இந்திய ராணுவத்தின் படுகொலைகளுக்கு என்ன பதில்?
சு.ப. தமிழ்ச் செல்வன் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது தமிழக முதலமைச்சர் கலைஞரே மனம் குமுறி கண்ணீர்க் கவிதைத் தீட்டினார். ஒட்டு மொத்த தமிழினமே கண்ணீர் வடித்து இரங்கலைத் தெரிவிக்கும் போது - தமிழக காங்கிரசார் தமிழின உணர்வே அற்றுப் போய் சுப. தமிழ்ச்செல்வனுக்கு வைத்திருந்த கண்ணீர் பதாகையைக் கிழித்தெறிகிறார்கள். தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களர்களின் தூதுவர்களாக தமிழகத்தில் செயல்படுகிறார்கள்.
பொறுப்புள்ள அமைச்சர் பொறுப்பற்று பேசுகிறார், மத்திய அமைச்சர் இளங்கோவன். கோபியில் தொண்டர்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டுப் பேசுகிறார். அவரது பேச்சு ‘தினத்தந்தி’ நாளேட்டில் வெளி வந்திருக்கிறது.
“நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்கின்றனர். இதைவிட கேவலமான ஒன்று எதுவும் இல்லை. எனவே ஈரோடு மாவட்டத்தில் சுப.தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பர போர்டுகளை காங்கிரசாரே அகற்றுங்கள். அதன் மூலம் காங்கிரசார் வீரம் உள்ளவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.” - ‘தினத்தந்தி’ (சென்னைப் பதிப்பு) பக்.13, 25.11.2007
சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு, வீரத்தைக் காட்டுங்கள் என்று, மத்திய அமைச்சர் ஒருவரே பேசுகிறார். அதற்குப் பிறகுதான் ஒரு கும்பல், முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கிடு, தேனீர் கடையில் வைக்கப்பட்டிருந்த சுப.தமிழ்ச் செல்வனுக்கு கலைஞர் எழுதிய கவிதையுடன்கூடிய பதாகையை கிழித்து எறிந்தது. இப்படி சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதையும், இந்த வன்முறையை மத்திய அமைச்சர் ஒருவரே, தூண்டி விடுவதும் சரியான பொறுப்பான நடவடிக்கையா? சட்டம் இதை அனுமதிக்கிறதா? என்று கேட்கிறோம்!
ராஜீவ் மரணத்துக்கு வருந்தாத உள்ளங்கள் கிடையாது. அது கண்டிக்கப்பட வேண்டியதுதான் ஆனால், ராஜீவ் உயிருடன் இருந்த காலத்திலேயே தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்கள் தங்களுக்குள் சட்டையைக் கிழித்துக் கொண்டு, ஆளுக்கொரு ‘கோஷ்டி’ சேர்த்துக் கொண்டு திரிந்தவர்களே தவிர, ராஜீவ் தலைமைக்குப் பின்னால் அணிவகுத்து, காங்கிரசை வலிமைப்படுத்தியவர்கள் அல்ல.
ராஜீவ் கொலை என்ற துயர நிகழ்வுக்குப் பிறகு வழக்குகள் முடிந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டும் விட்டார்கள். போலீஸ் தேடுதல் வேட்டையில் உயிரிழந்தவர்கள் பலர்.
இலங்கை அரசு வரவேற்பில் - ராஜீவை துப்பாக்கி மட்டையால் அடித்துக் கொல்ல முயன்றான், சிங்கள வெறியன். அந்த சிங்கள வெறி ஆட்சிக்கு, ஆயுதம் கொடுத்து மகிழ்கிறது மன்மோகன்சிங் ஆட்சி. இது ராஜீவுக்கு காட்டும் மரியாதையா?
ராஜீவ் காலத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம் எத்தனை தமிழர்களைக் கொன்று குவித்தது? எத்தனை தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது?
