கன்னட மூலம்: கே.எஸ்.நிஸார் அஹமத்
தமிழில்: தமிழ்ச் செல்வி

என் திருமணத்திற்கு முன்பு
பத்தாறு பெண்களைப் பார்த்து எங்களம்மா
ஒவ்வொருவரையும் தன் ஒப்புதலின் உரசலில் உரைத்து-
இவள் அப்படி, அவள் இப்படி
அவளை விட காக்கையே மேல்
இவள் எல்லாம் சரி, ஆனால் நீள நாக்கு
ஒருத்தி இலங்கிணி
இன்னொருத்தி ஒட்டகச்சிவிங்கினி
ஒருத்தி நின்றால் சோளக்காட்டுப் பொம்மை
இன்னொருத்தியின் பல் குழந்தையின் கிறுக்கல்
என்று எல்லோருக்கும் பேர் வைத்து-
நெடு நாள் நான் திருமணமில்லாமலே இருந்தேன்
அம்மாவை மனதார திட்டினேன்.

அம்மா படு சம்பிரதாயம்
குரான் நமாஸ் ரம்ஜான் உபவாசம்
தார்மீக ஆச்சாரங்களில் சொல்லமுடியாத ஆர்வம்;
பர்தா அணியாமல் வீதியில் நடமாடும் எங்கள்
பெண்களைப் பார்த்துச் சிடுசிடுவென-
'அதிகம் படித்த பஜாரிகளின் தலையெழுத்தே இவ்வளவுதான்
கடவுள் மதங்களில் எள்ளளவும் பயமில்லாமல்
ஆண்கள் எதிரில் உடம்பைக் காட்டும் அடங்காப்
பிடாரிகள் கணவனோடு வாழ்வார்களா?
இப்படிப்பட்டவர்களை என் பையனுக்கு என்றைக்கும்
கொண்டுவர மாட்டேன்”
என்று சத்தியம் செய்து-

எப்போதும் பர்தா அணியும் கரடியை
நவீன செயல்கள் அறியாத குருடியை
கிராமத்துப் பெண்ணை மெச்சி
என்னைக் கேட்டபோது, நான் பயந்து
'நேராகப் பார்த்து ஒப்புக்கொண்ட கற்றவளைக்
கை பிடிப்பேன்” என்றபொது-
'படிச்சவங்க பாழாகட்டும்
நானென்னப் படிச்சிருந்தேன்டா முட்டாள்?
திருமணத்திற்கு முன்பு பையன்
பெண்ணைப் பார்ப்பது தர்மவிரோதம்.
நாங்கெல்லாம் கண்மூடிப் பெண்ணை மெச்சி
முடிச்சு போட்டு வைப்பமா?”
என்று வாய் அடைத்தாள்
தன் மீது என் அருவருப்பை அதிகப்படுத்தினாள்.

அப்பாவுக்கு பரந்த மனம்-
'பையன் தானே தேர்ந்தெடுத்துக்கட்டும் எதிர்கால வழி
பெத்தவங்க நாம் எதுக்குத் தடையாக வேண்டும்
அந்த யோசனையை விட்டுவிடுஃ
என்று எச்சரித்தபோது
-அம்மா, சாப்பாடு தண்ணீர் இல்லாம
பொலபொலவென அழுது
கயிறு கிணறு நெருப்புகளை உச்சரித்தபோது
வாய்மூடிக்கொண்டேன்.

அப்பா உலகமறிந்தவர்-அப்படியே அம்மாவின்
கோபம் அடத்தையும் அறிந்தவர்,
விபரீதமானது விஷயம்
என்று தோன்றி வேறு எதுவும் தெரியாமல்
'உன் இஷ்டம்” என்றார்
இரவெல்லாம் அறையின் விளக்கை எரியவைத்து சிகரெட் பற்ற வைத்து
நடமாடி உள்ளுக்குள் நொந்து கொண்டார்.

ஒருநாள் அம்மாவுக்கு ஞானோதயம்
ஆனதுபோல் இருந்தது; சாப்பிட உட்கார்ந்தபோது
'உன் இஷ்டம் போல் படித்தவளையே கல்யாணம் செய்துகோப்பாஃ-என்றபோது, அவநம்பிக்கையுடன் ஆச்சரியத்துடன் குஷியுடன் பயம்
வளர்ந்து கைகழுவி எழுந்தேன் வேகமாய்.

அந்த இரட்டைப் பட்டதாரியின் புகைப்படத்தை
நாள் முழுக்க உற்றுப் பார்த்து
எடை பார்த்து அளந்து
விலாசம் அறிந்து நேரடியாகப் பார்த்து மெச்சி
நிச்சயதார்த்தம் சாஸ்திரம் திருமணம் எல்லாம் முடிந்தது
மனம் அம்மாவை மௌனமாக வணங்கியது.

முதல் முறையாக வெளியே சென்றபோது
என்னவள் தோளில்லாத ரவிக்கை அணிந்து
கனத்த சேலையை இடுப்புக்குக் கீழே நாசூக்காகக் கட்டி
கழுத்தில் தங்கச் சங்கிலி
காலில் ஹைஹீல் செருப்பு
செவியிலும் விரலிலும் மோதிரம் அணிந்து
லிப்ஸ்டிக் பவுடர் ரோஸ் பூசி
திருஷ்டிப்பொட்டு வைத்து
கோபுரக் கொண்டையாக முடியை இறுக்கக் கட்டி
இடது வகிடு எடுத்து
இதை எல்லாவற்றையும் மிஞ்சும்
புன்னகையைப் பூசி,
இன்னென்ன வாசற்படியைத் தாண்டவேண்டும்-அப்போது
''கொஞ்சம் இருங்கஃ” என்று உள்ளே ஓடி,
-வந்து ''போகலாம்” என்று சொன்னபோது
தலைசுற்றி நாக்கு வற்றி ஊமையானேன்;
பார்த்தால்-

அணிந்திருந்தாள் எங்கம்மாவின் பர்தா!

மூலக் கவிஞர்: டாக்டர். கே.எஸ். நிஸôர் அஹமத்

டாக்டர் கே.எஸ். நிஸôர் அஹமத் கன்னடத்தில் மிகப் பெரிய கவிஞர். கேந்திர சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர். இதுவரை 14 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 1960களிலிருந்து கவிதை எழுதி வரும் இவர், கன்னட மொழியை மிக நுணுக்கமாகப் பயன்படுத்தி கவிதை வரைவதில் வல்லவர். புதுப்புது சொற்களும் உருவாக்கியுள்ளார். இந்தக் கவிதையை 1970இல் வெளிவந்த 'மாலை ஐந்து மணி மழைஃ என்ற தொகுப்பிலிருந்து எடுத்துள்ளோம். இது, எவ்வளவு படித்தாலும் முஸ்லீம் சமுதாயம் சம்பிரதாயத்தை மீறி வெளியே வரமுடியாது என்பதைச் சித்தரிக்கிறது. இவரது கவிதைகளில் அங்கதம் மிகுதியும் காணப்படுகின்றது.

மொழிபெயர்ப்பாளர்: டாக்டர் தமிழ்ச் செல்வி.

சென்னைப் பல்கலைக்கழகம், கன்னடத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார். இவர், பெங்களூர் பல்கலைக் கழகத்தில் கன்னடம் முதுகலை படிக்கையில் இரண்டாவது நிலை மற்றும் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவரது மொழிபெயர்ப்பு பணியைப் பாராட்டி சென்னைப் பல்கலைக் கழகம் 'தமிழ் கலைச் செம்மல்” பட்டமளித்து சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It