ச.முருகபூபதியின் சூர்ப்பணங்கு வழியாக

தமிழின் நவீன நாடகச் சூழலில் புத்தாயிரத்துக்குப் பின்பு, சிறிய தேக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. புதிய பிரதிகளின் உருவாக்கம், 80, 90-களில் எழுந்தது போன்ற தீவிர நாடகச் செயல்பாடுகள் போன்றவை இன்றுள்ளதா? என்பது சந்தேகமே. இவற்றுக்கான அக, புறக் காரணிகளை ஆராயும் பொறுப்பை மூத்த அரங்கியல் ஆய்வாளர்களிடமே விட்டுவிடலாம். இத்தகையதான சூழலில், ச.முருகபூபதியின் அரங்கச் செயல்பாடுகள் சற்று நம்பிக்கை அளிப்ப தாக உள்ளன. கடந்த ஆண்டு ‘மிருக விதூசகம்’ என்னும் நாடகத்தைப் பல்வேறு இடங்களில் நிகழ்த்தினார். இவ்வாண்டு, ‘சூர்ப்பணங்கு’ என்னும் புதிய பனுவல், அன்று பாண்டிச்சேரி அல்லையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் நிகழ்த்தப் பட்டது.

முருகபூபதியின் நாடகப் பனுவல்களும், நிகழ்த்து முறை உள்ளிட்ட அரங்கச் செயல்பாடுகளும் மற்றவர்களிடமிருந்து சற்று வேறுபட்டே நிற்கின்றன. இதற்கு, அவரின் ‘கூந்தல் நகரம்’, ‘செம் மூதாய்’, ‘மிருகவிதூசகம்’ போன்ற நாடகங்களை எடுத்துக் காட்டலாம். நவீன நாடக நிகழ்த்துதலுக்கான உந்துதல்களை மேலைக் கோட்பாடுகளிட மிருந்து அவர் பெற்றிருந்தாலும்கூட, உள்ளடக்கத்தின் சாரத்தைத் தமிழ்ச் செவ்வியல் - நாட்டார் மரபுகளிலிருந்தே எடுத்தாள்கின்றார்.

‘சூர்ப்பணங்கு’ என்னும் இப்புதிய பனுவல் ‘நல்ல தங்காள்’ என்னும் நாட்டார் மரபின் தொன்மத் திலிருந்து எழும்பி, பல்தளங்களுக்கும் விரிவு கொள்வதாய் அமைந்திருக்கின்றது. மேலும், மனித இனத்தில் நிலவும் பல்வகை வடிவிலான ஒடுக்குதல்களையும் ‘சூர்ப்பணங்கு’ பேச முயல் கின்றது. நல்லதங்காளும், அவளின் பெண் பிள்ளைகளுமாக முழுதும் (திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா தவிர) ஆண்களே பாத்திரமேற்றி ருந்தனர். இது, அன்றைய பாலர் சபை நாடகங் களின் ‘ஸ்திரீபார்ட்’ மரபை நினைவூட்டியது. எனினும், நீண்ட பாவாடை - மேலாடை அணிந் தது தவிர, ஆண்களுக்கு (பெண் போல்) முக ஒப்பனையோ, குரல் மாற்றமோ செய்யப்பட வில்லை. இது, ‘நவீன அரங்கின் ஸ்திரீபார்ட்’ வடிவம் என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்தது. இதன் மூலம், ‘தன்னிலை’ அழிந்து ‘மற்றமையாக’ உருக்கொள்ளும் கலைமரபின் கண்ணிகளில் ஒன்றாக ‘சூர்ப்பணங்கு’ நிகழ்வு அமைந்துவிட்டது.

