இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பின்புலத்தில் இன்றளவும் நிலைத்திருக்கும் மதுரை நகரின் கடந்த காலம் விநோதமானது. கோட்டை கொத்தளம் மட்டு மின்றி, காலந்தோறும் மக்கள் வாழ்வதற்கேற்ற சூழல் தொடர்ந்து நிலவுவதுதான் மதுரையின் இருப்பினுக்கான அடையாளம். அதிகாரப் போட்டியில் பாண்டியர், சுல்தான், நாயக்கர், ஆங்கிலேயர் என யார்யாரோ மாறினாலும், மீனாட்சிஅம்மன் கோவிலை மையமாகக் கொண்டு, நான்கு திசைகளிலும் தெருக்கள் அலையென விரிகின்றன. ‘தூங்கா நகரம்’ எனச் சிறப்பிக்கப்படும் மதுரையின் இன்னொரு முகம் தமிழுடன் நெருக்க மானது.

புலவர்கள்கூடிச் ‘சங்கம்’ என்ற அமைப்பின்மூலம் தமிழ்ப் படைப்புகளை அரங்கேற்றினர் என்பது முக்கிய மான தகவல். முச்சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரைகாரரின் கண்டுபிடிப்புகள் புனைவின் உச்சமெனினும் சுவாரசியம் ததும்புகிறது. பாண்டிய நாட்டிலும் மதுரையிலும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதற்குக் கணிசமான ஆதாரங்கள் உள்ளன. இன்றளவும் தமிழ் அடையாளத்துடன் மதுரை நகரம் வளமையோடு இருக்கிறது எனில், தமிழ்மொழி செல்வாக்குடன் விளங்குகிறதா? யோசிக்க வேண்டியுள்ளது.

தமிழ்ச்சங்கம் தமிழை வளர்த்தது என்ற பாரம் பரியமான நம்பிக்கையின் மறுபக்கமாக இன்று கல்வி நிறுவனங்களைக் கருத வேண்டியுள்ளது. உயர் கல்வியின் அடையாளமான பல்கலைக்கழகத்தைப் ‘புதிய சங்கம்’ எனலாம். நுண்மாண் நுழைபுலம் மிக்க துறை சார்ந்த வல்லுநர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தப்படும் ஆய்வுகள் அறிவின் உச்சமாக வெளிப்படுகின்றன. பல்கலைக் கழகம், பேராசிரியர்கள் என மிகவும் மரியாதையுடன் போற்றிய சூழல் தமிழகத்தில் எண்பதுகளில்கூட நிலவியது, அரசியலும், பணமும் புரளும் இன்றைய பல்கலைக்கழகங்களில், அறிவுஜீவிப் போக்கினுக்கு ஆதரவான நிலை என எதுவும் இல்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர், துணைவேந்தர் குறித்து நிலவிய சமூகக்கௌரவம் சிதிலமாகிக் கொண்டிருப்பதன் அடையாளம்தான், எல்லாப் பணியிடங்களுக்கும் விலை குறிக்கப்பட்டிருப்பது. எல்லாமே சந்தைக்கானதாக, நுகர் பொருளாக மாறும் சூழலில், துணைவேந்தர் பதவிகூட விதிவிலக்கல்ல என்பது வேதனையானது.

ஊழல் எங்கும் நீக்கமறப் பரவியுள்ளது குறித்துச் சொல்ல வார்த்தைகள் எதுவுமில்லை. இளைய தலைமுறை யினரை உருவாக்கும் உயர்கல்வியிலும் ஊழல் புகுந் திருப்பது சமூகச் சீரழிவின் உச்சமாகும். சமூகத்தின் ஆன்மாவாக விளங்கும் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை குறித்துக் கவலை கொள்ளவேண்டியிருக்கின்றது. அரசியல்வாதிகளின் நேரடியான தலையீடு, பல்கலைக்கழக நிர்வாகிகளையும், அரசியல்வாதிகளாக உருமாற்றிவிட்டது. அச்சமற்ற, ஆய்வினுக்கு முன்னுரிமை தந்து, பணிகள் முன்னர் நடைபெற்றன என்பதை இளம்தலைமுறையினரால் நம்பவியலாது; ஆனால் அதுதான் உண்மை. எழுபது களில்கூட சுதந்திரமான ஆய்வுப் போக்குடன் கண்ணி யத்தின் இருப்பிடமாக விளங்கியது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். துணைவேந்தர் - பேராசிரியர்கள் - மாணவர்கள் என முப்பெரும் புள்ளிகளின் வழியே மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பற்றிய மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டன.

