தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் நடைபெற்ற மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்குக் குளித்தல், சங்கறுத்தல், உப்பு உற்பத்தி செய்தல், உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் எனப் பன்முகம் கொண்ட தூத்துக்குடி நகர் வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்வத்தைத் தருவித்துக் கொடுத்த பெருமை கொண்ட நகர். இந்தச் செல்வப் புழக்கத்தின் விளைவாக, அரசியல், மதம், சமூகம் ஆகிய துறைகளிலும் பல மாற்றங்களைத் தோற்றுவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தூத்துக்குடி நகரைப் பற்றிப் புதியதொரு நூல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி வரலாறு (History of Thoothukudi) என்னும் இந்த ஆங்கில நூலை முனைவர் சகோதரி ச.டெக்லா, ஜே.ரகு அந்தோணி ஆகிய இருவரும் தொகுத்தளித்துள்ளனர்.

“பெரும் வரலாற்றை உருவாக்குகிற சின்ன சின்ன நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு புரிதல் இன்றி, ஒரு தேசத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள இயலாது. பல்வகைப் பண்பாடுகளைத் தன்ன கத்தே கொண்ட இந்தியாவைப் போன்ற ஒருநாட் டில் வட்டார வரலாறு இன்றியமையாத பங்கினை வகிக்கிறது” என்ற கூற்றுடன்தான் சகோதரி டெக்லா தனது நூல் முகவுரையைத் துவங்கு கிறார். ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து நீடித்து வரும் வட்டார வரலாற்றின் மீதான ஆர்வம், அண்மைக் காலமாகத் தீவிரமடைந் துள்ளதாகக் குறிப்பிடும் நூலாசிரியர் வட்டார வரலாற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தாம் கடந்தகால வரலாற்றின் பொதுமை விளக்கங் களின் மீளாய்வுகளுக்கு வித்திட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஐந்து நூற்றாண்டு காலத்தைக்கொண்டு உரு வாகியுள்ள இந்நூலில் தொல்பழங்காலக் குறிப்பு களும் இடம்பெற்றுள்ளன. இது மக்களைப்பற்றி மக்களிடமிருந்தே எழுந்துள்ள வரலாற்று நூல்.

‘போர்ச்சுகீசியரின் ஆளுகையின் கீழ் தூத்துக் குடி’ என்னும் தலைப்பிலான முதற் கட்டுரையில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் முதன்முதலாகத் தடம் பதித்தது, முத்துக்குளித்துறையில் போர்ச்சு கீசியர்களின் தலையீடு, உள்ளூர் இஸ்லாமியக் கடற்பயணிகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டது, பின்னர் பெரிய அளவில் நிரந்தர மாகக் குடியேறியது, பதினாறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் பரதவர்கள் திரளாகக் கத்தோலிக்கர்களாக மாறியது, மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம், புன்னைக் காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் ஆகிய சிற்றூர்கள் துறைமுகங்களாக விளங்கியமையை விளக்குகிறார் டெக்லா. போர்ச்சுகீசிய வணிகர் கள், அரிசி, துணி வகைகள், வாசனைப் பொருட் கள் போன்றவற்றை இங்கிருந்து ஏற்றுமதி செய்துள்ளனர்.

இந்த ஊர்களுள் முக்கிய நகரான தூத்துக் குடியில் கத்தோலிக்கச் சமயம் வேர்விடத் தொடங் கியது. 1555-இல் போர்ச்சுகீசியர்கள் பனிமய அன்னை உருவத்தைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். 1582-இல் சேசு சபையினரும் போர்ச்சு கீசியர்களும் இணைந்து பனிமய அன்னைக்கு ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினர். அந்த ஆண்டில்தான், தூத்துக்குடி போர்ச்சுகீசியரின் தலைநகரமானது.

