உ.வே.சாமிநாதையர் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் சிறந்து விளங்கியதற்கு முன்னர் படைப்பாசிரியராகச் சிறந்து விளங்கியவர்... மிக இளம் வயது முதலே அவரிடம் படைப்பாசிரியர் பண்பு சிறந்து விளங்கியிருந்துள்ளது. சாமிநாதையர் படைப்புகள் சிற்றிலக்கியம், பக்தியிலக்கியம், சரித்திரம், சுயசரிதை என்னும் வகைகளில் அமைந்து கிடக்கின்றன. சாமிநாதையர் 1878இல் திருவாவடுதுறை ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு எனும் நூலை ஆறுமுகசுவாமியுடன் இணைந்தும், 1883இல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைத் தியாகராச செட்டியாருடன் இணைந்தும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

voc invitation 6001885இல் ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம் நூலைப் படைத்துப் பதிப்பித்து வெளியிட்டதன் வழியாகப் படைப்பாசிரியர், பதிப்பாசிரியர் என ஒருசேர வெளிப்பட்டிருக்கிறார். அக்காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராகவும் அவர் இருந்தார். பதிப்பாசிரியர், நூலாசிரியர், ஆசிரியர் எனும் மூன்று தளங்களிலும் வெளிப்பட்ட சாமிநாதையருக்கு அப்போது வயது முப்பது. 

சாமிநாதையர் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடங்கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் (1874, ஸ்ரீமுக - வைகாசி)ரெட்டியாருக்கு ஒருவகை நோய் ஏற்பட்டிருக்கிறது. அந்நோயால் ரெட்டியார் மிகவும் வருந்தித் துன்புற்றிருக்கிறார். அப்போது ரெட்டியாரின் மூத்த மகன் தம் தந்தையின் துன்பத்தைப் போக்கும் வகையில் சாமிநாதையரிடம் வந்து “நீர் சிறந்த சாம்பவருடைய குமாரர். எங்கள் குல தெய்வத்தின் விஷயமாகப் புதிய தோத்திரச் செய்யுட்கள் பாடினால் தகப்பனாருக்கு அனுகூலமாகலாம்” என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டபடி ரெட்டியாரின் குலதெய்வம் நீலி என்னும் கடவுளின் சம்பந்தமாக இரட்டைமணி மாலை ஒன்றைச் சாமிநாதையர் இயற்றி அளித்திருக்கிறார். அந்த இரட்டைமணிமாலையைப் படைத்தளித்த காலத்தில் சாமிநாதையருக்கு வயது பத்தொன்பது.

சாமிநாதையரின் வரலாற்று வழியே பார்க்கின்றபோது அப்பாடல்களைத்தான் அவரின் முதல் படைப்பாகக் கருத முடிகின்றது. சாமிநாதையர் கடவுள் சம்பந்தமாகப் பல்வேறு சூழல்களில் பாடியிருந்த பாடல்களைத் திரட்டித் தொகுத்துத் தமிழ்ப்பா மஞ்சரி (தொகுதி - 1) என்ற தலைப்பில் 1961இல் கி.வ. ஜகந்நாதன் வெளியிட்ட நூலில் அருளுறை நீலி இரட்டை மணிமாலை எனும் தலைப்பில் அப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

1885ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பகோணம் மகாமக விழாவிற்குப் பின்னர் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரைச் சந்திக்க வந்திருந்த, திருவாவடுதுறை ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலய விசாரணைக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரான், திருவிடைமருதூர் தலப் பெருமையைச் சுருக்கமாக வசன நடையில் எழுதித்தர வேண்டுமென்று தேசிகர் முன்னிலையில் சாமிநாதையரைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி மத்தியார்ச்சுன மான்மியம் என்ற நூலைச் சாமிநாதையர் எழுதி அளித்தார். இவர் வசனநடையில் எழுதிய முதல் நூல் இதுவாகும்.

திருவிடைமருதூர் சம்பந்தமாகக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணத்தைத் துணையாகக் கொண்டு மத்தியார்ச்சுன மான்மியம் நூலைச் சாமிநாதையர் எழுதி முடித்தார். இந்த நூலில், மூர்த்தி, தலம், தீர்த்தங்களின் சிறப்பு, வழிபட்டோர் வரலாறு, திருவிடைமருதூர் விழா மூர்த்தியாகிய ஏகநாயகர் பொருட்டு ஓர் ஊசல், தாலாட்டு ஆகியன அடங்கியிருந்தன.

திருவிடைமருதூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நூலை விரைந்து அச்சிட்டு முடிக்கும் பொருட்டுத் தக்க ஒருவரைச் சென்னைக்கு அனுப்பி அச்சுப் பணியை முடித்துவரச் செய்வதென தேசிகர் முடிவு செய்தார். சாமிநாதையரையே சென்னைக்கு அனுப்பி அச்சுப் பணியை முடித்துவர செய்ய வேண்டுமென தம்பிரானும் தேசிகரும் விரும்பினர். சாமிநாதையர், தேசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி முடிக்கும்பொருட்டுச் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார். சாமிநாதையர் மேற்கொண்ட முதல் சென்னைப் பயணம் இதுவாகும். அக்காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார்; சிந்தாமணி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தார். 

அச்சுக்காகக் கொண்டுவந்த பிரதியை ஜீவரக்ஷ£மிர்த அச்சுக் கூடத்தில் ஒப்படைத்துவிட்டு, அச்சுப் பணியையும் கவனித்துக் கொண்டு இடையிடையே எழும்பூரிலிருந்த சேலம் இராமசாமி முதலியாரைச் சந்தித்துச் சீவகசிந்தாமணி நூலாராய்ச்சிப் பணியையும் செய்து வந்தார்.

இரண்டு வாரங்களுக்குமேல் சென்னையிலிருந்து மத்தியார்ச்சுன மான்மிய அச்சுப் பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுத் திருவிடைமருதூர் சென்றடைந்து சுப்பிரமணிய தேசிகரிடம் அச்சிட்ட பிரதிகளை ஒப்படைத்திருக்கிறார். நன்முறையில் பதிப்புப் பணியை முடித்துவிட்டு வந்த சாமிநாதையரைத் தேசிகர் பாராட்டினார். தம்முடைய முதல் படைப்பைச் சென்னைக்குச் சென்று தாமே முன்னின்று அச்சிட்டு முடித்து வந்ததை நினைந்து சாமிநாதையரும் மகிழ்ந்தார். 

சாமிநாதையர் 1891இல் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம் ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன என்ற நூலை இயற்றிப் பதிப்பித்து வெளியிட்டார். கொழும்பில் வசித்து வந்த சாமிநாதையரின் அன்பரான தி. குமாரசாமி செட்டியார், கொழும்புத்துறை இலந்தைநகரில் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டிமுடித்து, அவ்வாலயத்தில் தண்டபாணி சுவாமி, முத்துக்குமாரர் சாமி சிலைகளை அமைப்பித்திருந்தார். இவ்விரு மூர்த்திகள் சம்பந்தமாகச் சில செய்யுட்களை இயற்றித்தர வேண்டுமென்று சாமிநாதையரிடம் குமாரசாமி செட்டியார் வேண்டியிருந்தார். 

அன்பரின் வேண்டுகோளுக்கு இணங்கித் தண்டபாணி சுவாமி சம்பந்தமாகப் பத்து விருத்தங்களையும், முத்துக்குமாரர் சம்பந்தமாக ஓர் ஊசலையும், எச்சரிக்கையும், ஐந்து கீர்த்தனங்களையும் எழுதி அனுப்பினார். இது தொடர்பாகக் குமாரசாமி செட்டியார், சாமிநாதையருக்கு 29-7-1889, 29-9-1889, 27-10-1889, 2-12-1889 ஆகிய நாட்களில் கடிதம் எழுதியிருக்கிறார். கோயில் சம்பந்தமாக எழுதிய பாடல்களைக் குமாரசாமி செட்டியாரின் பொருளுதவியுடன் கும்பகோணத்திலிருந்த லார்ட் ரிப்பன் அச்சுக்கூடத்தில் சாமிநாதையரே அச்சிட்டு வெளியிட்டார். இவர் எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட இரண்டாவது நூல் இதுவாகும்.