தமிழை வளர்க்கச் சங்கம் நிறுவப்பட்ட மதுரையில் 1970-80-களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் செயல்பாடுகள் காத்திரமானவை. அங்கு 1978, ஆகஸ்ட் மாதம் முதலாக 1980 ஏப்ரல் முடிய இரு கல்வியாண்டுகளில் முதுகலை பயின்ற எனது அனுபவங்கள் தனித்துவமானவை. பட்ட வகுப்பில் பயிலும்போது அஃகு, கசடதபற, பிரக்ஞை போன்ற  சிறுபத்திரிகைகளை வாசித்துவிட்டு, நவீன இலக்கியப் பிரக்ஞையுடன் முதுகலையில் சேர்ந்த எனக்கு நெருக்க மான நண்பர் மு.ராமசாமி. அவர் அப்பொழுது தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சாணித் தாளில் சதுரமான வடிவமைப்பில் வெளியான ‘விழிகள்’ இதழின், நிழல் ஆசிரியரான அவரின் தெனாவட்டான எழுத்து சுவாரசியமானது. எழுத்துலகில் சிறுமை கண்டு பொங்கியெழும் அவருடைய இலக்கியப்போக்கு எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக முத்துச் சண்முகம்பிள்ளை முதலாகப் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. பொதுவாகத் துறைத் தலைவர், பேராசிரியர் எனப்பலரும் பீதியைக் கிளப்பும் சூழலில், எப்பொழுது பார்த்தாலும் ‘என்னய்யா’ எனப் புன்முறுவலுடன் விளங்கும் சண்முகம்பிள்ளையின் எளிமை எங்களைக் கவர்ந்தது. பேராசிரியரின் அறைக்குள் யார் வேண்டுமானாலும் எப்பொழுதும் உள்ளே போய் வரலாம். எல்லோரிடமும் இயல்பாகப் பேசும் பேரா சிரியர், முதுகலை முதலாண்டு மாணவர்கள் சொல் வதையும் காது கொடுத்துக் கேட்டார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, மொழியியல் ஆய்வுக்கு முக்கியத்துவம் தந்த பேராசிரி யரிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. வெறுமனே பண்டை இலக்கணம், இலக்கியம் எனச் சுழன்று கொண் டிருந்த நிலையை மாற்றித் தமிழாய்வினுக்கு வழி வகுத்தார்.

நாட்டுப்புறவியல், நாடகவியல், இதழியல், ஒப்பிலக்கியம், மொழியியல் எனப் பிறதுறைகளைத் தமிழுடன் ஒருங்கிணைத்துப் புதிய வகைப்பட்ட போக்கினை ஊக்குவித்தார். அவருடைய கால கட்டத்தில் முழுநேர ஆய்வாளர்கள் நிரம்பி வழிந்தனர். கல்லூரி ஆசிரியர்கள் குஜீ திட்டத்தின் வழியாகப் பல்கலைக்கழகத்தில் கணிசமாக ஆய்வு மேற்கொண் டிருந்தனர். எங்கும் ஆய்வு என்பதே பேச்சாகச் சூழல் நிலவியது.

புதன் வட்டம், வியாழன் வட்டம் என வாரந் தோறும் நடைபெற்ற ஆய்வரங்குகளில் ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றுக் கட்டுரை அளித்தனர். தீவிரமான தளத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. சடங்குரீதியில் ‘ஒப்புக்குக் கட்டுரை வாசித்தல்’ என்பது அறவே இல்லை.

வியாழன் தோறும் பல்கலைக்கழகத்திலிருந்து மு.வ. அரங்கில் மதியம் நடைபெற்ற ஆய்வரங்கு காத்திரமானது. பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களுடன், மதுரை பாத்திமா கல்லூரி, லேடிடோக் கல்லூரியில் பயின்ற தமிழ்த்துறை மாணவி களும் கலந்து கொண்டனர். உண்மையில் சங்கப்பலகை போன்று குறைநிறைகள் அலசி ஆராயப்பட்டன. அப் பொழுது ஆய்வாளராக சி.மோகன் (சிறு பத்திரிகைக் காரர்) மஞ்சள் சைனா சில்க் ஜிப்பா அணிந்து கவர்ச்சி யான தோற்றத்துடன் கட்டுரை வாசித்த காட்சி, மனதுக்குள் பதிவாகியுள்ளது.

ஆய்வாளரான ஏ.ஆதித்தன், ‘வேற்றுமை என எதுவுமில்லை’ என மொழியியல் நோக்கில் வாசித்த கட்டுரை கடுமையான விவாதத்திற்குள்ளானது. ஏதேனும் அடிதடி நிகழுமோ எனத் தோன்றினாலும் அறிவு பூர்வமான விவாதம் மனதுக்கு நிறைவைத் தந்தது. பேராசிரியர்கள் கட்டுரை வாசித்த பின்னர் முதுகலை முதலாண்டு பயிலும் மாணவர்கூட எதிர்ப்பாகத் தனது கருத்தைப் பதிவு செய்யலாம். சின்னப்பையன் என யாரையும் மட்டம் தட்டாத சூழல் நிலவியது.

வியாழன் வட்டக் கருத்தரங்கில் பெரும்பாலும் கடைசி வரிசையில் முதுகலை மாணவர்கள் அமர்ந்திருப் போம். ஒருமுறை என்னருகில் நடுத்தர வயதானவர் வந்து உட்கார்ந்தார். கட்டுரை குறித்து என் வகுப்புத் தோழன் ரெ.பாலகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந் தேன். அருகில் அமர்ந்தவர் ஏதோ சொன்னார். கு.ஜீ. யிலிருந்து வந்த கல்லூரிப் பேராசிரியர் என ஊகித்துக் கொண்டவன், அவர் எந்தக் கல்லூரியில் பணியாற்று கிறார் எனக் கேட்டேன்.

‘மேலூர் அரசுக் கல்லூரி’ என்று பதிலளித்தார். ‘அப்ப கவிஞர் அபியை உங்களுக்குத் தெரியுமா? ‘மௌனத்தின் நாவுகள்’ கவிதைப் புத்தகம், எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். உடன் அவர் ‘அது நான்தான்’ என்றார். என்னவொரு இனிமையான சந்திப்பு. மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்தது. கவிஞர் பழமலய் அவர்களையும் அங்குதான் சந்தித்தேன்.

