‘கோவிட்-19’ என்றால் பலருக்குத் தெரியாது. ஆனால் கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டதும் உலகமே அரண்டு போய் இருக்கிறது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா, இந்தியா உள்பட ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.

இது மிகக் கொடுமையான உயிர்க்கொல்லி நோய். இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் என்று தொடங்கும் இந்த வைரஸ் நோய் மிகக் கொடுமையானது என்பது உண்மைதான்.

உலகத்தின் சர்வ வல்லமையுள்ள எந்த மதத் தலைவர்கள், கடவுளாலும் குணப்படுத்த முடியாத நோய் இந்நோய்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானமும், பெண்கள் வரக்கூடாது என்று தடை விதித்த சபரிமலையில் இன்று சளி, காய்ச்சல், இருமல் இருக்கும் ஆண்களும் நுழையக் கூடாது என்ற அறிவிப்பும் வந்துள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனா கிருமிகளுக்கு அஞ்சி தொழுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகக் கிறித்துவ மதத் தலைவரான போப் ஆண்டவர் கொரோனாவால் ஏற்படும் தொற்றுநோய் அச்சத்தில் மக்களோடு இணைந்து பிராத்தனை செய்வதைத் தவிர்த்து தனியாகப் பிராத்தனை செய்து கொண்டிருக்கிறார்.

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள்களும் இந்தக் கொரோனாவுக்கு அஞ்சி ஒடுங்கிப் போனதை நாம் செய்தி வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கே அஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க இந்நோய் அஞ்சத்தக்க உயிர்க்கொல்லி நோய் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

ஆனால் நோய் பயத்தை விட, நோயைப் பற்றி அரசு செய்கின்ற பிரச்சாரம் கொடுமையாக இருக்கிறது.

தொலைபேசி எடுத்தால் ‘லொக்கு லொக்கு’ என்ற ஒரு ஈனமான இருமல். அந்த இருமலைக் கேட்கும்போதே அவ்வைரஸ் நோய் நமக்கு ஏற்பட்டதைப் போன்று ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அதில் சொல்லப்படுகின்ற நோய் குறித்த செய்தி, படித்தவர்களைத் தவிர படிக்காத, பாமர கிராம மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.

சீனாவில் தோன்றிய இந்நோய் இன்று அங்கே குறைந்து கொண்டு வருவதாகச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அதற்காக அந்நாட்டு அதிபர் மருத்துவர்களைப் பாராட்டி இருக்கிறார். இவ்வைரஸ் நோய் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.

நோய் பற்றிய கவனமும், எச்சரிக்கையும் எல்லோருக்கும் வேண்டும்தான். எனினும் அதற்காக ஒவ்வொரு நிமிடமும் அஞ்சி அஞ்சிச் சாக வேண்டியதில்லை. மருத்துவ அறிவியல் மக்களைக் காப்பாற்றும்.

Pin It