ஜெயகாந்தன் (1934-2015) கடந்த 8-4-2015 இரவு மறைந்தார். எக்காலத்தும் பேசப்படும் ஆளுமை யான ஜெயகாந்தன், தமிழ்ச் சமூகத்தில் தனது ஆக்கங்கள் என்னும் அடையாளங்கள் மூலம் சுமார் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து செயல் பட்டவர். இறுதிக் காலமான 1990-2015 என்ற இடைவெளியில் எழுதுவதை நிறுத்திக்கொண்டவர். 1950-1990 என்ற நாற்பது ஆண்டுகளில் எழுத்துலகில் அவர் செய்த பயணங்களை அவரது ஆளுமையைப் புரிந்துகொள்ளும் கண்ணோட்டத்தில் பின்கண்ட வாறு குறித்துக் கொள்ளலாம்.

jayakanthan 325-              கம்யூனிஸ்டுக் கட்சி, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட காலத்தில் சிறுவனாக, அவ்வியக்கத்தோடு தொடர்புகொண்டு, பின்னர் இந்தியக் குடியரசாக அறிவிக்கப் பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்த (1947-1960) காலத்தில், இடதுசாரி கண் ணோட்டமுடைய இதழ்களில் மிகுதியான சிறுகதைகளை எழுதிய ஜெயகாந்தனின் ஆளுமைகள்.

-              வெகுசன வாசிப்பு, அச்சு ஊடக வளர்ச்சி யால் வெகுசன பத்திரிகைகள் உருவான காலமாக 1960களைச் சொல்ல முடியும். அக்காலங்களில் வெகுசனப் பத்திரிகை களில் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைத் தொடர்கள் மூலம் தனது ஆளுமைகளை வெளிப்படுத்திய ஜெயகாந்தன்.

-              இந்திய அவசரநிலை காலத்திற்குப் பிறகு, ‘ஜய ஜய சங்கர’ எனும் வரிசையில் சிறு சிறு நாவல்களை எழுதிய ஜெயகாந்தன், இறுதிக் காலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் ஆக்கங்களில் ஈடுபடவில்லை.

ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் ஆக்கங்கள் சார்ந்து அவர் சமூக வெளியில் நிகழ்த்திய பயணங் களை மீள்பார்வைக்கு உட்படுத்துவதன் மூலம் அவரது மறைவால் ஏற்படும் மனச்சஞ்சலங்களைப் பதிவு செய்வதாக இப்பகுதி அமைகிறது. கால ஒழுங்கில், ஜெயகாந்தன் தன்னைப் பற்றிச் செய் துள்ள பதிவுகளை மீள்வாசிப்பு செய்வதன் மூலமே அவரைப் புரிந்துகொள்ள முடியும். அவரது தொடக்ககாலப் பதிவுகளில் ஒன்று, கீழ்வருமாறு அமைகிறது.

என்னைச் சுற்றி இருக்கும் எனது நண்பர் களும், உலகில் நான் காணும் மனிதர்களும் எனக்குப் பேசவும் எழுதவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் சுயம்பு அல்ல; என் உள்ளேயே அமிழ்ந்து அமிழ்ந்து லயம் பெறுவதற்கு - எல்லோரும் சொல்லிக் கொள்வது போல் - அங்கே - என்னுள்ளே ஒன்றுமில்லை. எனக்கு வெளியேதான் எல்லாம் இருக்கின்றன. அந்த ‘வெளி’யில் தான் நானும் இருக்கிறேன். எனது ஆத் மாவைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண் டிருக்க விரும்புவது பிரேத விசாரணைக் கொப்பாகும். அதுதான் இன்பம், ‘அதில் தான் இன்பம்’ என்று சொல்லிக் கொள்வது சேற்றில் கிடக்கும் பன்றி, ‘இதுதான் சொர்க்கம்’ என்பதற்கு ஒப்பாகும்... நான் வெளியிலேயே திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர் களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன். கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுது கிறேன். (இனிப்பும் கரிப்பும்: சிறுகதைத் தொகுதி. 1960)

மேலே உள்ள ஜெயகாந்தன் அவர்களது பதிவுகள், அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரை. ஜெய காந்தனின் இரண்டாவது தொகுதிக்கு தி.ஜ.ரங்க நாதன் எழுதிய முன்னுரை, ஜெயகாந்தன் குறிப் பிட்டதைப் போல் அவர் வாழும் உலகின் மனிதர்கள் யார்? என்பதைக் கூறுவதாக அமைகிறது. தி.ஜ.ர. பின்வருமாறு எழுதியுள்ளார்.

