என்னுடைய அறையைப் பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்களும் காதலுக்கு அடையாளமான பரிசுப் பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. ஜெனாலீனாவை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் அறையின் மின்விசிறிக்கு சமமாய்ச் சுழல்கின்றன. ஜெனாலீனா கடந்த வாரம் என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டாள்.

அவளது மஞ்சள் நிறமும் சாயம் பூசிய உதடுகளும் ஏதோ ஒரு விதத்தில் என்னை வஞ்சித்து சென்று விட்டது. மனதில் கொடூர வேதனையை உருவாக்குகிறது. அவளது ஒய்யாரமான நடையும் சிங்காரிப்பும் மகிழ்ச்சியைத் தந்த அதே சமயம் இப்போது ஏசி விடவும் சொல்கிறது. ஜெனாலீனா என்னை காதலிப்பதாக சொன்னது ஒரு வெய்யில் காலம். இந்த சென்னை மாநகராட்சியில் மதுரைக்காரர்கள் வசித்தால் ஆணும் பெண்ணுமாக கோவில் கடற்கரை எனச் செல்வார்கள். ஆணும் ஆணுமாக இருந்தால் மாலைவேளைகளில் கூட்டமிருக்கும் மது விடுதிகளிலோ திறந்த உணவகத்திலோ சந்தித்துக்கொள்வார்கள். ஜெனாலீனாவை இப்படியாக பார்த்தசாரதி கோவில் வெளிபிரகாரத்தில் தற்செயலாக சந்தித்தது. கோவில் இப்படிப்பட்ட அழகிய பெண்ணை அறிமுகப்படுத்தும் என்பதை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும் எண்ணற்ற இளம் யுவதிகள் யாரிடமும் இல்லாத தனிக்கலை இவளிடம் அப்போது இருந்ததை உணர்கிறேன்.

அடுத்தமுறை சத்யம் தியேட்டரில் ஒரு பின்னிரவு காட்சி படம் பார்க்க சென்றபோது ஜெனாலீனாவை அங்கிருந்த காபி ஷாப்பில் சந்தித்தேன். இந்த முறை அவளிடம், பார்த்தசாரதி கோவிலில் அவளை ஏற்கனவே சந்தித்தது பற்றி தைரியமாக பேசத் தொடங்கினேன். அவளது வெள்ளை நிற டீசர்ட்டும் நீலநிற ஜீன்ஸ் பேண்டும் பொருத்தமாய இருப்பதாய்க் கூறினேன். என்னை காதலிப்பதற்கான வாய்ப்பு பிப்டி பிப்டி இருப்பதாய் அந்தச் சந்திப்பில் கூறிச் சென்றாள்.

ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன். அறையின் வெளிச்சம் சிறிது சிறிதாக கூடுகிறது. அதிகாலை வெளிச்சமும் சில்லென்ற காற்றும் மனதைப் புதுப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக இருந்தாலும் துயரத்தின் வலி நிரம்பிய இவ்வேளையில் எதுவும் மனதிற்கு உவப்பானதாகவே இல்லையென்று படுகிறது. ஜன்னலை திறந்துவிட்டபடி சாலையைப் பார்க்கிறேன். சிலர் மட்டும் காலை நடையில் இருந்தனர். பெண்கள் லேசான ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தும் ஜெனாலீனாவின் மீதான கோபம் எதையும் ரசிக்க விடாதபடி செய்கிறது. கசப்புகளை அந்நேரம் தூக்கி எறிய என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை.

