கடக்க முடியாத திண்ணை

வானம் பார்த்த பூமியின்
சிலவகையான சிரிப்புக்களைப் பறித்துவர
கையில் காலி சாக்குப் பையுடன்
பாவாடை மணியா

கடந்து கடந்து
சிரிப்பைக் கண்டுகொள்ள
இயலவில்லை அவளுக்கு

கூகைகளையும் காட்டு நாயையும்
கண்ணில் கண்டு
கலவரப்பட்டு கடந்து போகிறாள்
சிலவகையான சிரிப்புகளைப் பறித்துவர

வீடு திரும்பி திண்ணையில் கிடத்தி
சாக்குப் பையை
கீழே உதறியபோது
கூகையும் காட்டு நாயும்

இந்த முறையும்
காலி சாக்குப் பையுடன்
பாவாடை மணியா

திண்ணையில் தனது
சிரிப்பைக் கிடத்தி நிறுத்திவிட்டு

பிளக்கும் கிளிஞ்சல்கள்

சின்னச் சின்னதாய்
கிளிஞ்சலான உடலினை
வாழையில் போட்டு தாலாட்டியதாய் ஞாபகம்

ஒன்று கூடி
குஞ்சான், ஊர்மி, காமாட்சி என
வட்டப் பாதை விளையாட்டில்
தனித்த கோளாய்
ஆயிரம் மருத்துவரை
பார்த்ததாய் பேசியபோது
ஒரே ஒரு
மருத்துவரின் முகம் மட்டுமே நெருக்கமாக

வயதுவரின் சரியாகும்
என்ற சமாதானத்தில்
அம்மா மறந்து போனாள்

பந்தலிட்ட விசேஷ நாட்களில்
தனித்த கிளிஞ்சலின்
கற்பனைகளும் கண்களும்
பந்தலுக்கடியிலேயே

உள்ளங்கையில் ரேகைகளை
உற்றுப் பார்த்து
உருமிய நாட்கள் சென்றன
உரியபடி

ஒரு வழியாய்
பாதி சரிசெய்யப்பட்ட
முத்தாய் கிளிஞ்சல் மாறியபோது

உடைந்த சங்கின் துளியாய்
கிளிஞ்சல் வளையல்கள்
சிரித்து முத்தமிட்டன சில நேரத்தில்

விநோதமும் விசித்திரமும்

விநோதமானவைகளை விரும்பும்
இராட்சசியாய் எனது தங்கை
அடுப்புக் கரியின் அழகை
அள்ளியபடியும்,
அடிவயிற்றுத் தழும்பை
முத்தமிட்டபடியும்,
துண்டுத் துணிகளை
துவைத்தபடியும்
புரியாமல் அடிக்கடி
பைத்தியகாரி பட்டம் பெறுபவளாய்
அம்மாவிடம்

சானிடரி நாப்கீனை கட்டி அழும்
கன்னத்தின் ஈரத்தை
துடைத்தபொழுது நான் உணர்ந்தேன்

சிலவகை விநோதங்களை
பலவகை விசித்திரங்களை

கல்வெட்டு

கற்பனைப் பூட்டின்
திறவுகோலாய்
நீயும் உன்னுடனுமான
எனது வழிப்பறியும்

வெயிலுக்கு அடியில்
கிடத்தப்படுகின்றது
எனது நிர்வாணமற்ற நினைவுகள்

இரவுக்கு அடியில்
விரிந்து பறக்கிறது
உனது இமைகளற்ற கண்கள்

அடிக்கடி கருக்கலைப்பும் கர்ப்பமும்
உனது சுவடுகளைத் தாங்கிய
எனது கல்வெட்டில்
பதிய வைக்கப்படுகிறது
உனது காலடி அச்சுடன்

மக்காச் சோளம்

தலைவிரி கோலமாய்
சிலேட்டில் கிறுக்கப்பட்ட
பென்சிலின் நிழலைவிட
அதிக நிஜங்களை அப்பாவின்
மக்காச் சோளத் தட்டின்
முதுகில் எழுதிப் படித்து
அழுத கணங்கள்.....

விவரம் தெரியவந்து
அப்பாவின் கண்ணை
எட்டாம் வகுப்பு படிக்கும்போது பார்த்துப் பயந்தபடி
அம்மாவின் தயிர் வசானை
சேலையில் நுகர்ந்து
நகர்ந்த கணங்கள்.....

மதிப்பெண் பட்டியலின்
கையெழுத்தோடு மட்டுமே நகர்ந்த
எனக்கும் அப்பாவிற்குமான
பாச கணங்கள்.....
செருப்புக் குளம்பின் சத்தத்திற்கு
நான்கு அறையும்
சுத்தமாக்கப்பட்ட வெற்றறையாய்
அவரின் குரல் மட்டுமே
ஒலிக்க ஏதுவானது
இன்றும் எங்கள் வீடு

இவையணைத்துமே
வளர்ந்துவிட்ட பிறகும்
வளரப்படாத கணங்களாகவே
ஒவ்வொரு கணமும்
கடக்க வேண்டியவளாகிறேன்
Pin It