"சஹஸ்ர தீப அலங்காரம் பண்ணியிருந்தா, அவர் அந்த உத்சவ மூர்த்தி முன்னாடி நிண்டு தீபாரதணை காட்டினா, முன்னாடி பெருமாளப் பாத்துண்டு பின்னாடி ஒரு அடி வச்சார் அவ்வளவுதான் அப்படியே மல்லாக்க விழுந்தார், கீழ கல், அதுல தல பட்டுது, ரத்தம் பீறிட..., பிராம்மணன் ரத்தம் எல்லாம் அங்க சிதறிச்சு, அல்லோலப்பட்டது போங்கோ, பத்தடி உயரத்துல இருந்து விழுந்திருக்கார், இது என்னனு சொல்றது தலை எழுத்தா, தூங்கும் போது போவா, காலைல பார்த்தா பிராணன் இருக்காது, எல்லாரும் சொல்லுவா, செஞ்ச புண்ணியம் தூக்கத்துலயே போயிட்டார், ஆனா இத என்னன்னு சொல்ல, பகாவானுக்கு தீபாரதணை காட்டினவர் அப்படியே பின்னாடி வந்து விழுந்தா. செத்தார்” 

"ஆம்புலம்ஸுக்கு போன் பண்ணி வரவழைக்கல்லயா"

"அங்கயே ஒரு டாக்டர் இருந்தார், அவர் பாத்து சொன்னார், முடிஞ்சது வாழ்க்கை அப்படின்னார்"

"அப்புறம்"

"அப்புறம் என்ன, ஒரு வேன் வந்தது, பக்கத்திலயே இருந்த தெருவுல அவர் வீடு அங்க வச்சா, எம் எல் ஏ வந்தார், ஒரு கட்சினு இல்லாம எல்லா கட்சி ஆளுகளும் வந்தாங்க, முதலமைச்சர் அஞ்சு லட்சம் உதவி, அறிவிச்சார், ஒரு பொண்டாட்டி, ஒரு பொண்ணு"

“ அர்ச்சகரே எல்லாருக்கும் ஒரு பொண்டாட்டியே”

“அதானே பாத்தேன் இன்னும் உங்க கிட்ட இருந்து நக்கல் வரலியேன்னு சந்தேகப்பட்டேன், இப்போ உதுத்துப்பிட்டீர் , ஒரு பிரம்மணன் பூஜை செய்யறச்சே மேல பத்தடி உயரத்து மேடையில இருந்து விழுந்து உயிர் விட்டிருக்கார், வீர மரணம்”

“இப்ப என்ன தப்பா சொன்னேன்”

“ செத்துப்போனவருக்கு ஒரு பொண்டாட்டி அப்படின்னு சொன்னீங்க”

“அவ்வளவுதான் எல்லாருக்கும் ஒரு பொண்டாட்டிதான் அப்படின்னே நான், அது நக்கலா” 

“நான் எப்படி ஒருத்தர் உயிர் விட்டார்ன்னு சொல்லிட்டு இருக்கேன் நீங்க ஆராய்ச்சி செய்றீங்க பொண்டாட்டி ஒன்னுதான்னு”

“சரி மேல சொல்லுங்க’

“மேல வேற இடத்துல விசாரிங்க யார்ட்ட பேசினாலும் ஒரு நிருபர் கிட்ட பேசக்கூடாது”

நடந்தது என்னவோ அதிர்ச்சியானது, பெரிய விபத்து, பெருமாள் கோவில் உத்சவ மூர்த்தியை பெரிய மேடையில் வைத்து ஆயிரம் விளக்குகளை கொண்டு அலங்கரித்து வைத்திருந்தனர். மேடை சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அடி உயரம். அதில் ஏற ஒரு இரும்பு கிராதியில் ஆன படிக்கட்டுகள், மேடையும் சிறியது, மூன்றுக்கு நாலு, அதில் வீதி உலா வரும் செப்பு பெருமாள் கருடப் பறவையின் மீது.