அல்லையன்ஸ் பிரான்சிஸின் திறந்தவெளியில் நிகழ்த்துதல் நடந்தேறியது. முருகபூபதியின் இசையிலும், எழுத்திலும், இயக்கத்திலும் நடந்த இந்நிகழ்வாக்கம் காண வந்திருந்த அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களையும் ‘தனது அலை வரிசைக்குள்’ இழுத்துக் கொண்டது. இது, இந் நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் எனக் குறிப்பிடத் தோன்றுகிறது. இதன் பொருளானது, நவீன கலை வடிவங்களானவை, ‘உயர் கலை ரசனை’ என்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும். மேலும், அவை வெகுசன அவதானிப்பையும் பெறும் பொழுதே உண்மையான ‘பண்பாட்டுப் போராட் டங்களாக ‘முழு வெற்றியடைய முடியும் என்பதாகும். இத்தகைய பண்பாட்டுப் போராட்டச் செயல்பாடுகளே அரசியல் உணர்வை ஊட்ட வல்லவையாகவும் விளங்கும். இதை விடுத்து, ‘சிறுகுழுச் செயல்பாடு, சிறு குழு ரசனை’ என்பதோடேயே முடித்துவிட்டால், லாபம் யாருக்குமில்லை. எனவே, நவீன நிகழ்த்து மரபின் பரிசோதனை முயற்சிகளும், ‘வேத்தியல்’ நிலையிலிருந்து ‘பொதுவியல்’ நிலைக்கு மாற வேண்டியுள்ளன. நம்மைச் சுற்றித் தாக்கும், ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட ஊடகபிம்பங் களுக்கு மாற்றான அரசியல் உணர்வை முருக பூபதியின் ‘சூர்ப்பணங்கு’ போன்ற மூன்றாம் அரங்குகள் தரவல்லவை. சூர்ப்பணங்கானது, பசி, வறுமை, போர், சுரண்டல், பெண் ஒடுக்குமுறை, சாதீயம் இவற்றைப் பேசும் ‘அரசியல் பிரதியாக’, அதன் நிகழ்கணங்களில் உணர வைத்தது.

அரச வன்முறை, அரச நீதி இவற்றுக்கெதிரான கலகக் குரல்கள், தமிழ் மரபில் ஏராளம் உண்டு.

“பாணன் பறையன் துடியன் கடம்பன்

இந்நான் கல்லது குடியுமில்லை”

என்னும் குரலோடும், தனியொரு பெண்ணாக அரசழித்த கண்ணகியின் குரலோடும் இனம் காணத்தக்கது, சூர்ப்பணங்கின் குரலும். நாடகத் தின் ஓரிடத்தில் நல்லதங்காள் பேசுகிறாள்.

“வாழாக்குமரி நான் மீளா நெருப்பெடுப்பேன். அரசா... மன்னா... தலைவனா நீ? நீ ஈயாப் பறந்தால் இருதுண்டாய் வெட்டும் கோபம் எனக்குண்டு. காற்றாய்ப் பறந்தால் கண்ட துண்டம் செய்திடும் மனதும் எனக்குண்டு...”

இக்கலகக் குரல்கள் ‘அறச் சீற்றத்தின்’ வெளிப் பாடு கள்தான். இவற்றின் நதிமூலம் ‘கவிமனத்தின் அறச்சீற்றங்கள்தான்.’

சூர்ப்பணங்கின் அறக்கோபம், அதில் நடித்த நடிகர்களின் உடல்மொழி வழியே வெளிப்பட் டது. அவ்வுடல் மொழி, மண்ணின் தெய்வங்கள் தம்முடல் ஏறி, மருள் வந்து ஆடும் ‘சன்னதங் கொண்டாடிகளின் உடல்மொழியை’ கண் முன்னே நிறுத்தியது. உருமியும், டிஜிருடுவும், நடிகர்களின் குரலும், உடலசைவும், ‘உன்மத்தம்’ கொண்டாடும் ஆதி இன மக்களின் சடங் கசைவுகளை நினைவூட்டின. நிகழ்த்துதலின் உள்ளடக்கத்தை ஒத்திசைந்து இயங்கும் தம் உடல்களின் வெளிப்பாட்டில் காட்டினர், நடி கர்கள். ஆண் உடல்கள் ‘பெண்ணுருக்கொள்ளும் ரசவாதம் அவ்வெளியில் நிகழ்ந்தேறியது.