தமிழ்த்துறையில் எனக்கேற்பட்ட நினைவுகளை அசை போடும்போது, இப்படியெல்லாம் நடைபெற்றனவா என்ற ஐயம் தோன்றுகின்றது. எங்கள் வகுப்பறையில் வருகைப் பதிவேடு இருந்தது. ஆனால் பெரும்பாலான பேராசிரியர்கள் மாணவர் வருகையைப் பதிவு செய்வது இல்லை. சரியாகப் பத்து மணிக்கு வகுப்பில் இருக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. வகுப்பு நடை பெறும்போது அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே நுழைவதோ, வெளியே செல்லும்போது அனுமதி பெற்று வெளியேறுவதோ நடைமுறையில் இல்லை. மதியம் 1.00 மணிக்கு முடியவேண்டிய வகுப்பு 1.30க்கு முடியும். மாலையில் 4.00 மணிக்கு முடிய வேண்டிய வகுப்பு 5.00 மணிக்கு முடிவதும் சாதாரணம். நேரத்தைப் பார்த்துக்கொண்டு எந்தப் பேராசிரியரும் வகுப்புகளை நடத்தவில்லை. அதுபோல மாணவர்களும் நேரமாகி விட்டது என்ற உணர்வுடன் வகுப்பறையில் இருக்கவில்லை.

பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றபோது ஒவ் வொரு விஷயமும் முக்கியமானவை என்ற உணர்வுடன் மாணவர்கள் கவனித்தனர் என எழுதினால், உங்களால் நம்பமுடியாமல் போகலாம். அதுதான் உண்மை. வெறு மனே மாதஊதியத்திற்காக ஒப்புக்குப் பாடம் சொல்லி யவர்கள் யாரும் பேராசிரியர்களாக அப்பொழுது இல்லை. புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ளுங்கள் எனத் தமிழ்த் துறையினரிடம் ‘எழுத்து’ பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிய சி.க. எனப்படும் சி.கனகசபாபதியின் வகுப்புகள் அற்புதமானவை.

வகுப்பினுக்கு ஏழெட்டுப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு வந்து டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, ஆதாரப்பூர்வமாகப் பேசும் சி.க.வின் பேச்சில் விமர்சனப் பார்வை நுட்பமாக வெளிப்படும். மு.வ. எனப்படும் மு.வரதராசனார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘இலக்கியத்திறன்’ புத்தகங்கள் எங்களுக்குப் பாடமாக இருந்தன. சி.க. ‘இலக்கியத்திறன்’ புத்தகம் ஒரு குப்பை, இலக்கியவரலாறு அபத்தமானது என்று உறுதியாகச் சொன்னார். நான் கேலியாக ‘மு.வ. பெரிய ஸ்காலர்’ என்றேன். ‘இருக்கலாம். அந்தப் புத்தகங்கள் வெறுமனே நகல்கள், குப்பைகள் என்று உறுதியுடன் சொன்னார்.’

எழுபதுகளில் மு.வ.வின் மறைவினுக்குப் பின்னர் அவரது பெயரைச் சொல்லிப் பஜனைபாடி வந்த பேரா சிரியர் கூட்டம் இருந்தது, இங்குக் கவனத்திற்குரியது. பாடப்புத்தகங்களுக்கு அப்பால், தமிழ் தொடர்பான கருத்துக்களை மாணவர்களுக்குச் சொல்வதில் சி.க. முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

பட்டவகுப்பில் பி.எஸ்ஸி(கணிதம்) படித்த நான் தொல்காப்பியம் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தால், தமிழ் முதுகலையில் சேர்ந்திருக்க மாட்டேன். சிறுபத்திரிகை சார்ந்த மனநிலையில் நவீன இலக்கியம் வாசித்த எனக்கு மரபிலக்கியமும் இலக்கணமும் தொல்லையாக இருந்தன.

கணிதப் பாடத்திலிருந்து தப்பி வந்து இலக்கணத்தில் மாட்டிக்கொண்ட மனநிலை. வெற்றிலைப்பெட்டி நடராசன் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பேரா சிரியர் தி.நடராசன் நடத்திய தொல்காப்பிய வகுப்புகள் நேர்த்தியானவை. தொல்காப்பியர் என்ற இலக்கண மேதையின் பன்முகப் பரிமாணங்களை நுட்பமாக ஆராய்ந்து அளித்த விரிவுரைகள், ஒவ்வொரு மாணவனுக் குள்ளும் ஆழமாக ஊடுருவின.

மொழியைப் புரிந்து கொள்ள அடிப்படையாக விளங்கும் நுட்பங்களைப் படம் பிடித்துக்காட்டின. இரண்டுமணிநேர வகுப்பினில் இலக்கணம் பற்றிய விளக்கத்துடன் நாட்டுப்புற இலக்கியம் பற்றி அவ்வப்போது குறிப்பிட்ட தகவல்கள் முக்கியமானவையாக விளங்கின. இலக்கண வகுப்பைச் சுவாரசியமாக நடத்தமுடியும் என நிறுவிய தி.நடராசன் மாஸ்டர்தான்.

‘என்னய்யா’ என அழைத்துக் கேலியான தொனியில் பேசும் தி.சு.ந. என அழைக்கப்படும்  தி.சு.நடராசன் வகுப்பில் புதிய தவல்களைத் தெரிந்துகொள்ளலாம். எந்தவொரு கஷ்டமான விஷயத்தையும் எளிமையாகச் சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. எப்பொழுதும் பாடம் பாடம் எனப் பாடப்புலியாக இருக்கும் மாணவி களைப் பகடி செய்வார். விமர்சனத்தில் பெரிதும் ஆங்கிலப் புத்தகங்கள் செல்வாக்குச் செலுத்திய காலகட்டமது. இலக்கியக்கலை, இலக்கியத்திறன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்களின் விமர்சன நூல்கள் பொறுக்காக இருந்தன.

