உலகத்தில் நடந்த பெரும் மாற்றங்கள் அனைத்தும் பெரும் அரசியல் சிந்தனைகள் கொண்டவர்களால் செயல்பாட்டின் மூலம் நடத்தப்பட்டது. பெரும் வியத்தகு சமூக மாற்றங்களை விஞ்ஞானிகளோ, அறிவுஜீவிகளோ அல்லது அதிகாரிகளோ கொண்டு வரவில்லை. அனைத்தும் அரசியல் தலைவர்களால் வந்தவைகள். மற்றவர்கள் அதற்கு உதவிகரமாக செயல்பட்டிருப்பார்கள். மக்கள் சமூகத்திற்குள் செல்லக்கூடிய ஆற்றலும் சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற கடப்பாடும் அரசியல் தலைவர்களிடம்தான் இருந்து வந்துள்ளது. அந்த தலைமைத்துவத்தில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு வகையான தலைமைத்துவத்திற்கும் ஏற்ற வகையில் அணுகுமுறைகள், வழிமுறைகள், யுக்திகள் கடைப்பிடிக்கப்படும். இந்தத் தலைமைத்துவம் பற்றி மிக அதிக அளவில் ஆய்வுகள் வரவில்லை. மாறாக அவைகள் அனைத்தும் தனிமனித வரலாறாகத்தான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று தலைமைத்துவம் என்ற பெயரில் எல்லையில்லா அளவுக்கு ஆய்வுகள் செய்து புத்தகங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவற்றைப் படித்துவிட்டு தலைமைத்துவம் பற்றி மக்கள் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகின்றனர். இந்தத் தலைமைத்துவம் என்பது சந்தைக்கானது, வணிகத்திற்கானது, லாபம் ஈட்டுவதற்கானது. அந்தத் தலைமைத்துவம் மக்களை வழிநடத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவம் அல்ல. மக்களை எப்படிச் சுரண்டலாம் என்பதற்கு அந்தத் தலைமைத்துவத்தில் வழி இருக்கலாம். எனவே சந்தைத் தலைமைத்துவம் பற்றி மக்கள் தலைவர்களிடம் விவாதிப்பது அவர்களுக்கு தவறான வழிகாட்டுவதாகும்.

அடுத்து மற்றொரு நிலையில் தலைமைத்துவம் என்பது செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தலைமைத்துவத்தைப் பற்றி யாரும் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை, ஆராய்ச்சி செய்வதும் இல்லை. அப்படிப்பட்ட மனிதர்களை நாம் பெரிதாகப் போற்றி மதிப்பதும் இல்லை. ஆனால் அந்தத் தலைமைதான் உலகத்தில் பெரும்பான்மையான நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் தேவைப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகமய பொருளாதாரத்தால் விளைந்த எல்லை இல்லா ஏற்றத் தாழ்வுகளும், புறக்கணிப்புகளும், இயற்கை அழிப்புக்களும் ஆங்காங்கே புதிய தலைமையைத் தேடி ஏங்கி நிற்கின்றன சமூகங்கள். யாரின் துணையும் இன்றி, மனித சமுதாயத்தின் மீது நம்பிக்கையும், மாறா அன்பும் பற்றும் கொண்டு தொடர்ந்த சமூக அடிப்படை மாற்றங்களுக்காக பலர் செயல்பட்டு வருகின்றனர். அந்தத் தலைமைதான் இன்று ஆயிரக்கணக்கில் நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் தேவை. இவர்கள் மக்களுடன் மக்களாகச் செயல்படக் கூடியவர்கள். செயல்பட்டும் கொண்டிருக்கின்றனர். இந்தத் தலைமைத்துவம் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு. ஆனால் இந்தத் தலைமைதான் நமது இன்றைய உள்ளாட்சிகளுக்குத் தேவை.

