பெண்களைப் போகப் பொருளாகவும், அடிமைப் பொருளாகவும் வேதம் ஓதி வைத்திருக்கிறது மனுஷ்மிருதி.

இந்த வழியில் அடிபிறழாமல் நடப்பவர்தான் முன்னாள் நடிகர் எஸ்.வி.சேகர் என்பதை அவரது பேச்சும் செயலும் காட்டுகிறது.

பெண்கள் உயர் பதவியில் இருப்பதும், பதவி உயர்வு பெறுவதும் பாலியல் அடிப்படையில் என்று வெளிப்படையாகப் பேசிய சேகர் ஊடகவியலாளர்களைக் குறிவைத்தார்.

ஊடகக்காரர்கள் கொதித்தனர், வழக்குத் தொடுத்தனர். சேகர் குற்றவாளி என்றது உயர்நீதிமன்றம். முன்பிணை கேட்டார் சேகர். மறுத்தது நீதிமன்றம். ஆனாலும் அவரைக் கைது செய்யாமல் நடமாவிட்டுக் கொண்டிருக்கிறது காவல்துறை.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணனைக் கைது செய்ய நீதிமன்றம் ஆணையிட்ட போது, தனிப்படை அமைத்து வடமாநிலங்களிலும், தென்னகத்திலும் தேடித்தேடிக் கைது செய்தனர். (அவருடைய அண்ணியும் தலைமைச் செயலாளராக இருந்திருந்தால் கைது செய்திருப்பார்களா என்று தெரியவில்லை)

ஆனால் எஸ்.வி.சேகர் அப்படியா? அவரின் செல்வாக்குதான் என்ன? கண்முன் வந்து நின்றாலும் ‘அவாளைக்’ கைது செய்ய மாட்டார்கள் காவல்துறையினர், முடியாது அவர்களால்.

அண்மையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரும் அமைச்சரும் கலந்து கொண்டு சிரித்தார்கள், பேசினார்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 

கொதித்துவிட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். நான் என்ன டி.ஜி.பி.யா? சேகரை பிடித்துக் கொடுப்பதுதான் என் வேலையா என்று சொன்ன அவர். சேகரைச் சந்தித்ததை மட்டும் மறுக்க வில்லை.

ஒரு குற்றவாளியைக் கண்டால், பிடித்துக் கொடுப்பது நாட்டின் சாதாரணக் குடிமகனுடைய கடமை என்று காவல்துறை சொல்லும் நிலையில் -

ஒரு மத்திய அமைச்சர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்ட எஸ்.வி.சேகரைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்காமல் ‘நான் என்ன டி.ஜி.பி.யா?’ என்று பேசும் நிலையில், அது எத்தகைய பின் விளைவை ஏற்படுத்தும் என்பது அமைச்சருக்குத் தெரியாதா.

பொன்.ராதாகிஷ்ணனின் இந்த அணுகுமுறையும் பேச்சும் பிற பாலியல் குற்றவாளிக்கும் பொருந்துமா?

தமிழகத்தில் நேர்மையான காவல்துறை உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

இருந்தும் என்ன பயன்?

அவர்களால் குற்றவாளி எஸ்.வி.சேகரை நெருங்கக் கூட முடியவில்லை.

இதற்குப் பெயர்தான் ‘ஜனநாயகம்!’

Pin It