திரு ம.செந்தமிழன் அவர்கள் பழந்தமிழகத்தில் இருந்த பரத்தமை குறித்து மூன்று கருத்துகளை முன் வைத்துள்ளார். அவற்றுக்கு எதிர்வினையே இச்சிறு கட்டுரை ஆகும்.

1. ‘பரத்தையர் என்போர் விபசாரிகள் அல்லர்’ என்பது அவரது முதற்கருத்து.

          சங்ககாலம் என்பது சமுதாய வரலாற்றுப்படி இனக்குழு அமைப்பு மெல்லமெல்ல சரிந்து கொண்டிருந்தபோது தோன்றிய நிலவுடைமைக் சமுதாயம். நிலவுடைமைச் சமுதாயத்தில் உற்பத்திப் பெருக்கமும் வர்க்கப் பிரிவினையும் பெண்ணடிமைத் தனமும் ஏற்படுவது இயற்கை. இந்நிலையைத்தான் சங்கப்பாக்களில் பார்க்கிறோம்.

          முதற்பொருள் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் இதற்குச் சான்றுகள் நிரம்பியிருப்பதைக் கற்றோர் அறிவர். இக்கருத்தைத் தோழர் ஜீவா அவர்கள் ‘தொல்காப்பியர் காலத்தில்’ பெண்ணடிமை முழுக்க முழுக்கக் குடிகொண்டிருந்தது. இந்தப் பெண்ணடிமை முறை வேறு யாராலும் புகுத்தப்பட்டதன்று. சமுதாய வளர்ச்சியில் உலகத்தில் எந்தத் தேசத்திலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்படுவதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார். (ஜீவா - புதுமைப்பெண், பக்கம் 32)

          நிலவுடைமைக் கூறுகளில் பரத்தமைக்கும் இடம் உண்டு.

          பரத்தையர் என்றாலே தளுக்கி மினுக்கி ஆடவரைத் தம்பால் இழுத்து வாழ்பவரே ஆவர். (நற்றிணை பா. 320) பொருளுக்காகத் தம் உடலை விற்பவரே பரத்தையர் அல்லது பொருட்பெண்டிர் எனப்பட்டனர். இவர்களையே வள்ளுவரும் பொருட் பெண்டிர் எனக்குறித்தார்(குறள் 913).

          திருமணம் செய்யாமல் வாழ்ந்த பெண்களே பரத்தையர் என ஏற்கும் செந்தமிழன் அவர்கள் பரத்தையராக எங்ஙனம் வாழ்ந்தனர் எனவும் பொருட்பெண்டிரிலிருந்து எவ்வாறு மாறுபட்டனர் எனவும் கூறவேண்டாமா? பரத்தையர் வெறும் உடற்பசிக்கு மட்டுமே ஆடவரை விரும்பினர் என்பது உண்மையாக இருக்க முடியாது.

          பொருளாதாரத் தேவைக்காக பரத்தமை தோன்றியது என்கிறார் வரலாற்று ஆசிரியர் சந்தோஷ் முகர்ஜி(அ.தட்சிணாமூர்த்தி, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், மேற்கோள் பக்கம் 117).

2. ‘பரத்தைப் பெண்கள் - பொருளுக்காக/பணத்துக்காக ஆணுடன் உறவு கொண்டதாக எந்த சங்க இலக்கியமும் கூறவில்லை’ - இது செந்தமிழன் வைக்கும் இரண்டாம் கருத்து.

          சங்கத்தமிழன் முதலில் ஒருத்தியை ஊரார் அறிய மணந்து கொண்டான். அவள் இல்லக் கிழத்தி ஆவாள். இரண்டாவதாக ஒருத்தி யையும் சேர்த்துக் கொண்டான். அவளே காமக்கிழத்தி எனப் பட்டாள். இவள் இற்பரத்தை எனவும் குறிக்கப்பட்டாள். இதற்கு மேலும் அவன் நினைத்த பெண்களிடம் சென்று வந்தான். அவர்களே சேரிப்பரத்தையர் எனப்பட்டார்கள்.

          யாவராயினும் அவர்கள் வாழ்வதற்குப் பொருள் வேண்டும். அகநூல்களில் பரத்தையர் வாழ்வு வள வாழ்வாகவே காட்டப் பட்டுள்ளது.

          பரத்தையர் வாழ்க்கை இங்ஙனம் இருக்க அவர்கள் பொருளுக்காக ஆணுடன் முயங்கவில்லை எனில் அவர்களின் பகட்டு உடைக்கும் உணவுக்கும் இருப்பிடத்திற்கும் யாரை நம்பி வாழ்ந்தனர் என்பதைச் சான்றுகளோடு கூறவேண்டாமா செந்தமிழன்?

          அன்றாடம் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் வரிசையாகப் பாடலில் பாடும் பழக்கம் அக்காலத்தில் இல்லை.

