இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டம், தனித் தெலுங்கானா கோரிக்கை போன்ற நீடித்த அரசியல் சிக்கல்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோருதல், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை அறிவிப்பு போன்றவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டம், சிக்கிம் மாநிலத்தில் எதிர் பாராத நிலநடுக்கம், தமிழகத்தில் எதிர்பார்த்த உள்ளாட்சித் தேர்தல் எனப் பல செய்திகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மக்களின் மனங்களில் இடம்பெற்றிருந்தாலும், 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் இந்திய மக்களின் ஒட்டுமொத்தக் கவனத்திலிருந்து சிறிதும் விலகவே இல்லை; அப்படி விலகிவிடவும் முடியாது. ஏனெனில், அது அவ்வளவு மிகப் பிரம்மாண்டமான ஊழல்! ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயைக் கணக்கிட இயலாமல் கணக்கிடு கருவிகள் திண றின. அச்சு ஊடகங்கள் இதைப் பற்றிச் செய்தி எழுதும்போது ‘1.76’ - என்ற எண்களை அடுத்து எத்தனை பூஜ்யங்களைப் போடுவது என்று குழம்பின.

இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா பதவியை விட்டு விலக வேண்டிய நெருக்கடியுடன் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியது.

அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், தரகர்கள் எனப் பல நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் கைது நடவடிக்கையோடு மெள்ள வளர்ந்து வந்த இந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவ காரம் கடந்த இரண்டு வாரங்களாக மத்திய அரசுக்கு மட்டுமின்றி, ஆளும் காங்கிரஸ் கட்சிக் கும் பெருத்த நெருக்கடியைக் கொடுத்தது. காங் கிரஸ் கட்சியின் அகத்தே முன், பின், இடம், வலம் என்ற போராட்டங்களும், அகத்திலிருந்து புறத்தே, புறத்திலிருந்து அகத்தே என்ற எண் திசைத் தாக்குதல்களுமாக மேம்பட்டு வந்த இந்த 2 ஜி நெருக்கடி, ‘இவ்வூழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவால் மேலும் உயர்ந்தது.

‘சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறை கேட்டைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்’ என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம்தான், சிதம்பரத்தின் மீது - பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வைத்தாலும் இந்திய மக்களிடம் அய்யத்தை விதைத்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள் ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. நிதி அமைச்சகத்திடமிருந்து பிரதமர் அலுவலகத் துக்கு அனுப்பப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான குறிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் அளிக்கப்பட வில்லை என்று இடதுசாரிக் கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளன.

பா.ஜ.கட்சியைச் சேர்ந்த ஜஸ்வந்த்சிங், அருண் சௌரி ஆகியோரெல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்ட நிலையில் அமைச்சர் ப.சிதம்பரம் ஏன் விசாரணைக்கு முன்வர மறுக்க வேண்டும் என்பது எதிர்க் கட்சிகளின் வாதம். அவரைப் பதவி யிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், ‘2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்’ என்று 28-9-2011 அன்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரி வித்துள்ளது.

இத்தகைய நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாடு என்ன? 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதைப் பற்றித் தான் எதுவும் கூற விரும்பவில்லை என்றும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுபற்றிய குற்றச்சாட்டு தனது முந்தைய ஆட்சியிலேயே எழுந்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவுடனும் அங்கீகாரத்துடனும்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்திருப்ப தாகவும் தெரிவித்தார்.

இதிலிருந்து என்ன புலப்படுகிறது?

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத் துரைத்து, கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்திய சிக்கல்களிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் காப் பாற்றி, அமைச்சரவைக்குள்ளே நடந்த சண்டைகளில் ‘பஞ்சாயத்து’ பண்ணி, 2ஜி அலைக்கற்றை ஊழல் மீது நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற தொனியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து, தானும், தனது அமைச்சரவை சகாக்களும், தான் சார்ந்த கட்சியினரும் ‘தூய்மையானவர்கள்’ என்று காட்டிக்கொள்ள முனைந்திருப்பதைத் தவிர, வேறொன்றையும் பிரதமர் செய்யவில்லை.

எனவே, இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் தனது நிலையை நாட்டு மக்களுக்கு நேர்மையுடன் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில், ‘அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்ற வழக்கமான பல்ல வியை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்போகிறது - மத்திய அமைச்சரவையில் இப்போது வெடித் துள்ள வெடி!

Pin It