இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு முடக்கம் என்ற செய்திக்குப் பிறகு தான் சென்னையை விட்டுக் கிளம்பினேன். கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்திற்கும், கோவை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட ஊர்களுக்குப் போய் வர வேண்டிய தேவை இருந்ததினால் அதன் அடிப்படையில் சில அவதானிப்புகளைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த அவதானிப்பின் எல்லைகள் ஈழ அகதிகள் முகாம்கள் நிலைகள் முதன்மையாகவும் (நகரங்களைச் சுற்றியுள்ள சேரிகளுக்கு இது பெருவாரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன்), பரவலாக சில ஊர்களின் பொதுவான அவதானிப்புகளையும் தரலாம் என்று நினைக்கிறேன்.

trichy refugee campகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் என்று சொல்லப்படும் கைகளைத் தொடர்ந்து கழுவுதல், வெளியே போகாதிருத்தல், குறைந்த பட்சம் மூன்று அடி இடைவெளி விட்டு இருத்தல், அறிகுறிகள் தெரிந்தால் தனித்திருத்தல், வெளியே போய் வந்தால் குளித்தல், வெளியில் இருந்து வாங்கி வரும் பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், வெளியில் கொண்டு சென்ற செல்போனை கிருமி நாசினி கொண்டு துடைத்தல் போன்றவைகள் எப்படி இருக்கின்றன என்பதன் அடிப்படையில் தான் எனது அவதானிப்புகளை அனுகியுள்ளேன்.

முதலாவது ஒரு முகாமின் அமைப்பை எடுத்துக் கொள்வோம். முகாம்கள் லைன் வீடுகள் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளவை. ஒரு பக்கம் இருபது வீடுகள், அதற்கு நேர் எதிரில் இருபது வீடுகள். (சில வீடுகள் விதிவிலக்காக இருக்கும். அவை ஆரம்பத்தில் அல்லது கடைசியில் இருக்கும்) மற்ற வீடுகள் அமைப்பைப் பற்றி கவனிக்க வேண்டும் என்றால், நடுசுவர் அதாவது இருபக்கங்களிலும் வீடுகள் இருக்கும். இரண்டுக்கும் நடுசுவர் இருக்கும், இந்த நடுசுவற்றில் இருந்து ஆரம்பித்தால் முதல் பத்து அடிக்கு ஓர் அறை, பின்பு எட்டு அல்லது பத்து அடிக்கு ஓர் அறை, அடுத்து ஒன்றரை அடி அல்லது இரண்டு அடிக்கு நடைபாதை, பின்பு அடுத்த வீட்டின் வாசல் இருக்கும்.

ஒருவர் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் அவர் முதலில் எதிர்ப்படுவது அடுத்த வீட்டின் வாசலாகத் தான் இருக்கும். அவர் வீடு நடுவில் இருந்தால் அவர் எந்தப் பக்கம் போனாலும் பத்து வீடுகள் தாண்டித்தான் போயாக வேண்டும்.

இந்த வீடுகளுக்கு எந்த வித தண்ணீர் வசதிகளும் கிடையாது. பொதுவாக இரண்டு, மூன்று லைன்களுக்கு சேர்ந்து தான் ஒரு குழாய் தண்ணீர் வசதி. சில இடங்களில் லைன்களோடு ஒட்டித் தான் குழாய்கள் இருக்கும். காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் வரும் தண்ணீரை குடங்களில் பிடித்து வைத்திருக்க வேண்டும். சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மூன்றில் இருந்து நான்கு குடங்கள் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தான் அன்றைய நாளுக்கான அனைத்துக்கும். இதை வைத்து ஒரு குடும்பத்தில் இருக்கும் ஐந்து பேர் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முறை கை கழுவுவது என்பது சிக்கல் தான்.

அத்தோடு இங்கு தண்ணீருக்காக கூட்டம் கூடுவதும், ஒரு லைன் மொத்தமாக இரண்டடி பாதையில் தண்ணீர் எடுக்க வருவதும் மிக சாதாரணமாக நெரிசலாக இருக்கும். ஒருவர் நடக்க, மற்றவர் ஒதுங்கிய நிலையில் தான் அனைத்தும் இருக்கும். அன்றாட வாழ்வியலில் இதைத் தவிர்க்கவே இயலாது.

கழிவறை வசதியை எடுத்துக் கொண்டோம் என்றால் இரண்டு மூன்று லைன்களுக்கு ஒன்றாக பத்து கழிவறைகள் இருக்கும். அவைகளுக்கும் பொதுவாகத் தான் தொட்டியில் தண்ணீர் இருக்கும். அதை எடுத்துத் தான் பயன்படுத்த வேண்டும். பெண்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர… ஆண்களும், பெண்களும் அருகில் இருக்கும் காட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள். இங்கும் கழிவறை சுத்தம், குறிப்பிட்ட நேரத்தில் கழிவறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை என பல சிக்கல்கள் இருக்கும் போது தொற்று உள்ளவர் இருந்தால் நிலைமை மோசமாகத் தான் இருக்கும்.

அன்றாடம் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் இங்கு எந்தவித வசதியும் இல்லை. அருகில் இருக்கும் வாய்க்கால்களுக்குத் தான் போயாக வேண்டும். வாய்க்கால்களில் குறிப்பிட்ட இடங்களில் தான் குளிக்க வசதிகள் இருப்பதால் அங்கும் கூட்டம் கூடுவது நடைபெறும். அதேபோல் வெளியே சென்று வரும் ஒவ்வொரு முறையும் வாய்க்கால் சென்று குளித்து வருவது என்பது அசாத்தியமான ஒன்று.

