எல்லோராலும் 

புறக்கணிக்கப்பட்டவள் 

தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் 

ரகசியம் தேடி 

தனிமையோடு வலம் வருகிறாள் 

பூவுலகை 

அவள் நிலையறிந்து 

யாரோ ஒரு சுத்த ஆத்மா 

சிந்திய கண்ணீரால் 

இழந்த தன் உலகை 

புதுப்பித்துக் கொள்கிறாள் 

அக்கண்ணீரைப் போல 

பிறர் துயர் துடைப்பதையே 

தொழிலாக்குகிறாள் 

இடையிடையே சிலர் 

வன்கதையால் விமர்சித்தும் 

புனை கதையால் போற்றியும் 

அவளின் வாழ்வை எழுதுகின்றனர் 

எல்லோரும் விரும்பும் ஜோதியாக 

யாரும் நெருங்க முடியா தீயாக 

உருமாறிய அவள் 

தன் மீது சிந்திய கண்ணீர்த் துளியை 

புன்னகை முத்துக்களாய் மாற்றி 

தன் எதிரிகளுக்குச் சூட 

அப்போது அவள் 

தேவதையாகியிருப்பாள். 

-- 

கடவுளின் வீடு 

பரவசம் கொள்ளாதே 

நீ கட்டியிருக்கும் 

மணல் வீடுபற்றி 

பெரும் மழையோ 

பெரும் காற்றோ 

பெரும் இடியோ 

பெரும் ஒளியோ 

கலைக்க முடியாத வீட்டை 

என் சொல்லுக்குண்டு 

அதைக் கலைத்துப்போடும் தன்மை 

எச்சரிக்கையாயிரு 

கடவுளும் எனது ஒரு சொல்லில் உருவானவன் 

யோனியிலிருந்து வந்த நான் தான் கடவுளை உருவாக்கினேன் 

ஆதி நிலத்தில் புதைத்த துளி என்னை உருவாக்கியது 

ஆதியும், அந்தமும் என்பது 

வேறு கிரகத்தைவிடப் பெரியது 

வேறு கிரகமென்பது 

ஆதியாலும், அந்தத்தாலுமானது. 

Pin It