சுமார் ஆறு அர்ச்சகர்கள் அந்த மேடையில். அவர்கள் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட தர்மத்தின் அடிப்படியில் ஒவ்வொருவரும் பத்து நிமிடம் பெரிய தாமிரத்தட்டில் சூடம் ஒளிர செய்து கருட வாகன சமேத பெருமாளுக்கு காட்டிவிட்டு கீழே வந்து பக்தர்களுக்கு காட்டினால் பக்தர்கள் சூடத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டில் அர்ச்சனை காசு போடுவார்கள், வீர மரணம் அடைந்த அர்ச்சகருக்கு அது இரண்டாம் முறை. கோவிலில் என்னவோ தட்டுக்காசை அரசு தடுத்து விட்டது. மேலும் ஒரு கரும் பலகையில் வெள்ளை எழுத்துக்களில் பெயிண்ட்டில் எழுதி வைத்து விட்டனர், “ காணிக்கைகளை உண்டியலில் மட்டும் போட வேண்டும்” இந்த ஏழை அர்ச்சகர்கள் என்ன செய்வார்கள் ? இந்த மாதிரி வீதி உலா ஏற்பாடு செய்து பெரிய பெரிய அலங்காரங்கள் செய்து கடவுளை நடுத்தெருவுக்கு கொணர்ந்து தட்டுக்காசு வாங்குவதை தவிர வேறு வழி இல்லை.

ஆகவே ஒப்பந்தப்படி எல்லாரும் ஒரு ரவுண்ட் சூடம் காட்டியது முடிந்தது, இரண்டாம் முறையில் இந்த விபத்து நடந்தது. ராமானுஜம் அர்ச்சகரின் வயது அறுபத்து ஐந்து, உயரம் ஆறு அடி, நல்ல சிவப்பு, அவர் நெத்தியில் போடும் செங்குத்து நாமம் கூட சமயத்தில் புலப்படாது. அவர் சிவப்பில் அந்த நாம கோடு சிவப்பு சரியாக தென்படுவதில்லை. அவர் எடை கூட எண்பது கிலோ இருந்திருக்க வேண்டும். அவர் விழுந்த கல்லில் கூட ஒரு கீறல் விழுந்ததாய் சிலர் பேசிக்கொண்டனர்.

ஒரே மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். ஆம் நாற்பத்து எட்டு வயதில்தான் இருபது வயது பெண்ணை காசியில் போய் பிடித்து வந்து கல்யாணம் செய்து கொண்டார். அந்த பெண் குழந்தை அழுவதை பார்க்க விரும்பாத கி சம்பத், மாலை இதழ் நிருபர் பெரிதும் விலகி வந்து வேறு ஒரு அர்ச்சகரிடம் நடந்த விபத்தை பற்றி விவரம் கேட்டான். 

“முதல்ல நீங்க எந்த பத்திரிக்கை அத சொல்லுங்கோ”

“மாலை கோவை”, எங்க அலுவலகம் உக்கடத்துல”

” நான் அலுவலகம் முகவரி கேக்கல்ல யார் பத்திரிக்க , நல்லாப் போடுவேளா”

“மாலை கோவை நாள்தோறும் மாலை அஞ்சு மணிக்கு வரும், நம்பகமான நல்ல செய்திகளை தரும்”

“உங்க கேள்வி என்ன ? “

“கேள்வி, நேத்து மாலை அந்த அர்ச்சகர் விழுந்திருக்கார், இப்ப அடுத்த நாள் காலை இன்னும் ஏ எடுக்கல்ல “ ;முதல்ல கலிபோர்னியாவில இருக்குற தம்பிக்கு வெயிட் பண்ணினா, அவர் சேதி கேட்டு ஸ்பெசல் ஃப்லைட்ல வந்துட்டார், ஆனா நேத்து இன்னொரு பிணம் விழுந்துருக்கு, அது போற வழியில, அந்த அசிங்கம் ..முன்னால அர்ச்சகர் உடல எப்படி எடுத்துப் போறது,” கி சம்பத்தின் கைபேசி ஒலித்தது, அவன் அதை அழுத்த ஒரு பெரும் கூக்குரல் வெடித்தது

“எங்க இருக்க,” 

” சார் இங்க சிங்கா நல்லூர் உள்ள இருக்குற அக்ரஹாரத்துல”“

”அங்க என்ன வேல “

” உச்சியில இருந்து விழுந்து இறந்த அர்ச்சகர் சாவ கவர் பண்றேன்

“அடேய் லூஸ், நாங்க எதுக்கு அனுப்பினோம் நீ என்ன பண்ற ‘“

“சார் இங்க சிங்கா நல்லூர் வந்தேன், இதுதான் எல்லார் கவனம் பெற்ற பரபரப்பான சூடான சாவா இருந்தது அதனால இத கவர் பண்ண ஆரம்புச்சேன்”

