புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றியலாளரும் இந்தியவியலாளருமான ஆர்.எஸ்.சர்மா 20, ஆகஸ்ட், 2011 அன்று தனது 92-ஆவது வயதில் காலமானார்.

பீஹார் மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்த ராம் சரண் சர்மாவை அவரது தந்தையார் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே படிக்க வைத்தார். கல்வித் தாகத்தால், சர்மா தாம் கற்ற கல்வியையே பிற மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து சிறிது சிறிதாகப் பொருளீட்டி, அந்தப் பணத்திலேயே தனது கல்லூரிக் கல்வியை முடித்தார்.

பண்டித கர்யானந்த் சர்மா, சுவாமி சகஜானந்த் போன்ற விவசாய சங்கத் தலைவர்களிடமும், மேதை ராகுல் சாங்கிருத்தியாயன் போன்ற அறிஞர்களுடனும் இளம் வயதிலேயே நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற சர்மா, அவர்களிடம்தான் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடும் தெளி வையும் மனவுறுதியையும் பெற்றார். பின்னர், சமூக நெறியாளர் டாக்டர் சச்சிதானந்த் சின்ஹாவுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் தனது அறிவுப் பரப்பை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சர்மா.

ஏ.எல்.பாஷம் அவர்களின் நெறிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்று டோரண்டோ, டில்லி, பாட்னா பல்கலைக்கழகங்களில் நாற்பது ஆண்டு களுக்கு மேலாக வரலாற்றுப் பாடங்களைக் கற்பித்த சர்மா இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவர் ஆவார்.

இந்திய வரலாற்றில் மார்க்சிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய முன்னோடிகளுள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவர் ஆர்.எஸ்.சர்மா. Ancient India, Sudras in Ancient India, Material Culture and Social Formations in Ancient India, Aspects of Political Ideas and Institutions in Ancient India, Perspectives in Social and Economic History of Early India, Indian Feudalism, Advent of the Aryans in India, Looking for the Aryans, Origins of the State in India, Urban Decay in India (C.300 - 1000) உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நூல்களை எழுதியுள்ளார் சர்மா. இவற்றுள் 1977ல் வெளி வந்த பண்டைக்கால இந்தியா நூலை அப்போதைய ஜனதா அரசு 1978இல் தடை செய்தது. கிருஷ்ணனின் காலத்தையும், மகாபாரத நிகழ்வு களையும் பற்றி ஆர்.எஸ். சர்மா தனது ‘பண்டைக் கால இந்தியா’நூலில் ஆதாரபூர்வமாக எழுதிய தகவல் மத்திய அரசை எரிச்சலடையச் செய்ததன் விளைவுதான் இந்தத் தடை ஏற்பட்டதற்கான காரணம். அதற்குத் தக்க சான்றுகளுடன் பதிலடி கொடுத்தார், சர்மா. பின்னர், அரசு இசைவுடன் வெளிவந்த ‘பண்டைய இந்தியா’ இந்த அரசியல் சச்சரவால் மேலும் அதிகப் புகழைப் பெற்றது.

அயோத்தியா பிரச்சினையின் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்துரைத்தவர் டாக்டர் சர்மா. அயோத்தியா சச்சரவும், 2002- குஜராத் கலவரவமும் இளம் தலைமுறையினர் கூர்ந்து நோக்க வேண்டிய சமூகச் சிக்கல்கள் என்று எடுத்தியம்பி, இவ் விரண்டையும் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டவர் சர்மா.

பண்டைய இந்தியாவைப்பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆய்ந்து எழுதியதோடு தனது கடமையை நிறுத்திக் கொள்ளாது, சமகால அரசியலையும் கூர்ந்தாய்ந்து கருத்துரைத்தார் டாக்டர் சர்மா என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

இவர் நாட்டில் சாதிச்சிக்கல், சமய மோதல், நிலவுடைமைத் தகராறு என எந்த சமூகப் பிரச்சினை ஏற்பட்டாலும், தாம் வசித்து வரும் பதவியைப் பொருட்படுத்தாது, நேரடியாகக் களமிறங்கிய மார்க்சியர். ஆர்.எஸ்.சர்மா எழுதிய Ancient India, Aspects of Political Ideas and Institutions in Ancient India, Indian Feudalism, Looking for the Aryans போன்ற நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட வகையில் அவரது இறுதிக்காலம் வரை இந்நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையே நேரடியான நல்லுறவு நீடித்தது.

வாழ்நாள் முழுவதும் செறிவுமிக்க மார்க்சியராகக் கொள்கையில் சிறந்து விளங்கியமையையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துடன் கொள்கையுடனான தோழமை கொண்டிருந்தமையையும் நினைவுகூர்ந்து, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் ஆர்.எஸ்.சர்மாவுக்குச் செவ்வணக்கம் செலுத்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

Pin It