ஒரு கிராமத்து தையல்காரர் வாரத்தில் ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீருடையில் உள்ள கிழிசலை கூலி வாங்காமல் தைத்துக் கொடுத்து விடுகிறார். ஒரு நாளை சமுதாயத்திற்கு ஒதுக்கி விடுகிறார். அதேபோல் லட்சக்கணக்கான பனை விதைகளை ஊர் ஊராகச் சென்று குளக்கரைகளிலும், பொது இடங்களில் புதைத்து மக்கள் பங்கேற்போடு வளர்த்து வருகிறார். நம்மாழ்வாரோடு பயணித்து ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்து நஞ்சில்லா உணவு தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தை விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கி வருகிறார். ஆதிவாசிக் குழந்தைகள் படிப்பதற்கு காட்டுப்பள்ளி ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றனர் ஓர் இளைஞர்கள் கூட்டம். ஒரு சுய உதவிக் குழுவை உருவாக்கி, சீட்டுப்பிடித்து, பால்மாடு வாங்கிக் கொடுத்து, பால் வணிகம் செய்ய வைத்து நூற்றுக்கணக்கான குடும்பங்களை வறுமையிலிருந்து வெளியேற்றிய சாதனையை ஒரு படிக்காத பெண் செய்துள்ளார் என்பதை எப்படிப் பார்ப்பது?

கிராமத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்களைப் பார்த்து விட்டு, கோவில் பணம் வங்கியில்தானே வைத்துள்ளோம், அவற்றை எடுத்து இந்த இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை செய்ய வைத்து அந்த இளைஞர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியதுடன், கோவில் பணத்தை வட்டியின் மூலம் பெருக்கிய செயல்பாட்டை என்னவென்று பார்ப்பது? பொறியியலில் பட்டம் பெற்று உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா செல்ல இருந்த பெண், சாதாரண இளைஞர்கள் களத்தில் சாதாரண மனிதர்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதை பார்த்துவிட்டு தனக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்த கல்விச் சேர்க்கைக்கான உத்தரவை பெற்றோர்களுக்குத் தெரியாமல் கிழித்து எரிந்துவிட்டு, சமூக மாற்றத்திற்காகச் செயல்படும் இளைஞர்களுடன் இணைந்து தூய்மை துப்புரவு, குப்பை மேலாண்மையில் ஆய்வுச் செயல்பாட்டில் இறங்கியதை என்னவென்று பார்ப்பது? கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி கிராமப்புற மேம்பாட்டுக்காக என்னென்ன திட்டங்கள் எந்தெந்தத் துறைகள் மூலம் நடைபெறுகிறதென்பதை தெரிந்து, அந்தத் திட்டச் செயல்பாடுகளில் ஒரு பைசா கூட யாரும் கை வைக்காமல் பாதுகாக்க கிராம சபையில் பங்கேற்று ஊர் மக்களைச் செயல்பட வைத்த அந்த இளைஞரை என்ன என்று அழைப்பது?

இப்படி எண்ணிலடங்கா இளைஞர்கள் சிறிய சிறிய பணிகளை அர்ப்பணிப்புடன் தான் இயங்கக்கூடிய இடங்களில் செய்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளின் மூலம் பெரும் மாற்றங்கள் வருவதன் அடிப்படையில் அப்படிச் செயல்படும் மனிதர்களின் மேல் எல்லையற்ற அன்பையும் நம்பிக்கையும் பொதுமக்கள் வைத்துச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு யாரும் அதிகாரங்களை சட்டத்தின் மூலம் அளிக்கவில்லை, இவர்களுக்கு நிதியை யாரும் அவர்கள் வங்கிக் கணக்கில் போடவில்லை. இவர்களை பொதுமக்களும் தேடி மனுச் செய்யவில்லை. மாறாக மானுடத்தின் மீது மாறா அன்பும் பற்றும் கொண்டு பொறுப்புக்களை தங்கள் தோள்களில் தாங்களே எடுத்து வைத்துக் கொண்டு தன்னை இழந்து செயல்படும் மனிதர்களை நாம் தலைவர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக அவர்களை தன்னார்வலர்கள் என்று அழைக்கின்றோம்.