“அடேய் முட்டாள் சம்பத் அதவிட அதிகம் பரபரப்பான சாவு அங்க விழுந்துருக்கு. அத நீ கண்டு பிடிச்சு ரிபோர்ட் கொடுக்கல்லய்னா இங்க வராத நேரா வீட்டுக்கே போயிரு”

“பெரியவரே, இப்ப சொண்ணீங்களே இன்னொரு பிணம் அது எங்க கிடக்கு”;அப்ப நீங்க வந்தது இன்னொரு பிணம் பார்க்க ..இந்த கலி காலத்துல ஒரு பிராம்மண பிணத்துக்கு மரியாத இல்லாம போச்சு”அவர் சொன்னத கேட்டவாறு கி சம்பத் திருச்சி மெயின் ரோடு நோக்கி தன் பைக்கை செலுத்தினான்.

அக்ரஹாரம் முடிந்து பிரதான சாலை துவக்கம், அது பழைய பிரதான சாலை , சற்று தள்ளி இன்னொரு பிரதான சாலை அது திருச்சி சாலை, இரண்டு சாலைக்கும் நடுவே ஒரு தடுப்பு, மூன்று அடி உயரத்தில் பிரிக்கும் சுவர், நடு ரோட்டில் ஐந்து பேர் எதையோ சுற்றி வளைத்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவன் கையில் இரட்டை மூங்கில் தப்பை, அது வளைந்து வீதிஅயை மறித்து வளைந்து தொங்கியது, இன்னொரு நுனி ஒரு பெரிய ஓட்டையினுள் சென்றது; கி சம்பத் புரிந்து கொண்டான். பாதாள சாக்கடையை சுத்தப்படுத்துகின்றனர். எங்கேயாவது உள்ளே அடைபட்டிருக்கும். ஆனால் தான் வந்த வேலை.? சுற்றிலும் பார்த்தான், அவன் அருகிலேயே இரு போலீஸ்காரர்கள் . 

”’வணக்கம் சார் நான் மாலை கோவை நிருபர். இங்க ஏதாவது வேற ஆக்சிடண்ட் ஆயிருக்கா, நான் கேக்குறது பூசாரி மேல இருந்து விழுந்து செத்தது பத்தி இல்ல.. அத விட்டு இன்னொன்னு ஏதாவது……” அவன் படு தயக்கத்துடன் கேட்டான்.

போலீஸ் அவனை இளக்காரமாக பார்த்து கையை தூக்கி முறித்து பின் நேராக நீட்டினார். கி சம்பத் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. பைக் நுயுட்ரலை முதல் கியருக்கு மாற்றி சாலை கடந்து இரு சாலைகளை பிரித்த தடுப்பு சுவர் அருகே நிறுத்தினான். திரும்பி பார்த்தான். அதே ஐந்து பேர் இல்லை இல்லை மூன்று பேர் அந்த பாதாள சாக்கடை ஓட்டை சுற்றி உட்கார்ந்த்து இருக்க ஒருவன் ஓட்டைக்குள் தலை விட்டு ஏதோ கத்தினான். அவர்கள் பிழைப்பை பார்த்து கி சம்பத் நொந்த்து கொண்டான் சே என்ன ஒரு பிழைப்பு, கம்யூட்டர் காலத்தில் இந்த பாதாள சாக்கடையினுள் செல்ல ஒரு எந்திரனை கண்டு பிடிக்க கூடாதா ? அவன் கை பேசி ஒலித்தது. எடுத்தான், அழுத்தினான்.

“சம்பத் வீட்டுக்கு போறயா இங்க வரயா.. என்ன ஆச்சு கண்டு பிடிச்சிட்டியா ?”’

“சார் இன்னும் அரை மணி நேரம் கொடுங்க.. வேற என்ன விபத்து கண்டு பிடிச்சிடறேன்”

“இல்ல நீ கண்டு பிடிக்க முடியாது நாங்களே உனக்கு அடி அடிக்கு சொல்லி கொடுக்கனும், அங்க மெயின் ரோட்டுல பாதாள சாக்கடையில இறங்கின துப்புறவு தொழிலாளி உள்ளயே செத்துட்டான் அத பாத்து ஒரு ரிப்போர்ட் கோடு”

“சார் எங்கனு சொல்லுங்க நான் பாத்து நல்லா கவர் பண்றேன்”

“டேய் நீ சிங்கா நல்லூர்ல இருக்க நாங்க இங்க ஆஃபீஸ்ல நீதான் கண்டு பிடிக்கனும், முடியாட்டி வீட்டுக்கு போயிடு உன்ன மாதிரி நிருபர் தேவையில்ல” கைபேசி துண்டிப்பானது.