எக்கதியுமற்ற ஏழை மக்கள்தான் அவருடைய பாத்திரங்கள். ஏழைகள் என்றவுடனே, கன வான்களின் கருணைக்குப் பாத்திரமான ‘ஜந்து’க்களாக அவர்களுடைய குணாதி சயங்களைத் தீட்டிவிட வேண்டும் என்ற போலி நோக்கத்தை ஜெயகாந்தன் கதை களில் காண முடியாது. அவருடைய ஏழை மக்கள், ஆசாபாசங்களற்ற அப்பாவிகள் அல்ல; விருப்பும் வெறுப்பும், வேதனையும் ஆத்திரமும், வெட்கமும் தன்மதிப்பும் உள்ள மக்கள் அவர்கள். சொல்லப் போனால்; அவர்கள்தான் மனிதப் பிறவிகள். அவர் களிடம் அனுதாபத்தால் அவர் மிகமிக ஒன்றி விடுவதில் மேல்நிலை மக்களே அவருடைய பேனாவில் உணர்ச்சியற்ற பிண்டங்களாகி விடுகிறார்கள். ஜெயகாந்தனின் கற்பனைத் துலாக்கோல் எங்கேயாவது சாயுமானால் ‘பேவ்மெண்ட்’ வெயில் பக்கம் சாயுமே ஒழியப் பக்கத்தில் உள்ள மச்சு நிழலிலே சாயாது. காரணம் அவர் சித்திரிக்க எடுத்துக் கொண்டது, மனித வர்க்கத்தையே. கோடிக் கணக்கான மக்களின் வாழ்வை விட்டுவிட்டு, பொறுக்கிய சில மனிதரின் வாழ்வைச் சித்திரித்தால், அது மனித வர்க்கத்தின் சித்திரமாகுமா? அந்தச் சித்திரத்திலிருந்து மனித குலம் எந்த நிலைக்கு வந்து நிற்கிறது என்று நாம் அறிய முடியுமா? (ஒரு பிடி சோறு: 1958)

1960-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து ஆண்டுகளில் சமரன், சாந்தி, மனிதன், சரஸ்வதி ஆகிய பிற இதழ்களில் சுமார் எழுபத்தைந்து சிறு கதைகளை ஜெயகாந்தன் எழுதியிருந்தார். 1960-1965 காலச் சூழலில் தாமரை, ஆனந்தவிகடன், அமுதசுரபி, தினமணிக்கதிர் ஆகிய பிற பத்திரி கைகளில் சுமார் அறுபது கதைகளை எழுதியிருக் கிறார். ஜெயகாந்தன் கதைகள் மொத்தம் 150க்குள் வரும். 1960களுக்கு முன் எழுதிய கதைகளில் பெரும் பாலானவை, தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளதைப் போல், சமூகத்தின் அடித்தட்டு என்றும் விளிம்புநிலை என்றும் கூறப்படும். இழப்பதற்கு ஏதுமற்ற கூலிகள் அவர்கள், ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஊதியத் தால் வாழ்பவர்கள். இம்மக்கள் எண்ணிக்கை, நம் சமூகத்தில் இன்றும்கூட எழுபத்தைந்து விழுக்காடு என்பது நாம் அறிந்த ஒன்றே. சமூகத்தின் பெரும் பான்மை மக்கள் குறித்தப் பதிவாகவே ஜெய காந்தன் சிறுகதைகள் பெரும்பகுதியானவை அமைந் திருப்பதைக் காண முடிகிறது.

ஜெயகாந்தனின் தொடக்ககால ஆக்கங்களில் காணப்படும் மனிதர்கள் அவர் இடதுசாரி கண் ணோட்டத்தோடு வாழ்ந்த போது அவர் கண்ட வர்கள்! அவர் கேட்டவர்கள்; அவரோடு வாழ்ந்த வர்கள் என்று கூறமுடியும். அவர்களைத் தமது ஆக்கங்களில் வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

