகும்’ (அன்பரசன்,நா.2011:5) என்று விளக்கம் அளித்துள்ளார். திறனாய்வாளர்களான அ.ச.ஞானசம்பந்தன், சு.பாலசந்திரன், ஆகியோர் இலக்கியத்தின் தன்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர் அவை, ‘இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனிதனின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழி யோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரை நடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது’ (ஞானசம்பந்தன், அ.ச. 1999: 19) என்று இலக்கியத்தின் தன்மையை வரையறை செய்துள்ளார்.

‘மனிதனின் மொழியோடு தொடர்பு உடையதாய் மனிதனின் சிந்தனைக்கோ, உணர்வுக்கோ, கற்பனைக்கோ விருந்தாக அமைவதாய்; ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டதாய் உள்ளது எதுவோ, அதுவே இலக்கிய மாகும்’ (பாலசந்திரன், சு. 2006: 68) என்று விளக்கம் தந்துள்ளார்.

‘எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது. எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த இயலாது’ (மணவாளன், அ.அ. 2002: 11) என்று ஒப்பியல் அறிஞர் சாமுவேல் ஜான்சன் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறாக இலக்கியத்திற்கு தமிழறிஞர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இலக்கியம் பற்றி மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துகள்

மேலைநாட்டு அறிஞர்கள் பல்வேறு காரணமாகத் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம், பற்றின் காரணமாக பல அறிஞர்கள் இலக்கியம் குறித்த பொதுவான விளக்கத்தினைத் தந்துள்ளனர். அவை வருமாறு,

சி.டி.வின்செஸ்டர் (Winchester, C.T) என்பவர் ‘அழகு, கவிதை, கற்பனை, குறிக்கோளியல் முதலிய வற்றை எங்ஙனம் துல்லியமாக விளக்க இயலாதோ அவ்வாறே இலக்கியத்தையும் விளக்க இயலாது’ (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 4.1991:264) என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் இலக்கியம் அறிவு சார்ந்தது அல்ல. உணர்வு சார்ந்தது. அதனால் தான் அது நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறு படுகிறது என்பது அறியலாகிறது.

எமர்சன் (Emerson) ‘இலக்கியமாவது சிறந்த கருத்துகள் அடங்கிய நூலாகும்’ (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-4.1991: 264) என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, மக்கள் வாழ்க்கையின் சிந்தனைகளை முன்னிறுத்துவது இலக்கியம் என்பது தெளிவாகிறது.

‘தன்கண் அமைந்த நுவல் பொருளும், அதனை விளக்கும் முறையும் பொதுவாக மக்களைக் கவரும் முறையில் அமைந்து, வடிவம் இன்றியமையாததாகி, அதன் வாயிலாக இன்பம் நல்குவது இலக்கியம்’ (மேலது. 264) என்று ஹட்சன் (Hudson)) உணர்த்தி உள்ளார்.

‘படிப்போர்க்கு இன்பம் தரும் வகையில் நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் தம் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் முறைப்படுத்தி எழுதுவது இலக்கியம்’ என்று ஸ்டாபோர்டு புரூக் (ஞானமூர்த்தி,தா.ஏ.2011:56) வெளிக் கொணர்ந்துள்ளார்.

வில்லியம் ஈம்சுசெர் ‘இலக்கியம் என்பது எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தும் கலை’ (பாலச்சந்திரன், சு. 2006: 69) என்று குறிப்பிடுகின்றார்.

ரெனவெல்லக், ஆஸ்டின் வாரென் என்பவர் ‘கற்பனையோடு தொடர்பு உடையதாய் உள்ளதையும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் பண்பாட்டுக் கருவூலத்தைத் தாங்கி வருவதையும் இலக்கியம்’ (மேலது. 69) என்று வரையறை செய்துள்ளார்.

பி.டி.வென்சீசர் (Wenchesies, B.T)) ‘எழுதப்பட்ட படைப்புகளின் ஒட்டுமொத்தமான தொகுப்பே இலக்கியம். அவை குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அல்லது நாட்டின் மக்களுக்கு உரிமையுடைய மரபுவழிச் செல்வமாகப் போற்றிக் காக்கப்பட்டு வருவன வாகும். அவை வடிவாலும் உணர்த்தும் முறையாலும் பெருஞ்சிறப்பு வாய்ந்தனவாக இருக்கும்’ (ஞான சம்பந்தன், அ.ச. 1981: 14) என்று குறிப்பிடுகின்றார்.

மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப் பெறும் கலையே இலக்கியம். அது வியப்பூட்டும் ‘அற்புத நிகழ்ச்சி’ போன்ற ஓர் அரிய கலை. ஒரு மனிதன் என்ன நினைக்கின்றானோ, அதை அழகுற வெளிப் படுத்தும் மொழியாலாகிய கலை’ (மேலது.14) என்று ஜி.கே.செஸ்டர்டன் (Chesterton,G.K) கருத்து தெரிவித் துள்ளார்.

ஹரி லிவின் (Harry Levin) ‘இலக்கியத்தைப் பொதுவாக ஒரு சமுதாய நிறுவனமாகக் கருதுகின்றனர். பேச்சு மனிதனால் வெளிப்படுத்தப்படுவதைப் போன்று, சமுதாயம் வெளிப்படுத்துவதே இலக்கியம்’ (ஞான சம்பந்தன், அ.ச. 1981: 15-16) என்று குறிப்பிடுகின்றார்.

டயானா லாரென்சன் ((Dianna Laurenson) ‘இலக்கியம் மனிதனுடைய கவலை கலந்த ஆர்வத் தையும், எதிர்கால இலட்சிய உணர்வுகளையும் சித்திரிக் கிறது. இந்த நோக்கில், சமூக உந்துதல் சக்திகளுக்கேற்ப மனித இயல்புகளில் இருந்து உண்டாகும் எதிர் விளைவுகளை, எதிர்செயல்களை அறிவிக்கும் சமுதாயப் பாரமானி ((Social Barometer) இலக்கியம் எனலாம். சமுதாயப் பயன் மதிப்புகளையும் (Values) உணர்ச்சி களையும் பிரதிபலிப்பதனால் இலக்கியத்தை ஒரு ‘சமுதாயப் பாரமானி’ எனக் கூறுதல் பொருந்தும்’ (மேலது. 16) என்றும் விளக்கங்கள் அளித்துள்ளார்கள்.

இலக்கியமும் இனவரைவியலும்

இலக்கியம் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால், இனவரைவியல் ஆதாரங் களில் ஒன்றாக இலக்கியம் காணப்பெறுகிறது.

‘ஒரு பண்பாட்டைப் பற்றி ஆராய முற்படும் பொழுது, அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவினர் பின்பற்றும் உறவுமுறைகள், ஒழுங்கு அமைப்புகள், அவர்களின் உணவுமுறைகள், உணவைச் சமைக்க அவர்கள் கையாளும் முறைகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வது எவ்வளவு முக்கியமோ அது போன்று, இனவரைவியலார், இலக்கியத்தையும் ஆராய்வது அவசியமானது’ (தனஞ்செயன், ஆ. 2006: 12) ஆகும்.

படைப்பாளன் ஒரு படைப்பை உருவாக்கும் பொழுது, அவருடைய கருத்தோடு அவ்வக்கால மக்கள், அவர்களின் சூழல், வாழ்வியல் முறைகள், இயங்கும் இயங்காப் பொருட்கள் ஆகியன தெரிந்தோ, தெரியாமலோ படைப்பில் இடம்பெற்றுவிடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனையே, படைப்பாளி ஒருவன் சுயசிந்தனை என்ற எல்லைக்குள் நின்று மட்டும் ஒரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது. அவனைச் சுற்றியுள்ள புறவுலகின் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய அனைத்தையும் உற்றுநோக்கி, அவற்றின் தனிப்பட்ட இயல்புகளையும் இயக்கங் களையும் இணைத்து இலக்கியம் படைக்க வேண்டி யிருக்கும் (சிவசுப்பிரமணியன், ஆ. 2009: 13) என்று குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியங்களில் காலந்தோறும் இனவரைவியல் பதிவுகள்

சங்கஇலக்கிய எட்டுத்தொகை அடிவரையறையை மையமாகக் கொண்டு, ஐந்திணை அடிப்படையில் அகச் செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைக் குடியினரின் இனவரைவியலைப் பெற இயலுகிறது. மேலும், பத்துப்பாட்டின் மூலம் பாணர், பொருநர், கூத்தர் ஆகிய இனத்தவரின் இனவரைவியலைப் பெற இயலுகிறது.

‘சங்ககால மக்களின் வாழ்வியல் முறைகளையும் வரலாற்றையும் சங்க இலக்கியங்களைக் கொண்டே பேசி வருகின்றோம். நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், விழுமியங்கள், வாழ்க்கைமுறைகள், சடங்குகள், தொழில்கள், புழங்குப் பொருட்கள், மக்கள் குழுக்கள், உணவு, ஆடை அணிகலன்கள், வழிபடு தெய்வங்கள், குழுத்தலைவர்கள், போர், விலங்குகள், பறவைகள், நிலை உயிர்கள், ஐம்பூதங்கள் போன்றவை குறித்த செய்திகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவையனைத்தும் இனவரைவியல் தரவுகள் ஆகும்’ (ஸ்டீபன், ஞா. 2010: 16) எனும் கருத்து குறிப்பிடத் தக்கதாகும்.