படைப்புகளை அணுகி விமர்சிப்பதற்கு எவ்விதமான கருவிகளும் தராத இத்தகைய நூல்கள் மொன்னைத்தனமாக இருந்தன. அவை தேர்வில் விடை யளிப்பதற்காகப் பயன்பட்டன. அன்றைய கால கட்டத்தில் சோசலிச யதார்த்தவாதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இடதுசாரி மனோபாவம் எங்கும் மேலோங்கியிருந்தது. மார்ச்சிய அணுகுமுறையில் இலக்கியப் படைப்புகளை அணுகி ஆராய்ந்திடும் போக்கு நிலவியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் பொறுப்பாளராக விளங்கிய தி.சு.ந.வின் அணுகுமுறை புத்தொளியைப் பாய்ச்சியது. சமுதாயமும் இலக்கியமும் பற்றி தி.சு.ந. வகுப்பில் ஆற்றிய விரிவுரை, புத்தகம் போலச் செறிவாக இருந்தது.

ஒவ்வொரு நொடியையும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஆழமான விஷயங்களை முன்னிறுத்திய தி.சு.ந.வின் மாணவர் மீதான அக்கறையும் அன்பும் அளவற்றவை. அப்பொழுது நான் மார்ச்சிய லெனினியக் கருத்தியல் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். மார்ச்சியம் குறித்துச் சீண்டலாக என்னிடம் பேசும் தி.சு.ந.விடம் கடுமையாக மறுத்துப் பேசுவேன்.

ஒரு கட்டத்தில் இந்தியாவில் வரப்போகும் புரட்சிக்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சிதான் முட்டுக்கட்டை என்றும் அவர் வலது சந்தர்ப்பவாதி என்றும் கூறியவுடன் ‘என்னய்யா என்னைப் புரட்சிக்கு விரோதிங்கிறே’ என்று கேட்டார். ‘போல்ஷ்விக்-க்கு எதிரி மென்ஷ்விக்தான். நீங்க மென்ஷ்விக்’ என்றேன்.

இப்பொழுது அச்சம்பவத்தை நினைக்கும்போது எனது செயல் அதிகப் பிரசங்கித்தன்மை போலத் தோன்று கின்றது. கருத்துரீதியில் எதிர்எதிராக முரண்பட்டு நிற்கும் முதுகலை மாணவனான என்னை தி.சு.ந. வெறுக்க வில்லை. நேசமாகக் கருதி ஊக்குவித்தார். பேராசிரி யரிடம் எதிர்க்கருத்துக் கூறினாலே, அந்த மாணவரை வர்க்கப் பகையாளியாகக் கருதும் சூழலில் தி.சு.ந.வின் பெருந்தன்மைக்கு அளவேது?

அவருடைய கறாரான அணுகுமுறைதான் தமிழைப் பிழையின்றியும் தெளி வாகவும் எழுத வேண்டியதன் தேவையை எனக்கு உணர்த்தியது. அவருடய மாணவர்களில் அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார் இன்று பெயர் விளங்கும் தமிழ்ப் பேராசிரியர்களாக விளங்குவதற்குக் காரணம் தி.சு.ந.வின் வழிகாட்டுதல் தான். ஆசிரியர்-மாணவர் உறவைமீறி ஒவ்வொரு மாணவரின் சொந்த வாழ்க்கையில் முன் னேற்றம் குறித்தும் அக்கறை கொள்ளும் பேராசிரியர் தி.சு.ந.விடம் பாடம் கேட்டவர்கள், நிச்சயம் தமக் கெனப் புதிய தடத்தை வகுக்கும் வல்லமையாளர்கள் தான்.

எந்தவொரு விஷயத்தையும் நகைச்சுவையாகப் பேசும் பேராசிரியர் விஜயவேணுகோபாலின் வகுப்பு முழுக்கக் கேலி பொங்கும். வகுப்பில் கடினமானவற்றையும் பகடி கலந்த குரலில் உரையாற்றும் வேணுகோபால் பல்கலைக்கழக வளாகத்தில் எங்கே பார்த்தாலும் அன்புடன் பேசுவார். எவ்விதமான கவலையும் இல்லாமல் துறையில் உலாவரும் பேராசிரியரைப் பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மொழியியல் நோக்குடன் இலக்கியத்தை அணுகும் பேராசிரியர், மரபு வழிப்பட்ட சிந்தனைப் போக்கினைச் சிதிலமாக்கிவிடுவார். முதுகலை மாணவனையும் நண்பராகப் பாவித்துப்பேசும் பேராசிரியரிடம் இருந்து கற்றுக் கொள்ளுவதற்கு விஷயங்கள் எப்பொழுதும் இருந்தன.

வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்ற வேண்டி யவர் தமிழ்த்துறைக்கு வந்துவிட்டார் என்று பேராசிரியர் சீனிவாசன் அவர்களைப்பற்றி நினைக்கத் தோன்றும். எதிலும் துல்லியம், கறார், நுட்பமான அளவுகோலுடன் இலக்கியத்தை அணுகும் அவருடைய அகராதியில் சமரசம் என்ற சொல் இல்லை. அன்பின் ஐந்திணையா அல்லது ஏழு திணையா என நான்குமணி நேரமும் நெடு நல்வாடை அகமா? புறமா? என மூன்று மணி நேரமும் வகுப்பெடுத்தார். பல்வேறு தமிழறிஞர்களின் கருத்துக் களைக் கோவையாக்கி, வழக்கறிஞர் போல வாதப் பிரதிவாதங்களை முன்வைத்துச் சீனிவாசன் ஆற்றும் உரை பிரமிப்புத் தரும். எந்தவொரு சின்ன விஷயமும் முக்கியம் என்பது போல எப்பொழுதும் தகவல்களைத் தேடியலையும் பேராசிரியர், வகுப்பறைக்குத் தந்த முக்கியத்துவம் அளவுக்கதிகமானது. தான் அறிந்த மாபெரும் உண்மைகளை எல்லா மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என விடாது போதிக்கும் இயல்புடைய பேராசிரியர் போன்றவர்கள் இப்பொழுது அருகி விட்டனர்.