அதன் பிறகு, அங்கு நடைபெற்ற முத்து, சங்குக் குளித்தல், வணிகம், அடிமைமுறை, குதிரை வணிகம், யானை வணிகம் போன்ற பல்சுவைத் தகவல்கள் பலவற்றைப் பேசிச் செல்லும் இந்தக் கட்டுரை இறுதியில் டச்சுக்காரர்கள் வருகை யினால் போர்ச்சுகீசியர்களின் ஆளுகை எப்படி முடிவுக்கு வருகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து இடம்பெற்றுள்ள, ‘டச்சுக்காரர்களின் ஆளுகையின் கீழ் தூத்துக்குடி’ என்னும் கட்டு ரையில், “நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட டச்சுக்காரர்கள் தூத்துக்குடியில் நுழைந்து கத்தோலிக்கர்களிடம் - குறிப்பாக, ஸ்பானியர் களிடமும், போர்ச்சுகீசியர்களிடமும் எப்படிப் பகைமையை வளர்த்துக் கொண்டனர்” என்று தொடங்கி, டச்சுக்காரர்கள் இந்தியாவில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது, தூத்துக்குடி யைக் கைப்பற்றியது போன்ற வரலாற்றுத் தகவல் களைச் சுவையாகக் கூறிச் செல்கிறார், கட்டுரை யாளர் டி.துர்காதேவி.

இராமநாதபுரம் சேதுபதிக்கும், மதுரை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட போரின்போது, டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்களுக்கும் மதுரை நாயக்கருக்கும் எதிராக, சேதுபதிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறாக, அவ்வப்போது அரங்கேறிய பல்வேறு அரசியல் மாற்றங்கள், வணிகச் செயல்பாடுகள், அடிமை வியாபாரம், டச்சுக்காரர்களின் சமயக் கொள்கை போன்ற வற்றை ஆண்டுவாரியாக விளக்கிச் செல்கிறார், துர்காதேவி.

‘ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் தூத்துக்குடி’ என்னும் கட்டுரையில் தூத்துக்குடியின் பழம் பெருமை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தாலமி, சூசிக்கரை (Sousikarai) என்று குறிப்பிட்டிருப்பதாகவும், அந்தச் சொல் தான் ஆங்கிலத்தில் ட்யூட்டிகொரின் (Tuticorin) என்று சொல்லுரு பெற்றதாகவும் கூறுகிறார் இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ஜே.ஜேன் டி அல்மெய்டா.

‘போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலே யர்கள் ஆகிய மூன்று நாட்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக, தூத்துக்குடியையும், முத்துக்குளித் துறையையும் ஆண்டு, சுமார் 450 ஆண்டுகள் வரை அந்நகரின் செல்வத்தைச் சுருட்டிச் சென்ற னர்’ என்று கூறும் இக்கட்டுரையாளர், முத்துக் குளித்தல், சங்குக் குளித்தல், ஜாதித் தலைவனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நிகழ்ந்த உறவு, உள்ளூர் மேலாண்மை போன்ற தகவல்களைத் தொகுத்தளித்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் இருப்புப் பாதைகள் அமைக்கப் பட்டதையும், தூத்துக்குடிக்கு முதன்முதலாக இரயில் வந்ததையும், அப்போது நிகழ்ந்த சுவை யான நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டியதுடன், தூத்துக்குடி எவ்வாறு நகராட்சியானது என்ற வரலாற்றுக் குறிப்பையும் வாசகர் முன்வைக் கிறார், கட்டுரையாளர் அல்மெய்டா.

‘வ.உ.சிதம்பரம்பிள்ளையும் தூத்துக்குடியில் சுதேசி இயக்கமும்’ என்ற கட்டுரையை எழுதி யிருக்கும் எம்.கிரேஸ் ஹெப்ஸிபாத் அன்புமணி, வ.உ.சி. கல்வி கற்றது, 1900-முதலாக தூத்துக் குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றியது, அரசிய லில் பங்கெடுத்தது எனத் தொடங்கி, தூத்துக் குடியில் நடைபெற்ற தொழிற்சங்கப் புரட்சிகளை விளக்கமாக எடுத்து வைக்கிறார். வ.உ.சி. காலத்தே தூத்துக்குடி வரலாற்றையும், வ.உ.சி. அய்யர், பத்ப நாப அய்யங்கார் ஆகியோர் அரசியல் கைதி களாகச் சிறையிலடைக்கப்பட்ட செய்தித் துளி களும் அன்புமணியின் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடிப் பகுதியில் நடைபெற்ற முத்து, சங்குக் குளித்தல்களைப்பற்றி முனைவர் டி.டார்கஸ் சாந்தினி அதற்குக் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சிறுபாணாற்றுப் படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் மேற்கோள்களைத் துணையாகக் கொண்டு தனது கட்டுரையில் பேசியுள்ளார்.

