கீற்றில் தேட...

1. பேசா ஊமைகள்

இந்தியாவோ பாக்கிஸ்தான் அமெரிக்காபோல்
இரக்கமற்றோர் வழங்கியவல் கருவி கொண்டு
சிங்களத்தான் செஞ்சோலைக் காப்பில் லத்துச்
சிறார்களைச் கொன்றுவெறி யாட லானான்!
எங்கும் எரி நெருப்பாக, ஈழ மைந்தர்
எரியுண்ட கரியாக, சிதைந்த கூடாய்!
இங்குலக வல்லரசு நாட்டி னோரால்
ஈழம். எரியுண்ணுதையா, கொடுமை அந்தோ!

செஞ்சோலை அரும்புகளோ குண்டால் மாண்ட
செவ்விரத்தக் குழம்பிங்கே உலர்தல் முன்னர்
வஞ்சகரின் கொலைவெறிக்கே தப்பி யோடி
வாகரைத்தமிழ்ப் பள்ளியில் குவியலானார்;
தஞ்சமுற்ற பள்ளியிலே குண்டை வீசி
தம்மனம்போல் சிதறடித்தார்; தப்பித் தோர்கள்
அஞ்சி உயிர் பிழைத்தோடு கின்றார்; அன்னார்
அடி-தொடர்ந்து வான்குண்டை வீசுகின்றார்!

வாகரையில் அறுபöதோரைந்து பேரின்
வாணாளை முடித்தான்வான் குண்டை வீசி!
போகரைந்தே என்று-வல் கருவி கொண்டு
போக்கினனே தமிழருயிர் துடி-துடிக்க!
வாகரையின் மக்களையே சொந்த மண்ணில்
வான்குண்டால் கொல்வித்தல் கொடுமை யன்றோ?
ஏகலைவன் கட்டைவிரல் துரோணர் கேட்டார்
இதயமிலாச் சிங்களன்தலை கொய்து நட்டான்!

செஞ்சோலைக் காப்பில்ல அடைக்கலத்தில்
செழித்த-இளங் குருத்துகளைக் குண்டால் தாக்கி;
அஞ்சாது கொலைசெய்த கொடுமை கண்டு
ஐரோப்பா வினிலே-பின் லாந்து நாடு
சிங்களரைக் கண்டித்து, உலக மன்றில்
தீர்மானம் கொண்டுவந்தார் இந்தி யாவோ
சிங்களரைத் தற்காக்க தீர்மா னத்தின்
செயல்தடுத்து தீயருடன் கைகள் கோத்தார்!

இதயமற்ற சிங்களத்தான் தமிழர்க் கின்று
இன்னல்விளைத் துயிர்குடித்து மகிழ்வான்; ஆயின்
புதியதொரு பூநிலவாய் கிழக்கில் பூத்த
புதுவிடிவாய் வைகரைப்பூ பாளப் பாட்டாய்
உதயம்பெறும் தமிழீழம்! அöதைப் பார்க்க
ஓரிணைக்கண் போதா-ஓர் கோடி வேண்டும்
இதயமற்ற வல்லரசார், அக்கால் தம்மின்
இயலாமை யால்-பேசா ஊமை யாவார்!

2. தத்துவப் போராளி

ஆர்ப்பெடுத்த வெங்களிறாய்ப் போர்க் களத்தில்
அடுபகைக்கே அஞ்சுகிலா நெஞ்சுரத்தால்
ஊற்றெடுத்த வல்லுணர்வால் அறிவாண்மையால்
உருவார்ந்த ஈழத்தின் உண்மை அன்பால்
வீற்றிருந்தே தமிழரினத் தாய கத்தின்
விடிவலரப் பாடாற்றும் விறலார் வேங்கை
நேற்றிருந்தாய் இன்றில்லை துயரைத் தந்தே
நில்லாத நெடும்பயணம் போய தெங்கே!

ஏடாளும் தத்துவப்பே ராசான், எங்கள்
இணையற்ற மதியுரைஞ ரான நின்பால்
நாடாளும் மன்றில்-உறுப் பியமே பெற்ற
நல்லறிஞர் சிலர்க்கும்மதி யுரைத்த நல்லோய்!
மீடாளும் பேரிமய மாய்த்தி கழ்ந்த
பெற்றிக்கே உரிய-தமிழ்ப் பால சிங்கம்;
நீடாழி சூழுலகில் ஒளி குமித்த
நெடுந்தமிழா இனம்மறந்து போன தெங்கே!

