கீற்றில் தேட...

1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும் கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகி விட்டார்.

புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார்.nateshஅலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை என்று ஞாபகம். எம் எப் ஹூசைன் போல பரந்த வெளிகளை கலைக்குப் பயன்படுத்தும் உத்வேகம் நடேஷ் உடையது.

இலக்கிய நண்பர்கள் பத்துபேர் மட்டுமே பங்குகொண்ட எனது பதிவுத் திருமணத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் சீக்கிரம் குட்டி போட்டுடு ராஜா என்று ஆசீர்வாதம் செய்தார். எனது முதல் கவிதைத் தொகுப்புக்கு யார் பதிப்பாளர் என்பது தெரிவதற்கு முன்னரே அவரது ஓவியக் கித்தான்கள் மூன்றை நான் எனது பேக்கில் வைத்து ஓவியம், இலக்கியம் தெரியாத எனது உறவினர்களிடமும் விரித்து விரித்துக் காட்டியது எனக்கு இப்போது ஞாபகத்தில் உள்ளது.

ந. முத்துசாமியின் மகனாக இருப்பினும் இலக்கியவாதிகளின் நண்பர்களாக இருந்தாலும் குறைவான புத்தக அட்டைகளிலேயே அவர் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது. அவரது சித்திரங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் எனது பெயர் பலருக்கு ஞாபகமாக இருப்பதற்குக் காரணமான ‘சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்’ கவிதையைக் கொண்டாடி அவர் வரைந்து தந்த சித்திரம் அந்தப் படைப்புக்கு கூடுதல் வலுவைத் தந்தது. தீராநதி இதழில் அந்தப் படத்துடன் சேர்ந்தே வெளியானது.

2001இல் வெளிவந்த எனது முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுதியின் அட்டையும் என் கவிதைகளின் பயணமும் அவருடைய ஓவியத்திலிருந்தும் தொடங்கியது எனது பேறுதான். தமிழின் அபூர்வமான சிறுகதைத் தொகுதியான ந. முத்துசாமியின் நீர்மை தொகுதிக்கு நடேஷ் வரைந்த கோட்டோவியம் இன்றும் வலுவான உணர்வை அளிப்பது. தந்தையின் உள்குணத்தையும் சேர்த்து ந.முத்துசாமிக்கு ஆதர்சமாக தத்துவஞானி குர்ஜிஃப்பின் முகமும் உள்ளே இருக்க வரைந்திருப்பார். சாரு நிவேதிதாவின் நேனோ சிறுகதைத் தொகுதிக்கு வரைந்த அட்டைப்படமும் வலுவானது. மௌனியின் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வரைந்த அட்டைப்படமும் முக்கியமானது.

நடேஷ் எனக்கு அறிமுகமானதற்குப் பிறகுதான் ந. முத்துசாமியும் அவர் மனைவியும் எனக்கு அவர்கள் வீட்டில் அறிமுகமானார்கள்.

ந. முத்துசாமி, நடேஷ், கோணங்கி, நான் நால்வரும் ஒரு மாருதி வேனில் நகரத்தில் குடித்துக் கொண்டே பேசியபடி அலைந்து திரிந்த ஒரு இரவு மறக்க இயலாதது. 2004-2005 ஆக இருக்கலாம். வள்ளுவர் கோட்டம் அருகே வேலு மிலிட்டரி ஹோட்டல் பாரில் எங்கள் சாயங்காலம் தொடங்கியது. அதற்குப் பிறகு மகாத்மா காந்தி சாலையில் உள்ள காவேரி ஒயின்ஸுக்கு வந்துசேர்ந்தோம். ந. முத்துசாமிக்கேயுரிய ஆகிருதியும் கம்பீரமும் போதையில் அதிகரித்திருந்தது. சொல்லுங்க என்பது போன்ற தொனியில் மாருதி காரின் சீட்டை ஒரு அரியணையாக அந்த இரவில் மாற்றியிருந்தார்.

