உனதழைப்பிற்கான காத்திருப்பில் நிகழ்ந்துவிட்டிருந்தது

ஓர் துர்மரணம்

கொலையுண்டவனின் அமைதியான முகம்

நான் வழிபடும்

கடவுளை நினைவுபடுத்துகிறது

எல்லோருக்குமிருப்பதைப் போலவே

அவனுக்குமொரு கடவுள் இருந்திருக்கலாம்

முதல் தகவல் அறிக்கைக்காக வந்திருந்த

காவலர்களின் முகத்தில்

பல நூற்றாண்டு மரணங்களின் வாசனை

இறந்து கிடந்தவனின்

வாழ்நாள் தடயங்களை ஆராய்ந்தவர்கள்

இன்ன சாதி இன்ன ஊரென

ஒருவாறாக கணித்துவிட்டிருந்தனர்

சில கிலோமீட்டர் தொலைவிலேயே

இன்னுமொரு மரணம் நிகழ்ந்துவிட்டிருக்கிற

தகவலறிந்து

காவலர்கள் இருவரும் கிளம்பிச் சென்றனர்

நீ கனவில் கண்டதாய் கூறிய

கருப்பும் மஞ்சளும் கலந்த குருவியொன்று

சலனமின்றி எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது

என் அகராதியிலிருந்து

சில சொற்களை சேகரித்து

துக்கம் அனுஷ்டிக்கும்படியான

சுமாரானதொரு பாடலைப் பாடினேன்

ஆழ்தியானத்திலிருந்த இறந்துகிடந்தவன்

விழித்துக்கொண்டான்

தகவலறிக்கையில் எழுதப்பட்ட பொய்கள் குறித்து

தாங்கவியலாத வேதனை கொண்டவன்

தன்னை கொலைசெய்துகொண்டது

தானேதான் என்றான்

அவன் சொற்களெதற்கும் பதிலளிக்காத

என் கொலைமெளனத்தில்

அவன் குழம்பியிருக்கக் கூடும்

வெறுப்புற்று பழைய நிலைக்கே திரும்பியபின்

சொற்களனைத்தையும் மறந்து போனவனாய்

தன்னைத்தானே கொலைசெய்வது பற்றி

யோசிக்கத் துவங்கிவிட்டிருந்தேன்.

(அல்ஜீரிய இயக்குநர் முகமது அல்ஸர்த்தின்நினைவிற்கு.)