அதனையடுத்து, காப்பிய காலத்தில் வணிகக் குடியினர் போன்ற உயர்குடி மக்களின் இனவரை வியலையும், தொல்குடியினரான வேட்டுவர், ஆயர், குறவரின மக்களின் இனவரைவியலையும் மற்றும் பிற குடியினர்களின் இனவரைவியலையும் பெற முடிகிறது.

சிற்றிலக்கியத்தில் பள்ளு, குறவஞ்சி முதலான விளிம்புநிலை மக்களின் இனவரைவியலை இனங் காட்டுவதாய் அமைந்துள்ளன. இக்கால இலக்கியங் களான கவிதை, சிறுகதை, புதினங்களின் வழியே விளிம்பு நிலை மக்களின் சமூக இயங்கியலைப் பிரதிபலிப்பதாக அமைவதனை அறியமுடிகிறது.

எனவே, காலந்தோறும் படைக்கப்பெறும் இலக்கியங்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையுடைய சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகள் இடம் பெறும் என்பது நிலையான பதிவாக அமைகின்றன.

‘வேறு வகையான ஆவணங்கள் எவையும் கிடைக்கப் பெறாத, ஒரு கடந்த காலத்திய சமூகத்தை, அதன் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு, ஆராய் வதற்கு அச்சமூகம் படைத்தளித்த கலை இலக்கிய வடிவங்களையே முக்கிய ஆதாரங்களாகப் பயன் படுத்துவதை ஒரு தவிர்க்க முடியாத விதி மீறலாக நாம் ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம்’ என்று குறிப்பிடு கிறார் (தனஞ்செயன், ஆ. 2006: 38). இவ்வாறாக இலக் கியங்களில் இனவரைவியல் பதிவுகள் காணப்படுவதை அறியமுடிகின்றது.

இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுபடும் இடங்கள்

இலக்கியம், இனவரைவியல் ஆகிய இரண்டுமே அடிப்படையில் பண்பாட்டைச் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன. இலக்கியம், இனவரைவியல் இரண்டுமே மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும், சமய நம்பிக்கைகளையும் எழுத்துப் பூர்வமாக அளிக்கும் பிரதி ஆகும்.

‘இலக்கியவாதி, இனவரைவியலாளன் ஆகிய இருவருடைய களமாக அமையும் எதார்த்த உலகம் ஒன்றுதான், எதிர்கொண்ட உலகினைப் பற்றிய சித்திரிப்பாக அமையும் படைப்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொழியும், அணி இலக்கணக் கூறுகளும் கூட இருவருக்கும் பொதுவானவைதாம்’ (தனஞ்செயன், ஆ. 2006: 42-43) என்பனவற்றிலிருந்து இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுபடும் இடங்களை உணரமுடிகின்றது.

இலக்கியமும் இனவரைவியலும் வேறுபடும் இடங்கள்

இலக்கியவாதி, இனவரைவியலன் ஆகிய இரு வருமே தம் முன்னோர்களின் வழியில் செயல்படு கின்றனர். இதில் இலக்கியவாதி, தம் முன்னோர்கள் பற்றிக் கூறுவதில்லை. ஆனால், இனவரைவியலார் தம் முன்னோர்களைத் தவறாமல் குறிப்பிடுவர் (அன்பரசன், நா. 2011: 26).

‘இனவரைவியலானது அறிவியல் பூர்வமானது. காய்தல் உவத்தலின்றிக் கறாராகச் சேகரிக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாக இது அமைகிறது. இதற்கு நேர்மாறாக இலக்கியமானது வெறும் செய்திகளின் தொகுப்பாக அன்றி அழகியல் பூர்வமாக அமைவது. படைப்பாளியின் உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உருவாக்கப்படுவது’ (சிவசுப்பிரமணியன், ஆ. 2009: 12) என்று குறிப்பிட்டுள்ளார்.

