கடவுள் பற்றிய கவலை
எப்போதும் இருந்ததே இல்லை
அவனோ அவளோ அதுவோ
இல்லை என்று தெரிந்தும்...
ஆனாலும் என்ன
கடவுள் பற்றி நம்மால் எண்ணாமலிருக்க முடியவில்லை
ஏதேனும் ஒரு வடிவில்
அதன் குறுக்கீடுகள் தொடர்கின்றன...
சிலையாக
பெரும் பூட்டுகளையுடைய கோயில்களாக
வண்ணப் படங்களாக
அப்பப்பா அதன் குறுக்கீடுகள் அதிகம்...
ஆலய வாசலில் பிச்சை எடுப்பவன் முதல்
அணுகுண்டுகளை அள்ளி இறைப்பவன் வரை
பிரார்த்தனை செய்துவிட்டுத்தான்
தன்னுடைய தொழிலைத் தொடங்குகின்றனர்...
மனிதர்கள் தங்களுடைய பிரச்சினைகளை
கடவுளிடம் ஒப்புவிக்கிறார்கள்
கடவுளின் பிரச்சனையை யார் கண்டுகொண்டார்கள்?
கர்ப்பக் கிரகப் புழுக்கத்திலும்
விளக்குகளின் வெப்பச் சூட்டிலும்
சமற்கிருத மந்திரங்களின் அர்த்தம் புரியாமலும்
பார்ப்பனப் புரோகிதர்கள் விடுகிற
குசுவின் நாத்தம் தாளாமலும் அவைகள்
மூக்கைச் சுளிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்...
வளரும் சந்தைக்கேற்ப
புதிதுபுதிதாய்க் கடவுள்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்
உள்ளூரிலிருந்து
உலகம் முழுக்க கடவுள் வணிகம்
மிகச் சிறப்பாக நடைபெறுகிறது...
கடவுள் இல்லாதவரை இந்த உலகம்
சுரண்டலற்றதாய்
அழகானதாய் அமைதியானதாய் இருந்திருக்கலாம்
இனி அதற்கான வாய்ப்பே இல்லை
கடவுள் சாவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை
கடவுள் செத்தால்
உழைப்போருக்கு பல நன்மைகள் ஏற்படலாம்
ஆனாலும் கடவுள் சாவதாயில்லை...
ஒரு நீண்ட பயணத்தின் இளைப்பாறுதலுக்காக
இந்தக் கோவிலில் அமர்ந்து செல்லலாம்
என்று துணைவியை அழைத்தேன்
இன்று மாதவிடாய் வர இயலாது என்றாள்
அதுசரி
அந்தப் பெண் சாமிக்கு மாதவிடாய் வந்தால்
என் செய்யும்?
கீற்றில் தேட...
கவிதாசரண் - ஜனவரி 2007
கடவுள் படும் பாடு
- விவரங்கள்
- அரச.முருகுபாண்டியன்
- பிரிவு: கவிதாசரண் - ஜனவரி 2007