இலங்கைக்கும் தூத்துக்குடி - இராமேஸ்வரம் பகுதிக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா தான் முன்பு கொற்கை வளைகுடா என்றழைக்கப் பட்டுள்ளது. கி.பி.13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களுக்கும் இலங்கை அரசர்களுக்கும் இடையில் முத்துக்குளித்தலைக் கையகப்படுத்தும் நோக்கில் அடிக்கடி போர்கள் நடைபெற்றுள்ளன. முத்துப்படுகைகள் கன்யாகுமரிக்கும் இராமேஸ் வரத்துக்கும் இடையே 100 மைல்களுக்கு மேல் பரவலாக இருந்திருக்கிறது.

முத்துக்குளிப்பவர்கள், ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவமழை இறுதிக்கும் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அதாவது, ஏப்ரல் மாதத் தொடக் கத்திலிருந்து, மே மாதத்தின் நடுப்பகுதி வரை கடலில் இறங்கி முத்தெடுத்துள்ளனர். இப்பணி 50 நாட்கள் வரை நடைபெறுவது வழக்கம்.

இதைப் போன்ற தகவல்களைப்பற்றிப் பேசும் டார்கஸ், சாந்தினி, இந்த முத்துக்குளித்தல் இப் பகுதியில் ஏற்படுத்திய அரசியல் விளைவுகளையும் காலவாரியாக விவரித்துள்ளார்.

அடுத்து, ‘தோணி : தூத்துக்குடி நகரின் கடற்கலம்’ என்னும் கட்டுரையை ஆ.சிவசுப்பிர மணியன், ஜே.ரகு அந்தோனி இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வெளிநாடுகளுக்குக் கடற் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், முத்துக் குளித் துறையிலுள்ள கொற்கை, பாண்டியர்களின் பிரதான துறைமுகமாக விளங்கியது என்றும் இந்தக் கட்டுரை தொடங்குகிறது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முத்துக்குளித் துறையைக் கைப்பற்றியபோது, வேதாளை, புன்னைக்காயல், மணப்பாடு ஆகிய பகுதிக ளெல்லாம் முக்கிய வணிகத் தலங்களாகியுள்ளன. இடையில் வடுகர்களின் தொடர் தாக்குதலின் விளைவாக போர்ச்சுகீசியர்கள் வேதாளையையும், புன்னைக்காயலையும் விட்டு வெளியேறி தூத்துக் குடி போர்ச்சுகீசியர்களுக்கும், பின்னர் டச்சுக் காரர்கள், ஆங்கிலேயர்களுக்கும் முக்கிய துறை முகமாக மாறியுள்ளது. இவ்வேளையில் உள் நாட்டு, வெளிநாட்டு வணிகமும் தோணிகள் மூலமே நடைபெற்றுள்ளன. தூத்துக்குடியில் தோணி என்றழைக்கப்படும் இம்மரக்கலம் மேலைக் கடலோரத்திலும், ‘பெர்சியன் வளை குடாவிலும் “தவ்” (Dhow) என்றும் கடலூரில் “டிங்கி” (Dingy) என்றும் அழைக்கப்படுகிறதாம்.