முதுகலை பயிலும்போது நான் எழுதிய ‘வண்ணதாசன் கதைமாந்தர்கள்’ திட்டக்கட்டுரையையும் பிற அசைன்மெண்ட்களையும் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அவை புத்தமாகப்போடப்பட வேண்டிய தரத்திலுள்ளன என்று கருத்துரைத்தது எனக்கு மிகவும் ஊட்டமாக இருந்தது.

தடித்த கண் கண்ணாடியணிந்த விழிகளின் ஊடே உற்றுப் பார்க்கும் சு.வே. எனப்படும். சு.வேங்கடராமன் வகுப்பறையை ஆய்வுக் களமாக்குவதில் வல்லவர். அவரது வகுப்பில் வெளிப்படும் கருத்துக்கள் ஆழமான நிலையில் மாணவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின. மு.வ., அகிலன், நா.பா., போன்ற இலக்கியவாதிகளுடன் நட்புக் கொண்டிருந்த அவரது எழுத்து, வைணவ இலக் கியத்திலும் தடம் பதித்திருந்தது.

மொழியியல் பற்றிப் பாடம் நடத்திய பேராசிரியர் இஸ்ரேல் அவர்களின் பேச்சு கடுமையாகத் தோன்றும். அடிப்படையில் அவர் குழந்தை போன்றவர். திராவிட மொழியியல் பற்றிய பேராசிரியரின் புலமை நுணுக்க மானது. எந்த நேரத்திலும் மொழியியல் குறித்துப் பேசும் ஆற்றல் மிக்க பேராசிரியர், மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், எப் பொழுதும் தீவிரமான முகபாவத்துடன் விளங்கும் பேராசிரியர் தி.முருகரத்தினம் அவர்களின் வகுப்பு முடிவற்றது. ஒரு திருக்குறளை வைத்துக்கொண்டு ஒரு மணிநேரம் விளக்கும் ஆற்றல் மிக்க பேராசிரியரிட மிருந்து கற்றுக் கொள்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. தான் அறிந்ததை மட்டும் உண்மை என்று நம்பும் இயல்புடைய பேராசிரியர் எதிர்க் கருத்தினைக் கடுமையாக மறுத்துரைப்பார். அதே வேளையில் புதிய கருத்து சரியானது எனத் தோன்றினால் அன்போடு வரவேற்கும் இயல்புடையவர். அகமதிப்பீட்டுத் தேர்வு களில் மதிப்பெண்கள் வழங்கும்போது, சரியான கட்டுரை களுக்கு அதிகபட்சமான மதிப்பெண் வழங்குவார்.

மொழியியல் பேராசிரியரான ஜெ.நீதிவாணன் அதிகம் பேசாத இயல்புடையவராகத் தோன்றுவார். ஆனால் ஆய்வரங்குகளில் அவரது பேச்சு அழுத்தம் திருத்தமாக இருக்கும். தருக்கமுறையில் சரியான ஆதாரங்களை முன்வைத்துப் பேராசிரியர் பேசுவதைக் கேட்க வியப்பாக இருக்கும். இவருக்கு மட்டும் எப்படி புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன என மாணவர்கள் நினைப்பர். அவரது வகுப்பறையில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் மிக்கதாக விளங்கும். வீண் பேச்சு என்பதற்குச் சிறிதும் இடமிருக் காது. பாடத்தில் தோய்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் தொகுத்து, வகுத்து விளக்கும் பேராசிரியரின் வகுப்பை உற்றுக் கேட்டால் போதும், மனம் நிறைந்துவிடும்.

தேவாரப் பாடலை உருக்கமாகப்பாடி இறை யருளை விளக்கிய பேராசிரியர் நவநீதகிருஷ்ணனின் பார்வையில் எப்பொழுதும் கண்டிப்புத் தோய்ந் திருக்கும். அவரது உருக்கமான பேச்சு சமய இலக்கியம் பற்றிய புதிய திறப்பினை ஏற்படுத்தியது.

இதழியல் பாடம் போதித்த பேராசிரியர் சாந்தா மாணவர்களுடன் நண்பர்களைப் போலப் பழகினார். அன்றைய காலகட்டத்தில் இதழியல் சார்ந்த பாடங்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தன. வெறுமனே இதழ்கள் பற்றிய பாடம் எனப் போதிக்காமல் சமூக விஷயங்களையும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண் பற்றிய புதிர்கள் நிரம்பிய அப்பருவத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை நடைமுறை மூலம் உணர்த்திய பேராசிரியையின் அன்பிற்கு இணை எதுவுமில்லை. தமிழ் இலக்கியம் போதிக்கின்ற மரபு வழிப்பட்ட பேராசிரியை களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கிய சாந்தா அவர்களின் சமூக அக்கறையும் மாணவர்கள் மீதான ஈடு பாடும் முக்கியமானவை. மாணவன் என மட்டம் தட்டாமல், யார் சொல்லுவதையும் புன்முறுவலுடன் கேட்கும் பரிவுணர்ச்சி இயல்பாகவே பேராசிரியைக்கு வாய்த்திருந்தது.