சாமிநாதையர் 1898ஆம் ஆண்டு மணிமேகலைக்கு உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட பின்னர் அதே ஆண்டில் மணிமேகலைப் பதிப்பைச்சார்ந்த மணிமேகலைக் கதைச் சுருக்கம் என்ற நூலையும், மளூர் உ.வே. அரங்காசாரியர் அவர்களுடைய உதவியைக்கொண்டு மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம் என்ற நூலையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார். 

மணிமேகலைக் கதைச்சுருக்கம் என்ற நூல், மணிமேகலை காப்பியத்தின் வழியாக அக்காலத்தில் வழிபடப்பெற்று வந்த தெய்வங்கள், தமிழ் நாட்டின் பழைய அரச நகரமான காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி, காஞ்சி ஆகிய நகரங்களின் அமைப்பு, அரசர்களின் ஆட்சிமுறை, பலவகையான தருமங்கள், அன்னதானத்தின் பெருமை ஆகியனவற்றை எளிதில் படித்தறிந்து கொள்ளும்படியான வசன நடையில் எழுதப்பட்டது. 

மளூர் உ. வே. அரங்காசாரியர் அவர்களுடைய உதவியைக்கொண்டு எழுதிய மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம் என்ற நூலில் புத்தர் பிறந்தது முதல் அவர் நிர்வாணம் அடைந்தது வரையிலான சரித்திரமும், பௌத்த தருமத்தின் பாகுபாடுகளும், பௌத்த சங்கத்தின் இயல்புகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. வரலாற்றுக் குறிப்புகளுக்கு இடையில் மணிமேகலை காப்பியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல் பகுதிகள் உரிய இடங்களில் அமைக்கப் பெற்றுள்ளன. படிப்பவர்களுக்குப் பயன்படும் வகையில் அரும்பதவுரையும், அபிதான விளக்கமும் நூலின் இறுதியாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.

சாமிநாதையர் 1924ஆம் ஆண்டு பெருங்கதையைப் பதிப்பித்து வெளியிட்ட பின்னர் அந்நூலின் கதைப்போக்கைத் தழுவி அதே ஆண்டில் உதயணன் சரித்திரச் சுருக்கம் என்ற உரைநடை நூலையும் எழுதி வெளியிட்டார். கௌசாம்பி நகரத்து அரசரான உதயணன் பிறந்தது முதல் அவர் துறவு பூண்டமை இறுதியாகவுள்ள வரலாறுகளை இந்நூலில் விரித்துரைத்துள்ளார். அந்த வரலாற்றோடு பண்டைக் காலத்து அரசாட்சிமுறை, நகரங்களின் அமைப்பு, சிற்பம் முதலிய கலைகளின் நுட்பங்கள் பற்றியும் புலப்படுத்தியுள்ளார். 

மணிமேகலை, பெருங்கதைக் காப்பியங்களைப் படிக்கப்புகும் வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அந்தக் காலத்தில் தமிழ் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலும் இந்த நூல்கள் அமைந்திருந்தன. 

1920களில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எனும் பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுப் புகழ்பெற்றிருந்த சாமிநாதையரைச் சங்கநூல்கள் தொடர்பான செய்திகளைப் பற்றிப் பத்து சொற்பொழிவுகள் செய்யவேண்டுமென்று சென்னைப் பல்கலைக்கழகத்தார் கேட்டுக்கொண்டனர். பல்கலைக்கழகத்தாரின் வேண்டுகோளுக்கு இசைந்து 7-11-1927 முதல் 21-12-1927 வரையில் பத்து சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவுகள்,

  1. தமிழ்ச்சங்கம் (7-11-1927)
  2. முத்தமிழ் (10-11-1927)
  3. சங்க நூல்களிற் கூறப்படும் தெய்வங்கள் (12-11-1927)
  4. சங்ககாலத்துப் புலவர்கள் ஆண்பாலார் (16-11-1927)
  5. சங்ககாலத்துப் புலமை வாய்ந்த பெண்பாலார் (18-11-1927)
  6. சங்கப் புலவர்களை ஆதரித்த பிரபுக்கள் (7-12-1927)
  7. கலைகள் (10-12-1927)
  8. பண்டை உரையாசிரியர்கள் (12-12-1927)
  9. சங்க காலத்திற்குப் பிறகு தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும் (14-12-1927)
  10. ஆராய்ச்சி (21-12-1927)

என்ற வகையில் அமைந்திருந்தன. அவை 1929ஆம் ஆண்டு சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப் பெற்றன. சங்க நூல்கள் வழியாகத் தெரியவரும் செய்திகளைப் பொதுநிலையில் எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. 

சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் நூலிற்குப் பின்னர் சாமிநாதையர் எழுதி வெளியிட்ட முக்கியமான நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலாகும். மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டில் பிறந்து 1876ஆம் ஆண்டு வரையில் 61 ஆண்டுகள் வாழ்ந்திருந்தவர். சாமிநாதையர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 61 ஆண்டுகால வரலாற்று நிகழ்வை இரு பகுதிகளாக எழுதி வெளியிட்டார். முதல் பகுதி 1933ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த 1815 முதல் 1871ஆம் ஆண்டு சாமிநாதையர் இவரிடம் பாடம் கேட்கத் தொடங்கும் முன்பு வரையிலான வரலாறுகள் இடம்பெற்றிருந்தன.

பிள்ளையவர்களின் வரலாற்றின் இரண்டாம் பகுதியை 1934ஆம் ஆண்டில் வெளியிட்டார். இப்பகுதியில் 1871 ஏப்ரல் மாதத்தில் சாமிநாதையர் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் பிள்ளையவர்களின் இறுதிக் காலம் வரையிலான (1876) வரலாறுகள் இடம்பெற்றிருந்தன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வெளியிட வேண்டுமென்ற எண்ணம் சாமிநாதையருக்கு நெடுநாட்களாக இருந்து வந்திருக்கிறது. சமயம் வாய்க்கும் போதெல்லாம் அதற்கு வேண்டிய குறிப்புக்களைத் திரட்டித் தொகுத்து வந்திருக்கிறார். பிள்ளையவர்களைப் பற்றிய மேலதிகமான செய்திகளைச் சேகரிக்க வேண்டுமென்ற கருத்தில் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் ‘சுதேசமித்திரன்’ இதழில் பிள்ளையவர்களைப் பற்றிய வரலாற்றைத் தாம் எழுதி வருவதாகவும் பிள்ளையவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்து உதவ வேண்டும் என்ற வேண்டுகோளைச் சாமிநாதையர் விடுத்திருந்தார். சாமிநாதையர் வெளியிட்டிருந்த விளம்பரத்தைக் கண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணவர்களுள் ஒருவரும் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தவருமான செ.சவராயலு நாயகர், பிள்ளையவர்களைப் பற்றிய சில செய்திகளைக் குறிப்பிட்டுச் சாமிநாதையருக்குக் கடிதம் எழுதினார்.

சாமிநாதையர், 1902ஆம் ஆண்டு அன்பர்கள் விரும்பியபடி கும்பகோணம் போர்ட்டர் நகர மண்டபத்தில் (Porter Town Hall ) இரண்டு நாளும், கும்பகோணம் கல்லூரியில் ஒருநாளுமாக மூன்று நாள் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சரித்திரம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார். அப்பொழுது கும்பகோணம் கல்லூரி முதல்வராக இருந்த ஜே.எம்.ஹென்ஸ்மன் (J.M. Hensman) உள்ளிட்ட பலரும் சாமிநாதையரின் உரையைக் கேட்டு மகிழ்ந்து விரைவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்கள்.

சாமிநாதையர், இதற்கும் முன்னரே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய நூல்கள் சிலவற்றைத் தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் முதலியவர்களிடத்திருந்தும் வேறு சிலரிடத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்தார். பிள்ளையவர்களின் நூல்கள், வாழ்க்கை வரலாற்றுக்குரிய செய்திகளைத் திரட்டித் தொகுத்த பின்னர் கடிதங்கள், நூற்சிறப்புப் பாயிரங்கள் முதலியவற்றோடு பொருத்திக் காலமுறைப்படி அமைத்து வைத்துக் கொண்டு சரித்திரத்தை எழுதி முடித்திருக்கிறார்.