சீர்கெடடு நின்உடலம் நலிந்த காலை
சீர்செய்ய புலித்தலைவன் இரண்டு நாட்டின்
பேர்பெற்ற பெண்கள்-இரு பால ரின்பால்
பேருதவி கேட்க, மறுப் புரைத்தார். அöதில்
ஊர்கெடுக்கும் ஆரியத்தில் பிறந்தொருத்தி
உரிமைகொன்ற சிங்களத்தி மற்றொருத்தி
யார்தடுத்தும் நின்பயணம் முடங்கவில்லை;
யார்முயன்றும் உன்முடிவு மாற வில்லை.

காலத்தில் முகிழ்க்கிறது வாழ்வு, காலக்
கணிப்பினிலேபிறப்பிறப்பாய் விரியும் அந்தக்
காலந்தான் வாழ்வெல்லைக் கோடு, காலக்
கனிவில்,அப் பாலும்-இல் லாமை யுண்டு
ஞாலத்தில் இல்லாமை இருத்தலின்-பின்
இயல்பில்வரும் சாவென்போம், அöதே என்னை
நீளத்தான் தொடர்கிறது எனும்பே ருண்மை
நிகழ்த்தியதோர் தத்துவமே சென்ற தெங்கே!

இருப்பினிலும் இல்லாமை வெறுமை என்னை
இழுத்துவரும் என்றநிலை தெரிந்தும் ஓர்நாள்
இறப்புவரும் எனஉணர்ந்து அöதைப்பற்றி
இணுக்களவும் சிந்திக்கத் துணிவதில்லை
மறக்கவிலா தலையாய பயமோ என்னென்
மரணபயம் ஆழ்மனத்துள் ஒளியும் அöது
பிறக்காது அடக்கொடுக்கி வைத்தேன் என்று
பேசியதோர் பெருமகனே எங்கே சென்றாய்?

வாழ்வினிலே ஓர்நாள்-ஓர் நிகழ்வாய் நாமே!
வரவேற்போம் அச்சமின்றி! யாதாம் என்பின்
சூழ்கின்ற சாவை!அதை எதிர்கொண் டேற்கும்
துணிவினிலும் தெளிவினிலும் விழிப்பிலும்தான்,
வாழ்வியலே அருத்தமுடன் நிறைகாண் பதனால்
வருஞ்சாவைக் கண்டஞ்சி ஒளிதல் இல்லை!
வாழ்வில்-மதி முடிவை-முன் வைத்த எங்கள்
மதிவாண மண்ணகத்தில் மறைந்த தெங்கே?

"தேசத்தின் குரல்”தமிழ் அடையைத் தந்து
செந்தமிழர் குரலாக ஆக்கிப் பார்த்த
பாசத்தான் புliத்தலைவன் தலைமை யத்தின்
படையணிக்கே முதல்மறவ, தமிழர் ஈழ
தேசத்தின் விடுதலைக்கே நா-நலப்போர்
செய்வித்த தத்துவப்போ ராளி, எங்கள்
பாசத்தின் உயிர்த்துடிப்பே பால சிங்கம்;
பைந்தமிழத் தூதுவனே எங்கே சென்றாய்!

வல்கருவி தூக்கா-போ ராளி, தமிழர்
வரலாற்றைப் புதுப்பிக்கும் தமிழ்ப்பே ராசான்
சொல்-கருவி கொண்டு, பேச் சுரையால் பொய்மை
துகளாக்கி உண்மைநிலை நாட்டி வந்தோய்!
வெல்-கருவி எனிலோ, உன் நாவன் மைதான்
விழைவாரும் அறிவிருப்பே பால சிங்கம்.
கொல்-கருவி யால்-இனத்தைக் கூறு போடும்
கொலைப்பழியைத் தடுக்காமல் எங்கே சென்றாய்!

சிதைத்திடினும் வில்-வாளை உடலில் தாங்கி
செருக்களத்தில் அடக்களிறாய் வினை ஏற்றானை
புதைப்பதில்லை அவன் மாண்டால் பூமித் தாயின்
பூமடியில் மறுபதிப்பாய் வீரம் தோன்ற
விதைக்கின்றோம்; தமிழியத்தின் மாவீரத்தை
விளைப்பிக்கும் புதுப்புறநா னூறே! ஞாலம்
மதிக்கின்ற வாலறிவ! பால சிங்கம்,
மதியரசே அறிவுலகில் மறைவ துண்டோ!