அவள் மீதான வெறுப்பு என்னுள் அதிகரித்தபடியே இருந்தது. ஈரப்பதமிக்க காற்று ஜன்னலின் அருகிலேயே நிற்கச் செய்தது. உடலின் ஒத்துழைப்பிற்கும் மனதின் கசந்த வெறுப்பிற்கும் தொடர்பே இருப்பதில்லை. இரண்டு பொருத்தமற்ற உடல்களைப்போல் இயங்கியது. முகத்தில்பட்ட ஈரக்காற்று அவளது சிறு தொடல்களை நினைவுபடுத்தியது. குறிப்பாக கடற்கரையில் அமர்ந்து பேசிய இரவுப் பொழுதுகள். அதிலிருந்து மாறிக்கொள்ள வேண்டுமென தொலைக்காட்சியின் முன் அமர்ந்தேன். செய்தி சேனலை கடந்து செல்லும்போது புயல்சின்னம் உருவாகியிருப்பதற்கான அறிகுறி தென்படுவதாக வானிலை இயக்குநர் ரமணன் கூறினார். செய்திகளின் நம்பகதன்மையை கோடிக்கணக்கான தமிழ் நேயர்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக இந்த சென்னை மாநகராட்சி தமிழ் சமூகம். தனது அன்றாடப் பணிகளை இன்னமும் சில மணித்துளிகளில் தொடங்கி செயல்படவுள்ளது. புயலொன்று அதற்கு ஒரு பொருட்டல்ல. அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள்.

தொலைகாட்சி விளம்பரங்களுக்கும் சென்னைவாசிகளுக்கும் அதிக தொடர்பிருக்கிறது. விளம்பரங்களின் வேகமும், அதிலிருக்கும் பாதி நிர்வாணமும், அன்றாடம் நகரத்தின் பிரதான சாலைகளில் காணும் நபர்களின் மன நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. தூரத்தில் சித்தாள் பெண்கள் வேலைக்கு கிளம்பிச் செல்வதற்கு தயாராகி நிற்பது தெரிந்தது. ஒரே நேரத்தில் தொலைக்காட்சியையும் ஜன்னலின் வழி சாலையையும் பார்ப்பது உவப்பானதாகவே இருந்தது. பொருட்களின் நம்பிக்கையை சொல்லும் விளம்பரங்கள் தொடர்ந்து வந்தது. சேனலை மாற்றாமல் பார்த்தேன். கட்டிடத்தின் பலத்திற்கு தேவையான இரும்புக்கம்பி விளம்பரமும் உடலுறவு பாதுகாப்பிற்கு ஆணுறை விளம்பரமும் சில நொடிகளில் ஓடி மறைகிறது. அதிகாலையில் ஆணுறை விளம்பரத்தை பார்ப்பதற்கு ஒரு மனநிலை இருக்க வேண்டும். ஆசை முழுவதும் இரவே வடிந்துவிட்டால் எப்படி ஆணுறை விளம்பரப் பெண்ணின் மார்பகத்தை காட்சி மாற்றத்தினூடே கண்காணிப்பது?

வீசும் காற்று பலம் பெற தொடங்கியிருந்தது. பலத்த ஓசையுடன் ஜன்னல் கதவுகள் மூடித் திறப்பதும் சாலையில் ஓடும் வாகனங்களின் சப்தமும் ஒன்றாகக் கேட்டன. செய்தி சேனலின் கீழ் போட்ட ப்ளாஷ் நியூசில் புயல் சின்னம் உருவாகி மையம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார்கள். இதே போல கடந்தமுறை இப்படியான ஒரு புயல்சின்னம் உருவாகி கரையைக் கடந்த சமயம் ஜெனாலீனாவிற்காக இதே சாலை முடியும் இடத்திலுள்ள ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். எதற்கும் பின்வாங்காத சென்னைவாசிகள் அப்போதும் ரயிலுக்கு காத்திருப்பதற்காகவே பிறந்தவர்கள் போன்று நின்றிருந்தனர். மதுரை ஜனங்களுக்கு கோவிலும் சினிமா தியேட்டரும் போல இங்கிருப்பவர்களுக்கு ரயிலும் சில தெருக்களும்.

