மோடியின் பொய்யுரைகளைக் கேட்டுக்கேட்டு மக்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர்: என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

modi 361இப்படி ராகுல் மட்டுமல்ல, நெட்டிசன்கள் அனைவரும் கழுவி ஊற்றும் அளவிற்கு மோடி கூறிய பொய்களும், அதன் உண்மைத்தன்மையும்:

குஜராத் மாநிலம் வாத்நகர் ரயில்வே நிலையத்தில் தன்னுடைய 7 வயதில் (அதாவது 1957 ஆம் ஆண்டில்)  டீ விற்றதாகப் பிரதமர் மோடி பல நிகழ்ச்சிகளில் பெருமிதத்தோடு கூறியிருக்கிறார். ஆனால் உண்மை என்னவெனில் வாத்நகர் இரயில் நிலையம் அமைக்கப்பட்டதே 1973 ஆம் ஆண்டுதான்.

இல்லாத இரயில் நிலையத்தில் இவர் யாருக்கு டீ விற்றார் என்பதுதான் புரியாத புதிர்.

இது குறித்து வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா ஊடகங்களில் பேசுகையில், “பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது. நான் அவருக்கு 43 ஆண்டுகால நண்பர். மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கே மோடி அப்படிக் கூறினார்” என்றார்.

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய பிரதமர் மோடி" 1948-ம் ஆண்டு ராணுவத் தளபதி திம்மையாவையும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனனையும் பிரதமராக இருந்த நேரு அவமானப்படுத்தினார் " எனக் கூறினார்

ஆனால் அரசு ஆவணங்கள் கூறும் செய்தி:1956-இல் துறை இல்லாத அமைச்சராக இருந்த விகே மேனனை 1957 இல்தான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்தார் நேரு. ஜெனரல் திம்மையாவோ ராணுவ தளபதியாக 1957 முதல் 1961 வரை பதவி வகித்தார்.

இரு வேறு பதவிகளில் இல்லாத இருவரை நேரு அவமானப்படுத்தினார் என மோடி கூறியது வரலாற்றின் பக்கங்களில் வடிகட்டிய பொய்தானே.

அண்மையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் விரம்கம் என்ற இடத்தில் 1988-ம் ஆண்டு நடந்த அத்வானி பங்கேற்ற பேரணியை டிஜிட்டல் கேமராவில் படமெடுத்து டெல்லியில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு இ-மெயில் அனுப்பி வைத்ததாகவும் அடுத்த நாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் வண்ணத்தில் வெளியாகியிருந்த படங்களைப் பார்த்து அத்வானி வியந்து போனாதாகவும் கூறியிருந்தார்.

இதில் வியப்பு என்னவெனில் 1990 ஆம் ஆண்டு தான் டிஜிட்டல் கேமராக்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. மேலும் 1995-ஆம் ஆண்டு தான் இன்டர்நெட் எனப்படும் இணைய வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் மின் வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கும் மின் வசதி ஏற்படுத்தி இதுவரை இருந்த அரசுகள் செய்யாத சாதனையை  மோடியாகிய தானே செய்ததாகத் தம்பட்டம் அடித்ததோடு மட்டுமின்றி நாக்லா ஃபடேலா கிராம மக்கள் சுதந்திர தின விழாவை முதன்முறையாகத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல் படம் ஒன்றையும் பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் வெளியிட்டது.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில்  இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும்  டுவிட்டரில் வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதைக் கிராம மக்கள் உறுதி செய்தனர் என்றும் கூறியுள்ளது.

இவற்றையெல்லாம் விட அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற அறிவியல் மாநாட்டில் “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்திருக்கிறது. பிள்ளையாரைப் பாருங்கள் மனித உடலோடு யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால்தான் இது நடந்திருக்கிறது” என்று அடித்து விட்டதெல்லாம் வேற லெவல்.

இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் வரலாறு எனப் பொய் பேசித் திரியும் பிரதமர் மோடியின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொய்யுரைகளையும், உளறல்களையும் தொகுத்து Bluff Master Modi என்ற பெயரில் வலம் வருகின்றன சமூக வலைத்தளங்கள்.

ஒரு வேளை,

         பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

         புலவர் பெருமானே -

என எழுதிய கவிஞன் இன்றிருந்திருந்தால்

         பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

         பிரதமர் பெருமானே -

         உம்மைப் புரிந்து கொண்டோம்

         உண்மை தெரிந்து கொண்டோம்

என்று பாடியிருப்பான்.

Pin It