அண்மையில் குஜராத்தில் நடைபெற்றுள்ள ஒரு நிகழ்வு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

தசரா விழாவின் போது சிலர் கற்களை எறிந்து கலவரம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு. உடனடியாக அந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களைச் சிலர் பிடித்துக் கம்பத்தில் கட்டி வைக்கின்றனர். பிறகு பொதுமக்கள் முன்னிலையில் அந்த இளைஞர்களைக் கடுமையாகத் தடி கொண்டு தாக்குகின்றனர். இந்தக் காணொளிக் காட்சி இப்போது நாடெங்கும் விரைந்து பரவிக் கொண்டிருக்கிறது.

hindutva attack on muslimsவிசாரணையின் போது அந்த இளைஞர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், தாக்கியவர்கள் காவல்துறையினரும், ஒரு மதவெறி இயக்கத்தினரும் என்பதும் தெரிய வருகிறது. இதுவரை இந்தியாவில் இப்படி நடந்தது இல்லை. அவர்கள் கலவரம் செய்திருந்தாலும் அதை விசாரித்து நீதிமன்றத்தில்தானே அவர்களைக் கொண்டு போய் நிறுத்தியிருக்க வேண்டும்? தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்குத்தானே உள்ளது?

எந்த விசாரணையும் இல்லை, எந்த நீதிமன்றமும் இல்லை, தெருவில் மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்படுகிறது என்றால், இது என்ன நியாயம்? நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இதுதான் ராமராஜ்யமா என்று கேட்கத் தோன்றுகிறது.

இப்படி ஒரு காட்டு தர்பாரை நோக்கி நாட்டில் நிர்வாகம் சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனை தருவதாக இருக்கிறது. இன்று குஜராத், நாளை எந்த மாநிலமாகவும் இருக்கலாம்.

தமிழ்நாட்டிலும் கூட ஓர் அதிர்ச்சியான செயல் நடைபெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முருகன் என்னும் ஒரு காவலர் தன் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர் மேல் அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றும், முன் அனுமதி இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு. அதனால் அவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை எதிர்த்துத்தான் அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மதி, கர்மா அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளார் சஞ்சித கர்மா, பிராப்த கர்மா என இரண்டு விதமான கர்மாக்கள் உள்ளன என்றும், பிராப்த கர்மாவின் அடிப்படையில் அவர் ஏற்கனவே தண்டனை பெற்றுவிட்டார் என்றும் கூறி அவருடைய இட மாற்றத்தை நீதிபதி ரத்து செய்துள்ளார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது என்று கண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் மத வெறியர்கள், காவல்துறை என்னும் பெயரில் தண்டனை வழங்குவதும், கர்மாவின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்குவதும் நாட்டின் சரிவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

ராம ராஜ்யத்தின் டிரைலரே இவ்வளவு மோசமானதாக இருந்தால், திரைப்படம் எவ்வளவு வன்கொடுமை உடையதாக இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது!

---------------------

சீமானின் திடீர்ப் பாசம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், சென்ற மாதம் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தன் உடல் நலம், வயது ஆகியனவற்றின் காரணமாகத் தான் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்றும், உறுப்பினராகத் தொடர்வேன் என்றும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

திமுகவில் ஏதேனும் சலசலப்பு வராதா, கலங்கிய குட்டையில் தான் ஏதேனும் மீன்பிடிக்க முடியாதா என்று காத்திருந்த சீமான் இப்போது ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பினர் சுப்பக்கா என்று அன்பாக அழைத்ததன் பொருள் இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறதாம். அப்படியே பாசம் பொங்கியெழ ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் வெளியில் வந்ததால் திமுகவிற்குத்தான் நட்டம். திமுக கைவிட்டாலும், உங்களை உங்கள் மகனாகிய நான் எப்போதும் கைவிட மாட்டேன். உங்களுக்குத் துணை இருப்பேன்” என்று கண்ணீர் மல்கக் கதறி அழுதிருக்கிறார்.

அடடா, எவ்வளவு பாசம்! இந்த மகன் இவ்வளவு நாள் எங்கிருந்தார்? புலிகள் சுப்பக்காவின் மீது வைத்திருந்த பாசம் இவ்வளவு நாள் இவருக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? எல்லாம் வேடம்!

திமுகவிற்குள் ஏதேனும் குழப்பம் விளைவித்தால் எஜமானர்களின் பாராட்டைப் பெற்றுவிடலாம் என்கிற நப்பாசை!

சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் புலிகளை ஆதரித்து, அதனால் தடா சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தவுடன், நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளித்தது திமுகழகம்தான். புலிகளை ஆதரித்தார் என்பதற்காக அவரைத் திமுக புறம் தள்ளவில்லை.

இப்போதும் அவருக்கு ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்குமானால், அதை அவர் கட்சித் தலைமையோடு பேசிச் சரி செய்து கொள்வார். சீமான் அவருக்காக மிகவும் கவலைப்பட்டுத் தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It