இரண்டாம் உலகப்போரில் சோவியத் நாட்டின் பங்கேற்பு

வழக்கமாக எழுதப்படும் வரலாறுகள் எல் லாமே தற்சார்பு நிலைப்பாடுகளை முன்வைத்தே வடிவமைக்கப்படுகின்றன. சமுதாய, அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாடுகளின் பின்ன ணியை அவை கணக்கில் எடுத்துக் கொள்ளுவ தில்லை. தன்னை அல்லது தன்னுடைய நாட்டை முதன்மைப்படுத்தி அதன் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்திலேயே ஒரு வரலாறு திரித்தும், மறுத்தும், மாற்றியும் எழுதப் படுகின்றன. சமூக, அறிவியல் அடிப்படையில் அவை பெரும்பாலும் உருவாக்கப்படுவதில்லை. இதுபோன்ற ஒரு பொதுவான மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எழுதப்பட்டுள்ள சமூக அறிவியல் வரலாறாக வி.அ.மத்சுலேன்கோவின் ‘இரண்டாம் உலக யுத்தம்’ என்ற வரலாற்று நூலைக் கருதலாம்.

சரியான புள்ளி விவரங்களோடும், தகவல் களோடும், ஆவணங்களோடும், தரவுகளோடும் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பது இதனு டைய தனிச்சிறப்பு. இதுவரை அறியப்படாத உண்மைகளைத் தெளிவாகவும், துல்லியமாகவும், சார்புத் தன்மை இல்லாமலும் வி.அ.மத்சு லேன்கோ வெளிப்படுத்தியிருக்கிறார்.

கல்வித் திட்டத்தில் கூட, ஒரு பக்கத்தில் மட்டுமே சொல்லப்பட்டுள்ள தகவலை வைத்துத்தான் இரண்டாம் உலகப் போரைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. அந்த உலகப்போர், உலக வரலாற்றைத் தலைகீழாக மாற்றி அமைத்த வளர்ச் சியை அந்தத் தகவல்கள் முறையாக ஆவணப் படுத்துகின்றன. இதுபோன்ற ஒரு வரலாற்று ஆவண நூலை வடிவமைக்க இதன் ஆசிரியர் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கும் போது வியப்புக்கு மேல் வியப்புத்தான் மிஞ்சுகிறது.

கடந்த நூற்றாண்டின் அறுபது, எழுபதுகளில் ஐரோப்பிய நாடுகளில் எழுதப்பட்ட கலை, இலக்கியங்களும், விமர்சனங்களும் தற்சார்பு நிலைமைகளுக்கு மட்டுமே முதன்மை கொடுத்தன. திரைப்படங்கள் கூட பெரும்பாலும் இந்த நிலைப் பாட்டை முன்வைத்தே எடுக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதி பத்திய நாடுகளில் இவை பரவலாகவும், தீவிர மாகவும், தொடர்ச்சியாகவும் பின்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சோவியத் யூனியனின் பங்கேற்பு இடம் பெறாமலே தவிர்க்கப்பட்டன என்பது வெளிப்படையாகவே இருந்து வந்தது. ஏகாதிபத்திய நாடுகள்தான் இரண்டாம் உலகப் போரை முன்னின்று நடத்தியது போன்ற மாயையை அந்த ஊடகங்கள் தோற்றுவித்தன. உண்மை அதுவல்ல என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த நூல் உலக அளவில் முதன்மை பெறுகிறது என்று சொல்லலாம்.

இதுதான், வி.அ.மத்சுலேன்கோவை இப்படி யொரு புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கும் என்று ஊகிக்க வைக்கிறது. சோவியத் யூனியன் ஆற்றிய அரிய பணியைக் குறித்து அவர் இப்படி எழுதுகிறார்:

“சோவியத் யூனியனுக்குத்தான் மிகப் பெரும் இழப்பேற்பட்டது. சண்டைகளிலும் பாசிச முகாம்களிலும் சிறைக் கூடங்களிலும் 20 மில்லியன் சோவியத் மக்கள் இன்னுயிர் ஈந்தனர். பிரிட்டிஷ் தரப்பில், 3,70,000 நபர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தரப்பில், 4,00,000 நபர்களும் மாண்டனர்.

இவையனைத்தும் இரண்டாவது உலக யுத்தத் தில் சோவியத் - ஜெர்மானியப் போர் முனையின் தீர்மானகரமான பங்கிற்கு நன்கு சான்று பகர்கின்றன.