இவர்களை தலைவர்கள் என்று யாரும் அழைப்பதில்லை. ஏனென்றால் இவர்கள் நிறுவனங்களில் உள்ள பதவிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்வதில்லை. நிறுவனங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமரும்போது அதற்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது அதுதான் தலைவர், உபதலைவர். இந்த நிறுவனங்களில் பதவிகளில் அமரும்போது அந்தப் பதவிகளுக்கான பொறுப்புக்கள் சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்புக்களை கட்டாயக் கடமைகளாகக் கருதி பணி செய்ய வேண்டும். அவைகள் அனைத்தும் விதிக்கப்பட்ட பணிகள். தலைவர்கள் என்பவர்கள் விதிக்கப்பட்ட பணிகள் மட்டும் செய்வதற்கு வந்தவர்கள் அல்ல இவர்களுடைய பணிகள் ஒப்படைக்கப்பட்ட பணிகளைத் தாண்டி மக்களின் உணர்ந்த தேவைகளுக்கென தீர்வினை சட்ட வரையறைக்குள் காண்பதும், தான் பொறுப்பேற்ற பகுதியின் மேம்பாட்டை ஒரு கனவின் மூலம் திட்டமிட்டுச் செயல்படுவதும், சமூக மேம்பாட்டுக்கான செயல்பாடுகளில் மக்களுக்கு வழிகாட்டி பங்கேற்க வைப்பதும் மிக முக்கியமான பணிகள் என்ற புரிதலுடன் செயல்பட்டால்தான் அவர்கள் தலைவராக முடியும்.

அடிப்படையில் தலைவர்கள் எதனால் அளவீடு செய்யப்படுகிறார்கள் என்றால் சாதனைகளின் தன்மையால்தான். எனவே பதவிகளில் இருப்போர் எப்பொழுது தலைவர்களாக ஆகின்றார்கள் என்றால் தங்கள் சாதனைகள் மூலமாகத்தான். தலைவர்களுக்கு கட்டியங்கூறுவது, வரலாற்றில் பதியும் அளவுக்கு அவர்கள் செய்கின்ற சேவைகள்தான். தலைவருக்கான அடையாளங்கள் என்னென்ன என்பதுதான் அடுத்த கேள்வி. தலைவர் என்று கூறும்போது மிகத் தெளிவாக எதற்குத் தலைவர் என்பதை விளக்கி விட்டால், அதற்கான அடிப்படைக் கூறுகளை நாம் இனம் கண்டு விடலாம். நாம் இன்று விவாதிப்பது உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

பிரதிநிதிகள் பற்றித்தான் விவாதித்துக் கொண்டுள்ளோம். எனவே அவர்களுக்கான தலைமைத்துவம் பற்றித் தான் நாம் விவாதிக்க வேண்டும். மக்களாட்சியில் மக்கள் பிரதிநி­திகளுக்குத் தேவையான அடிப்படைகள்தானே நாம் பார்க்க வேண்டும். உண்மைதான் ஆனால் இன்று இந்தியாவில் உருவாக்கிய உள்ளாட்சிகள் அரசாங்கமாக உருவாக்கி, அவற்றை ஆளுகை செய்ய எப்படிமக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வழி செய்திருக்கிறார்கள் என்றால் 50% பெண்களும், தலித்துக்களுக்கு அவர்கள் ஜனத்தொகைக்குத் தகுந்த அளவில் இட ஒதுக்கீடு என்று பார்க்கும்போது 70% மான மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சியில் இதுவரை புறந்தள்ளப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், விளிம்புநிலை மக்களிலிருந்தும் வந்துள்ளனர். எனவே இவர்கள்தான் பொறுப்புக்களை ஏற்று, அதிகாரத்தை எடுத்து இதுவரை மத்திய, மாநில அரசுகளால் சென்றடைய முடியாத மக்களை அடைந்து அடிப்படை மாற்றத்தை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பங்கேற்க வைத்து கொண்டுவர வேண்டும். அதற்கான திறன் வளர்ப்பு, ஆற்றல் மேம்பாடு, பார்வை உருவாக்கம் எனச் செயல்பட வேண்டும்.

