jayakanthan 356

‘விவாதிப்பதில் ஆர்வமுள்ள இந்தியன்’ கட்டுரையை அமர்த்தியா ஸென் இந்த லேசான கவிதையுடன் முடிக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் ராஜாராம் மோகன்ராய் எழுதிய வங்காளக் கவிதை வரிகள் இவை:

‘சிறிது சிந்தித்துப்பார் -

உன் மரணநாள் எவ்வளவு கொடூரமானது என்று

மற்றவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்;

உன்னால் திருப்பி வாதம் செய்ய முடியாது’

திரும்ப அவரால் விவாதிக்க முடியாது என்ற கவனத்துடன், அமரர் ஜெயகாந்தன் குறித்து திரும்ப அவரால் விவாதிக்க முடியாது என்ற கவனத்துடன், அமரர் ஜெயகாந்தன் குறித்த சில எண்ணங்களைப் பதிவு செய்கிறேன். வாழ்நாள் முழுவதும் விவாதிப் பதிலும், உரையாடுவதிலும் (அது சம்பாஷணை ஆக இல்லாமல் ஒருதலைப் பேச்சாகவே பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது என்ற போதிலும்) விருப்பம் குறையாத வராகவே அவர் இருந்திருக்கிறார். தன்னுடைய சிறுகதைகள் வாயிலாக, நாவல்கள் வாயிலாக 1960-70 கால கட்டத்தில், தமிழ்ச் சமூகத்துடன் தொடர்ந்த அறிவுசார் விவாதங்களில் ஈடுபட்டவராகவே அவர் இருந்திருக்கிறார். அது அவருடைய படைப்புகளின் கலை ஓர்மையைக் குலைத்திருக்கிறது என்ற போதிலும். ‘உலகத்துக்குக் கற்றுக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை; சமூகத்தோடு விவாதிக்கவே எனக்கு நிறைய இருக்கிறது’என்று அவரே ‘பாரிஸ¨க்குப் போ’நாவலில், லலிதா மூலம் பதிவு செய்கிறார். காதல், கற்பு, பால் உணர்வு, குடும்பம் என்ற அமைப்பு, உறவுகளின் நோய்க்கூறுகள், பாரம்பரியம், நவீனத்துவம், இசை, திரைப்படம் - என்று பல விஷயங்கள் குறித்தும் தன்னுடைய படைப்புகளில் வைத்து அவர் விவாதித்தது, அன்றைய சூழ்நிலையில் அவருக்கு மிகுந்த வாசகக் கவர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்தது.

லட்சியவாதி - குடும்ப - சரித்திரத் தொடர்கதை யுகத்தில், அறிவு சார்ந்த வாதங்களால் கட்டமைக்கப்பட்ட அவரது படைப்புகள், அன்றைய நடுத்தர வர்க்கத்து வாசகர்களால் அப்படியே அள்ளிக்கொள்ளப்பட்டன. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’கங்கா, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’கல்யாணி, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ஹென்றி அவர்களுக்கென்று ஒரு தனி ஆகிருதியைப் பெற்று, வாசகர்கள் மத்தியில் செல்வாக்குடன் உலவினார்கள். அதே சமயம், ஆரம்பகாலத்தில் உதிரிகளின் உலகத்தி லிருந்து, நடுத்தர வர்க்கத்திற்குள் அவரது படைப்புலகம் நகர்ந்து வந்திருப்பதையும் உணர முடிகிறது. அவரது ‘ஒருபிடி சோறு’சிறுகதைத் தொகுப்புக்கான முன்னு ரையில், ‘ஜெயகாந்தனின் கற்பனைத் துலாக்கோல் எங்கேயாவது சாயுமானால், பேவ்மெண்ட் வெயில் பக்கமே சாயுமே ஒழியப் பக்கத்து மச்சு நிழலில் சாயாது’என்ற தி.ஜ.ர.வின் பரவசக் கணிப்பில் ஒரு நகை முரண் இருப்பதை இப்பொழுது உணர முடிகிறது.

