ஒரு மாபெரும் இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அதன் அடிநாதமாக விளங்கக் கூடிய கொள்கைகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருப்பது அவசியம்.

அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரின் மாநில உரிமைக்கான மேற்கொள்களைச் சுட்டிக் காட்டி அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளைத் திருத்தவோ, அடிப்படைப் பண்புகளைச் சிதைக்கவோ கூடாது எனப் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில உரிமைகள் கேள்விக்குள்ளாகும் இவ்வேளையில், மாநில சுயாட்சி அதிகாரத்துடன் திகழ கலைஞர் அமைத்த இராசமன்னார் குழு அளித்த பரிந்துரைகளை நினைவூட்டியது பொதுக்குழு.

stalin duraimurugan trbaluநாட்டை 200 கூறுகளாகப் (ஜன்பத்) பிரித்து ஒரு கூட்டுக்குள் வைத்து நிர்வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்.--இன் சூழ்ச்சிக்கு அடிபணியாது இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமெனப் பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு சாமானியனின் பார்வையில் இதெல்லாம் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் அந்த சாமானியனின் பாதுகாவலனாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் இதைத் தக்க சமயத்தில் கையிலெடுத்து இந்திய அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக முதன்முதலாக எச்சரித்திருப்பது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, ஒரு சாமானியனின் பார்வையில் நன்றிக்குரியது. திமுக அணிந்திருப்பது ஈரோட்டுக் கண்ணாடியல்லவா? அந்தத் தொலைநோக்குப் பார்வை எப்படி இல்லாமல் இருக்கும்?

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவதைத் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக் காண முடிகிறது. மொழிக்காக இன்னுயிர் ஈந்த ஈகியர்கள் கனவை நனவாக்கும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் அமைய வேண்டியது அவசியம். இருந்தாலும் ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகத்தில், வங்காளத்திலும் தற்போது மொழியுணர்வு எழுச்சி அடைந்துள்ளது. அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்திய பொதுக்குழுவின் தீர்மானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இன்னும் எழுச்சி கண்டால் நம் கனவு நினைவாகும் காலம் தொலைவில் இல்லை.

'We believe in ballot, rather than bullet' என்றார் அண்ணா. அத்துனை மேன்மை வாய்ந்த ஜனநாயகம் இன்னும் மேன்மையடையத் தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் தேவை. அரசியல் கட்சிகள் தாம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறையிலான பிரதிநிதித்துவம் தேவையென திமுகவின் பொதுக்குழு வலியுறுத்துவது இன்று ஜனநாயக தேர்தல் முறைகளில் நிலவும் ஓட்டைகளை நிரப்பும். அதுவே காலத்தின் கட்டாயமும் கூட.

தலைவர் தளபதி அவர்களின் சிறப்புத் தீர்மானம் தவிர்த்து 20 தீர்மானங்கள் மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து வரும் அதிமுகவின் தமிழர் விரோத நிலைப்பாட்டையும், இரட்டை வேடத்தையும் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது. இந்தித் திணிப்பு, ஜி.எஸ்.டி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், முத்தலாக் மசோதா என அனைத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே அதனை முழுவீச்சில் ஆதரித்துச் செயல்படுத்துவது என்பதை பாஜக முதலாளிகள் போட்ட எலும்புத் துண்டுகளுக்குக் காட்டும் விசுவாசமாக எண்ணி வாழும் அதிமுகவின் போக்கைப் பொதுக்குழு கண்டிக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை, தொழில்துறை என அனைத்துத் துறைகளையும் ஊழலில் திளைக்கவிட்டுள்ள அமைச்சர் பெருமக்கள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்து வைத்திருக்கும் துணை முதல்வர் என அனைவரும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் இரட்டையர்களுக்கு வாழ்நாள் அடிமைகளாகத் தங்களை வரித்துக் கொண்டுள்ளனர்.

இந்த அடிமைகள் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளைக் காவிக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மாநில உரிமைகளைக் காப்போம் என ஒப்புக்குக் கூவுகிற கபட வேட நிலைப்பாட்டைச் சரியான தருணத்தில் கண்டித்துள்ளது திமுக-வின் பொதுக்குழு.

இறுதியாக, தனது தலையாய கொள்கையென முன்னிறுத்தி சமூக நீதிக்கான அடுத்த கால்கோளை நடும் விதமாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் நம் நூற்றாண்டு காலக் கனவை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே நடப்பில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வரைமுறைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை. அதைப் பின்பற்றி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதனைச் சுட்டிக் காட்டியதோடு இட ஒதுக்கீட்டின் பலனான சமூக நீதி முழுமையடைய பிற்படுத்தப்பட்டோருக்காக உள்ள 27 சதவிகித ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி அந்த வகுப்பினருக்கு நீதி வழங்கிடப் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

'பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்' என்ற மத்திய அரசின் சூழ்ச்சியைக் கண்டித்ததோடு அந்த வரையறையைத் திரும்பப் பெற வலியுறுத்தியது பொதுக்குழு. நியாயமாகச் செய்ய வேண்டுமெனில் அரசுத் துறைகள் மட்டுமன்றி, தனியார் துறைகளிலும் 100 சதவிகிதம் அனைத்து மக்களையும் இட ஒதுக்கீடு கொள்கை வரையறைக்குள் கொண்டு வந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கச் செய்வதே சமூகத்தின் சமமான சரிவிகித வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் சமூக, அரசியல், தளங்களில் விவாதிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வருமெனில் தமிழகம் இன்னும் ஒரு படி மேல் எழும்பும் என்ற நம்பிக்கை துளிர்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி என்பது இந்தியாவில் வேறு எங்கும் கிடைத்திராத வெற்றி. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையினர் மற்றும் சமூக நலன் பேணும் மக்களின் உண்மைப் பிரதிநிதிகளாக மக்களவைக்குச் சென்றுள்ளவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 38 உறுப்பினர்கள் மட்டுமே என நாம் மார்தட்டிச் சொல்லலாம்.

அவ்வாறு பெரும் வெற்றிக்குப் பின் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டமாயினும் தலைவர் தளபதி ஆர்ப்பரிக்கவில்லை. அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், பக்குவப்பட்ட, பணிவு நிரம்பிய, பெருந்தன்மை வாய்ந்த தலைவராக அவர் திகழ்கிறார். ஆயிரம் வசையம்புகள் அவரை நோக்கி வந்தாலும் அவர் மக்களை நோக்கி எப்போதும் வருகிறார். அவர் பண்பைப் போற்றி அவர் பின்னால் அணிவகுப்பதே தமிழர்களான நமது கடமை.

Pin It