சரித்திரத்தை எழுதி முடித்த பின்பு தனிப்பாடல்கள், கடிதங்கள் முதலியன கிடைக்கலாமென்னும் எண்ணத்தில், மீண்டும் 30.12.31இல் சுதேசமித்திரன் இதழில் பிள்ளையவர்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்து உதவ வேண்டுமென்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த விளம்பரம் சாமிநாதையருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. அதன் பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தை இறுதி செய்து விரைவாக வெளியிடும் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளார். முதல் பாகத்தை 1933ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகத்தை 1934ஆம் ஆண்டிலும் வெளியிட்டு முடித்தார். தம் வாழ்நாளின் கல்வி சார்ந்த பெரும்பகுதி அனுபவங்களின் துணைகொண்டு சாமிநாதையர் எழுதி வெளியிட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் தமிழ்க் கல்வி வரலாற்றின் ஆவணமாக நின்று நிலவி வருகின்றது. 

சாமிநாதையர், சங்கீதத் துறையில் சிறந்து விளங்கியவர்களான கோபாலகிருஷ்ண பாரதியார், கனம் கிருஷ்ணையர், மகாவைத்தியநாதையர் ஆகிய மூவரைப் பற்றியும் தனித்தனியே கலைமகள் இதழில் தொடராக எழுதி வெளியிட்டு வந்தார். அவற்றை 1936ஆம் ஆண்டு தனித்தனியே நூலாக வெளியிட்டார். அதே ஆண்டு திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற நூலையும் எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்.

சாமிநாதையர் தம் வாழ்நாளின் இறுதிக் காலங்களில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். உத்தமதானபுரத்திலிருந்து மாயூரம் சென்று (1870) மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராகச் சேர்ந்து பயின்ற காலம் தொடங்கி, கல்லூரிகளில் (1880 - 1919) தமிழாசிரியராகப் பணியாற்றியது வரையிலான அனுபவங்களையும், இந்தப் பணிகளுக்கிடையில் பழந்தமிழ்நூல் பதிப்பாக்கத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற காலத்திற்குப் பின்னர் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வந்தார். 

1930 - 1942 எனும் பன்னிரண்டு ஆண்டுகால இடைவெளியில்தான் சாமிநாதையரின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் காலப் பகுதியில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவரின் வயதைக் கொண்டு நோக்கும்பொழுது 75ஆம் வயது முதல் 87ஆம் வயது வரையிலான காலப் பகுதியிலேதான் அவரது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது தெரிகிறது.

பல்வேறு இதழ்களில் எழுதி வெளியிட்டுவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்து பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.அத்தொகுப்புகள் நான் கண்டதும் கேட்டதும் (முதல் பதிப்பு, 1936, இரண்டாம் பதிப்பு, 1938), புதியதும் பழையதும் (முதல் பதிப்பு, 1936, இரண்டாம் பதிப்பு, 1939), நினைவு மஞ்சரி (முதல் தொகுதி, முதல் பதிப்பு, 1940), நல்லுரைக்கோவை (நான்கு தொகுதிகள், முதல் பதிப்பு, 1937, 1938, 1939) என்ற தலைப்புகளில் வெளிவந்தன. இந்தத் தொகுப்பு நூல்களில் 139 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

சாமிநாதையர், வித்துவான் தியாகராச செட்டியாரைப் பற்றிய வரலாற்றைக் கலைமகள் இதழில் விக்கிரம வருடம் தை மாதம் முதல் சித்ராபானு வருடம் ஐப்பசி மாதம் (1940 -1942) வரையில் தொடராக எழுதி வெளியிட்டு வந்தார். அச்சரித்திரம் சாமிநாதையர் மறைவுற்ற அதே ஆண்டில் அவரது திருமகனார் கலியாணசுந்தர ஐயரால் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதழ்களில் வெளியிடப்பெற்று, முன்னர் வெளிவந்த தொகுப்புகளில் இடம்பெறாத சாமிநாதையரவர்களின் கட்டுரைகள் சிலவற்றையும் தொகுத்து நினைவு மஞ்சரி (பகுதி -2) எனும் பெயரில் பதிப்பித்து வெளியிட்டார்.

