கவிழ்கிறது நெஞ்சு

கூரிய மலைப்பிளவுகளிலிருந்து
இரத்தம் வழிவதான தொனியில்
வாய்ப்பிளந்து எதிர்நோக்கும்
தாய் வருகையுடன் வரும் இரையை.

பசியின் பாடல்களைக்
கோரஸாக எதிரொலிக்கும்
காக்கைக் குஞ்சுகளைக் கண்டு இரசிக்கும்
புலரும் இருட்டுடன் எனது கண்களும்.

வாரிமுடியப்படாத நீண்ட கூந்தலாய்
தென்னங்கீற்றைத் தாலாட்டும் காற்று
தேங்கும் இரத்தத்தை உடைத்துவிடக் கூடுமோவென
என் நெஞ்சைப் பதைக்க வைக்கிறது.

பசியின் நிறம் சிவப்பாகக் கூடாதென
பதற்றத்துடன் நெஞ்சு தாய்மைப்படுகிறது.

முலைப்பாலை இரையாக்கி
வாய்ப்பிளந்த காக்கைகளை அடைகாக்க
கூடையாய் கவிழ்கிறது என் நெஞ்சு
அவற்றின் தாய் வருவதற்குள்
அவற்றுக்கு இரையைத் தருவதற்குள்.


பெட்டி

கடன்வாங்கி வாங்கிய பெட்டி
அனுசரனையோடு கோதியிருக்க வேண்டும்.

மனங்களின் இறுக்கங்களில்
முட்டும் மூச்சுத்திணறலிலிருந்து விடுபட
மூடப்படாத சிறுபெட்டிக்குள்
கனவுகளைச் சுவாசிக்க
மெல்ல வடிவம்கொண்டு நுழைந்தேன்
ஒரு மேஜிக்காரனைப் போல்.

அடுத்தடுத்து மீந்துபோன
துளித்துளி இடங்களில்
எனது சமையலறையும் படுக்கையறையும்
தனது இருப்பை மீறி
முடக்கமாயின என்னோடு.

என்னைப் போலவே
குழந்தைகளும் துணையும்
அடைசலாகிப் போயினர்.

உறவுகளும் நண்பர்களுமானவர்
அறியப்படாத தேசமாகிப்
போவதொரு தோற்றத்தில்
இறுக்கித் திறக்க முடியாத
மூடிகளின் தோற்றமாயினோம்.

அப்போது பெட்டியானது
எங்களை, எங்கள் வீட்டை வைத்துத்
தன்னை மூடிக்கொண்டுவிட்டது.

இப்போது நாங்கள்
திறக்கவே முடியாத
பெட்டியின் மூடிகளானோம்.

வம்பா மணல்

காலம் சாலையின் தீவிரப் பயணத்தை
உருட்டுகிற சாக்கில் ஆட்படுகையில்
புழுதியின் வன்புணர்ச்சியில் கசங்குகிறது
என் ஞாபகம்.

இமயத்தின் பதிலியான அந்த வம்பா மணல்
காற்றின் தூரிகையால் ஓவியங்களைத் தீட்டும்.
ஒப்பனைகள் ஏதுமின்றி கட்டிப் புரள்கையில்
காதலின் சுகத்தை அனுபவிக்கின்றபோது
ஒருபோதும் கசங்கப்பட்டதேயில்லை நான்.

ஒருவேளை நான் போகவில்லையென்றாலும்
வலிந்து தூது அனுப்பும் மாலை நேரத்தை.
மனிதர்கள் பாம்புகளானபோது
மயங்கி வீழ்வேன்
விஷத்தை உண்டு உயிர்ப்பித்து புதிதாவேன்.
கிளர்ந்து எழுகின்ற துயரைக்
கண்ணீரால் நிரப்புவேன்.

நான் அதுவாய்
அது நானாய் ஆகிவிட்ட நிலையில்தான்
காலம் வலுக்கட்டாயமாய் இழுத்துவந்தது
நகரம் நோக்கி.

இங்கே பாம்புகள் மனிதர்களாய்
உருக்கொண்டு நடிக்கையில்
நானும் விடமிக்க நடிப்பில்
வீரியம் கொண்டு சீறுகிறேன்
அதனால் அவ்வப்போது
பழுதாகிவிடுகிறது எனது இயந்திரம்.

காதலின் சுகத்தை அனுபவிக்க இயலாமல்
நகரக்கதியில் நடித்துக்கொண்டிருக்கிறது
மனசு உடம்பு வாழ்வு.

ஒரு கட்டத்தில் கிடப்பில்கிடந்த நான்
எல்லாவற்றையும் களைந்து நிர்வாணமாகி
ஓடிக்கொண்டிருக்கிறது
உயிர்த்த இடம் நோக்கி பூட்டி
வைத்த ஞாபகங்களைத் தூக்கிக்கொண்டு.
அங்கே என் வம்பா மணல் மேடுகள்
புதைக்கப்பட்ட சவக்குழிகளிலிருந்து
மேலோங்கிய கட்டிடங்கள் மீது மோதி
ஞாபகங்கள் சிதறி விழுந்து அழுதன.

நான் அங்கேயே விட்டுவிட்டு
மீண்டுமொரு புழுதிப் புணர்ச்சியில்
கசங்கத் திரும்புகிறது
பழுதுபட்ட எனது இயந்திரம்.
Pin It