இந்தச் செய்திகளைக் கூறும் கட்டுரையாளர்கள் தோணி, கப்பல் நடைத் தோணி (Linhterage), கடற் பயணத் தோணி (Coarting Thonis) என இரு வகைப்படும் என்றும், கப்பல்நடைத் தோணிகள் அளவில் சிறியன, 100 டன்கள் எடை வரை சுமக்கும், தூத்துக்குடி பெரிய துறைமுகமாவதற்கு முன்பு கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சரக்குகள் இந்தத் தோணிகள் மூலம் எடுத்து வரப்படும் என்றும், கடற்பயணத் தோணிகள் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லப்பயன்பட்டன, அவை 450 டன்கள் வரை எடை சுமக்கும் என்றும் தகவல் அளிக்கின்றனர். இந்தத் தோணிகள் தூத்துக்குடி நகரிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதன் நுட்ப மான தொழில்நுட்பமும் இக்கட்டுரையில் விவரிக் கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரின் வரலாறு, பண்பாட்டில் தோணி முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர் கட்டுரையாளர்கள்.

அடுத்து, ‘தூத்துக்குடியில் பருத்தித் தொழில் துறைகள்’ என்ற தலைப்பில் எம்.மகேந்திரன் எழுதி யுள்ள கட்டுரை பண்டைய சங்கத் தமிழ் இலக் கியத்தில் தமிழ் மண்ணில் பருத்தி விளை விக்கப்பட்டதையும் பருத்திப் பஞ்சிலிருந்து நூல் நூற்கப்பட்டதையும்பற்றித் தகவல் இருப்பதையும் சுட்டிக்காட்டித் தொடங்குகிறது.

17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தோன்றியபோது, உலகம் முழுவதும் பருத்திக்கான தேவை ஏற்பட்டுள்ளது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா இந்தியாவில் உற்பத்தியான பருத்தியைத்தான் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. திருநெல் வேலி பருத்தி (Tinnevelly Cotton) என்ற பெயரில் அனுப்பப்பட்ட பருத்தி தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதே. இந்தத் தகவல் களுடன், அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டு வரை தூத்துக்குடியில் பருத்தித் தொழில்துறைகள் எங்ஙனம் வளர்ந்து வந்தன என்றும் விளக்குகிறார் கட்டுரையாளர் மகேந்திரன்.

அடுத்து எஃப், மரிய ஜெனிஃபர் தாயா எழுதியுள்ள ‘பனிமய அன்னையின் திருத்தலம்’ என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்தத் திருத்தலம் முத்துக்குளிக்கும் கரையோர வர லாற்றுடன் தொடர்புடையது. கி.பி.1535-இல் தூத்துக்குடியில் ஓர் இஸ்லாமியருக்கும், பரதவர் ஒருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு சிறு வாக்குவாதம் இரு இனத்தவர்களுக்கிடையேயான பெரிய கலவரமாக உருவெடுத்தது. அதன் விளைவு முற்றிய நிலையில் அச்சத்தில் உறைந் திருந்த பரதவர்கள் ஜான் தா குரூஸ் என்னும் குதிரை வியாபாரியின் ஆலோசனைப்படி பாது காப்பு தேடி ஒட்டுமொத்தமாகக் கத்தோலிக்க சமயத்தில் இணைந்தனர். 1536-இல் ஆண்களும் பெண்களுமாக சுமார் 20,000 பரதவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். இந்தத் தகவலுடன், பனிமய அன்னையின் புனித வரலாறு, திருத்தல உருவாக்கம், ஆலயத்தின் கட்டுமானம், ஆண்டு தோறும் ஆகஸ்ட், 5-அன்று நடைபெறும் திரு விருந்து விழா உள்ளிட்ட பல்வேறு செய்தி களையும், இத்திருத்தலம் வாயிலாகத் தூத்துக்குடி மக்களிடையே ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் கோவையாகக் கூறுகிறார் கட்டுரையாளர் மரிய ஜெனிஃபர் தாயா.

ஆக, இந்த நூல் தூத்துக்குடி வரலாற்றைத் தொகுத்துக் கொடுத்ததோடு வட்டார வரலாற்றை எங்ஙனம் எழுத வேண்டும் என்ற இலக் கணத்தையும் செதுக்கியுள்ளது.

தமிழில் இந்நூல் வரவேண்டும் என்ற விழைவு ஒருபுறமிருக்க ஆங்கிலத்தில் இது நிறைவு கண்டுள்ளது என்பது உவக்கத்தக்கதே!

Pin It