1960-களின் பிற்பகுதியில், ஒரு சில நாட்கள் இடைவெளியில் இரண்டு வேறுபட்ட இலக்கிய ஆளுமைகளின் பேச்சைக் கேட்க நேர்ந்த அனுபவத்தை இங்குப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மதுரைக் கூட்டுறவு வங்கியின் மேல் தளத்தில் புதுமைப் பித்தனின் கலைநுட்பம் பற்றி சுந்தரராமசாமி நிகழ்த்திய உரைக்குச் சில நாள்கள் கழித்து ‘ரீகல்’திரை அரங்கத்தில் ஜெயகாந்தனின் சொற்பொழிவைக் கேட்ட அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

இந்த இரண்டில் எந்த உரை எனக்கு நெருக்கமானதாக இருந்திருக்கக்கூடும் என்பதை ஊகிப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ‘நான் எந்தக் கொள் கைக்கும், எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலி கட்டிக் கொண்டவன் இல்லை’என்று முழங்கிய ஜெய காந்தனின் பேச்சில் தொனித்த நாடகத்தன்மை, என்னைத் தொந்தரவு செய்வதாக இருந்தது. ஆனால் அதுதான் அவரது இயல்பு என்பதையும், மேடையில் உடன் இருப்பவர்களையோ, எதிரில் இருப்பவர் களையோ எப்பொழுதுமே அனுசரிக்காததுதான் அவரது பேச்சு என்பதையும் பிற்பாடு உணர்ந்தபொழுது, அவர் மீதான மதிப்பு வெகுவாக உயர்ந்தது. மொழி குறித்த இறுக்கங்கள் நிறைந்திருந்த அந்தக் கால கட்டத்தில், தாராளத்துவம் நிறைந்த அவரது மொழிப் பார்வை, மிகவும் ஆசுவாசம் தருவதாக இருந்தது.

‘ஒருவருடைய மரணத்துடன் சேர்த்து உலகின் ஒரு சித்திரத்தையும் மரணிக்கச் செய்கிறோம்’என்ற திருச்செந்தாழையின் ‘மழை மஞ்சள் மரணம்’சிறு கதையின் வரி, இந்தக் கணத்தில் மனத்தில் அலைகிறது. ஒரு கலைஞனின் மரணம் சில தீற்றல்களையேனும் வாசகனின் அகத்தில் விட்டுத்தான் செல்கிறது என்று தோன்றுகிறது. அவ்வாறு நோக்கும்பொழுது ஜெய காந்தனைப் பற்றிய நகக்கீறல் சித்திரமாக மனத்தில் பதிந்திருப்பது இதுதான்.

லட்சியவாதமும், யதார்த்தவாதமும் இயங்கிய படைப்புகளைத் தமிழுக்கு வழங்கியவர்.

வாழ்க்கையைக் கொண்டாடியவர் - துறவின் நிழல் அவரது பல படைப்புகளின் மீது கவிந்திருந்த போதிலும்.

ஒரு காலகட்டத்தில் தமிழனுடன் உரத்த குரலில் சிந்தித்தவர்.

வார இதழ் வாசகனைச் சற்றுத் தீவிரமான எழுத்தைக் கிளர்ச்சியுடன் வாசிக்கக் கற்றுத் தந்தவர்.

அதன் மூலம் அவரைத் தாண்டிச் செல்லவும் இடம் கொடுத்தவர்; நம்முடைய சிந்தனை மரபின் வழி மார்க்ஸைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர்; ஒரு காலத்துக்குப் பின் வாசகனின் தொடர்பு எல்லைக்கு வெளியே நின்றுவிட்ட போதிலும், என்றுமே மரியாதைக்கு உரியவராக விளங்கிய தோழர்.

-என்பன போன்ற பதிவுகள் அடுத்தடுத்துத் தோற்றம் கொள்கின்றன. சில பதிவுகள் உடனே மங்கலாகியும் விடுகின்றன. 1985-இல் தன்னுடைய ‘நாவல்கலை’நூலில் க.நா.சு. பதிவு செய்தது 2015-இல் கூடப் பொருத்தமாக இருப்பதாகவே தோன்றுகிறது;

‘கருத்தளவில், சமுதாயப் போக்குச் சிந்தனை அளவில் ஜெயகாந்தனுக்குத் தமிழில் சிறப்பான இடம் உண்டு. நடை அளவிலும் கூட உண்டு. கால இலக்கிய அளவில் அவர் இடம் தெளிவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.’

அந்தத் தெளிவின்மை இன்றும் தொடர்வதாக இருப்பதை, சற்று வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

Pin It