நெஞ்சு பதறும் அந்தக் கொடுமைகளை - மனித நேயம் கொண்ட எவராலும் மறந்துவிட முடியுமா? சில சம்பவங்களை இதோ நினைவுபடுத்துகிறோம்:
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள், அது ஒரு தீபாவளி நாள். யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர் நோயாளிகள். அந்த மருத்துவமனை மீதே ஈவிரக்கமின்றி, செல்களையும், குண்டுகளையும் வீசியது, இந்திய ராணுவம். மருத்துவமனையில் படுக்கையில் உடல்நலம் பெற சிகிச்சை பெற்று வந்த தமிழர்கள் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள்.
பிரபல குழந்தை நல மருத்துவரான டாக்டர் சிவபாத சுந்தரம் மூன்று நர்சுகளுடன் கரங்களை உயர்த்தியபடியே - “நாங்கள் டாக்டர்கள், அப்பாவிகள்; சரணடைகிறோம்; எங்களைக் கொன்று விடாதீர்கள்” என்று கதறிய போதும், மார்புக்கு நேரே இந்திய ராணுவத்தால் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக வீழ்த்தப்பட்டார்; நர்சுகள் மூவரும் சுடப்பட்டு படுகாயமடைந்தனர். 8வது வார்டில் மட்டும் 7 நோயாளிகள் பிணமாக்கப்பட்டனர்.
‘ரேடியாலஜி’ பிரிவுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து இந்திய ராணுவம் சுட்டதில், டாக்டர் கணேஷ் ரத்தினம், கழுத்தில் மாட்டியிருந்த ‘ஸ்டெத்தோஸ் கோப்புடன்’ அப்படியே பிணமாக தரையில் சாய்ந்தார். மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர்களையும், நோயாளிகளையும் சுட்டுக் கொன்ற கொடுமையை யார்தான் மறக்க முடியும்?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர் என்ற ஒரே காரணத்துக்காக வல்வெட்டித் துறை என்ற கிராமத்தில் இந்திய ராணுவம் புகுந்து வீடு வீடாக நுழைந்து பலரைக் கொன்று, பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, வீடுகளை தரைமட்டமாக்கி, வல்வெட்டித் துறையே சுடுகாடாக்கியது. இந்தியாவின் மூத்த தலைவரும், பிறகு, இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்த மனிதப் படுகொலைகளை விரிவான ஆதாரங்களுடன் ஆவணமாக்கி, அதை சர்வதேச மனித அமைப்புகளுக்கு கொண்டு சென்றார்.
வியட்நாமில் ‘மைலாய்’ எனும் கிராமத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வெறியாட்டத்துடன் அதை ஒப்பிட்டு ‘இந்தியாவின் மை லாய்’ என்ற பெயரில் அந்த ஆவணம் வெளியானது. இந்தக் கொடுமைகளுக்கு என்ன பதில்?
தமிழ் ஈழத்துக்குச் சென்ற இந்திய ராணுவத்துக்கு தலைமை ஏற்றிருந்தவர் ஹர்கிரத்சிங் என்ற நேர்மையான ராணுவ தளபதி; நேர்மையாக செயல்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக குறுகிய காலத்திலேயே அவர் திருப்பி அழைக்கப்பட்டு விட்டார். அமைதியை ஏற்படுத்துவதற்காகச் சென்ற ராணுவம், தமிழர்களை அழித் தொழிக்கும் வேலைகளில் இறங்கியபோது, அவர் துடித்துப் போனார்.
தனது அனுபவங்களை அண்மையில் அவர் நூலாகவே எழுதி வெளியிட்டுள்ளார். அப்போதெல்லாம் பிரபாகரனை இந்திய ராணுவத் தளபதி, அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அப்படி நட்பு ரீதியாக சந்திப்புக்கு அழைத்து பிரபாகரனை சுட்டுத் தள்ளுமாறு அப்போது இந்தியாவின் இலங்கைத் தூதராக இருந்த ஜெ.என்.தீட்சத், தன்னிடம் கூறியதாகவும், அதை செயல்படுத்த தாம் மறுத்து விட்டதாகவும், அந்த அதிகாரி தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
“இது என்னுடைய உத்தரவு அல்ல. இந்தியாவில் மிக மிக மேல் மட்டத்திலிருந்து எனக்கு வந்த உத்தரவு” என்று தீட்சத், தன்னிடம் கூறியதாக, ஹர்கிரத்சிங் கூறியுள்ளார். (கடந்த மாதம் ‘ஜுனியர் விகடன்’ ஏடு கூட, இதை அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது) வெள்ளைக் கொடிக்குக் கீழே இந்தியாவை நம்பி, சமாதானம் பேசி வந்த தலைவர்களையே சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட கொடுமைகளைச் செய்தது யார்?
