காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் - மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரி லுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதி யினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

“தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் - ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு உட்ஜாதியில் திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார். மற்றொரு மகன் தேவதாசை வேறு ஒரு வர்ணத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். தனது ‘தீண்டப்படாத’ சமூகத்தைச் சார்ந்த வளர்ப்பு மகள் இலட்சுமியை ஒரு ‘பிராமண’ இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஜாதிகளுக்கிடையே நடக்கும் திருமணங்களுக்கு காந்தி தனது ஆதரவை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்துக்கு தடை போட்டார்

சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு:

“இப்போது நடந்து முடிந்துள்ள இத் திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் (The rule should be on the part of the Ashramam to discountenance marriage between the parties of the some caste and to encourage those between parties belonging to different sub-castes).”

1945 ஆகஸ்டு 19ஆம் தேதி காந்தி ‘சேவா கிராம ஆஸ்ரமத்தில்’ ஏ.ஜி. டெண்டுல்கர் என்ற பார்ப்பனருக்கும், இந்துமதி என்ற ‘தீண்டப்படாத’ப் பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைத்தார். காந்தி ஆஸ்ரமங்களில் ஒரே சமையல் அறைதான். ஒரே வரிசையில் அமர்ந்து அனைவரும் சாப்பிடுவர்.

கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் - இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்:

‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple) என்று காந்தி தனது சுயசரிதையில் கூறுகிறார்.

‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார். அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி என்னை யாரும் - எனது கருத்துகளிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. (The Vedas could not supply that need).

“எனக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த முடிவு எங்கே இருக்கிறது என்று கேட்டபோது காந்தி, தனது நெஞ்சைத் தொட்டு, “அது இங்கேதான் உறைந்திருக் கிறது” என்றார். அவர் இது குறித்து தனது கருத்தை தெளிவாகவே விளக்கினார்.

“கீதை உட்பட எந்த புனித நூல்களின் கருத்துகள் என்றாலும், அந்த கருத்துகளை எனது மனசாட்சி யோடு பொருத்தித்தான் பார்ப்பேன். எந்த புனித நூல்களாலும் அது எனது மனசாட்சியைவிட மேலானதாக ஆதிக்கம் செலுத்த நான் அனுமதிக்க மாட்டேன். பல நூல்களின் மூல கருத்துகள் உயர்ந்த நோக்கம் கொண்டவை என்று நான் நம்பினாலும், அந்த நூல்களின் கருத்துகள் என்னுள் பாதிப்புகளை உண்டாக்குகின்றன என்றாலும், அந்த கருத்துகள் திருத்தலுக்கு உள்ளாக்கப்பட்டே வெளி வருகின்றன. இந்த புனித நூல்களுக்கு முதலில் தூதர்களும், பிறகு விளக்கம் தர வந்தவர்களும் வெவ்வேறு விளக்கங்களை தந்து விடுகிறார்கள். எந்தக் கருத்தும் கடவுளிடமிருந்து நேரடியாக வந்து சேரவில்லை (Nothing in them comes from god directly)” என்றார் காந்தி.

பூணூல் போட மறுத்தார்

வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் (சூத்திரர் தவிர) மேலே உள்ள மூன்று வர்ணப் பிரிவினரும் பூணூல் போடும் உரிமை பெற்றவர்கள். காந்தியும் இளம் வயதில் அதற்குரிய சடங்குகள் நடத்தப்பட்டு ‘பூணூல்’ போடப்பட்டவர்தான். இது குறித்து தனது சுயசரிதையில் “நானும் பூணூல் போட் டிருந்தேன். அந்தப் பூணூல் தொலைந்து போனபோது அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் வரவில்லை. ஆனால் புதிய பூணூலை அணிவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும் (But I know that I did not go for a fresh one).

காந்தியின் குடும்பம் வைசியர் பிரிவு. கழுத்தில் துளசி மாலை அணிவது கட்டாயம். “நான் இங்கிலாந்து போக முடிவு செய்தவுடன், துளசி மாலையை கழற்றிவிட்டேன்”. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் துளசி மாலையை அணியும் பழக்கத்தை காந்தி கைவிட்டு விட்டார்.

 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny).”

அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி கூறினார். ஆஸ்ரமத்தில் சிலர் கடுமையாக எதிர்த்தனர். தனது முடிவை நியாயப்படுத்திய காந்தி, ‘மனிதருக்கு இத்தகைய நிலை வந்தாலும் இதே முடிவைத்தான் எடுப்பேன்’ என்றார்.

‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை தொடக்கக் காலங்களில் நியாயப்படுத்தி வந்த காந்தி, பிற்காலத்தில் இவ்வாறு எழுதினார்:

“தீண்டாமை ஒழியும்போது ‘வர்ணா ஸ்ரமம்’ குப்பைக் கூடைக்கு அனுப்பப்படும் என்றால், அதற்காக நான் கண்ணீர் சிந்த மாட்டேன் (If Varnashrama goes to the dogs, in the removal of untouchability, I shall not shed a tear).”

மேலும் காந்தி இவ்வாறு கூறினார்: “வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து எங்கேயும் போய் நான் பிரச்சாரம் செய்யவில்லை; ஆனால் தீண்டாமையை ஒழிக்க வைக்கம் சென்றேன். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு இந்த மூன்றும் சுயராஜ்யத்தின் மூன்று தூண்கள் என்று, காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து, இதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வைத்தது நான் தான். ஆனால் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உறுதி செய்ய வேண்டும்; அதுவே சுயராஜ்யத்தின் நான்காவது தூண் என்று ஒரு போதும் நான் கூறியது இல்லை. (I have never placed establishment of varnashrama dharma as the fourth pillar) எனவே ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்புக்கு நான் தவறாக அழுத்தம் தந்து வந்தேன் என்று நீங்கள் என்னை குற்றம் சாட்ட முடியாது” என்று காந்தி கூறினார்.

ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிய காந்தி, ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இளம் வயதிலிருந்தே மீறி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை காந்தி பிறந்த ஜாதி தடை செய்திருந்தாலும், காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். அவரது சொந்த ஜாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். “ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் போவதாக - ஜாதித் தலைவர்கள் கூறினாலும், அப்படி விலக்கினாலும் எனது வெளி நாட்டுப் பயணத்தைத் தடுக்க முடியாது” என்றார் காந்தி.

தகவல்களுக்கு ஆதாரம் : பேராசிரியர் ரிஷிகாந்த் - திரிபுரா பல்கலையில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை.

‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’,  ஏப்.1, 2017

Pin It