“ஹிட்லரின் தோல்வி - பாசிச இராணுவம், பாசிச நெறியின் தோல்வியைக் குறித்த போராட் டத்தின் முடிவு வட ஆப்பிரிக்கப் பாலைவனங் களிலோ, அல்லது நார்மண்டியின் கரைகளிலோ நடந்த சண்டைகளில் அல்ல. மாறாக, ஸ்டாலின் கிராடிலும், லெனின் கிராடிலும், கூர்ங்கிலும் நடந்த சண்டைகளில் முன் நிர்ணயிக்கப்பட்டது. ஹிட்லரைப் பொறுத்தவரை பிரிட்டனோ அல்லது வட ஆப்பிரிக்காவோ இரண்டாம் பட்ச முக்கியத்துவம் உடையவையாக மட்டுமே யிருந்தன. ருஷ்யாவில் அவன் வெற்றி கொள்ளப் பட்டான்” என்று பிரிட்டிஷ் முற்போக்கு எழுத் தாளர் பீர்ஸ் போல் ரீட் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள நேர்மையான மனிதர்கள் அனை வரும் இந்த மதிப்பீட்டின் கீழ்க் கையொப்ப மிடலாம். ஆனால், பூர்ஷ்வா சித்தாந்த வாதிகள் சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் பாசிசத்தை முறியடிப்பதில் இவர்களின் தீர்மான கரமான பங்கு ஆகியவற்றைப் பற்றிய உண்மையை எப்படியாவது மக்களிடமிருந்து மறைக்கப் பார்க்கின்றனர். “உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரு இராணுவ நடவடிக்கையின்போது கிழக்கே சோவியத் யூனியனில் - இரண்டாவது உலக யுத்தம் முடித்து வைக்கப்பட்டது என்ற உண்மையை மேலைய நாட்டு வாசகர்களில் பெரும்பாலோர் இன்னமும் உணரவில்லை” என்று 1978-ஆம் ஆண்டு லண்டனில் வெளியான, “ருஷ்யப் போர்முனை” என்னும் நூலின் சுருக்கத் தில் கூறப்பட்டுள்ளது.

ஹிட்லரின் பாசிச ஜெர்மானிய இராணுவம் பெர்லினிலிருந்து புறப்பட்டு முதலில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி வெற்றி கொண் டது. அந்த இராணுவத்தை ஒவ்வொரு நாட்டிலி ருந்தும் வெளியேற்றிக் கடைசியில் படையெடுப் பைத் தொடங்கிய பெர்லினிலேயே அதைச் சரண டையச் செய்த சோவியத் இராணுவத்தின் சாதனையை விளக்குவதை நோக்கமாகக்கொண்டு இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு போர் முனையிலும் ஈடுபடுத்தப்பட்ட போர் வீரர்களின் எண்ணிக்கையோடு, பயன் படுத்தப்பட்ட வகைவகையான விமானங்களின், பீரங்கிகளின், கண்ணிவெடிகளின் எண்ணிக் கைகளையும் தகுந்த புள்ளி விவரங்களோடு குறிப் பிட்டிருப்பது வியப்பிற்குரிய அரிய முயற்சி யாகவே தோன்றுகிறது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற கால கட்டத்தை ஐந்தாகப் பிரித்து அதன் தொடக் கத்தையும், விரிவையும், வீழ்ச்சியையும், முடி வையும் தேதி, ஆண்டு போன்ற விவரங்களுடன் விளக்குவது வரலாற்றின் திருப்புமுனையை அடையாளம் காட்ட இவர் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்பதைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொரு போர்முனையிலும் கைதானவர்கள், சரணடைந்தவர்கள், காயமடைந்தவர்கள், இறந் தவர்கள்பற்றிய எண்ணிக்கை அளவிலான விவரங்களைத் தருகிறார் இவர். இரு தரப்புக் களிலும் நிகழ்ந்தவற்றைப் பற்றி இவர் இத்தனை விவரங்களை எப்படிச் சேகரித்திருப்பார் என்பது மேலும் வியப்பளிக்கிறது.

வாசகர்களின் தெளிவுக்காக முன்னுரையில் சில விவரங்களை இவர் குறிப்பிடுவது வாசிப்புக்கு எளிதாக உள்ளது. “இரண்டாம் உலக யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்ற வகையில் முதலாளித்துவ அரசுகளின் இரண்டு தோற்றங்களுக் கிடையே தொடங்கியது. சோவியத் யூனியனின் மீது பாசிச ஜெர்மனி தாக்கியதால் சோவியத் யூனியன் யுத்தத்தில் இறங்க நேரிட்டதும் ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டதும் யுத்தத்தின் நியாயமான, பாசிச எதிர்ப்புத் தன்மையை ஊர்ஜிதப்படுத்தியது.”

