பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்ததை விட, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்ததே அதிகம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராகப் பணி செய்ததைவிட, அரசியல்வாதியாக, மதவாதியாக, சனாதனவாதியாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதுதான் அதிகம்.

சனாதனம் வேண்டும் என்பார். மனுஸ்மிருதியைத் தூக்கிப் பிடிப்பார். புதிய கல்விக் கொள்கையே வளர்ச்சியைக் கொடுக்கும் என்பார். திராவிடத்தைப் பழிப்பார். இந்துத்துவாவைத் தாங்கிப் பிடிப்பார். மாநில அரசின் மசோதாக்களைக் கிடப்பில் போடுவார். அரசோடு ஒத்துழைக்க மாட்டார். சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்நிலையில் 04-10-2023 அன்று காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் நந்தனார் குருபூஜையில் நூறு ஆதிதிராவிடர்களுக்குப் பூணூல் அணிவிக்கப் போய்விட்டார்.

எதற்குப் பூணூல்? அது சமத்துவத்தைக் காட்டுகிறதாம். சொல்கிறார் ஆளுநர். 97 சதவீதம் பூணூல் போடுவதை விட, 3 சதவீதம் அதைக் கழற்றி விட்டாலே போதும். சமத்துவம் ஆகிவிடுமே?

சமத்துவம் பூணூலில் இல்லை. அது சமூக நீதியில் இருக்கிறது.

பூணூல் இரண்டு நிலைகளில் அணிவிக்கப் படுவதாகப் பேரறிஞர் அம்பேத்கர் ‘சூத்திரர் யார்? என்ற ஆய்வு நூலில் சொல்கிறார்.

ஒன்று, கோத்திரம் தொடர்பாக தந்தையை முன்வைத்துச் செய்யும் பூணூல் ‘சடங்கு’. இரண்டாவது ‘உபநயணம்’ என்று இரு பிறப்பாளர் என்ற அவர்களின் கொள்கையை நிறுவுவது.

இந்த இரண்டில் நந்தனார் குருபூஜையில் ஆளுநர் பார்வையில் நடந்த பூணூல் வைபவம் எதைக் குறித்தது என்று சொல்ல முடியுமா?

இந்திய அரசியல் சாசனத்தின்படி செயல்படுவதை விட்டுவிட்டு, அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

அமைதிச் சோலையாக இருக்கும் தமிழ்நாட்டில் சாதிய, பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்கள் அவர் கண்களுக்குத் தெரியாமல் போனதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் - பிரதமருக்கும் தெரியவில்லை, ஆளுநருக்கும் தெரிவில்லை. பம்பரம் சுழன்று ஆடுகிறது, ஆடிக்கொண்டே இருக்காது. வேகம் குறைந்தவுடன் வீழும்.

இன்னும் சில மாதங்கள்தான். பம்பரங்கள் வீழும், வீழ்த்துவர் மக்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It