நகைச்சுவையுடன் மாணவர்களைக் கேலி செய்து கொண்டு, அதே வேளையில் மாணவர்களின் ‘காமண்டையும் ரசிக்கும் மனோபாவம் மிக்க பேராசிரியர் ஜெயராமன் ரசனைக்குரியவர். எப்பொழுதும் உற்சாகமான மனநிலை யுடன் காணப்படும் பேராசிரியரின் வகுப்புகள் மாணவர் களுக்கு உவப்பானதாக விளங்கின.

நிஜ நாடக இயக்கம் என்ற அமைப்பின் மூலம் மாணவர்களை வைத்து நவீன நாடகம் நடத்திக் கொண் டிருந்த மு.ராமசாமி கலகக்காரராக அறிமுகமாகி யிருந்தார். அவரது தாடியும் எளிய தோற்றமும் எடுத் தெறிந்து பேசும் விமர்சனமும் அவரைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கியிருந்தது. அவரை ‘நக்சலைட்’ என்று மாணவர்கள் கருதினர். அதுவரை துறையில் நிலவிய மதிப்பீடுகளை விமர்சனம் செய்த மு.ரா.வைப் பேராசிரியராக மட்டுமின்றி வாழ்வின் ஆதர்சமாகக் கருதியவர்களில் நானும் ஒருவன்.

மாணவர்கள் ஓய்வு நேரத்தில் பேராசிரியர்களின் அறையில் அமர்ந்து தமிழிலக்கியம் தொடர்பானவற்றை விவாதித்துக் கொண்டிருப்பார்கள். காலத்தைப் பொருட்படுத்தாமல், பேராசிரியர்கள் இலக்கியத்தின் நுட்பங்களை விளக்குவார்கள். பேராசிரியர்களின் அறையில் சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம் போன்ற மூத்தபடைப்பாளர்களைப் பார்க்கமுடியும். அவர்களுடன் அறிமுகமான பேறு என்னைப் போன் றோருக்குக் கிடைத்திருக்கின்றது. மாணவர்களை அழைத்துக்கொண்டு உணவகத்திற்குச் சென்று தேநீர் குடித்தவாறு பேசும் பேராசிரியர்களின் பெருந்தன்மை யான நடைமுறையை என்னவென்று சொல்ல. இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கும் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான இடைவெளி மிகவும் குறுகியது.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கப்பலின் கேப்டன் போன்று முத்துச் சண்முகம்பிள்ளை என்ற ஆகிருதி. புதிய போக்குகளை அரவணைத்துத் தமிழ் மாணவர்களைப் புதுப்பாதையில் நெறிப்படுத்திய பேராசிரியர் மட்டும் தான் அந்த இருக்கையில் அமர்ந்து ‘இலக்கியம்-விமர்சனம்’ மட்டும் பேசியவர் ஆவர். இருநாள் நாடகப் பயிலரங்கு நடத்தி, அப்பயிற்சியில் தானும் கலந்து கொண்டவரின் மீது மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகம். கருத்தரங்கில் அவர் வாசிக்கும் கட்டுரையின்மீது முதுகலை மாணவனான நான் குற்றம் சுமத்தியபோது, ‘சரிதான் அடுத்துத்திருத்தி வெளியிடுகிறேன்’ எனச் சொன்ன பெருமித உணர்வு பேராசிரியர்களில் எத்தனை பேருக்கு இருந்தது? மூன்று நாட்கள் கேரளாவிற்கு மாணவ-மாணவியர் சுற்றுலா சென்றபோது, பேராசிரியரும் கலந்து கொண்டு எங்களை உற்சாகப்படுத்தினார். ஒரே கேலியும் கிண்டலுமாக நாங்கள் வால்தனம் செய்தபோது, அவற்றை ரசித்த பெரிய மனம்; பேராசிரியர்களை அழைத்துவந்து எங்களுக்கு வகுப்புக்கு ஏற்பாடு செய்வார். தங்கள் துறையில் மாஸ்டர் ஆன பல்வேறு பேராசிரியர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு அவரால்தான் கிடைத்தது.

பேராசிரியர் பல்கலைக்கழக நிதியுதவியுடன் எட்டுநாட்கள் கருத்தரங்கு நடத்தினார். தமிழ் இலக்கிய உலகின் குறுக்கு வெட்டுப் பரப்பினை அறியுமாறு நடத்தப் பட்ட அக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டது. பேராசிரியருக்குப் பல்வேறு பணிகள், முதுகலை மாணவர்களுக்குப் பாடம் எடுக்கவியலாத சூழல், ஒருமுறை நானும் நண்பன் பாலகிருஷ்ணனும் சென்று முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களாகிய எங்களுக்குப் பாடம் நடத்துமாறு அவரைக் கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஒரே வியப்பு. என்றாலும் மறுத்தார். “சார் சிலர் தெ.பொ.மீ ஸ்டூடன்ட்ஸ், மு.வ. மாணவர்கள் என்று சொல்கின்றனர். அதுபோல நாங்கள் சண்முகம்பிள்ளை சார் ஸ்டூடன்ஸ் என்று சொல்லணும். அதுக்காக வகுப்புக்கு வரணும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஒருகணம் அவரது நெற்றி சுருங்கியது. “சரி போய் சீனிவாசன் கிட்டே சொல்லி வாரத்துக்கு ரெண்டு மணிபோடச் சொல்லு. வர்றேன்” என்றார். அதுபோல வந்து திறனாய்வு பற்றி எங்களுக்கு வகுப் பெடுத்தார்.

