பெரும்பான்மையான இரவுகள் விடிவதில்லை

உங்களில் சிலர்
என்னுடன்
இராத் தங்கியிருக்கலாம்

ஸ்தூலமான அவ்விரவு ஒரு
மெழுகுவர்த்தியின் உருகுதலைப் போல்
மிக எளிமையானதாகவும்

மண்சரிந்த ஒரு சுரங்கத்தைப் போல்
மிக துன்பமானதாகவும்
அங்குல அங்குலமாய் நகர்கிறது

யாருக்கான இரவென்ற
தடித்த சந்தேகம்
வழமையான சுவர்களில் பட்டுச்
சரிந்து மடிகிறது

இரவின் சுழலில் சிக்கித்
திசைகளைத் துறந்த ஒரு
உள்நீச்சல்காரி போலாகின்றேன்

காலம்
பருவத்தின் குப்பிகளில்
பகலிரவினை ஊற்றி அனுப்ப

கண்களில் சேகரமாகிறது
தழுவிக் கொள்ளாத நீரும் எண்ணெயுமாய்
ஆயினும்

சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்ட
பெரும்பான்மையான இரவுகள் விடிவதில்லை.

கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக்கொண்டிருக்கிறேன்

அதிவிரைவான வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன

அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என்மீது படிந்து நகர்கின்றன

முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்தபடி செல்கிறது

நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்

போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையயாளி

இரயிலை நிறத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடைக்கிறது
கடலளவு இரத்தம்.

என் கடவுள்

என் வயதொத்த அவளுக்கு
சொற்ப மொழிகளே தெரியும்
நினைத்த மாத்திரத்தில்
கால தேசங்களைக் கடப்பவளில்லை.
இயற்கையின் வேர்முளைத்த
அவள் உடலில்
சதுப்பு நிலத்தின் பசுமை மின்னும்.
ஒப்பனைகள், புனைவுகள்
எவையுமின்றி
அதிகாலைப் பனிப்பொழிவாள்
என்மீது படுத்துக் கிடப்பாள்.
அருள்பாலிக்கும் அருமந்திரங்கள்
ஏதுமற்ற அவள் கைகளில்
எழுதுகோல் பூத்திருக்கும்.
மூன்றாம் ஜாமத்தினிறுதியில்
கம்பீரத்துடன் உள் நுழையும்
அவள் தேகத்திலிருந்து
புணர்வின் வாசனை வடியும்.
நாற்புறமும் கண்ணாடிகள் பதித்த
எனதறைக்குள் அவள்
உறங்கும்போது பார்க்கிறேன்
ஆடை களைந்து என் சொரூபமாகிறாள்.
Pin It