இந்திய அரசிடம் போர் நிறுத்தத்தை முழுமை யாக அமுல்படுத்தக் கோரி, உண்ணாவிரதம் இருந்தான் திலீபன். தண்ணீர்கூட அருந்தாமல் 13 நாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, அம் மாவீரன் மரணத்தைத் தழுவினான். இந்த சம்பவம் பற்றி ராணுவத் தளபதி ஹர்கிரத்சிங் தனது நூலில் என்ன எழுதியிருக்கிறார், பாருங்கள்!
“இந்தியாவின் பிரதமர் தலையிட்டு உறுதி தந்தாலொழிய இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது. நான் தூதர் தீட்சத்திடம் (திலிபனை) வந்து பாருங்கள், வந்து பாருங்கள் என்று மீண்டும் மீண்டும் அழைத்தேன். அவர் நழுவிக் கொண்டே இருந்தார். (திலிபனை) நேரில் சந்திப்பதைத் தாமதப்படுத்தினார். கடைசியில் அந்த மனிதன் மரணத்தைத் தழுவிய பிறகே வந்தார். நாம் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்.”
இது இந்திய ராணுவத் தளபதி ஹர்கிரத்சிங் உள்ளம் குமுறி பதிவு செய்துள்ள சோக வரலாறு.
இப்படி இந்திய ராணுவம் - மேல்மட்டத்தின் ஆணைப்படி நடத்திய வெறியாட்டங்கள் ஏராளம்! ஏராளம்! எத்தனையோ கொடுமைகளை பட்டியலிட்டுக் காட்ட முடியும். இந்தியாவின் தலைவர்களும், ராணுவத் தளபதியும் கூறியவற்றிலிருந்தே சிலவற்றை மட்டும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம். இந்தத் தமிழர்கள் படுகொலைகளுக்கு, இந்தியா வருத்தம் தெரிவித்தது உண்டா? காங்கிரசார், தீர்மானம் போட்டது உண்டா?
இந்திரா சுடப்பட்டபோது - சீக்கியர்களை டெல்லியில் பிணமாக்கியது யார்?
காங்கிரஸ்பயங்கரவாத கும்பல் அல்லவா? அதற்காக - நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் அல்லவா?
ஏதோ, ஒரு சீக்கியன் துப்பாக்கியைத் தூக்கியதற்காக சீக்கிய சமுதாயத்தையே கொன்று குவிப்பது பயங்கரவாதமல்லவா?
அந்தப் படுகொலைகளுக்கு இப்போது, சீக்கிய சமூகத்திடம், சோனியா காந்தி மன்னிப்புக் கேட்டாரா, இல்லையா? ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக, தமிழர்களிடம் இவர்கள் மன்னிப்புக் கேட்ட வரலாறு உண்டா?
ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாலேயே - அந்த இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதை தடை செய்ய முடியுமா? முடியவே முடியாது.
‘பொடா’ சட்டத்தின் கீழ்கூட, இதைத் தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பது காங்கிரசாருக்கு தெரியுமா?
பொடா சட்டத்தின் 21வது பிரிவின்படியே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திரபாபு வை.கோ. தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டது இவர்களுக்கு புரியுமா?
காமராசர் - தமிழின உணர்வாளராக நின்று காங்கிரசை வளர்த்தார். அதனால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ந்தது. தமிழின உணர்வுக்கு குழி தோண்டி - காங்கிரசை தமிழர்களிடமிருந்தே அண்மைக்காலமாக அன்னியப் படுத்தி வருகிறது காங்கிரஸ். இப்போது காங்கிரசை புதைக் குழிக்கு அனுப்புவதில் தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நல்ல தமிழினத் “தொண்டு”தான். அதற்காக இளங்கோவன்களைப் பாராட்டலாம்!