தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளிப் பண்டிகையை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

தீபாவளி என்பது நமக்கு ஏற்புடைய பண்டிகை இல்லை. ஆனால், மக்கள் இன்னும் தீபாவளியை விட்டு வெளிவரவும் இல்லை. அந்த நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கும் அதை உற்பத்தி செய்பவர்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை மறுத்துவிட முடியாது.

நராகாசுரனைக் கொன்றதன் காரணமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாகப் பட்டாசுகள் வெடிக்கின்றனர் என்பது தவறுதான். இங்கே பட்டாசுகள் வெடிப்பது சரியா, தவறா, என்பதல்ல கேள்வி. அதன் விளைவு என்ன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதைச் சில மாநில அரசுகள் தடை செய்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம் காற்று மாசடைகிறது, சுற்றுச்சூழலுக்குப் பட்டாசு வெடிப்புகள் கேடாய் அமைகிறது என்பதுதான்.

சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பட்டாசுகளுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது.

சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டாசுத் தொழில் பெருமளவில் நடைபெறுகிறது. ஏறத்தாழ 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்கள் இதில் பணி புரிகிறார்கள். பட்டாசுத் தடை செய்யப்பட்டால் இவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

அது மட்டுமல்ல. சிறு குறு நடுத்தர தொழில்களைச் சார்ந்தே தமிழக அரசின் வளர்ச்சி மற்றும் அதன் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

இவைகளையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதைப் போல பட்டாசுத் தொழிலையே முற்றிலுமாக தடை செய்வது என்பது சரியான அணுகுமுறை அல்ல.

ஆகவே தீபாவளிப் பட்டாசுகளை வெடிப்பதற்கு சரியான நெறிமுறைகளை வகுப்பதும், பட்டாசுகள் தயாரிப்பதிலும் இது போன்ற நெறிமுறை வழிகாட்டுதலைச் சொல்வது அரசின் கடமை.

இதனைத் தமிழக முதல்வர் அவர்கள் பிற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக எழுதி இருக்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Pin It