ஜெனாலீனா அன்று மஞ்சள் புடவையில் நீலம் மற்றும் ஊதாநிற பூக்களைக் கொண்ட சேலையை உடுத்தியிருந்தாள். பார்ப்பதற்கு மிக அழகாய் இருந்தவளிடம் பேசுவதற்கு மனமே இல்லை. வார்த்தைகள் அர்த்தமற்று போகின்ற கணங்கள் அவை. அப்படியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவளுடன் அன்று ராஜ்குமார் வந்திருப்பதை பிறகுதான் கவனித்தேன். அவனை ஏற்கனவே ஸ்பென்சரில் வைத்து அறிமுகம் செய்திருக்கிறாள். அவனது குதிரை உயரம் என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. ஸ்பென்சரில் பார்த்ததைவிட இன்று கூடுதல் உயரமாக அவன் இருப்பது மாதிரி தோன்றியது.

ராஜ்குமார் என்னருகே நிற்காமல் பிளாட்பாரம் அருகே இருந்த புத்தகக்கடைக்குச் சென்று நின்றுகொண்டான். அவனது விலகல் எனக்குள் சிறிது நிம்மதியின்மையை தோற்றுவித்தது. ஜெனாலீனா என்னிடம் தனது காதலை துண்டித்துக்கொள்வதாய்ச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பை துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. அவன் முன்னால் ஜெனாலீனாவை அலட்சியப் படுத்தினால் எனக்கு சாதமாக அமையுமென பேசாமல் எழுந்து வந்து கடற்கரைக்குச் செல்லும் ரயிலில் ஏறினேன். இப்போது நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. அவள் அதற்குப்பிற்கு என்னுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளவில்லை. ஆனால் வழக்கமாக நாங்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களிலெல்லாம் அவளுடன் ராஜ்குமாரையும் பார்க்க முடிந்தது. ராஜ்குமார் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவனது கண்களில் தெரிந்த கிண்டலும் கேலிச் சிரிப்பும் என்னை அறையிலேயே முடங்கி கிடக்கச் செய்தது.

என் அறையின் கீழே இருந்த கடைகள் திறக்கத் தொடங்கின. தேநீருக்கும் காபிக்கும் பன்களையும் வட்ட பிஸ்கட்டுகளைத் தொட்டுத் தின்ன நபர்கள் கூடியிருந்தனர். எனக்கான தேநீரும் சிகரெட்டும் காத்துக் கொண்டிருந்தது என்ற எண்ணம் தோன்றியதால் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு கீழே சென்றேன். சாலையில் சித்தாள் பெண்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் வராத பேருந்தைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த கூடைகளில் தண்ணீர் பாட்டிலும் தூக்குவாளியும் இருந்தன. அவர்களை கடந்தபோது குழம்பின் வாசனை அடித்தது. கருவாட்டுக் குழம்பாக இருக்கலாம். உடல்கள் மெலிந்து போய் காணப்பட்டது துயர் தருவதாய் இருந்தது.

டீக்கடையில் இருந்த மூன்று கால் பிளாஸ்டிக் வட்ட ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டேன். நான் கேட்காமலே கடைக்காரர் டீயும் ஒரு கோல்டு பிளாக் சிகரெட்டும் என்னருகே வைத்துவிட்டுச் சென்றார். கடை முழுக்க சிகரெட் புகைதான். புகை சங்கமம். மனிதசேகரம். காற்று அதிகமாக வீசியது. செய்தித்தாள்கள் பறந்தன. கடையில் தொங்கிய போஸ்டர்கள் கிழிந்து விழுந்தன. தேநீர் குடித்து முடித்தபோது மழை பெய்யத் தொடங்கியது. சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் தயங்கி நின்று கடையின் ஓரத்தில் ஒதுங்கத் தொடங்கினர். நான் அவசரமாக சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். ஜன்னல் வழியாக பார்த்தபோது எதிரேயிருந்த கடைகளின் தகர கொட்டகை தனியாக பிய்ந்து காற்றில் இரண்டு மூன்று அடிக்குப் பறந்து விழுந்தது.. தகரத்தின் கூர்மையும் அதன் பளபளப்பும் என்னிருப்பிடத்திலிருந்தே மரணத்தின் பயத்தை வரவழைத்தது. அதைப் போக்க மீண்டும் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து கொண்டேன். காலை ஏழு மணியைக் கடந்திருந்தது. காலைத் தென்றலில் எவ்வித கவலையுமின்றி காதலர்கள் இயற்கையோடும் தங்களது கோரஸ் குழுக்களோடும் ஆடிப் பாடிக்கொண்டிருந்தனர். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். எனது அலுவலகத்திற்கு சென்று வரலாமா அல்லது செல்போனில் விடுப்பு சொல்லிவிடலாமா என்று யோசித்தபடி இருந்தேன். செய்தி சேனலுக்கு மாற்றினேன். புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே.

