1. சுப்பையா - சுந்தரமூர்த்தி
(பெரியப்பா - பெரியண்ணன்)
இளமைப் பள்ளிநாளின் இன்பத்தில்
வறுமை மறந்துபோனது
'அம்பூ! ஏ அம்பூ! என்று
அன்பைக் குழைத்து 'அன்பழகனைஃக் குறைத்து
சுப்பையாப் பெரியப்பா
என்னைத் தன் சுதந்திரத் தமிழில் அழைத்த பெயர்
எப்படி மறப்பேன்?
மற்றவர் காலேறி நிற்க
மரநுணாவை அறுத்தும் செதுக்கியும் இழைத்தும்
பட்டைச் சீலைகொண்டு பளபளக்கத் துடைத்தும்
மிதியடிகள் செய்யும் வேலை
அவர்களின் மிதிபட்ட வாழ்க்கையம்மா!
காலையில்
இரவின் மீந்த
பழஞ் சோற்றில் பாதியைப் பசியெரியும் வயிற்றிலிட்டு
மீதியை மதியத்திற்காய்
மிளகாயோடும் மகனோடும்
ஏந்தி முச்சிரைக்க உளியும் இரம்பமுமாய்க்
கடைத்தெரு சந்திற்குள்ளே காலை முதல் இருட்டும் வரை
இரண்டரை ருவாய்க்காக
எத்தனை பாடுபட்டார் ஏழைச் சுப்பையா
என்பெரியப்பா அண்ணன் அன்று!
எலும்பும் தோலுமாய் இரு உயிருள்ள ஓடுகளாய்!
வறுமையையும் வாழ்வின் வெறுமையையும்
பங்குபோடக்
கூடவே ஒரு கோவிந்தம்மா அண்ணி!
'விடுமுறையின் மத்தியானம் வீட்டிலே என்ன இருக்கு?
பெரியப்பா அண்ணன் வேலை
செய்விடம் சேர்வோம் அங்கே
அரையணா கிடைக்கும்
அதற்கொரு அவிச்ச சோளம்
அத்தோடு சீதாப் பழமும்
அண்ணனும் தருவார் அன்பாய்ப் பறித்து’
என்று நான் ஓடிய நாட்கள் எத்தனை?
"அண்ணனும் பெரியப்பாவும்
உண்மையில் நம் உறவில்லடா
தச்சராய் வந்தார் நாமும்
தந்தோம் ஒரு மனையும் வீடும்” என்று
அம்மா சொன்னதெல்லாம் அன்றேதும் புரியவில்லை
புரிந்தாலும் நல்லதில்லை!
'அம்பூ’ என்றழைத்து அணைத்து உச்சி மோந்து
'அக்காட்ட சொல்லிடாதே’ என்றென் கைக்குள்
இரகசியமாய் வைத்த
அரையணாவின் அன்பை மட்டும்
அறிவேன் நான் அணைந்துகொண்டு!
இன்றும் நினைந்துகொண்டு!
'இரவு வா இறாக்குழம்பு’ என்றவர் சொன்னபோதே
உறவுதானே
உடன்பிறக்கா உதிரம் வேறானால் பிறிதா என்ன?
வெறும் இரசமும் வெங்காயக் குழம்பும் சோறும்
இரவிலே எவருமறியாமல்
இரகசியமாய் ஊட்டிய கைகள்
உருசியறியாப் பசித்த வயிறொடு
உறக்கத்தால் தூங்கிச் சோர்ந்த
வற்றியஎன் வயிற்றிலிட்டாரே
என் ஏழை பெரியப்பா!
அவர் மகன் அண்ணன் சுந்தரமுர்த்தி!
அவர்களுக்கே அதிமில்லை
என்பெரியப்பா பெரிய பாட்டண்ணன்
உணவா இட்டார்?
எனக்கவர் உயிர்தான் இட்டார்!
உணவுதானே பசியின் உறவு?
எத்தனை முறைகள் என்னை இடுப்பிலும் தோளிலுமாக
ஏற்றிச் சுந்தரமூர்த்தி அண்ணன்
சப்பரம் பார்க்கவென்றும்
சந்தனக்கூடு என்றும்
பெரியப்பாவோடு பெரிய கந்தூரிக் கப்பல் என்றும்
அரியநீ லாயதாட்சி அழகான கோவில் தேரும்
நெல்லுக்கடை மாரியம்மனுக்கு
நிமிர்ந்தாடிய காவடியென்றும்
கரகமென்றும் கைச்சிலம்பாட்டமென்றும்
சேர்ந்து நாங்கள் வாடிக்கையாக
வேடிக்கை பார்த்த
விழாக்கள்தான் எத்தனை எத்தனை?
பாசமாய் வாங்கிக் கொடுத்த பம்பரங்கள் எத்தனை?
பலாச்சுளை வத்தல் முறுக்கு
மரவள்ளிக் கிழங்கு மாங்காய்
பொட்டுக்கடலை மிட்டாய்
அத்தனையும் அன்று நாங்கள்
எத்தனை ஏழையா யிருந்தபோதும்
தந்த
சுந்தரமுர்த்தி அண்ணன் சுப்பையாப் பெரியப்பா
அன்புக்கு இன்று
என் படிப்பும் பணமும் ஏராளமிருந்தும் எம்மாத்திரம்?
என்ன பயன்?