புதுமைப்பித்தன் மரபின் இன்னொரு தொடர்ச்சியாக, ஒடுக்கப்பட்ட மக்களைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தார். பின்னர் ‘ஆனந்த விகடன்’ உள்ளிட்ட வெகுசனப் பத்திரிகைகளில் ஜெயகாந்தன், உழைக்கும் மக்களை அல்லாது நடுத்தர வர்க்கத்துக் குறிப்பாக, பார்ப்பனர் சமூகம் சார்ந்த பாத்திரங்களை வெளிப்படுத்தும் வகையில் கதைகளை எழுதத் தொடங்கினார். ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் எனும் பெயரில் ஜெயகாந்தன் எழுதிய பல கதைகள் அவ்வகையில் அமையும். அவ்விதம் அவர் எழுதிய கதைகளில் ஒன்றுதான் ‘அக்னிப் பிரவேசம்’. பார்ப்பனக் குடும்பம் தொடர்பான இக்கதை, ஜெயகாந்தன் கதை மரபில் அடுத்த கட்ட பயணமாகக் கூற முடியும். ஆதிக்க சாதி மற்றும் நடுத்தரப் பிரிவினர் களாகிய கதை மாந்தர்கள் இவரது கதைகளில் இடம்பெறத் தொடங்கினர். இத்தன்மை குறித்து எழுந்த விமரிசனங்களுக்கு ஜெயகாந்தன் விடுத்த எதிர்வினைகள், அவரது புதிய பயணத்தைக் காட்டு வதாகவே அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்லு கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக அல்லது அதுவே உயர் வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்.

எனது முதல் சிறுகதைத் தொகுதி முன்னு ரையில், நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காலத்திலேயே மேலே கண்டவாறு எழுதி இருக்கின்றேன்.

ஏதோ நான் திசைமாறிவிட்டதாகவும், வழி தவறிவிட்டதாகவும் என்பின்னால் வருகின்ற சில பேர் கூக்குரலிடுகிறார்கள். பெருந் தன்மை காரணமாகவோ, எனது வேலையில் நான் முனைந்திருக்கையில் ஏற்படுகின்ற அலட்சியம் காரணமாகவோ, நான் இவர் களுக்குப் பதில் சொல்லாமலும், ‘சரி அப்படியே வைத்துக்கொள்’ என்கிற அலுப் போடும் மௌனமாயிருந்தது உண்டு.

நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக் கூட்டத் துக்கும் எப்போதும் தாலி கட்டிக் கொண்ட தில்லை. (ரிஷிமூலம். முன்னுரை, 1969)

1950-1970 என்ற காலப் பகுதியில் ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் ஆக்கங்கள் குறித்த உரை யாடல்கள் மேலே கண்டவாறு அமைந்திருப் பதைக் காண்கிறோம். இவரது நடுத்தர வர்க்கம் சார்ந்த பதிவுகள், 1960களில் ஆனந்தவிகடன் வழியாக சிறுகதைகளில் பதிவானதன் தொடர்ச்சி யாக, அவரது குறுநாவல்களும், நாவல்களும் உருப் பெற்றன. அவை அன்றைய வெகுசனப் பத்திரிகை வாசிப்பாளர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற் படுத்தியவை. அவ்வகையான அதிர்வுகளால் ஜெய காந்தன் என்ற மனிதர் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் அறியப்பட்ட மனித ராக உருவானார். அவரது மறைவின் போது செய்யப்பட்ட பதிவுகள் பெரும் பகுதியானவை, அவரது வெகுசன இதழ்களில் வெளிவந்த ஆக்கங் களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப் பதைக் காண்கிறோம். மீள் வெளியீடு செய்யப் பட்ட கதைகளும் அவ்வகையில்தான் அமைந் துள்ளன. ஆனந்தவிகடன் (22-4-2015) பத்திரி கையில் ‘அக்கினிப் பிரவேசம்’ கதை மறுவெளியீடு செய்யப்பட்டது. ஜெயகாந்தன் தன்னுடைய பயணம், தத்துவக் கருத்து சார்ந்த முரண் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக தமது இயல் பான பயணமாகவே அதை அவர் கணித்தார். கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பு, காங்கிரஸ் கட்சித் தொடர்பு, பின்னர் சங்கராச்சாரியார் தொடர்பு எனப் பல பரிமாணங்களில் அவர் வாழ்ந்தார். இப்பரிமாணங்களை அவரது கட்டுரைகளில் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.

அவரது இறுதிக்கால ஆக்கங்களான ‘ஜய ஜய சங்கர’ நாவல் வரிசையின் முதல் பகுதியான ‘ஜய ஜய சங்கர’ நாவலில் எழுதியுள்ள முன்னுரை பின்வருமாறு அமைகிறது.

வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங் களில்தான் அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, இவ்விதமே எழுது வது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாஅபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதயபூர்வ மாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பெற வேண்டும். இவ்விதம் ஆத்மசேஷமம், லோக சேஷமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும் (சங்கராச்சார்ய சுவாமிகள்).

நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்தப் பாக்கியம் லயித்ததோ என்னவோ, ஆச்சார்ய சுவாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்கியத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன் பொருட்டு, நானும், என் சமகாலத் தமிழ் மக்கள் அனை வரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு. (ஜய ஜய சங்கர: முன்னுரை : 1976)

‘ஜய ஜய சங்கர’ நாவல் வரிசை என்பது ஜெயகாந்தன் அவர்களின் ஆன்மீகப் பயணமாக அமைந்தது. அந்த நாவல் வரிசையில் நான்காவதாக வெளிவந்த ‘மஹாயக்ஞம்’ நாவலில் வருகிற பாத்திரம் ஒன்றின் வெளிப்பாடாக ஜெயகாந்தன் பின்வரும் பகுதியை அமைத்துள்ளார்.

இந்தியாவில் எவ்வளவு கோயில்கள் இருக் கின்றன. காலப் பகுதியில் கரைந்து போகிற வெறும் கட்டடங்களா அவை? அந்தக் கோயில் களிலிருந்து செயல் வீரர்கள் என்பவர்கள் நூற்றுக்கணக்கில் புறப்படட்டும். அந்தப் பிராமணர்கள் சம்சார வாழ்க்கையை மேற் கொள்வதா? சந்நியாசியாவதா? என்பது பின்னர் தீர்மானிக்கப்படட்டும். ஆனால் அவர்கள் முதலில் பிராமணர்களாக ஆகட்டும். அதற்கு முதல் அங்கத்தினனாய் என் குழந்தை சதாசிவத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இங்கே ஒரு கோயில் கட்டிக் கொண்டிருக் கிறீர்கள். இதன் பக்கத்திலேயே ஓர் ஆஸ் ரமத்தை ஏற்படுத்திவிடுங்கள். பிராமண தர்மத்தையும், வேத வாழ்க்கையையும் மீண்டும் நமது சமூக வாழ்க்கையாக உரு வாக்கப் போகிற ஒரு ஆஸ்ரமத்துக்கு நான் செய்யும் புத்திர தானத்தை ஏற்றுக் கொள் ளுங்கள் ஸ்வாமி (பக்கம் : 63-64).

இவ்வகையில் ஒரு புதிய பிராமண மதம் குறித்தக் கருத்தாக்கத்தை ‘ஜய ஜய சங்கர’ நாவல் வழி ஜெயகாந்தன் வெளிப்படுத்தியிருப்பார். நவீன சமூகம் பிராமண மதத்தை, பிராமண வேதத்தை உள்வாங்க வேண்டும் என்னும் நோக்கில் ஜெய காந்தன். அவர்களது ஆக்கம் அமைந்திருப்பதைக் காண முடியும். இறுதிக் காலத்தில் (2002) ஜெய காந்தன் அவர்களுக்கு ஞானபீடப் பரிசு வழங்கப் பட்டது. அதற்கான முழு தகுதி அவருக்குண்டு. ஆனால், அவரது இறுதிக் காலச் செயல்பாட்டிற் கான அங்கீகாரமாக இந்தப் பரிசு வழங்கப் பட்டதோ என்ற விமர்சனம் அப்போது வந்தது.

மேற்குறித்த ஜெயகாந்தன் பயணங்கள் ஒரு புறம் இருக்க, அவரது தனிமனித ஆளுமைகள், வெகுசன மரபில் விதந்து பேசப்படுவதை நாம் காண்கிறோம். அது அவரது வாழ்க்கை நேர்மை யாகவும் கருதப்படுகிறது. யாருக்கும் தலை வணங் காத கம்பீரமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இயல் பான நடைமுறை வாழ்க்கைப் போக்குகளிலிருந்து மாறுபட்டவராகவும் இருந்ததைக் காண முடி கிறது. இந்த வாழ்க்கை மிகுந்த கவர்ச்சியோடு பலராலும் பதிவு செய்யப்படுகிறது. அதனை எளிதில் புறக்கணிக்க முடியவில்லை. அவரது ‘சபை’ வாழ்க்கை, வெகுசன இதழ்களில் விரிவாக, அவரது மறைவுக் காலத்தில் பதிவு செய்யப் படுகிறது. வேறுபட்ட மனிதராகவே அவரைப் புரிந்துகொள்கிறோம். அந்தக் கவர்ச்சி ஏதோ ஒரு வகையில் நமக்குள்ளும் மரியாதையை உருவாக்கு கிறது. வாழ்க்கைப் பயணங்கள் பலப் பல வடிவங் களில் நிகழ்ந்தேறுகின்றன. ஜெயகாந்தன் பயணம் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியதாகவே நிகழ்ந்துள்ளது. இந்தப் பயணத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்பதே ஜெயகாந்தன் என்ற ஆளுமை குறித்த வியப்பாக நம்முள் பதிகிறது. இவற்றையெல்லாம் மீறி, வரலாற்றில் அவரது ஆளுமை வேறு வேறு கோணங்களில் புரிந்து கொள்ளப்படும் என்று கூறலாம்.

Pin It