அதுபோல நினைவு மஞ்சரியின் இரண்டாம் பாகத்தையும் கலியாணசுந்தரமையர் உடனே பதிப்பித்து வெளியிட்டார். சாமிநாதையர் மறைவுற்ற நிலையிலும் அவரது படைப்புகள் வெளிவந்து வாசகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

உ.வே.சாமிநாதையர் தன்னுடைய வரலாற்றை 06. 01. 1940 முதல் ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுதி வெளியிட்டு வந்தார். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் ‘சுயசரிதம்’ வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாமிநாதையரவர்கள் இயற்கையெய்திவிடவே 122 அத்தியாயங்களோடு வரலாறு நின்றுவிட்டது. சாமிநாதையரின் பிறப்பு முதல் (1855), அவர் மணிமேகலையைப் பதிப்பித்து வெளியிட்ட (1898) வரலாறு வரையிலான சரிதம் இந்த 122 அத்தியாயங்களில் இடம்பெற்றிருந்தது. இவற்றை 1950ஆம் ஆண்டு சாமிநாதையரின் திருமகனார் எஸ். கல்யாணசுந்தரமையர் ‘என் சரித்திரம்’ எனும் பெயரில் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ் சுயசரிதை வரலாற்றில் சாமிநாதையரவர்களின் என் சரித்திரம் தனித்த இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தது.

சாமிநாதையரவர்கள் இளமைக் காலம் முதலே செய்யுள் இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்திருக்கிறார்.இளமையில் தொடங்கிய அந்தப் பழக்கம் இறுதிக்காலம் வரையில் அவரிடம் இருந்து வந்திருக்கிறது. பல்வேறு சூழல்களில் பல்வேறு வகையான பாடல்களை அவர் பாடிவந்திருக்கிறார். சாமிநாதையர் அப்பாடல்களைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக இருந்திருக்கவில்லை என்பதால் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அப்பாடல்களை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற விருப்பம் சாமிநாதையரவர்களின் அன்பர்களுக்கு இருந்திருக்கிறது. அவற்றை உணர்ந்து தொகுத்து வெளியிடும் பணியைச் சாமிநாதையருடன் பல்லாண்டுகளாக உடனிருந்து வந்த கி. வா.ஜகந்நாதனிடம் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையத்தார் ஒப்படைத்தனர். 

சாமிநாதையருடைய பாடல்களில் தெய்வத் துதிகளாக இருப்பவற்றை முதல் தொகுதியாகவும், மற்றவற்றை இரண்டாம் தொகுதியாகவும் பிரித்து வெளியிடும் பணியைக் கி.வா.ஜ. செய்தார்.தமிழ்ப்பா மஞ்சரி என்ற பெயரில் அவைகள் வெளியிடப் பெற்றன. தெய்வத்துதிப் பாடல்களைக் கொண்ட முதல் பகுதி 1961ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. 1962இல் தமிழ்ப்பா மஞ்சரியின் இரண்டாம் பகுதி வெளியிடப்பெற்றது.

சாமிநாதையர் தாம் பழகிய பல பெருமக்களைப் பற்றியும் பாடல் இயற்றியிருக்கிறார். பலருக்குச் செய்யுளாகவே கடிதம் எழுதும் பழக்கம் அவரிடம் இருந்தது. அந்தக் கடிதச் செய்யுட்கள் இந்த இரண்டாம் பகுதியில் இடம்பெற்றன. திருவாவடுதுறை ஆதீனத்தில் முதலில் மாணவராகவும், பிறகு ஆதீன வித்துவானாகவும் இருந்து விளங்கிய காலத்தில் ஆதீனத் தலைவர்களாக இருந்த சுப்பிரமணிய தேசிகர், அம்பலவாண தேசிகர், வைத்தியலிங்க தேசிகர் ஆகியவர்களைச் சிறப்பித்துப் பாடிய பாடல்கள் பல இரண்டாம் பகுதியில் இடம்பெற்றன. 

பிறருக்காகப் பாடிக்கொடுத்த பாடல்களும் இப்பகுதியில் இடம்பெற்றன. திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் வேதநாயகம் பிள்ளைக்கு எழுதியனவாகப் பாடிய பாடல்கள், மகாவித்துவான் பிள்ளையவர்களின் கொள்ளுப் பேரர் வைத்தியலிங்கம் பிள்ளை ஆதீன திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கு விண்ணப்பம் செய்து கொள்ளும் வகையில் பாடியளித்த பாடல்கள் என பலவகையான பாடல்கள் இப்பகுதியில் இடம்பெற்றன.