இத்துடன் இவர் இன்னொரு விவரத்தைக் குறிப்பிடவும் தவறவில்லை. அதை இவர் இப் படித் தெளிவாக விளக்குகிறார். “முதலாளித்துவ நாடுகளின் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தேசிய விடுதலை மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு சமாதானத்திற்காகப் போரா டினார்.”

தொடர்ந்து இவர் மேலும் அதிக அளவில் விவரங்களைத் தருகிறார். “உலக மக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த யுத்தத்தில் இழுக்கப்பட்டனர். இராணுவ நடவடிக்கைகள் மூன்று கண்டங்களிலும் பெரும் கடல் மற்றும் சமுத்திரப் பரப்புக்களிலும் நடைபெற்றன.”

இரண்டாம் உலக யுத்தத்தின்போது, உலகெங் கிலும் மக்கள் கோடிக்கணக்கில் பசிக்கும், பட்டி னிக்கும், நோய்க்கும் உள்ளான விவரங்களையும் இவர் குறிப்பிடுகிறார். ஓர் உலகப் போர் என் னென்ன தீமைகளையும், சேதங்களையும், அழிவு களையும் ஏற்படுத்தும் என்பதை இவர் விளக்கும் போது மனம் கலங்குகிறது.

அதைப் பற்றி இவர் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லுகிறார்: “இரண்டாம் உலக யுத்தம் மக் களுக்கு அளவற்ற துக்கத்தையும் சுமைகளையும், இழப்புக்களையும் கொண்டுவந்தது. இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர். 4 தில்லியன் டாலர்கள் பெரும் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் ஆசியா விலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங் களும் கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. மனித மேதைமையின் ஏராளமான மாபெரும் படைப்புக்கள் மறைந்து போயின. பல இலட்சக் கணக்கான மக்கள் காயங்கள், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஏகாதிபத்தியத்தால் உரு வாக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்திற்கு அளிக்கப்பட்ட விலை இவ்வளவு பயங்கர மானதாக இருந்தது.”

நிபந்தனை எதுவும் இல்லாமல் நேச நாட்டு இராணுவங்களின் முன்னால் சரணடைந்ததையும், உடன்பாடு நடந்ததையும் அது கையெழுத்தான தையும் குறிப்பிட்டுத் தெளிவாக விளக்குகிறார். அதைத் தொடர்ந்து, நியூ சென்பர்க் விசார ணையை விளக்கி ஏகாதிபத்திய நாடுகளின் உள் நோக்கங்களையும் நடைமுறைகளையும் இவர் இனம் காட்டுகிறார்.

அந்த விசாரணையின் தீர்ப்பை இப்படி இவர் குறிப்பிட்டுச் சொல்லுகிறார் : “நியூ ரென்பர்க் ட்ரிப்யூனலின் தீர்ப்பில் காணப்படும் சர்வதேச உரிமைபற்றிய கோட்பாடுகளை ஐ.நா. பொதுச் சபை ஊர்ஜிதப்படுத்தியது. இதன் மூலம் ஆக்கிர மிப்பு யுத்தமும், மனிதகுலத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும் மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றங்களாகும் என்று ஐ.நா. சபை அறிவித்தது.”

பாசிச ஜெர்மானிய இராணுவத்தின் வீழ்ச்சிக் குப் பிறகு, ஜப்பானிய இராணுவ வெறியர்களின் வீழ்ச்சியைப் பற்றிய விவரங்களை விளாவாரியாக இவர் சித்திரித்துக் காட்டுகிறார். சோவியத் நாட்டை வெற்றி கொள்ள இருபது ஆண்டுகளுக் கும் மேலாக ஜப்பான் திட்டமிட்டுச் செயல்பட்ட விவரங்களையும் தகுந்த ஆவணங்களுடனும், தகவல்களுடனும், தரவுகளுடனும் இவர் விளக்கு கிறார். நேச நாடுகளின் முன்னால் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்த ஜப்பான் அவற்றின் முன்னால் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நிகழ்ச்சியை மனம் சிலிர்க்கும் விதத்தில் இவர் விவரிக்கிறார்.