பெண்கள், கழைக்கூத்தாடிகள், சவுரிமுடி விற்போர், பழங்குடிகள், விவசாயிகள் போன்ற ‘உதிரிகளின்’ துயரைத் தன்வெளி முழுவதும் கசியவிட்டபடி வளர்ந்தது, சூர்ப்பணங்கு. உலகின் துயரைத் தன் துயராக ஏற்கும் ஆதித் தாய்த் தெய்வத்தின் குறியீடாக வெளிப்படுகிறாள், நல்ல தங்காள். பசியும், வறுமையும், இவை தரும் உயிர் களின் துயரமும் ‘உள்ளார்ந்த இழையாக’ நாடகத் தில் ஓடிக்கொண்டிருந்தது. இத்துயர் விளை விக்கும் அறமற்ற அரசும், சமூகமும், போர்களும் கடும் விமர்சனத்துக்குள்ளாயின.

வயிறு (கும்பி), நாடகத்தின் பல இடங்களில் படிமமாக, குறியீடாக வந்தபடியே இருந்தது. உலக்கையும், முறமும், பஞ்சாரமும், சுரைக் குடுவைகளும் வெறும் புழங்கு பொருட்களாக மட்டுமன்றி, பலரூபம் கொள்வனவாயின.

“பெண் மக்கமாரு துடியா பிடிச்சு தூக்கி

குத்தின உலக்கை... ச்சோ...

பிடிதேஞ்ச உலக்கை... பொன்னாத்தா

உலக்கை... ச்சோ.. அப்பத்தா உலக்கை

பாம்படம் குலுக்கி குலுவையிட்ட உலக்கை”

இந்த உலக்கைப் பாடலும், மூச்சுத் தவிப்பாலும் ஒலியும் சொல்லாமல் சொல்லும் சேதிகள் ஏராளம். உலக உயிர்களுக்கு உணவை உற்பத்தி செய்து வயிறு நிறைந்த பெண் சக்திகளின் பாடலாக அது அர்த்தம் கொள்கிறது.

நிகழ்வின் இறுதியில், நல்லதங்காளின் உடல் முழுவதும், சுரைக் குடுவைகளே முலைகளாய் மாற, நடிகர்கள் பாலருந்தும் குழவிகளாய் மாறும் அக்காட்சிப் படிமம், கவித்துவ உச்சம். பார்வை யாளர்கள் ஒவ்வொருவரும் தாய்மையின் கருணை யில் கரைந்த தருணமது. ஒற்றை வயிறும் ஓராயிரம் முலைகளும் கொண்டு உயிர்களைப் புரக்கும் ‘தாய்க் கடவுளாக’ நல்லதங்காள் தொன்மம் வேறுருக் கொண்டது. ஒட்டுமொத்த நிகழ்வும், தாய்மை வெளிப்படுத்தும் பேரன்பையும், ரௌத் திரத்தையும் ஒரு சேரக் கண்ட கவித்துவ சொல் லாடல்களுடன் நிகழ்ந்து முற்றுப் பெற்றது.

முருகபூபதியின் பிற நிகழ்த்துதல்களை விட, இதில் ஆட்டமும், இசையும் மிகுந்திருந்தன. மேலும், இசை, ஒளி இவற்றின் பயன்பாடும் சிறப்புற இருந்தன. இதுபோன்ற பழங்கதை (அ) தொன்ம உள்ளடக்கம் கொண்ட நிகழ்விற்கு, தொன்ம இசைக் கருவிகளே உயிர் தரும். (உதாரணத்திற்கு : பசோலினியின் ‘ஒடிபஸ் ரெக்ஸ்’, குரசோவாவின் ‘துரோன் ஆப் பிளட்’, ‘ரான்’). இதை, முருகபூபதி செம்மையாகக் கையாண்டி ருக்கிறார்.

தீவிரம் கொண்ட பிரதிகளை எழுதி இயக்கும் முருகபூபதி, பரிசோதனைகளின் அடுத்தகட்ட சாத்தியங்களுக்கும் செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், சில சமயங்களில் ஒரே சாயல் கொண்ட உரை யாடல்கள், சில போதுகளில் சலிப்புணர்வையும் எதிர்மறை விமர்சனங்களையும் தந்துவிடும் அபாயங்களுண்டு. இந்நெருக்கடியைக் கடந்து செல்லும் படைப்பூக்கமும், வன்மையும் முருக பூபதியின் அரங்கத்துக்கு உள்ளன என்ற நம்பிக்கையுடன், நாம் காத்திருக்கின்றோம்.

Pin It