ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதும், வருமானவரிச் சோதனைகள்  அதில் ஒரு பகுதியாக இருப்பதும் இந்தியாவில் புதிதன்று. ஆனாலும்,  ஒளிவு மறைவின்றியும், கொஞ்சம் கூடக் கூச்சமே இன்றியும் இப்படி நடந்ததாக இதுவரையில் இல்லை.

சசிகலா, தினகரன் குழுவினர் ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது இங்கு அனைவரும் அறிந்த உண்மை. அதன் பயனாகவே, இன்று சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். தினகரன் மீதும் பல வழக்குகள் உள்ளன. ஆனால் இவற்றிற்கெல்லாம் மூல காரணம் யார்? யாருடைய நிழலில் இருந்துகொண்டு இவர்கள் இந்தத் தவறுகளைச் செய்தார்கள் என்பது மத்திய அரசு உட்பட எவருக்குமே தெரியாதா?

அனைத்து  ஊழல்களுக்கும்  காரணமாக இருந்த ஜெயலலிதாவை, மோடியும், பாஜக வும் கொண்டாடினர். 2015 ஆகஸ்ட் முதல் வாரம், சென்னையில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி, நேராக ஜெயலில்தா இல்லம் சென்று மதிய  விருந்துண்டாரே, அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் மீது எந்த ஒரு சந்தேக நிழலும் படியவே இல்லையா?

தேவையென்றால் அல்லது வேண்டியவரென்றால் வீட்டுக்குப் பிரதமர் வருவார். வேண்டாதவர் என்றால், வீட்டுக்கு வருமானவரித் துறை வருமா?

இன்றைய முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மீதெல்லாம் வருமானவரித்  துறைக்கு எந்த சந்தேகமுமே இல்லையா?அவர்களிடம் உள்ள ஒவ்வொரு காசும் உழைத்து உழைத்துச் சேர்த்த காசா? ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, அன்றைய தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும். வீட்டிலும் நடந்த வருமானவரிச் சோதனைகள் என்னாயின? அவரிடமும், சேகர் ரெட்டியிடமும் கட்டுக் கட்டாக புதிய 2000 ரூபாய்த் தாள்கள் கைப்பற்றப்பட்டனவே, அவை அவர்களுக்கு எப்படி வந்தன? எங்கிருந்து வந்தன? ஏதேனும் விசாரணை உண்டா? கரூர் அன்புநாதன் என்ன ஆனார்? அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின் முடிவு பற்றி ஏன் எந்த அறிவிப்பும் இல்லை? ஒருவேளை, இவர்களில் யாராவது  தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தால் அந்த அறிவிப்புகளும், அவற்றின் மீதான நடவடிக்கைகளும் வெளிவருமோ என்னவோ!

இவை எல்லாம் ஒருபுறமிருக்க, தினகரன் வீட்டில் நடந்த சோதனை, வேடிக்கையான ஒரு பக்க விளைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர்,  “இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும், ஊடகங்களிடம் சிரித்துக்கொண்டும், துணிவாகவும் தினகரன் பேட்டி கொடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது” என்றார்.

பாஜக அரசு மிகவும் பாடுபட்டு, தினகரனை ஒரு ‘ஹீரோவாக’ ஆக்கிக் கொண்டிருக்கிறது!

டி.டி.வி.தினகரன் மிகவும் நேர்மையானவர் என்பதோ, முற்போக்காளர் என்பதோ நம் கருத்து இல்லை. சோதனை நடந்த வேளையில் கூட அவர் வீட்டில் கோமாதா பூஜைதான் நடந்துகொண்டு இருந்தது.  எனவே அவரை நாம் ஆதரிக்க வேண்டிய தேவையில்லை ஆனால் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடைபெறுவதாக நம்பப்படும் ஒரு நடவடிக்கையை எதிர்ப்பதே ஜனநாயகம் ஆகும். அந்த வகையில் தினகரன் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையைக் கண்டிப்பாக எதிர்த்தே தீரவேண்டும்.   

Pin It