சோவியத் நாட்டைப் பற்றியும், அதன் இராணு வத்தைப் பற்றியும் பொய்யான பிரச்சாரங்களை அடையாளம் காட்டும் விதத்தில், “யுத்தத்தின் முடிவுகளும் யுத்தம் கற்பித்த பாடங்களும்” என்ற அத்தியாயத்தின் வாயிலாகப் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார் இவர். ஏகாதிபத்திய அரசுகளின் தலைமைப் பொறுப்பில் இருந்துவந்த தலைவர்களின் நேரடியான கருத்துக்களை இவர் சான்றாகக் காட்டுகிறார்: “செஞ்சேனையின் வெற்றிகரமான நடவடிக்கைகள் இல்லாம லிருந்தால் அமெரிக்கத் துருப்புக்களால் ஆக்கிர மிப்பாளனை எதிர்த்து நின்றிருக்க முடியாது. யுத்தமானது அமெரிக்கக் கண்டத்திற்குப் பரவி யிருக்கும்” என்று அமெரிக்க ஜெனரல் மார்ஷல் கூறினார்.

பாசிச ஜெர்மானியத் துருப்புக்கள் இரண் டாவது கோடைக் காலத் தாக்குதலைத் தொடுக் கும் அபாயம் சோவியத் யூனியனை எதிர்நோக்கி யிருந்த கடினமான 1942 மே மாத நாட்களில் ஜெனரல் மாக்கார்துருக்கு, ரூஸ் வெல்ட் பின்வரும் தந்தியை அனுப்பினார்: “பெரும் போர்த் தந்திர நோக்கிலிருந்து பார்க்கும்போது ஐக்கிய நாடு களின் 25 அரசுகளும் ஒட்டுமொத்தமாகச் செய்வதைவிட ருஷ்யர்கள் அதிகமான எதிரிப் போர் வீரர்களைக் கொன்று குவிக்கின்றனர். எதிரி யின் அதிக ஆயுதங்களையும் போர்த் தளவாடங் களையும் அழிக்கின்றனர் என்னும் எளிய உண்மை தெள்ளத் தெளிவு.

கிரேட் பிரிட்டனின் பிரதமர் சர்ச்சில் - சோவியத் யூனியனின் மீது இவர் அனுதாபம் காட்டினார் என்று சந்தேகப்படவே முடியாது - “ருஷ்ய இராணுவம்தான் ஜெர்மானிய இராணு வத்தைக் குலை நடுங்கச் செய்தது” என்று ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். மேற்கு ஐரோப்பாவிலிருந்து நேச நாட்டு ஒன்றி ணைந்த பயணப் படைகளின் உயர்மட்ட பிரதான தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர், “ருஷ்யர்களின் அற்புதமான தாக்குதல்கள்” குறித்து வியப்பு தெரி வித்தார். அவர்களின் மகத்தான வெற்றிகளுக்கு உரிய மதிப்பு” அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எழுதினார். “குறிப்பாக ருஷ்யப் போர் வீரர்களுக்கு உரிய மதிப்பளித்து அமெரிக்கர்கள் தமது போர் வீரர்களின் நன்றியைத் தெரிவிக் கின்றனர். மூன்றாண்டுகள் இடையறாது நடை பெற்ற போராட்டத்தில் ஜெர்மனியர்களுடைய தாக்குதலின் முழுச் சுமையையும் தம் தோள் மீது தாங்கி அவர்களை எப்படி முறியடித்தனர் என்பதை நாம் கண்டோம்... இப்போராட்டத்தின் மையத்திலிருந்த ருஷ்ய போர் வீரர்களின் சேவைகளை நாகரிக உலகம் முழுவதும் குறிப்பாக நன்கு மதிப்பிட வேண்டும்” என்ற அமெரிக்கத் தரைப்படை சக்திகளின் தளபதி ஸ்திலுவேல் குறிப்பிட்டார். இதுபோன்ற கூற்றுக்களின் பட்டியல் இன்னமும் தொடரலாம்.”

இவர், சோவியத் நாட்டின் உன்னதமான கோட் பாட்டையும், நடைமுறையையும், செயல்திற னையும் சுருக்கமாகத் தெரிவிக்கிறார். “இவ்வாறாக உலகின் முதல் சோஷலிச அரசின் விடுதலைப் பணி, சோவியத் நாட்டின் ஸ்தாபகரான வி.சி.லெனினின் வார்த்தைகளைக் கண்கூடாக மெய்ப்பித்தது. அவர் கூறினார், “நாம் எதற்கும் எவர்க்கும் துரோகம் செய்யவில்லை. எந்த ஒரு பொய்யையும் புனிதமாக்கவில்லை. மூடி மறைக்க வில்லை. துயரில் சிக்கிய எந்த நண்பருக்கும் தோழ ருக்கும் நமது சக்தி அனைத்தையும் பயன்படுத்தி இயன்ற எல்லா வழிகளிலும் உதவி புரிய நாம் மறுக்கவில்லை.”