இங்கு வரக்கூடிய பிரதிநிதிகளுக்கு வித்தியாசமான தலைமைத்துவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்திய சமூகம் பல்வேறு ஆதிக்க பார்வை கொண்டு இயங்கும் தன்மை கொண்டது. அந்த ஆதிக்கங்களை மக்கள் ஆதரவுடன் உடைத்து சமத்துவம் கொண்டுவர வேண்டும். இந்த சமத்துவம் சமூக பொருளாதார சமத்துவமாகும். இதற்கு சமூக நீதி பற்றிய பார்வையும் அதை அடைந்திடும் வழிமுறையும் புரிந்திருக்க வேண்டும். அடுத்து இந்த உள்ளாட்சியில் கடையனுக்கும் கடைத்தேற்றம்தான் இதன் தலையாய பணி. அதைத்தான் சிந்தனையில் கொண்டு செயல்பட வேண்டும். அடுத்து உள்ளாட்சியை எது அடிப்படைப் பணி என்ற புரிதலை ஏற்படுத்தாமல் இதுவரை உள்ளாட்சி என்பது சாலை அமைத்தல், தண்ணீர் வினியோகம், தெருவிளக்கு பராமரித்தல், சிறுபாலம் கட்டுதல், சிறு சிறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்தல் என்ற நிலையில் வருகின்ற நிதிக்கு பணி செய்யும் ஓர் அமைப்பாகவே உள்ளாட்சியை வைத்திருக்க தேவையான ஒரு மனோபாவத்தைத் தான் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

முதலில் உள்ளாட்சித் தலைவர்கள் எது அடிப்படை மாற்றம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் சமத்துவத்துடன் ஒருவரையொருவர் மதித்து ஆதிக்கமற்று செயல்பட்டு வாழ வேண்டும். அங்கு மேம்பாடு என்பது அனைவருக்குமானது, அனைவரையும் உள்ளடக்கியது அத்துடன் கடையர்களுக்கு முன்னுரிமை என்ற பார்வையில் செயல்படுவது. அரசு தந்துள்ள வாய்ப்புக்கள் அது சட்டமாக இருந்தாலும் அல்லது திட்டமாக இருந்தாலும் அவைகள் அனைத்தும் அரசாங்கம் போடும் பிச்சையல்ல, பயன்கள் அல்ல, அவைகள் அனைத்தும் மக்களின் உரிமைகள் என்ற பார்வையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சாதாரண மக்களை, உழைத்து வாழும் மக்களை மரியாதையுடன் நடத்த மனநிலை பெற்றிருக்க வேண்டும். அடுத்து எல்லாத் தரப்பு மக்களும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களும் விளிம்பு நிலை மக்களும் ஒரு மதிக்கத்தக்க மரியாதையுடைய மானுட வாழ்வை, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழத் தேவையான எல்லா அடிப்படை வசதிககளையும் செய்து அறிவியல் அடிப்படையில் வாழ்வை நடத்திடத் தேவையான ஒரு விழிப்புணர்வையும் மனோபாவத்தையும் உருவாக்க வேண்டும். இதற்கு என்ன தேவை? முதலில் இவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், அடுத்து வசிப்பிடம் துப்புரவு மற்றும் தூய்மையுடன் வாழ்விடமாக மாற தேவையான வசதிகள் செய்திடல் வேண்டும், இவர்களின் குடிநீர்த் தேவை புரிதலுடன் தேவையான அளவுக்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் வழங்கப்படல் வேண்டும். சமூகத்தில் வளர் இளம் பெண்கள் ரத்த சோகையின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் திருமண வயது எய்திய உடன் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய தேவையான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் திருமணம் ஆகும் நிலையில் 42 கிலோ எடையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திருமணமான பெண்கள் கர்ப்பமுற்று இருந்தால் அரசு தரும் திட்டங்கள் மூலம் அவர்களின் கர்ப்பகால கவனிப்பு நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து குழந்தை பிறப்பு மருத்துவமனையில் நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த கர்ப்பிணிப் பெண் நிறைந்த எடையுடன் குழந்தை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை பிறப்புக்குப் பின் குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக வாழ பேருகாலக் கவனிப்பு முறையாக நடக்கிறதா என்று கவனிக்க வேண்டும். குழந்தை ஊட்டச்சத்து குறைவு என்ற நிலையில் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்விடத்தில் தூய்மை பேணுவதும் குழந்தைகளை வளர்ப்பதில் சத்துணவின் முக்கியம் அறிதலும், வளர் இளம் பெண்கள் ரத்த சோகையின்றி வாழ்வதன் முக்கியத்துவம் அறிதலும், தூய்மையான தண்ணீரின் முக்கியத்துவம் அறிதலும், குழந்தை கருவுற்ற நாளிலிருந்து 2000 நாட்களுக்கு குழந்தைகளைப் பேணிக் காப்பதன் அவசியம் அறிந்தும், ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம் அறிந்தும் செயல்பட தேவையான ஓர் புரிதலை, பார்வையை, விழிப்புணர்வை மக்கள் பிரதி­நிதிகள் உருவாக்கிக் கொண்டு, மக்களிடமும் உருவாக்கிட வேண்டும். இந்த அடிப்படைப் பணிகள் நடந்திட்டால் ஏழைகள் மேம்படுவர். இந்த மாற்றங்களைத் தான் அடிப்படை மாற்றங்கள் என்று வரையறுக்கப்படுகிறது.