அவன் முன்னால் அந்த மூன்று பேர் , இல்லை இல்லை அங்கே யாரும் இல்லை, ஓட்டை மூடப்பட்டு இருந்தது. மெதுவாய் இரு புறம் பார்த்தவாறு சாலை கடந்து நடு வீதிர் ஓட்டை அருகே சென்றான். குனிந்து பார்த்தான். ஏதோ கெட்ட வாடை, படு மோசமான துர் நாற்றம். அவனால் தாங்க முடியவில்லை. வேகமாக ஒரு சக்கர தள்ளு தொட்டியை தள்ளிக் கொண்டு அந்த மூவர் வந்தனர். அதன் அகலமான குப்பை தொட்டியில் ஒரு கனமான சாக்கு மிதி விரிப்பு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. படு கனமானது.

பார்த்தாலே தெரியும். நேரே அந்த இரு சக்கர குப்பை தொட்டி அவன் அருகே வந்து நின்றது. கி சம்பத் வேகமாக விலகி நின்றான். அதே மூவர். ஓட்டை அருகே அவன் சற்று முன் பார்த்த மூவர். மூவரும் சேர்ந்து அந்த விரிப்பை தூக்க முடியாமல் தூக்கினர். அப்போது இன்னும் இருவர், முதலில் பார்த்த ஐவரில் இருவர். 

“வாங்கடா வந்து பிடிங்கடா இது ரொம்ப கனம்” மூவரில் ஒருவன் கூறினான்

“இருக்காதா பின்ன இது மணமேடை முன்னால போடுறது, பையன் வீட்டு பொண்ணு வீட்டு பெரும் புள்ளிக உக்கார போடுறது, இப்ப அரை மணியில திருப்பி கொண்டு வந்துடறோம் சாமின்னு சொல்லி வர நேரமாச்சு” பின்னே வந்த இருவரில் ஒருவன் சொன்னான். பின் ஐவரும் தூக்கி அந்த விரிப்பை விரித்து அந்த சாலையில் பரப்பினர். இப்போது ஓட்டையும் அதன் மூடியும்தென்படவில்லை. சக்கர தள்ளு வண்டியை இரு சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் அருகே தள்ளி நிறுத்தினர்.

ஐவரும் அசதியுடன் முதுகை சுவரில் சாய்த்து களைப்புடன் அமர்ந்தனர். அப்போதுதான் ஒரு வீறிட்ட பெண் குரல், அதுவும் ஒரு குழந்தை. சுமார் பத்து வயசு. பரட்டை தலை, பெரிதாய் கத்தல் போட்டது. தடுப்பு சுவர் அருகே அமர்ந்து இருந்த குழந்தை எழுந்து ஐவரிடம் வந்தது. அதில் ஒருவன் கண்ணத்தில் ஒரு அறை விட்டு கூவியது

“ லோபல வேசி மூசினாவே எப்புடு பயட்ட தெஸ்தா நா அப்பன”

கி சம்பத் தன் ரத்தம் உறைபடுவதை உணர்ந்தான். அவனும் ஒரு வந்தேறியே. அந்தப் பெண் குழந்தை பேசியதை புரிந்து கொண்டான். அவள் சொன்னது இதுதான்.

“உள்ள போட்டு மூடியிருக்கயே ஏ அப்பன எப்ப வெளிய கொண்டு வருவ”

கி சம்பத் கால்கள் ஆடின. அமர்ந்திருந்த ஒருவன் அருகே சென்று அவன் சட்டை காலரை பிடித்து அவனை அப்படியே தூக்கினான். எழுந்தவன் வாயிலிருந்து டாஸ்மாக் மது வாடை, அவனால் தாங்க முடியவில்லை. அவனை அப்படியே விட்டான். தூக்கப்பட்டவன் விழுந்தான். துக்கப்பட்டவன் கி சம்பத். கீழே விழுந்தவன் அலட்டிக்கொள்ளாமல் பேசினான்

“ சார் இந்த வாடையே தாங்க முடியலயே நாங்க பாதளத்துக்கு உள்ள போயி சுத்தம் பண்றோம், அங்கயே சாகுறோம் இதுதாண்டா வாழ்க்கை பெருமாள் உள்ள கிடக்கான், நாங்க மேல தண்ணி போட்டு பேசுறோம் நீ யாரு சார்”

“சரி பாதாள சாக்கடையில விழுந்த ஆள் எங்க”

“அவரு ஏ அப்பா” அழுது கொண்டே சொன்னாள் அப்பெண் குழந்தை.