          புறநானூற்றுக் காலத்தில் ஒரு வீர மங்கை முதல்நாள் போருக்குத் தந்தையையும் அடுத்த நாள் கணவனையும் அனுப்பினாள். இருவரும் மடிந்தனர். அடுத்த நாள் தன் ஒரே மகனை அனுப்பினாள். அதற்குப் பின் நடந்தது சொல்லப் படவில்லை. ஒருவேளை மகனும் கூட இறந்திருக்கலாம்(புறம் 279).

          இவளைப் போல அன்று நடந்த போர்களில் ஆடவரைப் பறிகொடுத்து அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் பெருக்கிய எந்தப் பெண்ணின் சோகமும் பாடலில் சொல்லப்படவில்லை. இதே போலத்தான் பரத்தைக்குப் பொருள் ஈந்த ஆடவன் செயலும் பாடப்படவில்லை.

          காப்பிய காலத்தில் இச்செய்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்டுவிட்டது!

          மாதவிக்குப் பொருளைக் கொட்டிக் கொட்டிக் கொடுத் தமையால் வறுமை உற்றேன் எனக் கோவலன் கண்ணகியிடம் வருந்திக் கூறுகிறான் (சிலம்பு-9:69-70).

3. ‘கற்புமணம், பரத்தமை ஒழுக்கம் ஆகிய இருபிரிவினரையும் சமமாக அங்கீகரித்தது தமிழர் மரபு’ - இது அவர் வைக்கும் மூன்றாம் கருத்து.

          ஆணாதிக்கம் நிறைந்த சங்க காலத்தில் ஆண்கள் செய்த தவறை ஆண்களே, கண்டனம் செய்வார்கள் என எதிர்பார்த்தல் தவறு. ஆண்கள் விரும்பி ஏற்றமையால் பரத்தமை அங்கீகரிக்கப்பட்டது என்பதும் முழு உண்மை ஆகாது. ஆண்களிலும் கூட பரத்தமையை வெறுத்த கற்புடைய ஆண்மக்கள் அன்று வாழ்ந்துள்ளனர்.

          சோழன் நலங்கிள்ளி ‘நான் பகைவரை விரட்டி வெற்றி கொள்ளாவிட்டால் பொது மகளி ரைக் கூடியவன் ஆவேன்’(புறம் 73) எனக் கூறுவதிலிருந்து மனைவி யோடு மட்டுமே கூடிவாழ்ந்த கற்பு மேம்பாட்டை அறியலாம்.

          குடும்பப் பெண்களில் சிலர் ஆடவரின் பரத்தைமையைக் கண்டும் காணாமலும் இருந்தது உண்டு; சிலர் மிக மென்மையாகக் கண்டித்ததும் உண்டு. பலர் தம் கொழுநரைப் பரத்தையர் தெருக் களில் நடமாடாமல் தடுத்ததையும் பார்க்க முடிகிறது. பல மனைவியர் கணவனை அஞ்சாமல் கண்டித் திருப்பதையும் காண முடிகிறது.

          உண்மை இங்ஙனம் இருக்க ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக மிகச்சிலர் கண்டும் காணாமலும் இருந்தமையைப் பெரிதாகக் காட்டி பரத்தமையைச் சமூகம் அங்கீகரித்தது எனல் பொருந்தாக் கூற்று.

          சில சான்றுகளைப் பார்ப் போம்.

          பரத்தையர் வீடு சென்று திரும்பும் தலைவனிடம் ஒரு தலைவி ‘உடைபட்டதால் குப்பையில் தூக்கி எறியப்பட்ட பழம்கலம் போன்றவன் நீ. உன்னை ஒரு காலும் தொட மாட்டேன். போ, உன் வழி பார்த்து’ என்று ஏசுகிறாள். (நற்றிணை 350).

          இன்னொரு தலைவன் பரத்தை வீட்டிலிருந்து தன் தலைவியைத் தழுவ வருகிறான். அவனைக் கண்ட அவள் மனைவி, ‘அழகியாகிய என்னைப் பிரிந்தாய். நான் சூடிய பூமாலையை வாடச் செய்தவன் நீ. ஆதலால் நீ எனக்குத் தீராப் பகைவன். உன்னை மன்னிக்க மாட்டேன். போ, போ’ என்று கண்டிப்பதைப் பார்க்கிறோம் (நற்றிணை 260).

          இவ்வாறு தவறு செய்த கணவனைக் கண்டித்துள்ளனர் குடும்பப் பெண்கள். ஆண்கள் கூடக் கற்போடு வாழ நினைத்துள்ளனர். ஆகவே ஒட்டுமொத்தமாக அனை வரும் பரத்தமையை அங்கீகரித்தனர் எனல் பொருந்தாது.

- அ.ப.பாலையன்

Pin It