அன்றைக்கு எந்த மனநிலை எங்களை இயக்கியதோ தெரியவில்லை. இன்றைக்கு நினைக்கும் போது, பேராசிரியர் சண்முகம்பிள்ளையின் வகுப்பு, அவருடைய மாணவன் என்ற பெருமித உணர்வு எனக்குள் பொங்குகிறது. கூழைக்கும்பிடு போடுதல், காக்காய்ப் பிடித்தல் போன்ற அற்பத்தனங்களை முற்றிலும் வெறுத்த பேராசிரியர், யாரும் தனக்கு வணக்கம் சொல்வது கூடவீண் என்று கருதினார். மாணவனும் மாணவியும் நெருக்கமாக அமர்ந்து பேசுதல், சேர்ந்து கேண்டீன் போய் தேநீர் குடித்தல், மரத்தடியில் அரட்டை அடித்தல் போன்றவற்றை ஒரு பொருட்டாகக் கருதாத சூழல் துறையில் நிலவியது. என்ன, படிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் மட்டும்தான் மாணவர்களிடமிருந்து பேராசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

மாணவர்களும் போட்டிபோட்டுக் கொண்டு படித்துத் தேர்வு எழுதி மதிப்பெண் குவிக்க முயன்றனர். பேராசிரியர் தரும் சலுகையினால்தான் மாணவ-மாணவியர் இஷ்டம்போலத்திரிகின்றனர் எனச் சில ஆசிரியர்கள் பொருமினர்.

அப்பொழுது ‘தமிழியல்’ என்ற திட்டத்தில் வித்து வான் ந.சேதுரகுநாதன், ச.தண்டபாணிதேசிகர் போன் றோர் பணியாற்றினர். அவர்களும் முதுகலை மாணவர் களாகிய எங்களுக்குப் போதித்தனர். புலவர் பரம் பரையின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்த அவர்களின் கருத்துப் போக்குகள் நல்ல அனுபவம்தான்.

பேராசிரியர் சேதுரகுநாதன் சீவகசிந்தாமணி காப்பியப் பாடலை ராகமுடன் பாடி நடத்துவார். ஒவ்வொரு பாவிற்கும் உரிய ஓசையுடன் பாடலைப் பாடும் போது, மனதில் உற்சாகம் கொப்பளிக்கும், அவர்பாடும்போது, பின்னணி இசையாக மேசையைத் தட்டி மாணவர்கள் தாளம் போடும் போது, அவர் சிரிப்பார். சைவநெறியில் தோய்ந்த அப் பேராசிரியர் சீவகசிந்தாமணி நூலினை வரிக்குவரி போற்றுவார். திருத்தக்கதேவரைவிட ரகுநாதன் அய்யாவிற்குத்தான் சீவகசிந்தாமணி நூலின்மீது பெரும் விருப்பம் என நினைத்துக் கொள்வேன்.

தற்செயலாகப் பல்கலைக்கழகத்தில் சந்திக்க நேர்ந்ததால், கேண்டீனுக்கு அழைத்துப்போய் இனிப்பு, காரம், தேநீர் வாங்கித் தந்து மரபிலக்கியச் சிறப்பினையும் கவிதையின் சந்தத்தையும் பற்றி விளக்குவார். ஒருநாள் வகுப்பறையில் அவர் எழுதிய ‘வெண்பா’வைச் சொன்னார். சில நிமிடங்களில் மாணவர்கள் பாலகிருஷ்ணனும் பாலுசாமியும் தங்களுடைய வெண்பாக்களை வாசித்தனர். அவற்றைக் கேட்டவுடன் திகைத்து நின்றவரின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. ‘இத்தகைய ஞானக் குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பது தான் பெற்ற பெரும்பேறு’ என்றார். யாரும் எதுவும் பேசவில்லை.

அன்றையகாலகட்டத்தில் மதுரையிலிருந்து பல்கலைக்கழகம் வழியாக, போடிக்கு ரயில் ஓடிக் கொண்டிருந்தது. தினமும் காலை மாலை வேளைகளில் பேராசிரியர்கள், மாணவர்கள் எனக்கூட்டம் நிரம்பி வழியும்.

ரயில்பெட்டியில் சந்திக்கும் தமிழ்ப் பேராசிரி யர்கள் எங்களை அன்போடு வரவேற்றுப் பேசுவார்கள். பாடம் தொடர்பாக எழும் எந்த சந்தேகங்களையும் நுட்பமாக விளக்குவார்கள். மதுரையில் ரயிலை விட்டு இறங்கியவுடன் பேராசிரியர்களுடன் இலக்கியக் கூட்டங் களுக்குப் போயிருக்கின்றேன். சி.சு.வுடன் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய கூட்டங்களுக்குப் போயிருக் கிறேன். கூட்டம் முடிந்தவுடன் ‘பேச்சு’ பற்றிய விமர்சனத் துடன் பேருந்து நிலையம் நோக்கி நடப்போம்.

