எவனிடமும் நான் போய் நின்றதில்லை- என்
எழுத்தைக் காசுக்கு விற்றதிலலை
கவலைகள் என் தமிழ் கொன்றதில்லை-
நான் கைகட்டி யாசகம் செய்ததில்லை
குறைகளை எழுதி உயர்வதற்கே- பெரும்
கூட்டம் நம்மிடை இருக்கிறது
பறைகளை முழக்கி விடிவதற்கே- என்
பாத்திறம் நெருப்பெனப் பிறக்கிறது
தமிழை முதலாய்த் தாம் வைத்துப்- பலர்
தன்னலப் பிழைப்பு நடத்துகின்றார்
தமிழை விடுதலை செய்வதற்கே- நான்
தனியாய் யுத்தம் நடத்துகிறேன்
தாய்க்கொரு மகனாய்ப் பிறந்துவந்தேன்- என்
தமிழால் நானாய் உயர்ந்து நின்றேன்
நாய்கள் பார்த்துக் குரைப்பதனால்-என்
நற்றமிழ்ப் பயணம் நிற்பதில்லை
அவனவன் சாதியை வளர்ப்பதற்கே- தமிழ்
அறிஞனைப்போல நடிக்கின்றான்
கவனமாய்ப் பார்த்து வருபவன் நான்- இதைக்
கவிதையில் பதிவு செய்கின்றேன்
எழுத்தே எனது உயிர்மூச்சு- என்
எதிர்ப்புகள் யாவும் வெறும் பேச்சு
கழுத்தை அறுத்தே கொன்றிடினும்- நான்
காலத்தை வென்றிடும் புயல்காற்று
புதுவையில் பிறந்து வளர்ந்ததினால்- ஒரு
புதுயுகம் படைக்க விரும்பியவன்
பொதுவினில் உலகம் நடப்பதற்கே- உயிர்ப்
பூவாய்த் தமிழினில் அரும்பியவன்
முப்பது வருடமாய் எழுதுகிறேன்- அதில்
முற்போக்கு சமூகம் பாடுகிறேன்
எப்போதும் மனிதர் மேன்மைக்கே- என்
எழுதுகோல் வேள்வியை நடத்துகிறேன்
என்னை ஒழித்திட முடியாது- நான்
இறப்பதும் இங்கே கிடையாது
மண்ணில் மானுடம் உள்ளவரை- என்
மாபெரும் தமிழ்ப்பெயர் அழியாது
இலக்கியம் மக்கள் விடுதலைக்கே- என
எழுத்தில் கலகம் செய்பவன் நான்
இலக்கியம் போன்றே வாழ்ந்திருப்பேன்- ஆம்
இதுவே எனது பிரகடனம்