“இப்ப அவரு எங்க”

ஐவர் பேசுவதாயில்லை. முதுகை பிரிக்கும் சுவரில் சாய்த்து போதையை தூக்கத்தை அனுபவித்தனர்.

“அய்யா அப்பா நேத்து பாதாள சாக்கடையில அடப்பு எடுக்கும்போது செத்துட்டார். அந்தப் பூசாரி செத்தாரே அப்பதான் அப்பா செத்தார்., ஆனா உடல சாக்கட தண்ணி தள்ளிட்டு போயிருச்சு, ராத்திரி பூரா தேடினாங்க…..”

அவளால் பேச முடியவில்லை தேம்பினாள்.

கி சம்பத் அவள் அருகே நெருங்கி அவள் தோளை தொட்டான், கேட்டான்

“சொப்பு ஏமி ஜரிகிந்தி” வந்தேறி மொழியியிலேயே கேட்டான்

அவள் சற்று அழுகை நிறுத்தி சொன்னாள்

“அப்புறம் அப்பா கிடச்சிட்டார் ஆனா இந்த இடம் அந்த செத்துப் போன பூசாரிய தூக்கிட்டு போற வழியாச்சே அதனால அந்தப் பிணம் போற வரை இந்தப் பிணத்த மூடி வைக்க சொன்னாங்க”

“எதுக்கு இந்த கல்யாண மண்டப விரிப்பு”

ஒருவன் விழித்தான். ஐவரில் ஒருவன். பெரும் குரலில் சொன்னான்.

“ டேய் சார் நீ யாரு எங்ளுக்கு எல்லா வேலைக்கும் காசு கிடைக்கும். மூடி மட்டும் போட்டு மூடினா பத்தாது, அதனால் ஓட்டை மேல கல்யாண வீட்டு கம்பளம், வாடை வராது பாரு, பூசாரி பிணம் போனதும் திருப்பி கொடுத்துருவோமில்ல, போடா நீ போடா”

கி சம்பத் தொலைவில் வரும் அமைதி ஊர்வலத்தை பார்த்தான். எல்லா சமயத்தினர், எல்லா சாதியினர், எல்லா அரசியல் பிரமுகர்கள், நான்கு போலீஸ் உடன் வர முன்னே வந்தது ஒரு பாடை. அதில் கோவில் அர்ச்சகரின் ஆத்மா அற்ற உடல்..

கி சம்பத் மனதிற்குள் பொருமினான். அவன் எந்த மொழியில் இதை கவர் பண்ணுவான். முழுதும் உறைந்திருந்தது அவன் மூளை, கைகள் கால்கள் ஏன் விரல்களும் கூட நடுங்கின. எப்படி எழுதுவான். என்ன எழுதுவான்.

அடுத்த நாள் பிரபல ஆங்கில மற்றும் செந்தமிழ் ஏடுகள் கோவில் பூசாரியின் படம் போட்டு அவர் சாவை குறித்து புகழ்ச்சியாய் எழுதின. ஆனால் முந்திய நாள் மாலை வந்த “மாலை கோவை” எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஏனெனில் கி சம்பத் எழுதியதை அவன் பத்திரிக்கை ஏற்கவில்லை. ஏனெனில் அவன் பெருமாளை பற்றியும் அவன் சாவை பற்றியும் உருக்கமாக எழுதியிருந்தான். அதில் சுவாரஸ்யம் இருக்கவில்லை. இப்போதெல்லாம் தமிழ் மக்கள் நகைச்சுவையே அதிகம் விரும்புகின்றனர். சரி எந்தப் பெருமாள் எந்த சாவு என கேட்கிறீர்களா. அதுதான் பெருமாள். பாதாள சாக்கடையினுள் பணி செய்து இறந்தவன். கடவுள் பெருமாள் அல்ல. 

பெருமாள் பிணத்தை பெருமாள் பூசாரியின் பிணம் போன பிறகு பாதாள சாக்கடையிலிருந்து எடுத்து விட்டார்கள். எல்லா பிணங்களும் சமம் அல்ல.

Pin It