இனவரைவியலாளன் தான் சேகரித்த தரவு களையும், கண்ட சமூகத்தையும் தன்னுடைய கருத்தினை ஏற்றாமல், கற்பனை கலவாது உளப்பாங்கிற்கேற்ப முறைப்படுத்தி அளிப்பது இனவரைவியலாகும். ஆனால், இலக்கியவாதி தான் எடுத்துக் கொண்ட எதார்த்த உலகின் மையக்கரு அல்லது சிக்கலைக் கற்பனை கலந்து தன் கருத்தினை ஏற்றி, புதிய ஒன்றாக மாற்றி அளிப்பது இலக்கியமாகும்.

இனவரைவியலாளன் களஆய்வு மூலமே தரவுகள் சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ளான். ஆனால் இலக்கியவாதிக்குக் களஆய்வு அவசியமன்று. பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு இலக்கியம் மட்டும் விதிவிலக்கு ஆகும்.

‘சமூகத்தோடு படைப்பாளி இருக்கும் உணர்வுப் பூர்வமான நெருக்கம் இனவரைவியலாளனுக்கு இருப்ப தில்லை’ (தனஞ்செயன், ஆ. 2006: 44) என்று குறிப் பிட்டுள்ளார். இவ்வாறாக இலக்கியமும் இனவரை வியலும் வேறுபடும் இடங்களை அறியமுடிகின்றது.

முடிவுரை

மேற்கூறப்பட்ட இனவரைவியலும் இலக்கியமும் என்னும் இவ்வாய்வுக் கட்டுரையில் இலக்கியத்தை இனவரைவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை அறியமுடிந்தது. இலக்கியத்திலுள்ள செய்திகளின் தொகுப்புகளை இனவரைவியல் கூறுகள் கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் இலக்கியத்தின் தன்மையையும் அறியஇயலும்.

துணைநூற்பட்டியல்

1. சிவசுப்பிரமணியன், ஆ. 2009. இனவரைவியலும் தமிழ் நாவலும். சென்னை. பரிசில் வெளியீடு.

2. ஞானசம்பந்தன், அ.ச. 1981. இலக்கியக்கலை. சென்னை. மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதர் நூல் நிலையம்.

3.            தனஞ்செயன், ஆ. 2006. விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் இனவரைவியல் ஆய்வு. புதுச்சேரி. மெய்யப்பன் பதிப்பகம்.

4.            பக்தவத்சல பாரதி. 2003. பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம். மெய்யப்பன் பதிப்பகம்.

5.            ........................... 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி. வல்லினம்.

6.            மணவாளன், அ. அ. 2002. இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள். சென்னை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

7.            மாதையன், பெ. 2009. அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும். சென்னை. பாவை பப்ளிகேஷன்ஸ்.

8.            வித்தியானந்தன், சு. 2003. தமிழர் சால்பு. சென்னை. பாரிப்புத்தகப் பண்ணை.

9.            ஸ்டீபன், ஞா. 2010. தொல்காப்பியமும் இன வரைவியல் கவிதையியலும். சென்னை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

10.          அன்பரசன். 2011. பெரும்பாணாற்றுப்படை இனவரைவியல். இளமுனைவர்பட்ட ஆய்வேடு. குப்பம். திராவிடப் பல்கலைக்கழகம்.

11.          கோவிந்தராஜ், ச. 2009. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். முனைவர்பட்ட ஆய்வேடு. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்.

12.          ஞானசௌந்தரி. 2012. இனவரைவியல் நோக்கில் குறுந்தொகை. இளமுனைவர்பட்ட ஆய்வேடு. புதுச்சேரி. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

13.          கதிரைவேற் பிள்ளை, நா. 2005. தமிழ் மொழி அகராதி. சென்னை. சாரதா பதிப்பகம்.

14.          கழகப் புலவர் குழுவினர் (தொகுப்பு). 2004.

கழகத் தமிழகராதி. சென்னை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

15.          சக்திவேல், சு. 1972. மானிடவியல் கலைச் சொல்லகராதி (ஆங்கிலம் - தமிழ்). சென்னை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

16.          நாகசாமி, இரா. 1983. அகராதி நிகண்டு. சென்னை. மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதர் நூல் நிலையம்.

17.          நிலாமணி, மு., தாக்கர்கலா, கே. 2009. தமிழ்-தமிழ் அகராதி. சென்னை. வர்த்தமானன் பதிப்பகம்.

18.          பாலுச்சாமி, நா. 1991. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 4 . தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்.

19.          நர்மதாவின் தமிழ் அகராதி. 2004. சென்னை. நர்மதா பதிப்பகம்.

20.          கலைக்களஞ்சியம், தொகுதி 4. 1954. சென்னை. தமிழ் வளர்ச்சிக் கழகம்.

21.          Tamil Lexicon, volume. I. 1982. Madras: University of Madras.

Pin It