எனது செல்போனில் கிளை அலுவலக மேலாளர் தொடர்பு கொண்டார். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து மேலாளர் இரண்டு அல்லது மூன்று தடவை மட்டும் செல்போனில் பேசியுள்ளார். அவர் பேசுவது முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலவே இருக்கும். ரிங்டோனில் இருந்த ‘கத்தாழைக் கண்ணாலே’ என்ற பாடலின் முதல்வரி முடியும் முன்பே எடுத்துவிட்டேன்.

“ஆபிசுக்கு கிளம்பிட்டீங்களா வாசு’’

“சார் ’’

“ஆபிசுக்கு சீக்கிரமா வாங்க, நம்ம ஏரியாவில வாட்டர் புகுந்துச்சு.. முத்துகுமார் லீவு.. நீங்களும் ஷர்மிளாவும்தான் மேனேஜ் பண்ணனும் கம் குவிக்’’

“சார் இன்னிக்கு லீவு எடுத்துகலாம்னு இருக்கேன்’’

“யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க, அதெல்லாம் முடியாது, கம் குவிக்”

“சார்”

“நோ ஆர்க்கியூமெண்ட். கம் குவிக், அதர்வைஸ் ஐ வில் டேக் சிவியர் ஆக்ஷன்”

“எஸ் சார் ஐ ஆம் கம்மிங்”

செல்போனைத் தூக்கி எறிய வேண்டும் போலிருந்தது. இந்த செல்போனும் கம்பெனி கொடுத்ததுதான். இதே போனில்தான் ஒரு முறை தற்காலிக வேலை நிறுத்தமும் தந்தார்கள். கிளை மேலாளர் போன் செய்து பேசியபோது சினிமா தியேட்டரில் இருந்தேன். அலுவலக நேரம்தான், தவறில்லை. எல்லா அட்வைசர்களும் மனநிலையை சரிசெய்து கொள்ள செய்யும் செயல்தான். தியேட்டரை விட்டு வெளியே வந்து கேண்டீன் முன் நின்றபடி பாலிஸி பற்றி வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிப்பதாக சொன்னேன். பொய்யை சரியாக சொல்லவில்லை. வாடிக்கையாளரின் பெயரைச் சொல்லியதில்தான் தப்பாகி போனது. நான் சொன்ன வாடிக்கையாளர் அன்று அவரது டேபிள் முன்னிருக்கையிலேயே உட்கார்ந்திருந்தார்.

அடுத்த சில நொடிகளில் செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தற்காலிக வேலை நீக்க உத்தரவு வந்து விழுந்தது. மூன்று தினங்கள் அலுவலகத்திற்குள் நுழையவே விடவில்லை. அதற்குபின் அலுவலகத்திற்குள் போனபோது கிண்டல் தொனிக்க பக்கத்து சீட் சர்மிளா சிரித்தபடியே இருந்தாள்.

சர்மிளாவும் சாரதியும் காதலிக்கிறார்கள். வேலைக்கு சேர்ந்த புதிதில் சாரதி அவளை காதலிப்பதாக சொல்லி விட்டான். சர்மிளாவுடன் பேசுவதில் எனக்கு கூச்சமிருந்தது. சாரதியின் முன்பே பலமுறை என்னிடம் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் வழக்கமாயிருந்தது. எனக்கு கூச்சத்தை வரவழைத்த போதும் பொறாமையாகவும் இருந்தது. சர்மிளா எனக்கு காதலிப்பதற்கு முன் மாதிரியாக இருந்தாள் என்று சொல்லலாம். அவளிடம்தான் முதலில் ஜெனாலீனாவின் உடனான காதலைச் சொன்னேன். அவள் நிராகரித்ததையும் சர்மிளாவிடம்தான் சொன்னேன். இரண்டு நிலையிலும் சர்மிளா ஒரே விதமான முகபாவத்தைதான் காட்டினாள்.

