வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தாமிர உருக்காலையை நடத்தி வருகிறது. அது தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் அந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளையும், நோய்களையும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மக்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நடத்திக்கொண்டிருந்தது.

பாஜக அரசு பதவியேற்றதும் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சுற்றுச் சூழல் குறித்த சட்டத்தில் புதிய விளக்கமொன்றைக் கொடுத்தது. “14.09.2006 க்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்ட தொழிற்பேட்டை / தொழிற் பூங்கா ஆகியவற்றில் தொடங்கப்படும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் புதிதாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என அந்த விளக்கத்தில் பாஜக அரசு கூறியது (O.M.No.J-11013/36/2014-IA-I dated 10th December 2014) இதன்மூலம் அந்தத் தொழிற்பேட்டை / தொழிற்பூங்காவுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா என்பது முக்கியமில்லை என பாஜக அரசு ஆக்கியது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டவை என வாதிட்டு வந்தது.

பா.ஜ.க. அரசு அளித்த சட்டத்துக்கு முரணான விளக்கத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டு ரத்து செய்ததோடு மக்கள் கருத்தறியும் கூட்டம் கட்டாயம் என அறிவித்துவிட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டைய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட தமது கட்டுமானப் பணியைக் கட்டுப்படுத்தாது என ஸ்டெர்லைட் நிறுவனம் வாதிட்டது. அந்த வழக்கில்தான் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ஜ.க. அரசு இந்த அளவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக விளக்கத்தை அளித்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உதவ வேண்டியதன் தேவை என்ன என்ற கேள்வி எழலாம். 2013&-14ஆம் ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக அளவு நன்கொடை பெற்றதில் முதலிடம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க.வே இருக்கிறது. அக்கட்சி 1480 பேரிடம் 363 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 120 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. அப்படி மிக அதிகளவில் நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிசையில் ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றன என்பதை எல்லோருமே அறிவர். அதற்கான காரணம் அவை அள்ளிக்கொடுக்கும் நன்கொடைதான். இப்போதும்கூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்காத கட்சி பா.ஜ.க. மட்டும்தான்.

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ கிரிக்கெட் வீரர் விராத் கோலியோடு உடற்பயிற்சி செய்யும் சவாலில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு பற்றியோ ஸ்டெர்லைட் ஆலை பற்றியோ அவர் ஒரு வார்த்தையும் கூடப் பேசவில்லை.

அவர்களது மௌனமே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஏவப்பட்டிருக்கும் வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது.

Pin It