"தாய்மொழி என்பது தேன்கூடு" தொட்டால் விபரீதமாகிவிடும் என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

இந்திமுலாம் பூசப்பட்ட சமஸ்கிருதத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள் வடவர்கள்.

மத்திய இந்தியாவில் நாடக மொழியாக இருந்த 'செளரசேனி' மொழியை, பிராகிருத வழியில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் 'பாணினி' என்பவரால் திருத்தி, செம்மை செய்து 'அஷ்டாத்தியாயி' என்ற நூலின் மூலம் கொடுக்கப்பட்டதே சமஸ்கிருதம். அதே செளரசேனி மொழி தேவநாகிரி மூலம் 'கடிபோலி' வழியாக வந்தது இந்தி, இது காலத்தால் பிந்தையது.

அதேசமயம் முதல் கடல்கோளால் அழிந்த பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த தென்மதுரையில் முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவினான் நிலந்தரு திருவிற் பாண்டியன் நெடியோன், 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், இது வரலாறு.

தேன் கூடான தமிழுக்காக 1937 முதல் போராட்டக்களம் கண்டும், உயிர்களைக் கொடுத்தும் மொழிகாத்து வருபவர்கள் தமிழர்கள்.

தமிழர்களின் தாய் மொழி காக்கும் போராட்டங்களால் கன்னடத்தில் 1980-83, 2017-19 களிலும், கொங்கணியில் 1986, ஜார்கண்ட்டில் 2022 ஆகிய ஆண்டுகளில் தாய்மொழி காக்க மொழிப் போராட்டங்கள் நடந்துள்ளன.

இவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டுவது அவசியம்.

 *"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு"* என்கிறார் பெரும் புலவர் வள்ளுவர்.

தேன்கூட்டில் கைவைத்து மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்காமல் இருப்பதே ஜனநாயக அரசு என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

- கருஞ்சட்டைத் தமிழர்