சாமிநாதையரிடம் சிறப்புப் பாயிரத்தைப் பெற்று அமைத்தால், அறிஞர் உலகம் தம்மை நன்கு மதித்துப் போற்றுமென்று கருதி பலரும் இவரிடம் வந்து தம் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய சிறப்புப்பாயிரப் பாடல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றன. சாமிநாதையரவர்களின் பாடல்கள் இரு தொகுப்புகளின் வழியாக வெளிவந்து நிலைபெற்றன.

சாமிநாதையர் இயற்றியிருந்த கயற்கண்ணிமாலையை (அங்கயற்கண்ணி மாலை, கடம்பவனவல்லி பதிகம், ஸ்ரீசுந்தரேசுவரர் துதி என்பவற்றுடன்) அவர் எழுதிவைத்திருந்த குறிப்புகளோடு 1970இல் கி. வா. ஜகந்நாதன் பதிப்பித்து வெளியிட்டார். சாமிநாதையர் இயற்றியிருந்த துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதியை 1995இல் வித்துவான் பாலசாரநாதன் பதிப்பித்து வெளியிட்டார். சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த இவ்விரண்டு நூல்களும் சென்னையில் உள்ள மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக வெளிவந்தன. 

சாமிநாதையரின் முதல் படைப்பு 1885ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்று முதல் அவரது இறுதிக்காலம் வரையில் (1942) அவரது படைப்புகள் வெளிவந்து கொண்டேதான் இருந்தன. சாமிநாதையரின் இறப்பிற்குப் பின்னர் கையெழுத்துப் பிரதிகளாக இருந்து வரும் அவரது படைப்புகள் அன்பர்களால் பதிப்பித்து வெளியிடப்பெற்று வருகின்றன. இவைகள் சாமிநாதையரவர்களின் பன்முகத் தன்மையினை மேலும் மேலும் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

இணைப்பு - 1

உ.வே. சாமிநாதையரவர்கள் படைப்புகளின் வெளியீட்டு விவரங்கள் (காலவரிசை) ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம், ஸ்ரீஏகநாயகரூசல், ஸ்ரீஏகநாயகர் தாலாட்டு, இவை திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் மேற்படியூர் ஆதீன வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கராகிய கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வே. சாமிநாதையரால் மேற்படியூர் ஆதீனத்துக் காறுபாறு சுப்பிரமணிய சுவாமிகளுத்தரவின்படி செய்யப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: ஜீவரக்ஷமிர்த அச்சுக்கூடம், பார்த்திப - வைகாசி, 1885.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம் ஸ்ரீ முத்துக்குமாரர் ஊசல் முதலியன, இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் சாமிநாதையரால் இயற்றப்பட்டு பதிப்பிக்கப்பட்டன, கும்பகோணம்: லார்ட் ரிப்பன் அச்சுக்கூடம், 1891.

மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த மணிமேகலைக்கதைச் சுருக்கம், இது கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் எழுதிப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம், 1898.

மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம், மளூர், ஸ்ரீமத் உ. வே. அரங்காசாரியரவர்களுடைய பேருதவியால் இயற்றி, கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடம், 1898.

உதயணன் சரித்திரச் சுருக்கம், உத்தமதானபுரம் மஹாமஹோபாத்தியாய வே. சாமிநாதையரால் பெருங்கதையென்னுந் தமிழ்நூலிலிருந்து வசனமாக இயற்றப்பெற்றது; இஃது அரும்பதவுரை, அபிதான விளக்கங்களுடன் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: கமர்ஷியல் அச்சுக்கூடம், 1924.

சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், சென்னை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் சென்னை ஸர்வகலாசங்கத்தார் விரும்பியபடி செய்த உபந்யாசம், இது சென்னை ஆனந்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது, 1929.

திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதற்பாகம், இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரால் எழுதப் பெற்றுப் பதிப்பிக்கப் பெற்றது, சென்னபட்டணம்: கேசரி அச்சுக்கூடம், 1933.

திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், இரண்டாம் பாகம், இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரால் எழுதப்பெற்றுப் பதிப்பிக்கப்பெற்றது, சென்னபட்டணம்: கேசரி அச்சுக்கூடம், 1934.

