1
முருகன் பிடிக்கும்-
அழகாய் இருந்ததாய்
தமிழ் மண்ணை
ஆண்டு சென்றதாய்
சொல்லப்பட்டதால்
மூங்கையர் பிடிக்கும்-
மொத்த உணர்வையும்
வித்தையாய் மெய்மொழியில்
சத்தமாய் உரைப்பதால்
ஈ.வே.ரா. பிடிக்கும்-
மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென்று
வரிந்து ஊட்டியதால்
மனிதன் பிடிக்கும்-
சிந்திக்கத் தெரிந்த
ஈவிரக்கம் புரிந்த
இங்கிதம் அணிந்ததால்
ஒளி பிடிக்கும்-
துளியாய்த் துலங்கி
அண்டம் துலக்கி
அழகு காட்டுவதால்
சே குவேரா பிடிக்கும் -
அகிலத்தில் அனைவரையும்
சமமாக்கச் சமர்செய்து
சாகாமல் வாழ்வதால்
குறள் பிடிக்கும்-
வசப்படா வாழ்வை
சிறுகுறுஞ்சொற்களில்
வடித்து வைத்ததால்
* பிடல் காஸ்ட்ரோ பிடிக்கும்-
வக்கிர அமெரிக்காவின்
வஞ்சக அழும்புகளை
மயிருக்குச் சமமாக்கும்
நெஞ்சுரம் பூண்டதால்
கழிவறை பிடிக்கம்-
வேடங்களிலிருந்து
விடுபடும் முனைப்பில்
அரிதாரம் அழித்தென்னை
அடையாளம் காட்டுவதால்
மலர் பிடிக்கும்-
வாசமாம் இதழவிழ்த்து
நேசமாம் உணர்வளித்து
பாசமாய் வருடுவதால்
பாரதி பிடிக்கும்-
நிலம் நோக்கிய மடந்தையரின்
சிரம் நிமிர்த்த தன்
கரம் நீட்டியதால்
முகில் பிடிக்கும்-
நிறைவிடத்தில் வாரி
வறண்டு வாய்பிளக்கும்
குறைவிடமெங்கும்
இறைத்துக் கரைவதனால்
இவையெல்லாம் பிடித்ததால்
எனக்கென்றெதற்கும்
மதம் பிடிக்காதெனும்
மமதையும் பிடிக்கும்.
2
முடி துறப்பது உயிரிழப்புத்தான்
மன்னனுக்கு...
மனிதருக்கு?
அறையப்படுமுன்
சிலுவையை இறக்கிவைத்த
சுகம்
அவசியப்படும் போதெல்லாம்
ஆசுவாச மூச்சிழுக்கும்படி
இரட்சிக்கப்படவில்லை
ஏசு.
பறி கொடுத்துவிட்டு
பாரமில்லாமல் திரும்பமுடிவது
நாவிதரிடம் மட்டும்தான்
மீசை இழப்பு ஏளனத்துக்குள்ளாகும்
ஏதேனும் பந்தயப் பொழுதகளில்
தாடியையொட்டிக் குழப்பம் குறைவு
அக்குளிலும் அடியிலும் சிரைப்பதென்பது
பாரம் குறைப்பதாகாது.
நீண்ட சிகை இவனுக்கழகு
குருவிக்கூடு பாணி அவனுக்குப் பொருந்தும்
எண்ணெய் வேண்டாம் சுருண்ட முடிக்கு
தேய்த்தே சீவவேண்டும் கோரை வகைக்கு...
- நீளும் மயிர்வாதங்கள்.
3
துள்ளிக் கூவும் சேவல் கேட்டு
மெல்லச் சிவக்கும் வானம் கிள்ள...
புலர் காலைப் பொழுதுகளில்
புல் மடியில் பனி தூங்கும்
பசிய வயல் வெளியின்
பசுமை பசி தின்னும்
குலுங்கும் வனமெங்கும்
குருவியினம் செவி நிறைக்கும்
பாறை இடையொழுகும்
ஓடை உயிர் கழுவும்
கால்கள் கடித்துச் சின்ன
மீன்கள் கடந்தோடும்
முயல்கள் வளையொளிய
விரட்டியவை விக்கி நிற்கும்
ஒத்தையடிப் பாதையின்
ஒவ்வோர் குறும்பினையும்
நத்தை எதிர்ப்பட்டால்
பாதம் கதையளக்கும்
வெய்யிலின் விலாசத்தை
கிளைக்கூட்டம் விளங்கவைக்கும்
உச்சிப் பொழுதினிலும்
உள்மனம் குளிர்ந்திருக்கும்
கச்சை கழன்ற போதும்
ஆடைதரும் அருவி சுகம்.
கண்டம் கடந்திங்கு
வந்திறங்கும் எழிற்பறவை
வாழ்ந்து குஞ்சுகளை
வளர்த்தெடுத்து ஊர்திரும்பும்
மரத்தின் விளிம்புகளில்
மின்மினிகள் விளக்கேற்றும்
மந்த நிலவொளியில்
மயிலினங்கள் கூத்தாடும்
ஆந்தை அலறும்
வவ்வால் கனியுண்ணும்
எங்கள் மண்ணில்...
அணுமின் நிலையம்
அதைத் தொடரும் தொழிற்கூடம்
அடுக்கடுக்காய் குடியிருப்பு
பன்னாட்டுத் திருடர்களின்
நீர் சுரண்டும் வன்முனைப்பு.
மரபணு மாற்றப்பட்ட
பாசிச பயிர் புதைப்பு
மழையைக் கொன்றுவிட்டு
ஊருக்கொரு அணைக்கட்டு...
ஆதி வாழ்வுதனைப் பாதியாய்
அழித் தொழிக்க
அரசு ஆணையுடன்
அலையலையாய் இயந்திரங்கள்
பதறா வாழ்வு இனி
பதராய் அலைந்தழிய
நிமிரும் விஞ்ஞானம்
களையாய்ச் செழித்தெங்கும்!