electric towerதமிழ்நாடு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்திய ஒன்றியம் முழுவதும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரிப் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்சார உற்பத்திக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்துப் பல மாநிலங்கள் பல மணிநேர மின்வெட்டை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. குறிப்பாகக் கொரோனா பாதிப்புக்குப் பின் பொருளாதார மீட்சியை நோக்கி பெரும்பாலானத் துறைகள் இயங்கத் தொடங்கிவிட்டன. உற்பத்தித் துறை உள்ளிட்டப் பல தொழில் துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதால் நாட்டில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. மேலும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழகத்தில் கனமழை காரணமாகக் கையிருப்பில் உள்ள நிலக்கரி விநியோகம் குறைந்து போனது. சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் நிலக்கரி இறக்குமதி 40% குறைந்து போய்விட்டது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேசச் சந்தையில் 1 டன் நிலக்கரி விலை 60 டாலராக இருந்தது. ஆனால் செப்டம்பர்- அக்டோபரில் 1 டன் நிலக்கரி விலை 160 டாலடராக உயர்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கி உள்ளது. எரிவாயு விலை அதிகரித்திருப்பதால் எரிவாயு மூலமான மின்உற்பத்திக் குறைந்துள்ளது. அணுமின் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்டக் காரணங்களுக்காக மூடப்பட்டதால் மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரிப் பற்றாக்குறைக் காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 135 அனல்மின் நிலையங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. நாட்டின் 16 அனல்மின்நிலையங்களில் நிலக்கரிக் கையிருப்பில் இல்லை; 45 அனல்மின் நிலையங்களில் நிலக்கரிக் கையிருப்பு ஓரிருநாட்களுக்கு மட்டுமே இருக்கிறது.

 பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் ஒருநாளைக்கு 3 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் நாள் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 14 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் 13 அனல்மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன. மேலும் மகாராஷ்டிராவிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உ.பி.யில் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்வது தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இவ்வாறாக நிலக்கரி விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ரூ.971 கோடி ரூபாய் செலவில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை, 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பிரதமரின் வீடு மட்டுமே 200 கோடிக்குக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறாக அரசுப் பணத்தை ,மக்களின் பணத்தை வீண் செலவு செய்கின்றனர். ஆனால் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு உரியத் தொகையை ஒதுக்கி நிவாரணம் காண முடியவில்லை .

600 அடி அகலம் கொண்ட 182 அடி உயரம் கொண்டச் சிலையைக் குஜராத் மாநில அரசு கட்டி வந்தது. இதுவே உலகின் உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலுக்குச் சுமார் 3,000 கோடி ரூபாய் செலவில் வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவுச் செலவுகளை வீணாகச் செய்யும் ஒன்றிய அரசு மின் தட்டுப்பாட்டுக்குத் தேவையானத் தொகையை ஒதுக்கத் தவறுகிறது.

மத்திய மின்சார வாரியத் தரவுகளின்படி இந்தியாவிலுள்ள 135 அனல் மின் நிலையங்களில் 115 அனல் மின் நிலையங்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே நிலக்கரிக் கையிருப்பு உள்ளது. இதில் 17 அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாள் மட்டுமே நிலக்கரிக் கையிருப்பு உள்ளது. 22 அனல் மின் நிலையங்களுக்கு 2 நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது.

தமிழகத்தில் சில நாட்களுக்குப் போதுமான நிலக்கரிக் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு மட்டும் அதிகபட்சமாக 5 நாட்கள் நிலக்கரிக் கையிருப்பு உள்ளது. மற்ற அனல் மின் நிலையங்களுக்கு ஐந்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே நிலக்கரிக் கையிருப்பு உள்ளது. ஒன்றிய அரசின் மின்சாரத் துறையானது மின்சாரத்திற்கானத் தேவை திடீரென அதிகரித்ததும், இந்தியாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் கடந்த செப்டம்பரில் பெய்த மழையும்தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான ஒன்றியஅரசு பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்வதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துகிறது. மாறாக மக்களின் அன்றாடத் தேவையான மின்சார உற்பத்தித் தடைபடுமானால், அதன் பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் போய் முடியும் என்பதுகூட அறியாத பிரதமராக இருக்கிறார் மோடி.

மக்களின் வாழ்க்கைக்கு எதிராக இருக்கும் ஆட்சி அதே மக்களின் கோபத்தாலும், வாக்குகளாலும் திருப்பிஅடித்து விரட்டும் சூழல் ஏற்படும், என்பதை மோடிக்கு மின்சாரமும் நிலக்கரியும் புரிய வைக்கும். அதற்கான காரணம் வந்து கொண்டு இருக்கிறது.

- முனைவர் பூ.மணிமாறன்

Pin It