கோபாலகிருஷ்ணபாரதியார், கீர்த்தனங்களுடன், மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936.

கனம் கிருஷ்ணையர், கீர்த்தனங்களுடன், மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936.

திருவள்ளுவரும் திருக்குறளும், மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உ.வே. சாமிநாதையர் எழுதியது, மெட்ராஸ்: மெட்ராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், 1936; கார்டியன் அச்சுக்கூடம், 1936.

மகாவைத்தியநாதையர், மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936.

கட்டுரைத் தொகுப்பு நூல்கள்

புதியதும் பழையதும் (கட்டுரைத் தொகுப்பு), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936.

நான் கண்டதும் கேட்டதும், ஆசிரியர்: மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர், முதற் பதிப்பு, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936.

நல்லுரைக்கோவை (முதல் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக்கூடம், 1937.

நல்லுரைக்கோவை (இரண்டாம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக்கூடம், 1937.

நல்லுரைக்கோவை (மூன்றாம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக்கூடம், 1938.

நான் கண்டதும் கேட்டதும், ஆசிரியர்: மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர், இரண்டாம் பதிப்பு, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1938.

நல்லுரைக்கோவை (நான்காம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக்கூடம், 1939.

புதியதும் பழையதும் (கட்டுரைத் தொகுப்பு), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1939.

புதுக்கோட்டை ஸமஸ்தானம் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் கலைமகள் திருக்கோயில் திறப்புவிழாவில் ஸ்ரீமகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் பேசிய முன்னுரை, மெட்ராஸ்: மெட்ராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், 1939.

நினைவு மஞ்சரி, (முதற் பாகம்), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1940.

இறப்பிற்குப் பின் வெளிவந்த நூல்கள்

நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, இது மேற்படி ஐயரவர்கள் குமாரர் எஸ். கலியாணசுந்தரையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1942.

வித்துவான் தியாகராச செட்டியார், மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் எழுதியது; இது மேற்படி ஐயரவர்கள் குமாரர் எஸ். கலியாணசுந்தரையரால் பதிப்பிக்கப்பெற்றது; மதராஸ்: மதராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், 1942.

என் சரித்திரம் (1940 முதல் 1942 மே மாதம் வரையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘சுயசரிதம்’ எனும் பெயரில் எழுதியவற்றைத் தொகுத்து வெளியிட்ட நூல்), ஐயரவர்கள் குமாரர் எஸ். கலியாணசுந்தரையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1950.

தமிழ்ப்பா மஞ்சரி, முதற்பாகம் (தெய்வத்துதிப் பாடல்கள்), பதிப்பாசிரியர்: கி. வா. ஜகந்நாதன், சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 1961

நீலி இரட்டை மணிமாலை, தமிழ்ப்பா மஞ்சரி - தொகுதி - 1, பதிப்பாசிரியர்: கி. வா. ஜகந்நாதன், வெளியீடு, சென்னை: மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், 1961.

கும்பேசர் வெண்பா அந்தாதி, தமிழ்ப்பா மஞ்சரி - தொகுதி - 1, பதிப்பாசிரியர்: கி.வா. ஜகந்நாதன், வெளியீடு, சென்னை: மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், 1961.

தமிழ்ப்பா மஞ்சரி, இரண்டாம் பாகம், பதிப்பாசிரியர்: கி. வா. ஜகந்நாதன், சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 1962.

கயற்கண்ணிமாலை (அங்கயற்கண்ணி மாலை, கடம்பவனவல்லி பதிகம், ஸ்ரீசுந்தரேசுவரர் துதி என்பவற்றுடன்), உ.வே.சா. எழுதிவைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு கி. வா. ஜகந்நாதன் பதிப்பித்து வெளியிட்ட நூல், வெளியீடு: சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 7 - 11 - 1970.

துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி, பதிப்பாசிரியர்: வித்துவான் பாலசாரநாதன், வெளியீடு, சென்னை: மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், 1995.

இணைப்பு - 2
உ.வே.சாமிநாதையரவர்கள் படைப்புகளின் முதல் பதிப்பு மறுபதிப்புகளின் விவரம்

voc II 1

 voc II 600

voc III 600

Pin It