முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், திடீரென்று இந்திய ஒன்றிய அரசு, ஒரு குழுவை நியமித்திருக்கிறது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலச் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக அந்தக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலேயே, இந்த நோக்கத்திற்காக சுதர்சன நாச்சியப்பன், எம்.பி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட வேறு இரண்டு குழுக்களும், நடைமுறையில் இப்படி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டன. சட்ட ஆணையமும் அதற்கான சாத்தியத்தை மறுத்து விட்டது. ஆனால் மறுபடியும் அதே வேலையில் இப்போது பாஜக அரசு இறங்கியுள்ளது.

இதற்காகவே அவசர அவசரமாக, வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்பட இருக்கிறது என்னும் செய்தி அல்லது வதந்தி நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. பொதுமைக் குடிச்சட்டம் (uniform civil code) என்பதை கொண்டு வரப்போகிறார்கள் என்றும், வரும் டிசம்பர் மாதமே தேர்தல் வந்துவிடக் கூடும் என்றும் பல்வேறு செய்திகள் உலாவுகின்றன.india meet at mumbaiஏன் இந்தத் திடீர் அறிவிப்பு? மும்பையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்தியா கூட்டணியை கண்டு மிரண்டு போயிருக்கும் பாஜக, இப்படி ஒரு திசை திருப்பும் வேலையைத் தொடங்கியிருக்கலாம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து, இரண்டு கோணங்களில் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது ஒன்று. இதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பது இரண்டாவது!

நடைமுறையில் இதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைத்தான் முந்தைய குழுக்கள் தெரிவித்தன. இப்படித் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்குத் தனிப் பெரும்பான்மை போதுமானதில்லை. நாடாளுமன்றம், மாநிலங்களவை இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால்தான் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முடியும். இன்றைக்கு இருக்கும் ஆளும் கட்சிக்கு, மாநிலங்களவையில் அப்படி ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

அதுமட்டுமின்றி, தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குப் போதுமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) அத்தனை எண்ணிக்கையில் இல்லவே இல்லை!

இவை இரண்டையும் நிறைவு செய்து விட்டாலும், இன்னும் பல கேள்விகள் மிச்சப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வரும் வேளையில், நாடாளுமன்றத்திற்கோ, சில சட்டமன்றங்களுக்கோ போதுமான பெரும்பான்மை இன்றி அமைந்து விட்டால், அந்தத் தொங்கு பாராளுமன்றங்களை என்ன செய்வது? இடையில் ஒரு ஆட்சி கவிழ்ந்து போய் விடுமானால், அப்போது என்ன செய்வது? இந்த இரண்டு தருணங்களிலும் நாடு முழுவதும் மறுபடியும் தேர்தல்களை நடத்திக் கொண்டிருப்பதா?

இது குறித்து எல்லாம், எந்தக் கவலையும் இல்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் என்ன பொருள் இருக்கிறது? இது ஒற்றை முழக்கம் அன்று! இதன் தொடர்ச்சி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று நீளும்! எய்ம்ஸ் மருத்துவமனை என்றால் கூட ஒரே செங்கல் என்பது தானே, அவர்களின் இயல்பாக இருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்

Pin It