நேர்காணல் குறித்து மே.து.ரா. உண்மை விளக்கம்.

எனது இனிய தோழரும் பேராசிரியருமான செ.போத்திரெட்டி அவர்கள் நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் (செப்டம்பர் 2011) இதழுக்கு அளித்துள்ள நேர்காணலைப் படித்தபோது, இளம் பருவத்தின் பசுமை நினைவுகள் சிறகடித்துப் பறந்தன. இயக்கப் பணிகளில் இணைந்து திரிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய நாட்கள் அலைகளாகத் தொடர்ந்து மனக்கண் முன் தோன்றின. அந்த நேர்காணலில் பேரா. போத்திரெட்டி கீழ்வருமாறு கூறியிருக்கிறார்;

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது பொதுவுடைமை மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டேன். இருவரை இவ்வியக்கத்தில் சேர்த்தேன். ஒருவர் திருப்பராய்த்துறை சித்பவானந்தர் பள்ளியில் படித்துவிட்டு B.O.L படிக்க வந்த மே. து.ராஜ்குமார். பக்திப்பழமாக வந்த அவரது திருநீற்றையும் பொட்டையும் நானும் புலவர் ஆ.சிவசுப்பிரமணியனும் அழிக்க வைத்தோம். இரண்டாவது நபர் அரங்க குப்பன் என்ற மாணவர். பின்னாளில் தொல்லியல் துறையில் பணியாற்றினார். பூங்குன்றன் எனப் பெயர் மாற்றிக்கொண்டார். சிறந்த ஆய்வுகள் செய்தவர்.”

இது குறித்துச் சில விளக்கங்கள்- விவரங்கள் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன். எனது தாய்மாமன் திரு.பி.கே. பழனிசாமி (பாட்டா) அவர்கள் மாணவர் இயக்கத்தில் இருந்ததுடன், கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்டக் கழகத் தேர்தலிலும் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது ஐந்து அகவையில் இருந்த நான், விவரங்கள் தெரியாத நிலையிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டேன்.

1965 சூன் திங்களில் பி.ஓ.எல். பட்ட வகுப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் உள்ள நிலைப்பேழைக் கதவில், சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சிப் பொதுச் செயலாளராகவும் சோவியத் ஒன்றியத்தின் பிரதமராகவும் இருந்து அப்போது பதவி விலகியிருந்த குருஷ்சேவ் படத்தினை ஒட்டிவைத்திருந்தேன். பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய உலகத் தலைவர் குருஷ்சேவ். இதைப் பார்த்து என்னை அடையாளம் கண்ட பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். நான் கம்யூனிஸ்ட் ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும், இயக்கத் தொடர்பு இருக்கவில்லை. இயக்கத்தோடும் தலைவர்களோடும் நேரிடையான தொடர்பினை உருவாக்கிக்கொடுத்து கொள்கைத் தெளிவையும் புரிதலையும் ஏற்படுத்தியவர் பேரா.சிவம் அவர்கள்தான். அப்போதே ஆழமான பற்றும் இணக்கமான கொள்கைகளும் கொண்டிருந்ததால், என்னைக் கம்யூனிஸ்டாக மாற்றவேண்டிய பணி அவருக்கு இருக்கவில்லை. ஆனால், என்னை வளர்த்தெடுக்கவேண்டிய பங்களிப்பினை முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்தார்.

அடுத்த கல்வியாண்டில் எம்.ஏ., பட்ட வகுப்பில் பயிலவந்த தோழர் போத்திரெட்டி (தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்) எங்களோடு சேர்ந்துகொண்டார். இளம் பருவத்திலேயே பொதுவுடைமை நாட்டம் மனத்தில் குடிபுகுந்துவிட்டது. பேரா.போத்திரெட்டியின் அறிமுகம் பெறும் முன்னரே, பேரா.சிவம் வாயிலாக இயக்கத் தொடர்பும் கட்சித் தலைவர்களுடனான பழக்கமும் கிடைத்துவிட்டது. மேலும், கட்சி இதழில் அரசியல் கட்டுரை எழுதுமளவுக்கான வளர்ச்சியும் ஏற்பட்டுவிட்டது.

நிலைமை இப்படி இருக்கும்போது, “பக்திப்பழமாக வந்த அவரது திருநீற்றையும் பொட்டையும் நானும் புலவர் ஆ.சிவசுப்பிரமணியனும் அழிக்க வைத்தோம்” என்று பேரா.போத்திரெட்டி கூறியிருப்பது உண்மையான தகவலாகவும் இல்லை; பொருத்தமான கூற்றாகவும் இல்லை.

Pin It