'சிவன்கோயில் நந்தி
இரவில்
சீறிவந்து சத்தமிடும்
சீக்கிரம் தூங்கு’
என்றும்,
வெள்ளைத் துரைக் கதை
வீரபாண்டிக் கட்டபொம்மன் கதை
ஒலிமுகமது வரலாறு
உயரமான நாகைத் தண்ணீர்த் தாங்கி
பாண்டியநாடார் பணக்கதை கூறி
ஓட்டிய தோளில் என்னை
உறங்கவைத்த பெரியப்பா
மற்றும்
பகலிரவு விடிகாலை வரையும்
பாட்டோடு பாஞ்சாலி கூந்தல் முடித்த கதை
சொல்லும்
நாடகத்தின் நடுஇரவில்
தோளில் என்னைத் தூக்கிச் சென்று காட்டி
தொடையில் தாலாட்டித் தூங்கவைத்த
சுந்தரமுர்த்தி அண்ணன் மடி சொர்க்கம்!
இளமையில் வறுமை கொடிது
வறுமையிலும் அன்பு இனிது
பசியைக் கொன்ற அந்தப் பாசம்
ஏழ்மையிலும் கிடைத்த இன்பம்
இன்று ஏன் இல்லை?
சுப்பையா பெரியப்பா சுந்தரமுர்த்தி அண்ணன்
எப்போதும் நான் மறவா என் பாசச்சொத்து
என் வறுமைக்கு நிழல்
என் வயிற்றுக்குச் சோறு
என் உறவுக்குச் சுகம்
என் உள்ளத்திற்கு இதம்
அவரன்பின் நினைவுகட்கு நானடிமை!
அவரேழ்மை துடைக்க அன்றுநான் பெரியவனில்லை
நான் படித்ததும் பணம் படைத்ததும்
மருத்துவனாய் மலர்ந்ததும்
அறியாமல் மாண்டுபோனார் அண்ணன் அன்று!
துணைக்கு ஆளில்லாமல் துவண்டலைந்தார் பெரியப்பா!
புகழ் மலராப் பள்ளி
மாணவனாய் மட்டுமறிந்தது
போதுமென்று மாண்டு போனார் என்னப்பா!
தொடக்கமும் இடையும் முடிவும்
மொத்தமும் சிலருக்கு மட்டும்
எல்லாமே வறுமையானால்
ஏழ்மையும் தனிமையுமானால்
இறைவா நீ இருந்தென்ன?
ஏழைத் தச்சனாக
நீ இருந்ததும் உண்மைதானா?
2. புலம் பெயர்ந்து...
எச்சிலாய் நாங்கள் எத்தனை தேசங்களில்
உரிமைகளற்று உமிழப்பட்டோம்?
சொந்த மண் துரத்தச்
சுதந்திரமற்ற அகதிகளாய்!
தாழக் கிடந்து இருபுறமும்
தட்டியடிபட்டு நொய்ந்த முழவாய்
தமிழர் வாழ்க்கை ஏனிருட்டில்?
இனியும் விடிய எத்தனை ஆண்டுகளோ!
என்றுதிக்குமோ
எங்களின் சுதந்திரச் சூரியன்?
புலம் மட்டுமல்ல வல்லாதிக்கப் புயலால்
உளமும் பெயர்ந்து ஊனப்பட்ட தமிழ்ச்சாதி!
உள்ளூரில் இயலாமை உயிர் வாட்டலாக
உறவுகள் துறந்து காயம்பட்ட
எங்களின் ஊமைக் கனவுகளை
வெளியூரில் சென்று விற்கிறோம்!
ஆனால்
சொந்த கிராமத்தில் சுதந்திர மூச்சும்
உடனிருந்த உயிர்களின் தோழமையும்
மரங்கள் மனிதர்கள்
மலர் சொரியும் வனங்கள் வயல்கள்
வற்றாத கடலோரம் வாழ்ந்த குடில்
தோப்பின் வசந்தத்துக் குயிலிசை
பொற்றாமரை இதயப் பெற்றோர்
புலம் பெயர்ந்தடைந்த புது நாட்டில்
எங்கு கிடைக்கும்?
கப்பலோட்டியவன்
காடுகளைத் திருத்தியவன்
பல நாடுகளை நடத்தியவன் - இன்று
நாடுதேடி அலைதல் நன்றோ தமிழா!
3. வரம்பு
தொலைவிருந்தும்
அருகிலிருப்பது
நம்
தொலையாத நட்பு!
அதற்காக
என் மனவெளியின்
இருட்டுப் பிரதேசங்களை
இறந்து கிடக்கும் காலங்களை
உன்கை
துழாவுவதில் எனக்கு
உடன்பாடில்லை
நான் திறக்காத பக்கங்களுக்கு
உன்னிடம்
திறவுகோல் இல்லை
இது
தெரியாமல்
தெளிவற்றுத்
தழும்பறையைத் தட்டுவதால்
தொலைந்து போகலாமா
நம் தொடர்பு?
புதைக்கப்பட்டவைகளும்
விதைக்கப்பட்டவைகளும்
அவரவருடைய
வினைகள் விதைகள்!
எவருக்கும்
எல்லாக் கதவுகளையும்
என்றும் திறப்பதில்லை இதயம்!
கதவிடுக்கில்
காதை வைக்கலாமா?