முகாம்களில் கொரோனா அறிகுறிகள் யாருக்காவது இருந்தால் அவரைத் தனித்து வைக்க எந்த இடவசதியும் வீட்டில் இல்லை. முதலில் சமூக முடக்கத்தினால் எல்லாரும் வீட்டில் இருப்பதே இடச் சிக்கலாக இருக்கும் போது, தனித்து இருத்தல் எப்படி சாத்தியமாவது?

இந்த மூன்று விசயங்களை வைத்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் இங்கு சாத்தியமே இல்லாத ஒன்றாக உள்ளது என்பதை அறியலாம். அதோடு வெளியில் பொருட்கள் வாங்கப் போனாலோ… இல்லை வெளியில் சென்று வந்தாலோ கை, கால்கள் கழுவுவது என்பது முன் இருக்கும் சிறிய அறையில் சமையல் அறையாகப் பிரித்து வைத்திருக்கும் அந்த இடத்தில் தான் செய்ய வேண்டும். அதுவும் தடுப்பு நடவடிக்கை அறிவுரைகளுக்கு எதிராகத் தான் உள்ளது.

வாங்கி வந்த பொருட்களை குறைந்தபட்சம் வெய்யிலில் உலர்த்துவது என்றால் கூட, இடம் இருக்காது. கதவு, வெளியில் சென்று வருபவர்கள் தொட்ட இடம் என அனைத்தையும் கழுவுவது எல்லாம் இந்தச் சூழலில் சிக்கல்.

வீடுகள் மேல் ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் தான் கூரையாக உள்ளது. இந்தப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்தக் கூரைகள் பகலிலும், இரவிலும் பெரும் வெப்பத்தைத் தருகிறது. இங்கு வீடுகளுக்குள் இருக்கவே முடிவதில்லை. முடிந்த வரை வெளியில் இருக்கத் தான் எல்லாரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இப்பகுதியில் போலிசார் வந்து அடிப்பதால் அவ்வப்போது வெளியில் வந்து இருந்துவிட்டுப் போகிறார்கள்.

மேற்கூறிய சூழலில்.. இதுவரை கொரோனா தொற்று என்பது இதுவரை இந்தப் பகுதிகளில் கண்டறியப்படவில்லை. அப்படி கண்டறியப்படுமானால் பெரும் ஆபத்தும், கட்டுப்படுத்த முடியாத சூழலும் உருவாகும். குறிப்பிட்ட முகாம் இருக்கும் பகுதிக்கு 40 கி.மீட்டரில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது சூழலை சிக்கலாக மாற்றியுள்ளது.

முகாம்களில் இருப்பவர்கள் பெரும்பான்மையோர் கூலித் தொழிலாளிகள். இவர்களின் வாழ்வதாரச் சிக்கல்களும் உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் மக்கள் முகத்தில் சுற்றிக் கொண்டு திரிகிறார்களே தவிர… இந்தத் தொடர் கை கழுவுதல், வெளியில் சென்று வந்த பிறகு குளித்தல் எல்லாம் இன்னும் அவர்களுக்கு அன்னியமாகத் தான் உள்ளது.

இந்த அவதானிப்புகளில் இருந்து புரிந்து கொள்பவை என்னவென்றால், முதலில் எல்லா இடத்திற்குமான பொதுவான பரிந்துரைகள் கண்டிப்பாக செயல்தன்மை அற்றவைகளாகத் தான் இருக்கிறது. இந்தியா முழுவதும், தமிழ் நாடு முழுவதும் என்று கூறாமல் குறிப்பிட்ட பகுதிகள் அடிப்படையில், சூழலுக்கு ஏற்ற அணுகுமுறைகளை உருவாக்கினால் தான் பயன்படும்.

இதுவரை இருக்கும் தடுப்பு முறைகள் தனிவீடுகளுக்கு, மத்திய தர குடும்பங்களுக்கும் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கும் பொருந்தலாமே தவிர, ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் சமூக அமைப்புகளுக்கு ஏற்ற முறைகளான தனித்திருத்தலோ, சமூக முடக்கமோ இங்கு சிக்கலைத் தான் தருகிறது.

நான் அவதானித்ததில் இன்னொரு முக்கிய விசயம் என்னவென்றால், நோய்த் தடுப்பில், break the chain – cluster formation முறையின் தொற்றைக் கட்டுப் படுத்துதலை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு வெளியில் இருந்து வந்தவர்கள், சுமாராக முப்பது கி.மீ. வரை சென்று வரும் வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட… இன்று அரசு செய்யும் பாதிக்கப்பட்டவரின் பகுதியில் இருந்து 7 கி.மீ. பகுதியை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளுதல் என்பது கண்டிப்பாக பயன் அளிக்காது. கொரோனா தொற்று புதிது புதிதாக கண்டறியக் கண்டறிய , மாறி, மாறி cluster உருவாக்க வேண்டியது தானே தவிர தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவே முடியாது. எனவே சோதனைகள் பரவலாக்கப்பட வேண்டும். தென்கொரிய முறைகள் பயனளிக்கலாம்.

இந்த மாதிரி பல்வேறு சூழல்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் அரசியல் இயக்கங்கள் இவற்றை கவனத்தில் கொண்டு தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் தருவது தான் ஏதாவது நன்மைகள் தரும்.

- விஜிதரன்.ஆர்.சி.

Pin It