வகுப்பறைகள் எப்பொழுதும் பேராசிரியர்களின் அரவணைப்பில் உக்கிரமாக விளங்கின. மாலை வேளையில் பல்கலைக்கழக நூலகத்துக்குள் நுழைந்து வாசிப்பறையில் அரட்டை. அப்புறம் கட்டுரை, தேர்வு எழுதுவதற்கான புத்தகத்தேடல், குறிப்பெடுத்தல், எனப் பொழுது நீளும். சில நாட்களில் இரவு எட்டு மணியாகி விடும். முதுகலையில் முதல் பருவத்தில் ‘தற்கால இலக்கியம்’ என்ற தாளில் 10 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 10 கவிதைத் தொகுதிகள், 10 நாடகங்கள், 10 கட்டுரை நூல்கள் பாடமாக இருந்தன. இவற்றில் 15 புத்தகங்களிலிருந்து ஒரு வரி கேள்விகள் தேர்வில் கேட்கப் படவிருப்பதனால், ஒவ்வொரு வரியாகப் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு தாளும் முழுமையாகவும் விரிவாகவும் இருந்தமையினால், முதுகலை படித்து முடித்தபோது தமிழிலக்கியம் குறித்த பரந்துபட்ட பார்வை உருவானது. அன்றைய காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயின்றவர்கள் தான் கடந்த முப்பதாண்டுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் திறமையுடன் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். M.K.University Tamil Department Product எனப் பெருமிதமாகச் சொல்லுமளவு நிலைமை ஏற்பட்டமைக்குக் காரணம் எங்களுக்கு வாய்த் திருந்த பேராசிரியர்கள்தான். கற்றுத்துறை போகிய அவர்களிடம் சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் இருந்தன. மாணவர்களாகிய நாங்களும் திறந்தமனத்துடன் எல்லா வற்றையும் உள்வாங்கிக் கொள்ளக் காத்திருந்தோம்.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை மட்டும் குறிப் பிடாமல், உலக இலக்கியப் பரப்பின் நுட்பங்களையும், பேராசிரியர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். ஆங்கிலத்தில் வெளியான முக்கியமான நூல்களைத் தேடி வாசிக்கும் சூழலை ஏற்படுத்தினர். சி.எம்.பவுராவின் Heroic Age’  டார்வினின் ‘Origin of Species தொடங்கி பல்வேறு திறனாய்வு நூற்களை உற்சாகத்துடன் வாசித் தோம்.

எங்களுடைய தேடல் புதியதளங்களுக்கு விரிந்தது. வெறுமனே தமிழாசிரியராக ஆவதற்கான பயிற்சி மட்டும் எங்களுக்குத் தரப்படவில்லை.

எனவே தான் அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் துறையில் பயின்ற மாணவர்கள் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், நூலகர், வங்கி அதிகாரி, இரயில் நிலைய அதிகாரி, பத்திரிகையாளர் போன்ற பணிகளில் சேர்ந்தனர். சு.வேணுகோபால் படைப்பிலக்கிய வாதியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழைப் பாடமாகப் பயிலும் மாணவர்கள், பிற மாணவர்களைப்போல வேறு துறைகளில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றமுடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ்ப் பேராசிரியர்கள் உருவாக்கினர்.

ஆய்வு மாணவர் தொடங்கி, முதுகலை முதலாண்டு மாணவர் வரை நிலவிய நேசத்தை என்னவென்று சொல்ல? சீனியர் மாணவரை அண்ணன் எனவும் சீனியர் மாணவியை அக்கா எனவும் அழைத்தது வெறும் சொற்கள் அல்ல. உண்மையாகவே அப்படி நம்பினோம். சீனியர் மாணவர்களின் புத்தகங்கள், அசைன்மென்ட்கள், ஜூனியர் மாணவர்களிடம் தானாகப் போய்ச் சேர்ந்தன.

ஆய்வு மாணவ-மாணவியர் முதுகலை மாணவர்களுக்குப் பாடம் நடத்தினர். இன்று தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் பேராசிரியர் ம.திருமலை அவர்கள் அப்பொழுது எங்களுக்கு அண்ணன். அவர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ பற்றி நடத்திய பாடம் இப்பவும் நினைவில் உள்ளது.

தற்காலிகப் பணியிலிருந்த பேரா சிரியர் தூ.சேதுபாண்டியன் அவர்களை வகுப்பறை யிலும் ‘அண்ணன்’ என்றுதான் சொல்லுவோம். அவர் ‘போங்கடா’ என உரிமையுடன் அன்பு கலந்து பேசுவார். புன்முறுவல் முகத்துடன் வாங்க என அன்பாகப் பேசிய ஆய்வாளர் மணிமாறன், தம்பி என வாய் நிறைய அழைக்கும் அஞ்சலி அன்னாமாய், ஆலிஸ் எனப் பட்டியல் நீளும். யோசிக்கும்வேளையில் பேராசிரியர் முத்துச் சண்முகம்பிள்ளை தொடங்கி முதுகலை முதலாமாண்டுமாணவர் வரை எல்லோருக்குமிடை யிலும் நிலவிய இனிய உறவினுக்கு அடிப்படையாகத் ‘தமிழ்’ இருந்தது, தமிழ்த்துறை இருந்தது.

பல்கலைக்கழகம் என்ற கோட்பாடு சிதைந்துபோய், எல்லாம் வணிகமயமாகிப்போன சூழல் ஒருபுறம் வலுவடைந்துவிட்டது. பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் படிப்பது பெரிய கௌரவம், மேன்மையானது, வளமான வாழ்க்கைக்கு ஆதாரம் போன்ற கருத்து இன்று அர்த்தமிழந்து விட்டன.

உயர்கல்வியில் அறிவு ஜீவித் தன்மையும் அச்சமற்ற மனநிலையும் முக்கியமானவை என்பது குறித்து இன்று யாருக்கும் அக்கறையில்லை. புற்றீசல் போலப் பெருகியுள்ள சுயநிதிக் கல்லூரியில் நடத்தப்படும் பாடத்திற்கும் பல்கலைக்கழகத் துறைசார் பாடத்திற்கும் வேறுபாடு இல்லை என்ற நிலை உருவாகி யுள்ளது. உயர்கல்வியில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை. ‘இனி நினைத்திரக்க மாகின்று’ என்ற  சங்கப்பாடல் வரி ஏனோ நினைவுக்கு வருகின்றது.

Pin It