இந்தப் பணிகளைத்தான் உள்ளாட்சிகள் செய்திட பணிக்கப்பட்டுள்ளது. ஒரு தலைவர் என்பவர் முதலில் மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவைகளைத் தீர்க்க தன் கனவின் மூலம் வழிமுறை காண்பவர். தலைவர்களுக்கு மக்கள்மேல் மாறா அன்பும் பற்றும் இருக்க வேண்டும். அவர்களை மதித்து நடத்தும் மனநிலை தலைவர்களுக்கு வேண்டும். மக்களுக்கு கடமைப்பட்டவர், என்ற உணர்வில் மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பது, மக்களுடன் மக்களாக வாழ்வது, மக்களின் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது, சவால்களாக மக்கள் பிரச்சினை வரும்போது அவைகளை சமாளித்து தீர்வினைக் காணும் ஆற்றல் படைத்தவராக தங்களை உருவாக்கிக்கொள்வது, மக்களுடன் பணி செய்யும் பாங்கினைப் பெறுவது, மக்களுக்கு மேம்பாட்டுக்கான நம்பிக்கையைத் தருவது, மக்களை எல்லா மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்கு பெறத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பணியில் ஒன்றி நிபுணத்துவத்துடன் செயல்படும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவது, எப்பொழுதும் மக்களுடனும், பணிக்குத் தேவையான நிபுணர்களுடனும், ஊடகத்துடனும், அதிகாரிகளுடனும் உள்ளார்ந்த தொடர்பில் இருப்பது, தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு புதுமைகள் நோக்கிப் பயணிப்பது, மக்கள் பார்வையில் மேம்பட்டவராக மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சிந்தனையை, பார்வையை, நடத்தையை, செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு செயல்படுவது போன்ற குணங்களைக் கொண்டவராக ஒவ்வொரு மாமன்ற உறுப்பினரும் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அச்சமற்று நேர்மையுடன், சமூக கரிசனத்துடன் செயல்படும் பாங்கினைப் பெற்று இருத்தல்தான் அடிப்படை மாற்றங்களைச் செய்யவல்ல தலைமை. அந்தத் தலைமைதான் இன்றைய தேவையாக இருக்கின்றது.

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It