வேளச்சேரியில் இயங்கிவந்த எம்.டி.முத்துக்குமாரசாமியின் தேசிய நாட்டார் வழக்காற்றியல் உதவி மைய வளாகத்தில், எம்டிஎம்மின் நெருங்கிய தோழர் என்பதால், நடேஷின் வருகை அடிக்கடி நிகழ்ந்ததும் அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக கவிதை மொழியில் தனது அவதானிப்புகளை டைரிக் குறிப்புகளைப் போல எழுதியவர். முத்துசாமியின் நாடக மொழி உச்சம் கொண்ட, அதேநேரத்தில் நேர்கோட்டுத் தன்மையில்லாத உரைநடை அது. அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்து நான் மணல் புத்தகம் இதழிலும் பிரசுரித்துள்ளேன். புலிகளைத் தொடர்ந்து ஓவிய வரிசையாக இட்டபோது புலி என்ற உருவத்தின் மீது எனக்கும் பெரிய மயக்கம் ஏற்பட்டது. அப்போது ‘புலிதான் எனது படிமம்’ என்ற கட்டுரையை மணல் புத்தகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கோட்டுச் சித்திரங்களை ஆங்கிலத்தில் ‘Before becoming blind’ என்ற நூலை வெளியிட்டு அது எனது கைகளுக்கு புத்தம்புதிதாக வந்து சேர்ந்தபோது அதன் தலைப்பு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நடேஷுடனான பழக்கம் குறைந்த நிலையில் எம் டி முத்துக்குமாரசாமிதான் அவருக்கு நீரிழிவால் கண் பார்வை வேகமாகக் குறைந்து வருவதைச் சொன்னார்.

அந்த நூலை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இடம்கேட்டு சி. மோகன், எம் டி முத்துக்குமாரசாமி, ஏ எஸ் பன்னீர்செல்வம், அபராஜிதன் எல்லாரையும் ஒருங்கிணைத்து ‘Before becoming blind’ நூலுக்கு ஒரு நண்பர்கள் சந்திப்பைக் கூட்டம்போல நான் ஏற்பாடு செய்ததுதான் எனக்குக் கடைசியாக இருக்கும் ஒரு நிறைவு. ஓவியனுக்கு கண் தெரியாமல் போகும் வேதனை எப்படியானது?

ஓவியர் நடேஷைக் கடைசிவரை எம்.டி.முத்துக்குமாரசாமி பார்த்துவந்தது எனக்குத் தெரியும். கூத்துப்பட்டறைக்காக தனது கவிதைகளை அக்காலகட்டத்தில் நாடகமாக்கமும் செய்து கொண்டிருந்தார் எம்.டி.எம். அவருக்கு நடேஷின் மறைவு பெரும் இழப்பு.

ஆதிமூலம் போல, மருது போல ஒரு பெரிய கலை ஆளுமையாக இன்னும் அதிகமாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்க வேண்டியவர் நடேஷ். நவீன நாடகங்களுக்கு லைட்டிங் அமைப்பதில் முக்கியமான ஆளுமையாகப் பார்க்கப்படுபவர். புதிய கலைவடிவமான இன்ஸ்டாலேஷன் என்னும் நிர்மாணக் கலையில் நடேஷ் இங்கே முன்னோடி.

முத்துசாமி இறந்துபோய், அம்மாவும் இறந்துபோய் அவர்கள் ஆதரவிலேயே இருந்துவந்த நிலையில் பாதி சீவன் போன நிலையிலேயே நான் நடேஷை இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். ஒரு காலையும் எடுத்திருந்தார்கள். அவர் வரைந்து வைத்திருந்த சில கோட்டுச் சித்திரங்களை அனுமதி பெற்று பொறுக்கி வந்தேன். நன்றி நடேஷ். போய் வாருங்கள்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணியாற்றிய போது ஆசையுடன் செய்த நேர்காணல்களில் ஒன்று நடேஷ் உடையதுஞ் அதில் அவர் தனது முழு குணம், மணத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உள்ளது. அதுவே இன்றைய ஆறுதல்.

“எனது சித்திரம் என் வாழ்வை நடத்த நான் அனுமதித்தேன். படைப்புக் காரியத்தில் அடைக்கல உணர்வே கிடையாது. வேலை முடிந்தவுடன் அங்கே உரிமைத்துவம் போய்விடுகிறது” என்று சொன்ன நடேஷ் தனது வாழ்க்கையிலிருந்தும் உரிமையைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்.

(நன்றி: தமிழ் இந்து திசை)

- ஷங்கர்ராமசுப்ரமணியன்