சாலையில் வெள்ளம் ஓடியது. நீர் சூழ்ந்த பகுதிகளில் எனது ஏரியாவையும் டிவியில் காட்டிக் கொண்டிருந்தனர். சர்மிளாவுக்கு போன் செய்து பேசவேண்டுமென அழைப்பு விடுத்தேன். “சுவிட்ச் ஆப்’’ செய்திருப்பதாக மறுமுனையில் பதில் வந்தது. குளித்து முடித்துவிட்டு வந்தபோது புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. உடை மாற்றிக்கொண்டு அறையை பூட்டி விட்டு வெளியே வந்த போது இந்த மழையில் எங்கு போய் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. பேருந்தை தவிர போவதற்கு வேறு வழியில்லை. டூவீலர் சூழ்ந்திருக்கும் தண்ணீரில் அரைப் பர்லாங்கு தூரம் கூடத் தாங்காது. பின்னர் அதையும் சேர்த்து தள்ளவேண்டும். படிகளில் கீழிறங்கி வந்தேன். செல்போன் ஒலித்தது. இந்த முறை புதிய எண்ணில் இருந்து சர்மிளா பேசினாள். சர்மிளாவிடமும் மேலாளர் ஆபீஸ் கிளம்பி வரச் சொல்லியிருக்கிறார்.

“கண்டிப்பாக போக வேண்டுமா” என்று என்னிடம் கேட்டாள்.

‘நான் என்ன கிளை மேலாளரா’ என அவளிடம் கேட்டேன்.

அவளது குரல் அழுவது போலிருந்தது. பிறகு பேசிக் கொண்டே அழுதே விட்டாள். சாரதி நேற்றுக் காலையிலிருந்தே சந்திக்கவில்லை என்றும் இரவு போன் செய்த போதும் அவன் எடுக்கவில்லை என்று கூறினாள். இந்த மழையில் எங்காவது சிக்கிக் கொண்டிருப்பான் என்றேன். அவனுக்கு என் மீதுள்ள ஈர்ப்பு கொஞ்ச நாளாகவே குறைந்து விட்டது என்று கூறி மீண்டும் அழத்தொடங்கினாள். அவளை என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை.

எனது வீட்டிற்கு வரமுடியுமா என்றாள் பதட்டமடைந்தவளாக. சரி என ஒத்துக்கொண்டேன். சாலை முழுக்க ஓடும் நீரைக் கிழித்துக்கொண்டு ஒன்றிரண்டு ஆட்டோக்கள் சென்று கொண்டிருந்தது. ஒன்றில் கை காட்டி ஏறிக் கொண்டு அவளது வீட்டின் முனையில் இறங்கிக் கொண்டேன். ஆட்டோக்காரன் இரண்டு மடங்கு ரூபாய் வாங்கினான். அவளது வீடும் மாடியில்தான் இருந்தது. முக்கால்வாசி எனது உடை மழையில் நனைந்து போய் இருந்தது. வீட்டில் அவளைத் தவிர யாருமில்லை. தனிமை ஒரு நிழலைப் போல அவளை தொடந்திருக்க வேண்டும். மாற்றிக் கொள்ள டீசர்ட்டும் பேண்டும் டவலும் கொடுத்தாள். சாரதிக்கு கொடுக்க எப்போதோ எடுத்திருப்பாள் போல. மாற்றிக் கொள்ளும் போது என்னையே கண் எடுக்காமல் பார்த்தவள் எதிர்பார்க்காதவாறு என்னை நெருங்கி அணைத்துக் கொண்டாள். வெளியே பெய்த மழையின் ஓசை குறைந்தபடியே இருந்தது.

- விஜயமகேந்திரன்

Pin It