தொடர்ந்து, இவர் மனப்பரவசத்துடன் ஒன்றைக் குறிப்பிடுகிறார். “சோவியத் மக்கள் எந்த மகத் தான மூலாதாரங்களிலிருந்து இச்சக்தியைப் பெற்றனர்? முதலாவதாக அவர்களின் உயர்ந்த சித்தாந்தம், சோவியத் தாயகத்தின்பாலான தன்னலமற்ற விசுவாசம், எதிரியின் மீதான வெற்றியிலும், கம்யூனிசத்தின் வெற்றியிலும் உள்ள அசைக்க இயலா நம்பிக்கை ஆகியவையே அந்த மூலாதாரங்களாகும்.

சோவியத் இராணுவமும், அதன் மக்களும் பாசிச ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து உலகத் தைக் காப்பாற்றி மக்கள் அமைதியான சமாதான சகவாழ்வு வாழ ஒரு புதிய அடித்தளத்தை நிறுவிய தன்னலமற்ற நிலைப்பாட்டை விளக்குவதுதான் இந்த மாறுபட்ட வரலாற்று நூலின் உள்ளார்ந்த நோக்கம் என்பது தெளிவு. காலனி ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து உலக நாடுகளை மீட்டு அவை தன்னியல்புகளோடு வாழவும், வளரவும் வழி வகைகளை அமைத்தது சோவியத் யூனியன் என் பது இதில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.

மக்களின் உழைப்புத் திறனைப் பின்னுக்குத் தள்ளி நுகர்வுக் கலாசார வாழ்க்கையை நிறுவும் நோக்கம் கொண்ட நவீன காலனியாதிக்கத்தைப் பரவலாக்கி வரும் ‘உலகமயமாதல்’ மற்றும் ‘தாராளமயம்’ ஆகியவற்றை வளர்க்கும் அறி வியல் தொழில்நுட்ப ஆதிக்கச் சூழலில், சோவியத் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணரும்படி செய்கிறது இந்த நூல்.

இன்று உலகம் முழுவதுமாக நிகழ்ந்துவரும் இயற்கைக் சீரழிவுகளைப் புலப்படுத்தும் விதத்தில் இது கடந்த காலத்தை நினைவூட்டுகிறது. உலக நாடுகளில் பரவலாகக் காணப்படும் வன்முறை, தீவிரத்தன்மை, அமைதியில்லாத பதற்றநிலை போன்ற எதார்த்தங்களை உணரவும் இது ஒரு தூண்டுதலாக இருக்கிறது.

இயற்கையைச் சார்ந்து வாழும் உயிர் வாழ்க் கையை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கிவரும் நவீன காலனியாதிக்கம் குறித்த புரிதலையும், மதிப்பீடு களையும் உருவாக்கிக் கொள்ள ஒரு தூண்டுதலாக இந்த நூல் அமைந்துள்ளது. ஏகாதிபத்திய ஆக்கிர மிப்புக்கள் புதிய உத்திகளால் நிறுவப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள இது பெரும் அளவுக்கு உதவுகிறது. இனியொரு உலகப் போர் மூளுமானால் மனித வாழ்க்கை எந்த அளவுக்குக் கொடுமைகளை, துன்பதுயரங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. வரலாற்றின் வளர்ச்சிப் போக்கைப் புரிந்துகொண்டு அதன் வழியே மனிதன் தன்னுடைய பயணத்தைத் தொடர வேண்டிய ஒரு தேவையையும் இது மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது. உலகம் முழுவதுமாகக் காணப்படும் மாறுபட்ட சமுதாய, பொருளாதார கலாசாரப் பண்பாட்டை ஒழுங்கமைத்து மனித குலத்தை முன்னோக்கிச் செலுத்தும் சோசலிசத் தின் தேவையையும் இது அடையாளம் காட்டு கிறது.

தங்குதடையில்லாத எளிமையான, தெளிவான துல்லியமான மொழிநடையில் இதை மொழி பெயர்த்துள்ள இரா.பாஸ்கரனின் ஆழ்ந்த ஈடு பாட்டைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வாசிப்பை முழுக்க முழுக்க எளிமையாக்குகிறது இதிலுள்ள மொழிநடை. முற்றிலும் மாறுபட்ட ஒரு வரலாற்று ஆவணமாக இது வடிவம் பெற்றி ருக்கிறது.

Pin It